Friday, June 12, 2015

Premam - ப்ரேமம் - குளிர்ச்சியான மலையாளத்திரைப்படம்


படம் பார்த்த நிமிடத்திலிருந்தே இன்னமும் பைத்தியம் பிடித்து திரிந்து கொண்டிருக்கிறேன். உருகி உருகி இப்படி ஒரு கலர்ஃபுல்லான காதல் திரைப்படத்தை எடுத்துவிடமுடியுமா? ஒரு காதல் திரைப்படத்திற்கு இதைவிட பொருத்தமான டைட்டில் வைத்துவிட முடியுமா? எப்படி இந்த மாதிரி இரு தேவதைகளை காஸ்டிங் செய்தார்கள்? எந்த மாதிரி காதலித்திருந்தால் இப்படி ஒரு அவுட்புட் கொண்டுவந்திருக்க முடியும்? இப்படி இன்னும் இன்னும் ஆயிரம் கேள்விகள் மனதில் புடைசூழ, மெல்ல மெல்ல அணுஅணுவாக இந்தப்படத்தை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

சமீபகாலத்தில் இத்தனை ரசனையுடன் ஒரு ஃபீல்குட் மூவி பார்த்து வியந்ததில்லை. அந்த மேஜிக்கை இந்தப்படம் வெகு அநாயசமாக நிகழ்த்தி இருக்கிறது. இவ்வளவு பில்டப் கொடுக்கும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது இந்தப்படத்தில் என்று நீங்கள் கேட்கக்கூடும். உண்மைதான். படத்தில் எதுவுமில்லை, காதலைத்தவிர.. அதுவும் நீங்கள் ஆயிரம் முறை கண்டு களித்த காதல் மற்றும் காதல் தோல்விதான். சொல்லப்போனால் நம்மூர் ஆட்டோகிராப்க்கு ஒன்றுவிட்ட தம்பி முறையில் லைட்டாக ஜெராக்ஸ் அடித்த அதே கதைதான். ஆனாலும் இந்த ப்ரேமம் நின்று நிதானமாக நம்மை எல்லாம் கைப்பிடித்து காதலிக்க சொல்லி கற்றுக்கொடுக்கிறது. அந்த மேஜிக் நிகழ்வதால்தான் திரையிட்ட இடமெல்லாம் கொண்டாடிதீர்க்கிறார்கள்.

சென்னையிலேயே நான் டிக்கெட் கிடைக்காமல் ஒருவாரம் அலைந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கேரளாவில் இளைஞ்ர்கள் எப்படி உருகி இருப்பார்கள் என்று. ஒரு காதல் திரைப்படத்தின் வெற்றி, திரையில் இருவர் காதலிக்கும் போது நாமும் அந்தக்காதலை உணர்ந்து, நம்முடைய காதலை நினைத்து பரவசமாவதுதான். ஆனால் இந்தப்படத்தின் வெற்றி அதுவல்ல.. ஹீரோ நிவின் காதலிக்கும் பெண்களை அட்சரசுத்தமாக நாமும் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறோம். அதான் இந்தப்படத்தின் ஆகச்சிறந்த வெற்றி. அந்த இரண்டு பெண்களை கண்டதும் மனதிற்குள் ஒரு பட்டாம்பூச்சி நமக்கும் பறக்கிறது. படம் முடிந்த பின்னரும் அந்தப்பட்டாம்பூச்சி வெளியே பறந்துவிடாமல் மனதில் இன்னமும் சிறகசைத்து பறந்துக்கொண்டே இருக்கிறது,

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஹீரோ நிவின் பிளஸ் 2 படிக்கும் போது மேரி என்கிற பெண்ணை காதலிக்கிறான். ஒருசில சந்தர்ப்பங்களால் அந்தக்காதல் தோல்வி அடைகிறது. பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது மலர் என்கிற கெஸ்ட் லெக்சரரை காதலிக்கிறான். அந்தக்காதலும் வேறு சில காரணங்களால் புட்டுக்கொள்கிறது. பின் சுயமாய் ஒரு தொழில் செய்ய ஆரம்பிக்கும் போது செலின் என்கிற பெண்ணை காதலிக்கிறான். அந்தக்காதல் சுபமாய் முடிகிறது.

வெகுசாதரணமாக கடந்துவிடக்கூடிய இந்தக்கதைக்கு காஸ்டிங் என்ற பெயரால் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நிகழ்த்தி இருக்கும் மேஜிக்கை, சத்தியமாக யாராலும் அத்தனை எளிதாக நிகழ்த்திவிட முடியாது. எத்தனை பெரிய டாப் ஹீரோயின்களை கொண்டு வந்து இந்தக்கதையில் நுழைத்திருந்தாலும் படம் இந்த அளவிற்கு பிய்த்துக்கொண்டு ஓடி இருக்குமா என்பது சந்தேகமே. இன்று இந்த இரண்டு பெண்களை கேரள தேசமே கொண்டாடுகிறது. அப்படி என்ன இருக்கிறது அவர்களிடம்? மெல்ல அவர்களைப்பற்றி பார்ப்போமா?

முதலில் மேரியாக நடித்த அனுபமா. இந்தப்பெண்ணின் முதல் ப்ளஸ் பாயிண்டே அந்த கரு கரு அடர்த்தியான கூந்தல்தான். அதுதான் முழுக்க முழுக்க ஆட்சி செலுத்துகிறது திரையில். அதுவும் பசங்க எல்லாம் இவரின் பின்னால் சுற்றும் போது ஒருபக்கமாக அத்தனை முடியையும் இழுத்துவிட்டு அநாயசமாக ஒரு சிரிப்புடன் கடந்து போவார் பாருங்கள்.. ஆஹா..... உச்சிமுடி எல்லாம் ஜிவ்வுன்னு ஆகலைன்னா நமக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்.

