Friday, August 28, 2015

லோகம் 2015 மலையாளத் திரைப்படம் விமர்சனம்கடந்த வெள்ளியன்று வெளியாகி பாஸிட்டிவ்வாகவும், நெகட்டிவ்வாகவும் பல கமெண்ட்ஸ்களிடையே ஓடிக்கொண்டிருக்கும் லோகம் திரைப்படத்தை நேற்றுதான் பி.வி.ஆரில் பார்க்க முடிந்தது. படம் பார்த்து முடிக்கும் போது ஏதோ ஒன்று நிறைவாக இல்லாததை உணர முடிந்தது.

பேப்பரை திறந்தாலே ஏர்போர்ட்டில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது, 10 கிலோ தங்கம் பிடிபட்டது என்று தினம் ஒரு செய்தியையாவது நாம் கடந்து வந்திருப்போம். அப்படி யார்தான் தினம் தினம் இந்த தங்கக்கடத்தலை செய்வது? அதன் பின்னணியில் யார்தான் இயங்கிக்கொண்டிருப்பது? எப்படி இந்த நெட்வொர்க் செயல்படுகிறது? என்று எழும் கேள்விகளுக்கு ஓரளவிற்கு விடை சொல்ல வந்திருக்கும் படம்தான், இந்த லோகம்.. லோகம் என்றால் உலகத்தை குறிப்பது அல்ல, உலோகம் என்பதை குறிப்பது. தங்கம் என்ற உலோகம்தான் படத்தின் மையக்கரு

100 கிலோ தங்கத்தை சில பெரும் புள்ளிகள் வெளிநாட்டில் இருந்து எப்படி சாதூர்யமாக கடத்திக்கொண்டு வந்து, இங்கு பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதைத்தான் இந்த லோகத்தின் மூலமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். அப்படி கடத்திக்கொண்டு வரும் 100 கிலோ தங்கம் சொன்னபடி சரியான பார்ட்டிக்கு போய் சேராததால் என்ன நடக்கிறது என்பதை மீதிக்கதையாக சொல்லி இருக்கிறார்கள்.

இதில் மோகன்லால் என்னவாக வருகிறார் என்பதுதான் சஸ்பென்ஸ். அதுவும் கடைசிக்காட்சியில் ப்ளைட்டையே, தான் சொல்லும்படி ஓட்ட சொல்லி பைலட்டுக்கு கட்டளை இடுவதெல்லாம், மோகன்லால் செய்தால் மட்டும்தான் நம்பும்படி இருக்கும். அதற்கு ஒரு கவிதை சொல்லுவார் பாருங்கள். சூப்பர்ப் சாரே...
திருஷ்யம் என்ற மாபெரும் வரலாறு காணாத வெற்றிக்கு பிறகு, மோகன்லாலில் கேரியரில் வெளிவந்த எந்தப்படமும் பெரிய வெற்றியை எட்டவில்லை. இந்தப்படமும் அப்படி ஒரு சராசரியான படம்தான். மோகன்லால் என்ற மனிதர்தான் படம் முழுதும் வியாபித்து இருக்கிறார். ஒற்றை மனிதனாக இந்த லோகத்தை தூக்கி சுமப்பதும் அவர்தான்.

ஒரு சாதரண டாக்சி டிரைவராக அறிமுகம் ஆகி, தோசை சுட்டு, சட்னி அரைத்து தருவது வரை வெகு யதார்த்தமான நபராக அறிமுகம் ஆகி, இடைவேளையின் போது விஸ்வரூபம் எடுக்கிறார். அதன் பின்னர்தான் அவரது ஜெட்வேக நடிப்பும், தேர்ந்த டயலாக் மாடுலேஷனும் உச்சம் தொடுகிறது. பொதுவாக மலையாளத்தில் சில வார்த்தைகளை படிக்கும் போதும், உச்சரிக்கும் போதும் ரொம்ப டிரமாட்டிக்கலாக இருக்கும். கபட நாடக வேஷதாரி’ ”இருளின் ஒளியில் வெளிச்சத்தின் பாதையில் நான் செல்கிறேன், குற்றத்தின் முதுகில் நேர்மையின் பிடி இறுகும், போன்ற டயலாக்குகளை கேட்கும் போதே, என்னடா இது பழங்காலத்து உரைநடை டைப் வசனங்களாக இருக்கிறதே? என்று எண்ணத்தோன்றும். ஆனால் மோகன்லால் மாதிரி, ஒரு மாபெரும் நடிகர் இதை சொல்லும் போது, அப்படியான எண்ணம் தோன்றாமல், அது அவரது கேரக்டரை அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. அந்த மேஜிக் மோகன்லாலுக்கு மட்டுமே சாத்தியம். திலீப், குஞ்சாகோபோபன், போன்றோர் இதை செய்தால் சிரித்துவிடத்தோன்றுகிறது.

