Friday, August 28, 2015

லோகம் 2015 மலையாளத் திரைப்படம் விமர்சனம்



கடந்த வெள்ளியன்று வெளியாகி பாஸிட்டிவ்வாகவும், நெகட்டிவ்வாகவும் பல கமெண்ட்ஸ்களிடையே ஓடிக்கொண்டிருக்கும் லோகம் திரைப்படத்தை நேற்றுதான் பி.வி.ஆரில் பார்க்க முடிந்தது. படம் பார்த்து முடிக்கும் போது ஏதோ ஒன்று நிறைவாக இல்லாததை உணர முடிந்தது.

பேப்பரை திறந்தாலே ஏர்போர்ட்டில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது, 10 கிலோ தங்கம் பிடிபட்டது என்று தினம் ஒரு செய்தியையாவது நாம் கடந்து வந்திருப்போம். அப்படி யார்தான் தினம் தினம் இந்த தங்கக்கடத்தலை செய்வது? அதன் பின்னணியில் யார்தான் இயங்கிக்கொண்டிருப்பது? எப்படி இந்த நெட்வொர்க் செயல்படுகிறது? என்று எழும் கேள்விகளுக்கு ஓரளவிற்கு விடை சொல்ல வந்திருக்கும் படம்தான், இந்த லோகம்.. லோகம் என்றால் உலகத்தை குறிப்பது அல்ல, உலோகம் என்பதை குறிப்பது. தங்கம் என்ற உலோகம்தான் படத்தின் மையக்கரு

100 கிலோ தங்கத்தை சில பெரும் புள்ளிகள் வெளிநாட்டில் இருந்து எப்படி சாதூர்யமாக கடத்திக்கொண்டு வந்து, இங்கு பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதைத்தான் இந்த லோகத்தின் மூலமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். அப்படி கடத்திக்கொண்டு வரும் 100 கிலோ தங்கம் சொன்னபடி சரியான பார்ட்டிக்கு போய் சேராததால் என்ன நடக்கிறது என்பதை மீதிக்கதையாக சொல்லி இருக்கிறார்கள்.

இதில் மோகன்லால் என்னவாக வருகிறார் என்பதுதான் சஸ்பென்ஸ். அதுவும் கடைசிக்காட்சியில் ப்ளைட்டையே, தான் சொல்லும்படி ஓட்ட சொல்லி பைலட்டுக்கு கட்டளை இடுவதெல்லாம், மோகன்லால் செய்தால் மட்டும்தான் நம்பும்படி இருக்கும். அதற்கு ஒரு கவிதை சொல்லுவார் பாருங்கள். சூப்பர்ப் சாரே...




திருஷ்யம் என்ற மாபெரும் வரலாறு காணாத வெற்றிக்கு பிறகு, மோகன்லாலில் கேரியரில் வெளிவந்த எந்தப்படமும் பெரிய வெற்றியை எட்டவில்லை. இந்தப்படமும் அப்படி ஒரு சராசரியான படம்தான். மோகன்லால் என்ற மனிதர்தான் படம் முழுதும் வியாபித்து இருக்கிறார். ஒற்றை மனிதனாக இந்த லோகத்தை தூக்கி சுமப்பதும் அவர்தான்.

ஒரு சாதரண டாக்சி டிரைவராக அறிமுகம் ஆகி, தோசை சுட்டு, சட்னி அரைத்து தருவது வரை வெகு யதார்த்தமான நபராக அறிமுகம் ஆகி, இடைவேளையின் போது விஸ்வரூபம் எடுக்கிறார். அதன் பின்னர்தான் அவரது ஜெட்வேக நடிப்பும், தேர்ந்த டயலாக் மாடுலேஷனும் உச்சம் தொடுகிறது. பொதுவாக மலையாளத்தில் சில வார்த்தைகளை படிக்கும் போதும், உச்சரிக்கும் போதும் ரொம்ப டிரமாட்டிக்கலாக இருக்கும். கபட நாடக வேஷதாரி’ ”இருளின் ஒளியில் வெளிச்சத்தின் பாதையில் நான் செல்கிறேன், குற்றத்தின் முதுகில் நேர்மையின் பிடி இறுகும், போன்ற டயலாக்குகளை கேட்கும் போதே, என்னடா இது பழங்காலத்து உரைநடை டைப் வசனங்களாக இருக்கிறதே? என்று எண்ணத்தோன்றும். ஆனால் மோகன்லால் மாதிரி, ஒரு மாபெரும் நடிகர் இதை சொல்லும் போது, அப்படியான எண்ணம் தோன்றாமல், அது அவரது கேரக்டரை அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. அந்த மேஜிக் மோகன்லாலுக்கு மட்டுமே சாத்தியம். திலீப், குஞ்சாகோபோபன், போன்றோர் இதை செய்தால் சிரித்துவிடத்தோன்றுகிறது.

