Friday, October 9, 2015

என்னு நிண்டே மொய்தீன் – 2015 மலையாளத் திரைப்படம் விமர்சனம்


காதலும், அது கொடுக்கும் ஆத்மார்த்தமான அழுத்தமும், எத்தகையது என்பதை சமீபத்தில்தான் மான்ஜி என்றொரு இந்தி திரைப்படத்தில் பார்த்தோம். இதோ அதைப் போல இன்னொரு திரைப்படம். அது கோபத்தின் உச்சம் என்றால் இந்தப் படம் சாத்வீகதின் உச்சம்.

இந்தப் படத்தின் கதை என்ன?

1960 மற்றும் 1970களின் பிற்பகுதியில் கேரளாவின் இயற்கை எழில் சூழ்ந்த முக்கம் பகுதிகளில் இந்த காதல் கதை தன் பயணத்தை தொடங்குகிறது. மொய்தீன் என்கிற பிருத்விராஜூக்கும் காஞ்சனமாலா என்கிற பார்வதி மேனனுக்கும் காதல் அரும்புகிறது. இன்றைக்கே பெரும் பிரச்சனையாய் இருக்கிற மதம், அன்று மட்டும் தன் தும்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்குமா? மொய்தீனின் வீட்டிலும் காஞ்சனமாலாவின் வீட்டிலும் பெரும் பிரச்சனைகள் வெடிக்கின்றன. அதனால் காஞ்சனமாலா வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே சிறை வைக்கப்படுகிறார். ஒரு நாள், இருநாள், ஒரு மாதம், இருமாதம் சிறை வைக்கப்பட்டு இருப்பார் என்று நினைப்பீர்களே ஆனால் நீங்கள் சராசரி தமிழ் சினிமா ரசிகர்களாவீர்கள். அப்படியென்றால் எத்தனை நாட்கள் காஞ்சனமாலா வீட்டு சிறையில் இருந்தார்??? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்....

சுமார் இருபத்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக...

என்னது?? இருபத்து ஐந்து வருடங்களாக வீட்டுச்சிறையில் காதலனுக்காக காத்திருந்த ஒரு பெண்ணா?


ஆச்சர்யமும் அதிர்ச்சியும் மேலிடுகிறது அல்லவா? அதுதான் இந்தப் படத்தின் ஜீவன்.. அந்த காதலின் ஜீவனைத்தான் இன்று கேரளாவே கொண்டாடுகிறது.

கட்டிக்கொண்டால் தன் காதலன் ஒருவனைத்தான் கட்டிக்கொள்வேன். இல்லையென்றால் ஒரு அறைக்குள்ளேயே கிடந்து விதவைக்கோலம் உடுத்திக்கூட கிடப்பேன். ஆனால் வேறொரு ஆணை மனதளவில் கூட நினைக்க மாட்டேன் என்று வைராக்கியம் கொண்டு வாழும் பெண்ணாக பிரமாதப்படுத்தி இருப்பவர் நம்மூர் பூ பார்வதி.  

பஸ்ஸுக்குள் ப்ரித்வியை பார்த்தவுடன் கண்ணில் தெரியும் காதலாகட்டும், கையைக்கூட தொட்டு விடாத கண்ணிய ஸ்பரிசமாகட்டும், காதலன் வருவான் என காத்திருக்கும் அந்த வைராக்கியமாகட்டும், வீட்டில் உள்ளோரிடம் காட்டும் கோபமாகட்டும், அன்பு, கருணை, கோபம், காதல், அழுகை, விசும்பல் என அத்தனை ஃப்ரேமிலும் பார்வதியின் பர்ஃபாமென்ஸ் செம்ம்ம்ம பவர்ஃபுல்.

