Friday, October 9, 2015

என்னு நிண்டே மொய்தீன் – 2015 மலையாளத் திரைப்படம் விமர்சனம்


காதலும், அது கொடுக்கும் ஆத்மார்த்தமான அழுத்தமும், எத்தகையது என்பதை சமீபத்தில்தான் மான்ஜி என்றொரு இந்தி திரைப்படத்தில் பார்த்தோம். இதோ அதைப் போல இன்னொரு திரைப்படம். அது கோபத்தின் உச்சம் என்றால் இந்தப் படம் சாத்வீகதின் உச்சம்.

இந்தப் படத்தின் கதை என்ன?

1960 மற்றும் 1970களின் பிற்பகுதியில் கேரளாவின் இயற்கை எழில் சூழ்ந்த முக்கம் பகுதிகளில் இந்த காதல் கதை தன் பயணத்தை தொடங்குகிறது. மொய்தீன் என்கிற பிருத்விராஜூக்கும் காஞ்சனமாலா என்கிற பார்வதி மேனனுக்கும் காதல் அரும்புகிறது. இன்றைக்கே பெரும் பிரச்சனையாய் இருக்கிற மதம், அன்று மட்டும் தன் தும்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்குமா? மொய்தீனின் வீட்டிலும் காஞ்சனமாலாவின் வீட்டிலும் பெரும் பிரச்சனைகள் வெடிக்கின்றன. அதனால் காஞ்சனமாலா வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே சிறை வைக்கப்படுகிறார். ஒரு நாள், இருநாள், ஒரு மாதம், இருமாதம் சிறை வைக்கப்பட்டு இருப்பார் என்று நினைப்பீர்களே ஆனால் நீங்கள் சராசரி தமிழ் சினிமா ரசிகர்களாவீர்கள். அப்படியென்றால் எத்தனை நாட்கள் காஞ்சனமாலா வீட்டு சிறையில் இருந்தார்??? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்....

சுமார் இருபத்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக...

என்னது?? இருபத்து ஐந்து வருடங்களாக வீட்டுச்சிறையில் காதலனுக்காக காத்திருந்த ஒரு பெண்ணா?


ஆச்சர்யமும் அதிர்ச்சியும் மேலிடுகிறது அல்லவா? அதுதான் இந்தப் படத்தின் ஜீவன்.. அந்த காதலின் ஜீவனைத்தான் இன்று கேரளாவே கொண்டாடுகிறது.

கட்டிக்கொண்டால் தன் காதலன் ஒருவனைத்தான் கட்டிக்கொள்வேன். இல்லையென்றால் ஒரு அறைக்குள்ளேயே கிடந்து விதவைக்கோலம் உடுத்திக்கூட கிடப்பேன். ஆனால் வேறொரு ஆணை மனதளவில் கூட நினைக்க மாட்டேன் என்று வைராக்கியம் கொண்டு வாழும் பெண்ணாக பிரமாதப்படுத்தி இருப்பவர் நம்மூர் பூ பார்வதி.  

பஸ்ஸுக்குள் ப்ரித்வியை பார்த்தவுடன் கண்ணில் தெரியும் காதலாகட்டும், கையைக்கூட தொட்டு விடாத கண்ணிய ஸ்பரிசமாகட்டும், காதலன் வருவான் என காத்திருக்கும் அந்த வைராக்கியமாகட்டும், வீட்டில் உள்ளோரிடம் காட்டும் கோபமாகட்டும், அன்பு, கருணை, கோபம், காதல், அழுகை, விசும்பல் என அத்தனை ஃப்ரேமிலும் பார்வதியின் பர்ஃபாமென்ஸ் செம்ம்ம்ம பவர்ஃபுல்.

