Friday, November 20, 2015

ஒரு நாள் இரவில்
மலையாள திரைப்படமான ஷட்டரை ரீமேக் செய்யும் முன், எதற்காக சென்னையில் ஒரு நாள், புலிவால், மாலினி 22 பாளையங்கோட்டை, உன் சமையலறையில், ஜன்னல் ஓரம், போன்ற மலையாள ரீமேக் படங்கள் தோல்வியுற்றது? ஏன் பாபநாசமும், 36 வயதினிலேவும் மாபெரும் வெற்றியை அடைந்தது? என்று சற்று சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும்,...

பாபநாசமும் 36 வயதினிலே படமும் வெற்றியடைந்ததற்கு மிகப்பெரிய காரணம் அதன் இயக்குனர்கள். எஸ்.. அந்தக் கதைக்கு உண்டான மிகப்பெரிய நியாயத்தை, அவர்கள் ரீமேக்கிலும் காட்டி இருந்தார்கள். சொல்லப்போனால் அப்படியே உயிரைக்கொடுத்து, ப்ரீ ப்ரொடக்‌ஷனிலும் தமிழ் நேட்டிவிட்டிக்கு தகுந்தமாதிரி வேலை பார்த்திருந்தார்கள். அப்படியான ஒரு டெடிக்கேஷன்தான், ஒரு படத்தை மாபெரும் அனுபவமாக மாற்றும்.


மலையாள ஷட்டரின் இறுக்கமான கதைக்களமும், அந்த டிபிக்கல் நேட்டிவிட்டியும், ஸ்ரீனிவாசன் மாதிரியான சட்டில் ஆர்ட்டிஸ்டும், லால் மாதிரியான கரடுமுரடான மனிதரின் உடல்மொழியும் ஷட்டர் திரைப்படத்தை அப்படியே தூக்கி நிறுத்தியது. அந்த நேட்டிவிட்டியை சரிவரக்காட்ட முடியாததால்தான் மாபெரும் வெற்றி பெற்ற தட்டத்தின் மறையது திரைப்படத்தை இன்றளவும் ரீமேக் செய்யாமல் இருக்கிறார்கள். இத்தனைக்கும் அதற்கான உரிமையை முறைப்படி பெற்றுவிட்டும் தயங்கியே இருக்கிறார்கள்.

ஷட்டர் கதையுடனே வாழ்ந்து வந்த, ஜாய் மேத்யூ என்ற மனிதரின் அசுரத்தனமான  திரைக்கதை, அத்தனை உயிர்ப்பானது. அவர் அந்தக்கதையை எப்படி நேசித்திருந்தார் என்பதை எல்லாம், அவரின் இண்டர்வியூக்கள் பார்த்திருந்தாலே புரியும். தன் கதை மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலனாகத்தான், மாபெரும் வெற்றியை மலையாள மக்கள் அவருக்கு கொடுத்திருந்தார்கள்.

ஆனால் இங்கு???


இயக்குனர் ஆண்டனியின் ஒரு இண்டர்வியூவை இங்கே பகிர்கிறேன். 
‘திடீர்ன்னு விஜய் வந்தாரு.. நீங்க டைரக்ட் பண்றிங்களான்னு கேட்டாரு. உடனே ஓகேன்னு சொல்லிட்டேன்.. முதல் நாள் பூஜைக்கே நான் லேட்டாத்தான் போனேன்.. என்று எத்தனை அசால்ட்டாக சொல்கிறார்...

இன்றும் திரைத்துறையில் இயக்குனர் வாய்ப்புக்காக உயிரைக்கொடுத்து எத்தனையோ திறமையானவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறது??
இதான் இயற்கையின் முரண்,

அத்தனை எளிதாக கிடைத்துவிட்ட வாய்ப்பு எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுத்திருக்கும்?? நிச்சயமாய் ஒரு நாள் இரவில் மோசமான படம் கிடையாது. ஒரு நல்ல படம் தான். ஆனால் மலையாள ஷட்டரில் கிடைத்த அந்த பேரதிர்ச்சி, படம் முடிந்தவுடன் கைதட்ட வேண்டும் என்ற எண்ணம், இண்டர்வெல்லின் போது தியேட்டரே உறைந்த அந்த மொமெண்ட் போன்ற மேஜிக்குகள் இங்கே நிகழ, சத்தியமாக வாய்ப்பில்லை. தியேட்டரில் அது நிகழவும் இல்லை. 