எப்படிப்பட்ட நடிகையை மிஸ் செய்திருக்கிறோம் என்று நாம் வருந்தக்கூடிய அளவிற்கு, பார்வதியை இந்தப் படத்தில் சேட்டன்கள் ஜொலிக்க விட்டிருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது பார்வதியின் கேஸ்டிங்தான் இந்தப் படத்தை இந்த அளவிற்கு கொண்டாட காரணமாய் அமைந்திருக்கிறது. நடிப்பு என்பது வெறும் சம்பளம் வாங்கிவிட்டு அதற்காக உழைப்பது என்பது அல்ல. அது ரத்தமும் சதையுமாக நம்முடனே வாழ்வது என்ற இலக்கணத்தை நிச்சயம் பார்வதி கற்று தேர்ந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். சின்னச் சின்ன கண்டினியுட்டி ஷாட்களில் எல்லாம் பிரமாதப்படுத்துகிறார். அதுதான் பார்வதியின் ஸ்பெஷல்.பார்வதியை ஒருதலையாய் காதலிக்கும் ஒரு நபர் இருக்கிறார். அவரும் பார்வதிக்காகவே பல வருடங்களாக காத்துக்கிடக்கிறார். அவருக்கும் பார்வதிக்குமான உரையாடலாக ஒரு சீன் வரும். நன்றாக கவனித்துப்பாருங்கள். பார்வதியின் கருணையும், தவிப்பும், வேறொரு ஆண்மகனை காக்க வைத்த குற்ற உணர்ச்சியும் அதை மீறிய மொய்தீன் மீதான காதலையும் எப்படி வெளிப்படுத்துகின்றார் என்று கவனித்துப்பாருங்கள் பார்வதியின் ஆளுமை என்ன என்பதை என்று புரிந்துக்கொள்ளலாம். இது எல்லாம் இயக்குனர் சொல்லிக்கொடுத்து வந்து விடுவதில்லை. Born with Acting.  பார்வதிக்காக கை தட்டினேன் என்பதை விட, கண் கலங்கினேன் என்று சொல்லலாம். நிச்சயம் இந்த வருடத்திற்கான விருதுப்பட்டியலில் காஞ்சனமாலாவுக்கு ஸ்பெஷல் ஆர்டர் உண்டு.

ப்ரித்விராஜைப்பற்றி என்ன சொல்வது. மொய்தீனாக வாழ்ந்துக்காட்டி இருந்தாலும் மாஸ்டர் பீஸ் என்று சொல்லும் அளவிற்கு எல்லாம் இந்தப்படம் அவருக்கு இல்லை. அவரது விக்கும்,  டிரஸ்ஸிங்கும் அந்தக்காலத்தை பிரதிபலித்தாலும் ஏதோ ஒரு அந்நியத்தன்மையை பிரத்விராஜிடம் உணர்ந்துக்கொண்டே இருந்தேன்.

காங்கிரஸ்ஸுக்கும், கம்யூனிஸ்டுகளுக்குமான அந்த வெப்பத்தெறி உரையாடல்களை எல்லாம், நம்மால் இங்கே நம் சினிமாவில் எழுதிட முடியுமா? என்ன ஒரு படைப்பாளிகள்! நம் சென்சார் அமைப்புகளைத் தாண்டி இப்படி உள் அர்த்தம்பொதிந்த வசனங்களை திரையில் நம்மால் கொண்டு வர முடியுமா? இந்தி சினிமா ரசிகர்களும், மலையாள சினிமா ரசிகர்களும் கொடுத்து வைத்தவர்கள்.

படத்தின் என்னைக்கவர்ந்த இன்னொரு நபர் ப்ரித்விராஜின் அப்பா. இத்தனை வீரியத்துடன் ஒரு அப்பா இருப்பாரா என்று நினைக்கும் அளவிற்கு பிரித்விராஜின் அப்பா கேரக்டர்... சான்ஸே இல்லை. தன் இனத்தை களங்கப்படுத்திவிடுவானோ என்று தன் மகனையே கத்தியால் குத்திவிடும் ஒரு தந்தையாக, திடீரென்று நம்மை அதிர்ச்சிக்குள்ளாகுவாரா?? விஷுவலாக அதைக் காட்டாமலே, அந்த பாதிப்பை டாப் ஆங்கிள் ஷாட், மியூஸிக், க்ளோசப் என பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

படத்தில் 90 சதவீதம் மழை பெய்து கொண்டே இருக்கிறது. அந்த ஈரமும், பசுமையும் படத்தின் காதல் மீதான ஈர்ப்புத்தன்மையை அதிகரித்துக்கொண்டே இருக்கும்படி செய்கிறது. சொல்லப்போனால் இந்த மழையின் ஊடாகத்தான், நாம் இந்தக்காதலை ரசிக்கவே ஆரம்பிக்கிறோம். அவர்களின் முதல் ஸ்பரிசமே மழைச்சாராலை ஆராதிப்பதில் தொடங்கி இரு கரங்களும் இணைவதாகத்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