ஆண்ட்ரியாவை ஒரு கும்பல் இழுத்துக்கொண்டு செல்ல, மெல்ல சிரித்தபடி, ஒரு பாடலை பாடியபடி, ஏதோ ஒரு தீர்க்கமான பார்வையுடன் மோகன்லால் நகரும் போது, ‘என்னதான்யா இந்த மனுஷன் செய்யப்போகிறான்? ஒருவேளை இவனே வில்லனா? என்று மனம் படபடவென்று அடித்துக்கொண்ட்து’. துப்பாக்கியை எடுத்து மனுஷன் பின்னும் போது, விசிலடிக்காத குறைதான். இண்டர்வெல் ப்ளாக் நச் போர்ஷன்.

அதன் பின்னர் வேகமெடுக்கும் திரைக்கதையில் ஆங்காங்கே ட்விஸ்ட் நிறைந்திருந்தாலும் இறுதிவரை ஏதோ ஒரு குறை இருந்துக்கொண்டே இருந்தது. ’

ஆண்ட்ரியா, கோ அஜ்மல் என நம்மூர் முகங்கள் இருந்தாலும் அவர்களுக்கான ஸ்கோப் குறைவுதான். ஆண்ட்ரியாவிற்காவது பரவாயில்லை. அஜ்மலுக்கு எல்லாம் சுத்தமாக ஒன்றுமே இல்லை. ஏதோ பயங்கரமாக செய்யப்போகிறார் என்று பார்த்தால் புஸ் என்று அவரது போர்ஷனை முடித்து விடுகிறார்கள், அவரும் ராகுல்காந்தி போல குர்தா போட்டுக்கொண்டு, இரண்டு தமிழ் டயலாக்குகளை பேசிவிட்டு போகிறார்.

நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் என்று மோகன்லால் பாடும் போது நம்மூர் தியேட்டரிலேயே செம விசில். அதே போல் மேம்பாலங்கள் என்றால், அது சென்னையில்தான் என்று அவர் சொல்லும் போதும், செம க்ளாப்ஸ்.

இத்தனை டென்ஷன்களுக்கு மத்தியிலும் மோகன்லால் ஒரு ராங் நம்பருக்கு தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டே இருப்பதும், கடைசியில் அவனுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் கொடுப்பதும் ரிலாக்சேஷன் கார்னர்ஸ்.

இயக்குனர் ரஞ்ஜித் ஏற்கனவே மோகன்லாலை வைத்து படங்கள் இயக்கி இருக்கிறார். போன முறைக்கூட ஸ்ப்ரிட் என்ற ஒரு நல்ல கான்செப்டை இயக்கி இருந்தார். ஆனால் அதுவும் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. எனக்கு அவரின் இண்டியன் ருப்பி, பலேரி மாணிக்யம், கேரளா கஃபே போன்றவை பிடித்த படங்கள்.

த்ருஷ்யத்தின் பாதிப்பு இன்னமும் இருக்கிறது என்பதற்கு இந்தப்படத்தின் ஓப்பனிங்கே சாட்சி. ஓப்பனிங் டே கலெக்‌ஷனில் மாபெரும் ரெக்கார்டை இந்தப்படம் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் போகப்போக அப்படியே டிராப் அவுட்டாக ஆரம்பித்தது. இதேதான் பெருச்சாழி, மிஸ்டர் ஃப்ராடுக்கும் நடந்த்து. மோகன்லால் ஜி.. உங்கள் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. அந்த ஹைப்புக்கு ஏற்ற மாதிரி, இன்னும் பெஸ்ட் கொடுத்தால் மட்டுமே இந்த கிங்க் ஆஃப் ஒப்பனிங்கை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லையென்றால் அல்போன்ஸ் புத்திரன்களும், அஞ்சலி மேனன்களும் அடித்து ஆடிவிடுவார்கள்..

லோகம் – தங்கத்தில் செம்பு அளவுக்கு அதிகமாக கலந்துவிட்டது.

Saturday, August 22, 2015

MANJHI - The Mountain Man / மான்ஜி திரைப்படம்



படம் நேற்று ரிலீஸ் என்று  தெரிந்த உடனே, பி.வி.ஆரில் புக்கிங் செய்தாகி விட்டது. படத்தின் மீதான் ஆர்வம் அப்படி... ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதும், அதைப்பற்றிய செய்திகளை தேடித்தேடி படித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்ப்பார்க்கப்பட்ட படம். ஏனெனில் இந்தக்கதையை நம்புவதற்கே அத்தனை பிரயத்தனப்படவேண்டும். அப்படி என்ன கதை??