ஆண்ட்ரியாவை ஒரு கும்பல் இழுத்துக்கொண்டு செல்ல, மெல்ல சிரித்தபடி, ஒரு பாடலை பாடியபடி, ஏதோ ஒரு தீர்க்கமான பார்வையுடன் மோகன்லால் நகரும் போது, ‘என்னதான்யா இந்த மனுஷன் செய்யப்போகிறான்? ஒருவேளை இவனே வில்லனா? என்று மனம் படபடவென்று அடித்துக்கொண்ட்து’. துப்பாக்கியை எடுத்து மனுஷன் பின்னும் போது, விசிலடிக்காத குறைதான். இண்டர்வெல் ப்ளாக் நச் போர்ஷன்.

அதன் பின்னர் வேகமெடுக்கும் திரைக்கதையில் ஆங்காங்கே ட்விஸ்ட் நிறைந்திருந்தாலும் இறுதிவரை ஏதோ ஒரு குறை இருந்துக்கொண்டே இருந்தது. ’

ஆண்ட்ரியா, கோ அஜ்மல் என நம்மூர் முகங்கள் இருந்தாலும் அவர்களுக்கான ஸ்கோப் குறைவுதான். ஆண்ட்ரியாவிற்காவது பரவாயில்லை. அஜ்மலுக்கு எல்லாம் சுத்தமாக ஒன்றுமே இல்லை. ஏதோ பயங்கரமாக செய்யப்போகிறார் என்று பார்த்தால் புஸ் என்று அவரது போர்ஷனை முடித்து விடுகிறார்கள், அவரும் ராகுல்காந்தி போல குர்தா போட்டுக்கொண்டு, இரண்டு தமிழ் டயலாக்குகளை பேசிவிட்டு போகிறார்.

நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் என்று மோகன்லால் பாடும் போது நம்மூர் தியேட்டரிலேயே செம விசில். அதே போல் மேம்பாலங்கள் என்றால், அது சென்னையில்தான் என்று அவர் சொல்லும் போதும், செம க்ளாப்ஸ்.

இத்தனை டென்ஷன்களுக்கு மத்தியிலும் மோகன்லால் ஒரு ராங் நம்பருக்கு தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டே இருப்பதும், கடைசியில் அவனுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் கொடுப்பதும் ரிலாக்சேஷன் கார்னர்ஸ்.

இயக்குனர் ரஞ்ஜித் ஏற்கனவே மோகன்லாலை வைத்து படங்கள் இயக்கி இருக்கிறார். போன முறைக்கூட ஸ்ப்ரிட் என்ற ஒரு நல்ல கான்செப்டை இயக்கி இருந்தார். ஆனால் அதுவும் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. எனக்கு அவரின் இண்டியன் ருப்பி, பலேரி மாணிக்யம், கேரளா கஃபே போன்றவை பிடித்த படங்கள்.

த்ருஷ்யத்தின் பாதிப்பு இன்னமும் இருக்கிறது என்பதற்கு இந்தப்படத்தின் ஓப்பனிங்கே சாட்சி. ஓப்பனிங் டே கலெக்‌ஷனில் மாபெரும் ரெக்கார்டை இந்தப்படம் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் போகப்போக அப்படியே டிராப் அவுட்டாக ஆரம்பித்தது. இதேதான் பெருச்சாழி, மிஸ்டர் ஃப்ராடுக்கும் நடந்த்து. மோகன்லால் ஜி.. உங்கள் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. அந்த ஹைப்புக்கு ஏற்ற மாதிரி, இன்னும் பெஸ்ட் கொடுத்தால் மட்டுமே இந்த கிங்க் ஆஃப் ஒப்பனிங்கை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லையென்றால் அல்போன்ஸ் புத்திரன்களும், அஞ்சலி மேனன்களும் அடித்து ஆடிவிடுவார்கள்..

லோகம் – தங்கத்தில் செம்பு அளவுக்கு அதிகமாக கலந்துவிட்டது.

2 comments:

பரிவை சே.குமார் said...

விமர்சனம் அருமை...
மோகன்லாலுக்காக பார்க்கலாம்...

மணிகண்டவேல் said...

நன்றி நண்பா

இதையும் படியுங்கள்