முதல் காட்சியில் தொடங்கி இறுதிக்காட்சி வரை, அந்த மழையை நாமும் காதலித்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் இறுதிக்காட்சியில் அந்த மழையை சபித்தபடியேத்தான் வெளியேற வேண்டி இருந்தது. அதுதான் டைரக்டர் டச்.. தேவதூதன் போல ஒவ்வொரு கணத்திலும் கூடவே நின்று காதல் வளர்த்த மழைத்தோழன் ஏன் இறுதியில் சாத்தானாக மாறினான்? என்று யோசிக்க யோசிக்க அந்த மழையின் மீதே கோபம் கோபமாக வந்தது.


இயக்குனர் விமலுக்கு இது ஒரு மிக முக்கியமான திரைப்படம். கிட்டத்தட்ட பல வருடங்களாக நிஜ மொய்தீன், காஞ்சனமாலா சம்மந்தப்பட்டவர்களை தேடி அலைந்து, குறிப்பெடுத்துக்கொண்டு, இந்த ஸ்க்ரிப்டுடனே வாழ்ந்து கொண்டு, அதை ஆவணப்படமாக்கி, அதை மெருகேற்றி இன்று ஒரு செல்லுலாய்ட் காவியமாக செதுக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கேற்ற பரிசை, மலையாள மக்கள் இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் விமல்..

நம்மூர் ரசிகர்களுக்கு இந்தப்படம் எல்லாம் அத்தனை எளிதில் பிடித்துவிடாது. ஏனெனில் படம் ரொம்ப ஸ்லோ. என்னடா இவ்ளோ மொக்கை போடுறாங்க என்று ஃபார்வேர்ட் பட்டனைத்தான் முதலில் தேடுவார்கள். ஆனாலும் தியேட்டரில் இருந்து எடுப்பதற்கு முன் பார்த்துவிடுங்கள். எத்தனையோ காதல் கதைகளை பார்த்திருப்போம். ஆனால் இப்படி ஒரு வைராக்கியமான, ஆத்மார்த்தமான காதலை திரையில் பார்த்து வெகுநாளாயிருக்கும். அந்த அனுபவத்திற்காவது படத்தை பாருங்கள். முக்கியமாய் பார்வதி என்ற காஞ்சனமாலாவிற்காக... She is deserved.


நிஜ மொய்தீன் இறந்து, இன்னும் அவரின் நினைவுகளுடனே வாழ்ந்துக் கொண்டிருக்கும் காஞ்சனமாலாவின் காதலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அந்தக்காதலுக்கு என்னால் முடிந்த சமர்ப்பணம் இந்தப்பதிவு


The Walk - தி வாக் - திரைப்பட விமர்சனம் - 2015


It is not possible; but I can do it.
இந்த ஒற்றை லைன்தான் படமே..


வாவ்.. வாவ். வாவ்.. என நொடிக்கு நொடி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, பிரமிப்பின் உச்சத்திற்க்கு கொண்டு சென்று, விழிகளை அப்படியே டென்ஷனில் நிலைகுத்தி உறைய வைத்திருக்கும் படம்தான்  தி வாக்ஃபிலிப் பெடிட் என்ற சிறுவன், சர்க்கஸில் கயிற்றின் மேல் மற்றவர்கள் நடப்பதை பார்த்து வியப்புற்று, தானும் அவ்வாறு நடக்க பயிற்சி மேற்கொள்கிறான். அந்தக்கலை தனக்கு கைவந்த உடன், பல உயரமான இடங்களில் பயிற்சி மேற்கொள்கிறான். மரங்களுக்கு இடையில், நதிகளுக்கு இடையில் என பல இடங்களில் கயிறு கட்டி நடந்திருந்தாலும் அவனுக்கு அது போதுமானதாக இல்லை. அவனது தேடலும் ஆர்வமும் அதுக்கும் மேல அதுக்கும் மேலஎன்று உசுப்பேற்றிவிட ட்வின் டவரின் மேல் காதல் கொள்கிறான். எப்படியாவது அந்த இரட்டை கோபுரங்களுக்கு இடையே கயிறு கட்டி நடந்து விட வேண்டும் மிகப்பெரிய இலட்சிய ஆவல் கொள்கிறான். அவனது இலட்சிய வேட்கை வென்றதா? இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

இது ஒரு உண்மைக்கதை.  To reach the clouds என்ற பெயரில் ஃபிலிப் எழுதிய புத்தகத்தை மையமாக வைத்தே இந்தப்படத்தின் திரைக்கதை அமைக்கப்ப்ட்டுள்ளது.
நிஜத்தில் நடந்த ஒரு விஷயத்தை மையமாக கொண்டிருப்பதால் மனதிற்கு இந்தப்படம் இன்னனும் நெருக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.