எப்படிப்பட்ட நடிகையை மிஸ் செய்திருக்கிறோம் என்று நாம் வருந்தக்கூடிய அளவிற்கு, பார்வதியை இந்தப் படத்தில் சேட்டன்கள் ஜொலிக்க விட்டிருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது பார்வதியின் கேஸ்டிங்தான் இந்தப் படத்தை இந்த அளவிற்கு கொண்டாட காரணமாய் அமைந்திருக்கிறது. நடிப்பு என்பது வெறும் சம்பளம் வாங்கிவிட்டு அதற்காக உழைப்பது என்பது அல்ல. அது ரத்தமும் சதையுமாக நம்முடனே வாழ்வது என்ற இலக்கணத்தை நிச்சயம் பார்வதி கற்று தேர்ந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். சின்னச் சின்ன கண்டினியுட்டி ஷாட்களில் எல்லாம் பிரமாதப்படுத்துகிறார். அதுதான் பார்வதியின் ஸ்பெஷல்.பார்வதியை ஒருதலையாய் காதலிக்கும் ஒரு நபர் இருக்கிறார். அவரும் பார்வதிக்காகவே பல வருடங்களாக காத்துக்கிடக்கிறார். அவருக்கும் பார்வதிக்குமான உரையாடலாக ஒரு சீன் வரும். நன்றாக கவனித்துப்பாருங்கள். பார்வதியின் கருணையும், தவிப்பும், வேறொரு ஆண்மகனை காக்க வைத்த குற்ற உணர்ச்சியும் அதை மீறிய மொய்தீன் மீதான காதலையும் எப்படி வெளிப்படுத்துகின்றார் என்று கவனித்துப்பாருங்கள் பார்வதியின் ஆளுமை என்ன என்பதை என்று புரிந்துக்கொள்ளலாம். இது எல்லாம் இயக்குனர் சொல்லிக்கொடுத்து வந்து விடுவதில்லை. Born with Acting.  பார்வதிக்காக கை தட்டினேன் என்பதை விட, கண் கலங்கினேன் என்று சொல்லலாம். நிச்சயம் இந்த வருடத்திற்கான விருதுப்பட்டியலில் காஞ்சனமாலாவுக்கு ஸ்பெஷல் ஆர்டர் உண்டு.

ப்ரித்விராஜைப்பற்றி என்ன சொல்வது. மொய்தீனாக வாழ்ந்துக்காட்டி இருந்தாலும் மாஸ்டர் பீஸ் என்று சொல்லும் அளவிற்கு எல்லாம் இந்தப்படம் அவருக்கு இல்லை. அவரது விக்கும்,  டிரஸ்ஸிங்கும் அந்தக்காலத்தை பிரதிபலித்தாலும் ஏதோ ஒரு அந்நியத்தன்மையை பிரத்விராஜிடம் உணர்ந்துக்கொண்டே இருந்தேன்.

காங்கிரஸ்ஸுக்கும், கம்யூனிஸ்டுகளுக்குமான அந்த வெப்பத்தெறி உரையாடல்களை எல்லாம், நம்மால் இங்கே நம் சினிமாவில் எழுதிட முடியுமா? என்ன ஒரு படைப்பாளிகள்! நம் சென்சார் அமைப்புகளைத் தாண்டி இப்படி உள் அர்த்தம்பொதிந்த வசனங்களை திரையில் நம்மால் கொண்டு வர முடியுமா? இந்தி சினிமா ரசிகர்களும், மலையாள சினிமா ரசிகர்களும் கொடுத்து வைத்தவர்கள்.

படத்தின் என்னைக்கவர்ந்த இன்னொரு நபர் ப்ரித்விராஜின் அப்பா. இத்தனை வீரியத்துடன் ஒரு அப்பா இருப்பாரா என்று நினைக்கும் அளவிற்கு பிரித்விராஜின் அப்பா கேரக்டர்... சான்ஸே இல்லை. தன் இனத்தை களங்கப்படுத்திவிடுவானோ என்று தன் மகனையே கத்தியால் குத்திவிடும் ஒரு தந்தையாக, திடீரென்று நம்மை அதிர்ச்சிக்குள்ளாகுவாரா?? விஷுவலாக அதைக் காட்டாமலே, அந்த பாதிப்பை டாப் ஆங்கிள் ஷாட், மியூஸிக், க்ளோசப் என பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

