Monday, September 7, 2015

Bale Bale Magaadivoi - பலே பலே மகாடிவோய்


நேற்றிரவு பி.வி.ஆரில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த படம். அதென்னவோ தெரியவில்லை. நானி நடிக்கும் படங்களுக்கு எல்லாம் இந்த மேஜிக் ஆட்டோமேட்டிக்காக நடந்து விடுகிறது. சென்ஸிபிளான காமெடி, கைதட்டவைக்கும் டயலாக் டெலிவரி என பலே பலே மகாடிவோய் ஒரு கம்ப்ளீட் எண்டர்டெயினராக வந்திருக்கிறது.


சரி படத்தின் கதை என்ன?
ஹீரோ நானி நியாபக மறதி அதிகம் கொண்டவர். அதை எப்படி சொல்வதென்றால், ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது இடையே வேறு ஒரு வேலை குறுக்கிட்டால், செய்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, குறுக்கிட்ட வேலையை செய்ய ஆரம்பித்துவிடுவார். செய்துக்கொண்டிருந்த வேலையின் நியாபகம் எப்போது வருகிறதோ, அப்போதுதான் அதை நோக்கி ஓடுவார். அதுவரை செய்துக்கொண்டிருந்த வேலை அம்போதான்.. இந்த அரைகுறை நியாபக மறதியினால் அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் நேர்கின்றன? எப்படி அதையெல்லாம் மீறி, தன்னுடைய இலக்கை அடைந்தார் என்பதே, சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கும் மீதிக்கதை..

படத்தின் முதல் காட்சியிலேயே நானிக்கு இருக்கும் பிரச்சனையை மிக எளிதாக சொல்லிவிடுகிறார்கள். அடுத்த காட்சியிலேயே ஹீரோயினியின் அப்பா நானியை மாப்ப்பிள்ளை பார்க்க, அவர் ஆஃபீஸுக்கே வருகிறார். ஆனால் பாழாய்ப்போன நியாபகமறதியினால், நானி அவர் வந்திருப்பதையே மறந்து போக, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் வெறுத்துப்போய், இப்படி ஒரு நியாபகமறதிக்காரனுக்கு என் பொண்ணை கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று வீம்பாக கிளம்பிவிடுகிறார்.


பிறகு ஒரு சுபமூகூர்த்த தினத்தில் ஹீரோயினை சந்திக்கும் நானி, தன்னுடைய சின்ன சின்ன சேட்டைகளால் கவர்கிறார். அவரிடம் தன்னுடைய நியாபகமறதி என்ற பிரச்சனையை சொல்லாமலே மெயிண்டைன் பண்ணுகிறார். பிறகு எப்படி ஹீரோயினுக்கு இந்த உண்மை தெரிந்தது? ஹீரோயினியின் அப்பாவை, ஹீரோ எப்படி கன்வின்ஸ் செய்தார் என்பதை ஆள்மாறாட்ட விளையாட்டுக்களால்  சொல்லி இருக்கும் படமே, இந்த பலே பலே மகாடிவோய்.

ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நானிதான் இந்தப்படத்தின் ஹோல் சம் எண்டர்டெயினர். ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஷாட்டிலும் மனிதர் கலக்கி எடுத்திருக்கிறார். ஒட்டு மொத்த தியேட்டரும் இவரின் சேஷ்டைகளால், அடிக்கும் நியாபகமறதி கூத்துக்களால் அப்படி சிரித்துக் கொண்டாடுகிறார்கள். சும்மா சொல்லக்கூடாது. நான் ஈ, எவடே சுப்ரமண்யம் என்று நானியின் கிராஃப் ஏறிக்கொண்டேதான் போகிறது. இதோ இப்போது இன்னொரு க்ளீன் ஹிட் காம்போ. நானிக்கு தன்னுடைய பலம் என்னவென்பது புரிந்திருக்கிறது. இடையில் வெளிவந்த நிமிர்ந்து நில் ரீமேக்கை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இதே ரூட்டிலேயே பயணித்தால் நானிக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. ஆனாலும் மனிதர் உடம்பை குறைத்தே ஆக வேண்டும். பாட்டில் எல்லாம் தொப்பை எட்டிப்பார்த்து சிரிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை படத்தின் மைனஸ் என்றால் ஹீரோயின்தான். நம்மூரில் சசிக்குமாருடன் பிரம்மா படத்தில் ஜோடியா நடித்த லாவண்யா திருப்பதிதான் நானிக்கு ஜோடி. எனக்கென்னவோ அவரின் லுக்கும் காஸ்டிங்கும் படத்திற்கு அந்த அளவிற்கு சூட் ஆகவில்லை என்றே தோன்றுகிறது. வேறு நல்ல சாய்ஸாக இருந்திருந்தால் இன்னும் படத்துடன் ஒன்றி இருக்கலாம்.

ஹீரோயினின் அப்பாவாக வரும் முரளி ஷர்மா ஒரு நல்ல தேர்வு. கோபத்தையும், அமைதியையும், அந்த காதலை உணர்ந்து சேர்த்து வைப்பதிலும் பக்காவான தந்தையாக நடித்து ஸ்கோர் அள்ளுகிறார். நம்மூர் குடைக்குள் மழை மதுமிதா கூட படத்தில் இருக்கிறார் அவ்வளவே.

இசை கோபி சுந்தர். மனிதர் பாட்டில் எல்லாம் அக்மார்க் தெலுகுவாடாகவே மாறிவிட்டார் போலும். ஹவ் ஹவ்என்ற பாடலின் இசை எல்லாம் அட்டகாசம். என்ன பாடலில் நானியை பார்க்கும் போது சற்று டொங்கன் போலத்தான் இருக்கிறார். உடம்பை சீக்கிரம் குறைங்க பிரதர். உங்கள் ஊரில் பிரபாஸ், ராணா, ராம்சரண் தேஜா என்று சிக்ஸ்பேக்கில் உங்களுக்கு போட்டியாளர்கள் இருக்கும் போது நீங்கள் இப்படி இருக்கலாமா? வேக் அப் நானி.


நானியின் அம்மா அப்பா, முரளி ஷர்மாவிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஒரு நடிப்பு நடிப்பார்கள் பாருங்கள்.. செம காமெடி போர்ஷன் அது. அந்த சீனில் அவரது டவல் அவிழ்ந்து விழ, தியேட்டரே அல்லோல கல்லோலப்பட்டது. இப்படி மனம் விட்டு சிரித்து வெகு நாட்களாயிற்று.இதையெல்லாம் விட, ஒரு சூப்பர் ரொமான்ஸ் சீனில் ஹீரோயின் நானியின் அருகில் வந்து,  நீ எவ்ளோ சூப்பர்ல என்று கொஞ்சுவார். அப்போது நானி சலித்துக்கொண்டே ம்ஹூம் என்ன இருக்க வேண்டியதுதான் ஒழுங்கா இல்லைஎன்று தன் நியாபக மறதியை சூசகமா சொல்ல, திடுக்கிட்டு ஹீரோயின் நானியின் இடுப்பின் கீழே பார்க்க, சட்டென்று நானி திடுக்கிட்டு, ஆங்..அது இல்ல.. சிக்ஸ் பேக்கை சொன்னேன்.. என்று சொல்லுவார் பாருங்கள்... அது.. அது.. அது தான் நானியின் டச்... மரண காமெடி சீன் அது... அதை சொல்வதை விட பார்த்து என்ஜாய் செய்தால்தான் நானியின் மேஜிக் புரியவரும்... 

ஒரு ஃபீல் குட் மூவியை சிரித்து சிரித்து ரசிக்க வேண்டுமா உடனே டிக்கெட் புக் செய்யுங்கள் பலே பலே மகாடிவோய்க்கு....

இதையும் படியுங்கள்