படத்தின் டிரெயிலர் வெளியான போதே பிரமிக்கத்த வகையில் உலகம் முழுவதும் பெரும் பாரட்டை பெற்றது. அந்த எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தன் அசுர உழைப்பினால் ஆடியன்ஸுக்கு பெரும் விஷுவல் ட்ரீட்டை படைத்திருக்கிறார் இயக்குனர்.

கேமரா ஒர்க், சிஜி ஒர்க், எடிட்டிங், பேக்கிரவுண்ட் ஸ்கோர் என ஒன்றுக்கொன்று ஒலிம்பிக் ரிங் போல பின்னிப்பிணைந்து நம்மையும் ஆறாவது ரிங்காக தனக்குள் பிணைத்துக் கொள்கிறது. அத்தனை துறைசார்ந்த வல்லுனர்களும் தங்கள் உழைப்பை அசுரத்தனமாக கொட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உழைப்பு இருந்தால் மட்டும்தான் இப்படிப்பட்ட ஒரு அவுட்புட்டை திரையில் கொண்டு வர முடியும்.

கிராஃபிக்ஸ்தான் படத்தின் உயிர்நாடி என்றாலும், எந்த ஒரு காட்சியிலும் இது கிராஃபிக்ஸ் என்று நாம் ஒரு நொடி கூட அசட்டை செய்யாமல், இது நிஜமோ? என நம்மை நம்ப வைத்து, படபடக்க வைத்திருப்பதுதான் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி.ட்வின் டவருக்கு முதலில் சென்று, அந்த இரும்புக்கம்பியில் கால் வைத்து ஃபிலிப் எட்டிப்பார்க்கும் நொடியிலேயே எனக்கெல்லாம் அட்ரினல் வெகு வேகமாக பம்ப் செய்ய ஆரம்பித்துவிட்டது.  அங்கு தொடங்கிய படபடப்பு ஐயையோ என்ன ஆகுமோ என்ற டென்ஷன் இறுதிவரை ஒரு துளி கூட குறையவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செம்ம்ம்ம ஸ்க்ரீன் ப்ளே...

போலீஸ் பர்மிஷன் இன்றி எகியூப்மெண்ட்களை தூக்கிப்போவது, ட்வின் டவரில் உளவு வேலை பார்ப்பது என ஒவ்வொரு சீனும் திரைக்கதையை அப்படியே தூக்கிக்கொண்டு போய் 110வது மாடியில் நிற்க வைக்கிறது. ஒரு காட்சியில் போலிஸுக்கு பயந்து பிலிஃப்பும் அவர் நண்பரும் அந்த ஷீட்டுக்குள் ஒளிந்துக்கொண்டு ஆழத்தை காட்டும் காட்சியில் எல்லாம் தியேட்டரே உறைந்து போய்தான் இருந்தது. இந்த டென்ஷன் போதாது என்று ஃபிலிப்புக்கு காலில் வேறு ஆணி குத்திவிட, இன்னமும் நமக்கு பி.பி, எகிறியது. ஆனால் அப்போது கூட விடாப்பிடியாக இல்லை நான் என்ன ஆனாலும் நடந்துதான் தீருவேன் என்ற உறுதியை இறுதி வரை கைவிடாத அந்த ஹீரோயிசம்தான் என்றைக்கும் நினைவில் நிற்கும்.. வெல்டன் ஃபிலிப்.

3டி என்றவுடன் கண்ணை குத்துவது போல் ஜிம்மிக்ஸ் வேலை எல்லாம் காட்டாமல், நமக்கு அந்த ஆழத்தையும், உயரத்தையும் காட்ட 3டியை உபயோகப்படுத்தி இருப்பது பிரமிப்பான அனுபவத்தை தருகிறது.