ஒரு மனிதன் 22 ஆண்டுகளாக, ஒரு மலையை தனி ஒருவனாக, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி, செதுக்கி, பிரித்து, அப்புறப்படுத்தி, போக்குவரத்துக்கான சாலையை ஏற்படுத்துகிறான். என்னது 22 ஆண்டுகளாகவா???? ஆம்.. ஜெண்டில்மேன்ஸ்... ஒரு வருடம், இரண்டு வருடம் இல்லை.. முழுதாக 22 வருடங்கள்.. ஒரு தாஜ்மஹாலை நிர்ணயித்த வருடங்களோடு ஒப்பிட்டு பாருங்கள். தாஜ்மஹாலாவது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவானது. ஆனால் இந்த படம் குறிப்பிடும் அந்த மான்ஜி எனும் மனிதர், ஒரே ஒரு நபராக 22 ஆண்டுகள் வேறு எதைப்பற்றியுமே யோசிக்காமல், கண்ணும் கருத்துமாக ஒரு மலையைவே இரண்டாக வெட்டி ஒரு பாதை ஏற்படுத்துகிறார் என்றால் சும்மாவா? ஏன் அப்படி செய்தார்? எதற்காக தன் வாழ்க்கையையே பணயம் வைத்து இப்படி ஒரு செயலை செய்ய வேண்டும்? அதன் பின்னணி என்ன? என்ற பல கேள்விகளுக்கு இந்த மான்ஜி -  மவுண்டைன் மேன் படம் பதில் சொல்லும்.

தசரத் மான்ஜி என்னும் தனிப்பட்ட ஒரு நபரின் கோவமும், ஆற்றாமையும், இயலாமையும். அதற்கான வீறுகொண்டு எழுதலுமே இதன் ஆன்மா.








நவாசுதின் சித்திக்.. நவாசுதின் சித்திக்.. நவாசுதின் சித்திக்.....

    என்னவென்று சொல்வது இந்த மனிதனை??? நடிப்பு ராட்சசன் என்றால் இவர்தான். அச்சு அசலாக அப்படியே தஸ்ரத் மான்ஜியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றால் க்ளிஷேவாக இருக்கும்.. ஆனாலும் வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும். மனுஷர் பின்னி பெடலெடுத்திருக்கிறார். கோபம், ரொமான்ஸ், இயலாமை, முதுமை, இளமை முறுக்கு என்ற அத்தனை உணர்வுகளையும் அந்த ஐந்தடி உயரத்திற்குள் அப்படியே அச்சில் வார்த்தார் போல் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுப்பட்டியலில் நிச்சயம் டஃப் பைட் கொடுக்கும் நபர். (ஆனாலும் இந்திராகாந்தி ஒரு காட்சியில் வருவதால் தேசியவிருது படத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகம்)

ராதிகா ஆப்தே சித்திக்கின் மனைவியாக அப்படியே ஃபாகுனியாவாகவே இன்னும் நெஞ்சில் நிலைத்திருக்கிறார். புடவையை மட்டுமே முழு உடையாய் அவர் உடுத்திக்கொண்டு வருவதெல்லாம் செம ரொமான்ஸ் ஏரியா. அந்த தண்ணீருக்குள்ளான ரொமான்ஸ், கணவனை துடைப்பத்தால் அடிப்பது, தண்ணீருக்குள் விழுந்து பிரசவிப்பது, என ஒவ்வொரு சீனிலும், தான் ஒரு பர்ஃபாமென்ஸ் ஆக்டர் என்பது நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். அஹல்யாவைத் தொடர்ந்து ராதிகா ஆப்தேவை ரசிக்க இன்னொரு படம். (தலைவருக்கு ஜோடின்னா சும்மாவா)



( இவர்தான் அந்த ஒரிஜினல் மான்ஜி )





ஷாஜகானின் காதல், தாஜ்மஹால் கட்டியது என்றால். நவாசுதின் சித்திக்கின் காதல், ஒரு மலையையே உடைக்கிறது. அதுவும் ஒரு வருடம், இருவருடம் இல்லை.. முழுசாக 22 வருடம்.. அடேங்கப்பா மூச்சு பிடித்துக்கொள்ளும்படியான உழைப்பு... அல்ல..அல்ல.... நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு காதல்.. அந்தக்காதலின் வீரியமும், அது கொடுக்கும் உத்வேகமும், அத்தனை உக்கிரமானது. அதை காட்சிகளின் வழியே சொல்லி இருக்கும் லாவகம்தான் வெகு யதார்த்தம்.