சரி... இந்தப்படத்தின் கதை என்ன? ஒரு நாள் இரவில்விலைமகள் ஒருவருடன் சத்யராஜ், ஒரு ஷட்டர் மூடப்பட்ட கடைக்குள் மாட்டிக்கொள்கிறார். அது திறந்ததா? அதனால் என்ன பிரச்சனை வந்த்து? விலைமகளுடன் இருப்பது சத்யராஜின் வீட்டிற்கு தெரிந்தால் சத்யராஜின் மானம் போய்விடும். பின் இதில் இருந்து சத்யராஜ் எப்படி தப்பித்தார் என்பதுதான் கதை..

கதை என்று ஜாய் மேத்யூ பெயரை திரையில் போடுகிறார்கள். ஆனால் திரைக்கதை என்று ஆண்டனியின் பெயரை போடுகிறார்கள். ஆண்டனி ஷட்டரின் திரைக்கதையில் இருந்து, என்ன மாறுதல் செய்தார் என்றுதான் புரியவில்லை.

சதயராஜ் மாதிரியான ஒரு நபர் இந்தக்கதைக்கு சரியான பொருத்தம்தான். ஆனால் அந்த அறைக்குள் அவர் கண்களில் தெரியும் அந்த வயதை மீறிய காமம்தான் படத்தின் அடிநாதம். அதுவே இங்கு மிஸ்ஸிங். அந்த காமத்தின் பொருட்டு ஏற்படும் அதிர்ச்சி, எங்கே தன் மானம் போய்விடுமோ என்ற பரிதவிப்பை எல்லாம் சத்யராஜ் நடித்துக்காட்டி இருக்கிறார். ஆனால் லால் அதை வாழ்ந்துகாட்டி இருப்பார். என்னைக்கேட்டால் இது பிரகாஷ்ராஜ் செய்திருக்க வேண்டிய கேரக்டர். மிஸ் ப்ளேஸ்மெண்ட்.

அனு மோல் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் சஜிதா செய்திருந்த அந்த கொஞ்சலையும் எளக்காரத்தையும் அவரால் கொண்டு வர முடியவில்லை. சத்யராஜின் மகளாக வரும் அந்தப்பெண் மிகச்சரியான தேர்வு. சீக்கிரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். படத்தின் மிக முக்கியமான டிவிஸ்டை தமிழில் சரியாகவே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எனக்கு ஒரு கதை கிடைச்சிடுச்சி.. அது பேரு ஷட்டர்.. என்று சீனிவாசன் சொல்லுவார். அதுதான் டைட்டிலுக்கும் கதைக்குமான பிணைப்பு.. அதுதான் கதையின் ஜீவன். அதே போல் இண்டர்வெல் ப்ளாக்கும் ஷட்டரை ஒபன் செய்வதில்தான் ஆரம்பிக்கும். ஷட்டர் என்ற பெயருக்கு எத்தனை நியாயம் செய்திருந்தார்கள்.

இங்கு என்னடான்னா... இறுதியில் யூகிசேதுவும் அதே மாடுலேஷனில் ஷட்டர் என்று சொல்லுகிறார். ஆனால் டைட்டிலோ ஓர் நாள் இரவில்... எல்லாம் வரி விலக்குக்காக... நீங்கள் டைட்டிலை மாற்றி இருந்தால், அத்ற்கான டயலாக்கை, இறுதியிலும் அத்ற்கேற்றவாறு மாற்றி இருக்க வேண்டும் அல்லவா?


எனிவே ஷட்டரை பார்க்காதவர்களுக்கு நிச்சயம் பிடிக்க வாய்ப்பு உண்டு


No comments:

இதையும் படியுங்கள்