ட்வின் டவர்களுக்கு இடையில் ஃபிலிப் நடக்க முதல் அடி எடுத்து வைக்க ஆரம்பிக்கும் நொடிகளில் நமக்கு ஏற்படும் படபடப்பை வார்த்தைகளால் அவ்வளது எளிதில் சொல்லிவிட முடியாது. இங்கிருந்து அங்கு போவது, பின் அங்கிருக்கும் போலீஸுக்கு தண்ணி காட்டியபடி இங்கு வருவது. நடுவில் படுப்பது, காலை மடக்குவது என ஃபிலிப் பயம்காட்டிக்கொண்டிருக்க, இது போதாது என்று ஒரு கழுகு பறந்து ஃபிலிப்பின் அருகே வருவது, தீடீரென ஒரு கம்பி தன் இழுவிசையை படீரென இழப்பது என ஒவ்வொரு செயலும் நமக்கு விஷுவல் விருந்து ப்ளஸ் டென்ஷன் மருந்து.

முதல் சல்யூட் கயிற்றுக்கு, இரண்டாவது பில்டிங்குக்கு, மூன்றாவது ரசிகர்களுக்கு என ஃபில்ப் சல்யூட் வைக்கும் காட்சியில் எல்லாம் தியேட்டரில் அப்படி ஒரு க்ளாப்ஸ். வசனங்களே இன்றி விஷுவல்ஸ்க்கு இப்படி ஒரு கைத்தட்டல் கிடைத்து இப்போதுதான் பார்க்கிறேன். மெளனத்தை விட மேன்மையான இசை என்ன இருந்துவிடப்போகிறது? என்பதை இந்தப்படம் சொல்லும் சைலண்ட் ஷாட்ஸ்ஸில் இருந்து உணார்ந்துக் கொள்ளலாம்.

எங்கு இசை வேண்டுமே ஆங்கு ஆர்ப்பாரித்து, எங்கு மெளனம் பேச வேண்டுமோ அங்கு சைலண்ட் ஆகி, இசை நமக்குள் ஆயிரம் உணர்வுகளை டிரான்ஸ்மிஷன் செய்கிறது. இப்படி ஒரு படம் எடுப்பது என்பது நிச்சயம் வாழ்நாள் சாதனையாகத்தான் இருக்கும். இப்படி ஒரு படத்தை நம்மால் எடுத்து விட முடியாதா என்று திரைத்துறையில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒருசேர பெருமூச்சு விட வைக்கும்படியான ஒரு படம் இது.

மொக்கை தியேட்டர்கள், 2டி, டிவிடி, என எந்த வகையில் பார்த்தாலும் இந்தப்படத்தின் பேரனுபவத்தை இழந்துவிடுவீர்கள். தயவு செய்து பிரமாதமான ஒலி ஒளி அமைப்புடைய 3டி தியேட்டரில் சென்று பாருங்கள். வாழ்வில் மறக்க இயலாத ஒரு பேரனுபவத்தை அடைவீர்கள்.Thursday, October 1, 2015

புலி விமர்சனம் - Puli review
இணைய விமர்சகள் பலரும் முதல் காட்சிக்கு புக் செய்திருக்க, அது கேன்சல் ஆனவுடன், இரண்டாம் காட்சிக்கு புக் செய்திருந்த என்னைப் போன்றோர் முதல் ஷோபார்க்கும்படி ஆனது. அதனாலே பதிவுலகத்திற்கு புலி பற்றி தெரிவிக்க வேண்டியே இந்தப்பதிவு...

சரி புலியின் கதைக்கு வருவோம்...

சின்ன வயதில் அம்புலி மாமா, பூந்தளிர், சித்திரப்படங்கள், மாயகோட்டை, இரும்பு கை மாயாவி, போன்ற சிறுவர் கதைகளை விரும்பி படித்தவர்களா நீங்கள்? உங்களுக்குள் இன்னும் அந்த சிற்றிளம் பருவம் உயிர்ப்புடன் இருக்கிறதா? ஆம் என்றால் உங்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கக்கூடும்.
என்னய்யா சொல்றே?