படத்தில் 90 சதவீதம் மழை பெய்து கொண்டே இருக்கிறது. அந்த ஈரமும், பசுமையும் படத்தின் காதல் மீதான ஈர்ப்புத்தன்மையை அதிகரித்துக்கொண்டே இருக்கும்படி செய்கிறது. சொல்லப்போனால் இந்த மழையின் ஊடாகத்தான், நாம் இந்தக்காதலை ரசிக்கவே ஆரம்பிக்கிறோம். அவர்களின் முதல் ஸ்பரிசமே மழைச்சாராலை ஆராதிப்பதில் தொடங்கி இரு கரங்களும் இணைவதாகத்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

முதல் காட்சியில் தொடங்கி இறுதிக்காட்சி வரை, அந்த மழையை நாமும் காதலித்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் இறுதிக்காட்சியில் அந்த மழையை சபித்தபடியேத்தான் வெளியேற வேண்டி இருந்தது. அதுதான் டைரக்டர் டச்.. தேவதூதன் போல ஒவ்வொரு கணத்திலும் கூடவே நின்று காதல் வளர்த்த மழைத்தோழன் ஏன் இறுதியில் சாத்தானாக மாறினான்? என்று யோசிக்க யோசிக்க அந்த மழையின் மீதே கோபம் கோபமாக வந்தது.


இயக்குனர் விமலுக்கு இது ஒரு மிக முக்கியமான திரைப்படம். கிட்டத்தட்ட பல வருடங்களாக நிஜ மொய்தீன், காஞ்சனமாலா சம்மந்தப்பட்டவர்களை தேடி அலைந்து, குறிப்பெடுத்துக்கொண்டு, இந்த ஸ்க்ரிப்டுடனே வாழ்ந்து கொண்டு, அதை ஆவணப்படமாக்கி, அதை மெருகேற்றி இன்று ஒரு செல்லுலாய்ட் காவியமாக செதுக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கேற்ற பரிசை, மலையாள மக்கள் இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் விமல்..

நம்மூர் ரசிகர்களுக்கு இந்தப்படம் எல்லாம் அத்தனை எளிதில் பிடித்துவிடாது. ஏனெனில் படம் ரொம்ப ஸ்லோ. என்னடா இவ்ளோ மொக்கை போடுறாங்க என்று ஃபார்வேர்ட் பட்டனைத்தான் முதலில் தேடுவார்கள். ஆனாலும் தியேட்டரில் இருந்து எடுப்பதற்கு முன் பார்த்துவிடுங்கள். எத்தனையோ காதல் கதைகளை பார்த்திருப்போம். ஆனால் இப்படி ஒரு வைராக்கியமான, ஆத்மார்த்தமான காதலை திரையில் பார்த்து வெகுநாளாயிருக்கும். அந்த அனுபவத்திற்காவது படத்தை பாருங்கள். முக்கியமாய் பார்வதி என்ற காஞ்சனமாலாவிற்காக... She is deserved.


நிஜ மொய்தீன் இறந்து, இன்னும் அவரின் நினைவுகளுடனே வாழ்ந்துக் கொண்டிருக்கும் காஞ்சனமாலாவின் காதலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அந்தக்காதலுக்கு என்னால் முடிந்த சமர்ப்பணம் இந்தப்பதிவு


4 comments:

பரிவை சே.குமார் said...

நானும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் படம்.
தங்கள் விமர்சனம் அருமை...

Daniel Naveenraj said...

தங்களது வரிகளில் "பொக்கிஷம்" வாடையை லேசாக உணர முடிகிறது... அருமை!!! :-)

மணிகண்டவேல் said...

//பரிவை சே.குமார் said...
நானும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் படம்.
தங்கள் விமர்சனம் அருமை...//

நன்றி நண்பா... பாருங்கள்...

மணிகண்டவேல் said...

//Daniel Naveenraj said...
தங்களது வரிகளில் "பொக்கிஷம்" வாடையை லேசாக உணர முடிகிறது... அருமை!!! :-)//

ஹா.. ஹா... இருக்கலாம் ப்ரோ... ஆனா இரண்டுமே வேற வேற..

இதையும் படியுங்கள்