படத்தின் துவக்கத்தில் மலையைப் பார்த்து, ரத்தம் தோய்ந்த சட்டையுடன் ஒரு கத்து கத்துவார் பாருங்கள். அங்கு தொடங்கும் இந்தப்படத்தின் மையப்புள்ளி, இறுதிவரை உங்களை அதன் நேர்கோட்டிலிருந்து இயக்கிக்கொண்டே இருக்கும். கோவம் தெறிக்க, மலையைப் பார்த்து கத்திக்கொண்டே, கற்களை வீசியெறியும் போது நவாசுதின் சித்திக்கை கவனித்துப் பாருங்கள். அந்த மான்ஜியின் வலியையும், வேதனையையும் இதைவிட அப்பட்டமாக ஒருவரால் வெளிப்படுத்த முடியுமா? என்பது தெரியவில்லை. நவாசுதின் ஒரு பிறவிக்கலைஞன் என்பது இங்கு புரியும்...

அதே போல் அவருக்கு உரிய பணத்தொகை வந்து சேரவில்லை என்றவுடன், அந்த அதிகாரியைப் பார்த்து, பார்வை நிலைகுத்தியபடி நின்றிருக்கும் போது நவாசுதினை கவனியுங்கள். அது நடிப்புதான் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது.அப்படி ஒரு தேர்ந்த நடிப்பு.. வாவ்...

ஆனாலும் இது கற்பனை கதை அல்ல... ரத்தமும் சதையுமாய் ஒரு மனிதன் நம்முடன் இப்படி வாழ்ந்துவிட்டு போயிருக்கிறான் என்பதே எத்தனை ஆச்சர்யமான விஷயம். தன்னுடைய வாழ்நாளில் 22 வருடங்களுக்கும் மேலாக, தன் மனைவியின் மரணத்திற்கு காரணமான மலையை உடைத்து, ஒரு போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறான் என்ற கருவிற்குள் ஆயிரம் நெஞ்சைத்தொடும் செய்திகள் நெகிழ்ச்சியுடன் கலந்திருக்கின்றன. அதை அப்படியே செல்லுலாய்டில் பதிவு செய்த விதத்தில் இயக்குனர் கேத்தன் மேத்தா ஜெயித்திருக்கிறார். MANJHI என்ற டைட்டில் கார்டிலேயே, இரண்டு எழுத்துக்களின் இடையே கதையை சொல்லி விடுகிறார் இயக்குனர். இதுதான் க்ரியேட்டிவிட்டி.. ப்ரில்லியண்ட்.. டைட்டிலை நன்றாக உத்து கவனியுங்கள்....

ஒரு சின்ன நோய்வாய்பட்டால் கூட  அந்த கிராம மக்கள் 80 கிலோ மீட்டர் மலையை சுற்றிக்கொண்டுதான் போயாக வேண்டும் என்ற இக்கட்டிலிருந்து அந்த இடைவெளியை 13 கிலோ மீட்டராக குறைக்க மான்ஜி எடுத்த பகீர முயற்சிகளின் பலனாக, பீகார் அரசாங்கம் அவருக்கு பத்மபூஷன் விருதுக்கு சிபாரிசு செய்தது. அவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தையும், மான்ஜி தன் கிராம மக்களுக்காகவே தானமாக வழங்கி விட்டு இறந்து போயிருக்கிறார் என்ற செய்தியும், மான்ஜியின் மீதான மதிப்பை இன்னும் பல படிகள் கூட்டி இருக்கிறது . அவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இறுதிக்காலத்தில் பித்தப்பை புற்றுநோயுடன் போராடிய அவருக்கு அரசின் மருத்துவ உதவி கிடைத்திருக்கிறது. ஆனாலும் நோயின் தீவிரம் காரணமாக இறந்து போயிருக்கிறார். பல அப்பட்ட உண்மைகளையும், தன் மாநிலத்தின் அவல நிலையை உலகுக்கு தனி ஆளாக எடுத்துக்காட்டியதற்காக, பீகார் அரசாங்கம் இந்தப்படத்திற்கு முழுவரிவிலக்கு அளித்திருக்கிறது.

சொல்லப்போனால் ஆமீர்கான்தான், இந்த நபரைப்பற்றியை செய்திகளை தன்னுடைய சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியின் போது வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பின் ஊடகங்கள் அதை எக்ஸ்க்ளூசிவ்வாக்க, இந்த நிகழ்வின் மீது பெரும் லைம்லைட் விழுந்திருக்கிறது. அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு அறியும். அந்த வகையில் ஆமீர்கான் மிகவும் போற்றுதலுக்கு உரியவராகிறார்.  

சினிமா ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத படம்... worth watch to Wonderful Cinema

இதையும் படியுங்கள்