ஆமாங்க... தவளையின் முதுகை நக்கினால் அது வழி சொல்லும், பேசும் பலவர்ண புறா, ஒற்றைக்கண் ராட்சச அடிமை, குள்ளர்கள் தீவு, அவர்களின் மயக்க ஊசி, பாறைய உருட்டினால் மலையில் பாதை உருவாகும், நெருப்பு உருளைக்குள் செல்வது, சூன்யக்காரன், செய்வினை... அப்பாப்ப்ப்ப்பாஆஆஆஆ.... இது அத்தனையும் படத்தில் இருக்கிறது.


சிறுவர்களுக்கான ஃபேண்டசி கதையில் விஜய் எப்படி நடிக்க ஒத்துக்கொண்டார் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஒருவேளை குழந்தைகளை கவர்பவர்தான் சூப்பர் ஸ்டார் என்று யாரவது அவருக்கு சொல்லிவிட்டார்களா என்ன? 


வேதாளக்கோட்டையை ஆளும் யவனராணி ஸ்ரீதேவியை, தளபதி சுதீப் மாயவித்தையில் மயக்கி வைத்திருக்கிறார். சுதீப்பின் கைப்பாவையாக ஸ்ரீதேவி இருக்கிறார். 17 பெண்களை மயக்கி பலி கொடுத்து, 18வது பெண்ணையும் பலி கொடுத்தால் சாகாவரம் கிடைக்கும் என்ற ஆசையில் இதை செய்கிறார் சுதீப். அப்புறம் என்ன அந்த 18வது பெண் தான் சுருதிஹாசன் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவர வேண்டுமா?. ஸ்ருதிஹாசனை ஸ்ரீதேவி க்ரூப் கடத்திவிட, காலம் காலம் தொட்ட தமிழ் சினிமாவின் க்ளிஷேப்படி ஹீரோ விஜய் எப்படி ஸ்ருதியை மீட்கிறார் என்பது அட்வெஞ்சரஸ் ஃபேண்டசி கதை (சிரிக்காதீங்க மக்களே)


தியேட்டரில் இன்று சுமார் 30, 40 வெள்ளை வேட்டிகள் கட்டிய நபர்களை பார்க்க நேர்ந்த்து. என்ன தைரியம்யா இவனுக்கு? அம்மாவ குத்திகாட்டி இருக்கானாம்யா என்று டென்ஷனுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். ஓ இதுதான் படம் ஃபர்ஸ்ட் ஷோ கேன்சல் ஆனதுக்கு காரணமா? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதை கடையில் நிரூபித்திருக்கிறார் விஜய்.

ஸ்ரீதேவி : என் ஆட்சியில நான் மக்களுக்கு எதுவுமே செய்யலை.. நான் சாகப்போறேன்.

உடனே ஹன்சிகா :  அம்மா நீங்க போகாதீங்க.. அம்மா நீங்க சாகாதீங்க
என்று ஒரு டயலாக் வருகிறது.

அப்போது அந்த வெள்ளை வேட்டி கட்டியவர்கள் கத்தியதை எழுதக்கூட முடியாது.. ஆட்சியைப்பற்றி, மக்களைப் பற்றி, விஜய் இறுதியில் சில டயலாக் பேசுகிறார். நான் வந்து மக்களோடு மக்களாக இருந்து சேவை புரிவேன் என்று பஞ்ச் அடிக்கிறார். ஹி.ஹி.. இதெல்லாம் நமக்கு நாமே வெச்சுக்குற ஆப்புன்னு யாராவது அவருக்கு சொல்லுங்கண்ணே..

ராக் ஸ்டார் என்று யார் தேவிஸ்ரீபிரசாத்துக்கு பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை. பாட்டெல்லம்...ம்ம்ம்ம்ம்.... ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. படம் முழுக்க கிராஃபிக்ஸ் நிறைந்திருந்தாலும் அது அப்பட்டமாக கிராபிக்ஸ் என்று தெரிவதுதான் மிகப்பெரிய மைனஸ். கிராபிக்ஸ் ஒர்க்காக நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் இதைவிட பல பிரம்மாண்டங்களை பார்த்து விட்டதால் அந்த அளவிற்கு கொண்டாட முடியவில்லை. ஆனாலும் தமிழில் இது பாராட்டப்பட வேண்டிய முயற்சியே.

இயக்குனர் சிம்புதேவனுக்கு பிரமாதமான ஸ்க்ரிப்ட் ஒர்க் வருகிறது. சிறுவர்களுக்கான பேண்டசி கதை எழுதக்கூடிய திறமை 100 சதவீதம் இருக்கிறது. கவனிக்க... கதை எழுத.. இது ஒரு நாவலாக இருக்கும் பட்சத்தில் சிறுவர்களுக்கு இது ஒரு பிரமாதமான விருந்து. சிம்புதேவனின் இந்த திறமையை நாம் ஏற்கனவே இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தில் பார்த்திருப்போம். அந்தக் கோட்டையை லாரன்ஸ் அடைய, அவர் சொல்லி இருந்த அத்தனை வழிகளும் சூப்பரான கிட்ஸ் ஏரியாவுக்கானது. அதே போல் இந்தக் கதையிலும் தவளை, ராணி, சூன்யக்காரன், கிளி, மந்திரம், செப்படி வித்தை, ராட்சசன். கோட்டை என அவர் க்ரியேட் செய்திருக்கும் உலகம், குழந்தைகளை அப்படியே வசீகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், டிபிக்கல் விஜய் ரசிகர்ளுக்கு? குழந்தைத்தனத்தை மீறிய அடல்ட் ரசிகர்களுக்கு? மாற்று சினிமா விரும்பிகளுக்கு? உலக சினிமா ரசிகர்களுக்கு? லாஜிக்கை தேடும் ப்ரில்லியன்ஸிக்களுக்கு??
ஒரு பெரிய ஸாரி... நீங்க எல்லாம் விசாரணைக்கு வெயிட் பண்ணுங்க

இந்தப்படத்தில் வில்லன் க்ரூப்பிற்கு வேதாளம் என்று பெயர். இதைத்தெரிந்தோ தெரியாமலோ அஜீத் தன் படத்திற்கு வேதாளம் என்று பெயர் வைத்துவிட்டார். என்ன ஒரு டிராஜடிக்கல் கோ இன்சிடென்ஸ்?? தியேட்டரில் விஜய் வேதாளம் க்ரூப்பை அழிக்க போறேன். போருக்கு போறேன் என்று வேதாளம் பேரை சொல்லும் போதெல்லாம் தியேட்டரில் ஒரே கூச்சல் குழப்பம்தான். என்னடா இது விஜய்க்கு வந்த சோதனை??


அட.. எல்லாத்தையும் விட்டுத்தள்ளுங்க... ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ரெண்டு பேரையும் அசால்ட்டா ஒரம் தள்ளி அத்தனை ஸ்கோரையும் அள்ளிக்குறாங்க ஸ்ரீதேவி. (வயசானாலும் அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் உங்களைவிட்டு போகலை ) வாவ்.. என்ன ஒரு ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்.. அதே மேஜிக்கல் குரல்... இவரைப்போய் எப்படி இந்த மாதிரி இருன்மை அடைந்த கதாபாத்திரமாக காட்ட முடிந்தது என்று சிம்புதேவன் மேல் கொஞ்சம் கோவம் வந்தது உண்மைதான்.

ஒரு காட்சியில் ஆபரணங்கள் ஏதுமின்றி, வெகு கேஷுவலாக ஒரு லாங் டிரஸ்ஸில், லூஸ் ஹேர் ஸ்டையில் அவரது அறையில் அமர்ந்து இருப்பார் பாருங்கள்.. செம கெத்து.. செம சூப்பர் செலக்‌ஷன். ஃப்ளாஷ்பேக்கில் இளவயது ஸ்ரீதேவியாக சில நொடிகள் வந்தாலும் அதை உண்மை என்றுதான் நம்ப வேண்டித்தான் இருக்கிறது. வயதாகிவிட்டது சில க்ளோசப்களில் தெரிந்தாலும் பெரும்பாலும் அதை தவிர்த்தே ஷாட் கம்போசிஷன் செய்திருக்கிறார்கள்.

விஜய்யுடன் போடும் சண்டை ஆகட்டும், விஜய்யை முறைப்பதாகட்டும், அந்த கெத்துடன் நடப்பதாகட்டும், கோபம் கலந்த சிரிப்பாகட்டும், கத்தலாகட்டும்.... கொடுத்த காசு ஸ்ரீதேவி தரிசனத்திற்கே சரியாய் போய் விட்டது...

இதையும் படியுங்கள்