மேரியின் வீடும், அந்த நீண்ட பாலமும், அந்த படிக்கெட்டில் சைக்கிளை தூக்கிக்கொண்டு ஏறும் லாவகமும் என தாங்கள் சார்ந்த நிலப்பரப்பிற்கு அத்தனை நியாயம் செய்திருக்கிறார்கள். உண்மையில் இதுதான் நேட்டிவிட்டி. இந்த பச்சை பசுமையான இடங்களை திரையில் பார்க்கும் போது, கேரளாவின் இயற்கை அழகின் மீது பொறாமை ஏற்படுவதை தவிர்க்கவே முடிவதில்லை. இதுதான் இப்படி என்றால் இந்தப்பெண் ஒரு படி மேலே போய் நம்மை அவரின் பின்னாலே அலைய வைக்கிறார். அந்த குண்டுக்கன்னமும், ஹைக்கூ கண்களும், அதைவிட முக்கியமாய் அந்த கார்கால அடர்த்தியான கூந்தலும் நம்மை காதலித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டதைப்போல, நம்மை திரையில் ஆட்கொண்டு ஆட்டி வைக்கின்றன. வாவ்! பிரம்மன் கேரள பெண்களை படைக்கும் போது மட்டும் ஸ்பெஷல் ரொமாண்டிக் மூடில் இருந்திருக்கிறான் போலும்.  நம்மூர் பெண்களுக்கு மட்டும் இப்படி முடி இருந்திருந்தால், இந்நேரம் ஸ்ட்ரெயிட்னிங் செய்கிறேன் பேர்வழி என்று அதன் அழகை கெடுத்து இருப்பார்கள். ஆனால் இயக்குனர் அல்போன்ஸ் இயற்கைதான் அழகு என்று உறுதியார் நம்புவார் போல. அதான் மேரியின் அழகை வெகு இயல்பாக திரையில் சித்திரமாக தீட்டி இருக்கிறார். அதிலும் அலுவா புழாஎன்றொரு பாடல் திரையில் விரிகிறது பாருங்கள். அதன் முதல் ஷாட்டில் நிவினும் அனுபமாவும் போட்டில் ஆலப்புழா பேக்வாட்டரில் பயணிப்பதாக காட்டுவார்கள். அந்த ஒரு இயற்கை சார்ந்த ஷாட்டிற்கே நானெல்லாம் வலிக்க கைத்தட்டினேன்.

இதுதான் இப்படி என்றால் இன்னொரு எபிசோட் ஒன்று இருக்கிறது. அதில்தான் மனிதர் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கி, தூங்கவிடாமல் செய்திருக்கிறார். அதுதான் நிவின் பாலியின் காலேஜ் எபிசோட்.... என்னடா மேரியை இனி திரையில் பார்க்க முடியாதா என்ற மென்சோகம் நம்முள் பரவ ஆரம்பிக்கும் போது, ஏன் கண்ணா அவசரப்படுறே என்று அடுத்த பிரம்மாஸ்திரத்தை திரையில் ஏவுகிறார். அதுதான் மலர்
 

மலர், மலர், மலர் என்று பைத்தியம் பிடிக்காத குறைதான். நிவினின் கெஸ்ட் லெக்சரராக அறிமுகம் ஆகும் அந்தக்காட்சியில் மனதில் பெவிகால் போட்டு குடியேறியவர், இன்னமும் வெளியே போகாமல் என்னை இம்சித்துக்கொண்டே இருக்கிறார். வாவ்.. வாவ்.. வாவ்.. என்ன ஒரு அழகு! என்ன ஒரு சிரிப்பு.. என்ன ஒரு யதார்த்தம் என விழிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, ஆழமாய் மனதில் குடியேறிய பெண். இவர் ஒன்றும் அத்தனை பெரிய அழகெல்லாம் இல்லை. ஏதோ ரோட்டில் நடந்து செல்லும் போது நாம் இவரைப்போன்ற நிறைய பெண்களை கடந்திருக்கலாம். ஆனால் அல்போன்ஸ் புத்திரனின் கண்களின் வழியே பார்க்கும் போதுதான்  இவரின் யதார்த்த அழகின் வீரியம் எத்தனை பெரியது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. சிவந்த பருக்கள் சூழ்ந்த கன்னங்களில் நம் ஆட்களாக இருந்தால் ஒரு வாளி நிறைய மேக்கப்பை அள்ளித்தெளித்து கந்தர்வகோலம் ஆக்கி இருப்பார்கள். ஆனால் அந்தத்தவறு எதுவும் நிகழாமல் அச்சு அசல், உள்ளது உள்ளபடி மலரின் இயற்கை அழகை அப்படியே நம்முள் டிரான்ஸ்பர் செய்த வித்ததில் இந்தப்படம் இன்னும் ஜொலிக்கிறது.

மலரின் காட்டன் புடவையும், அந்த பருக்கள் சூழ் கன்ன்ங்களும், துறுதுறு கண்களின் குறும்பும், பேசாமல் பேசும் அந்த சிரிப்பும் இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை தூங்கவிடாமல் செய்யப்போகிறது என்று தெரியவில்லை. ஷி இஸ் ரியலி ரியலி ரியலி ஒண்டர்ஃபுல்... என் பேர் மலர், உங்க பேர் என்ன? என்று அவர் தமிழில் கேட்க அப்படியே மனதிற்குள் இன்ப அதிர்ச்சி பரவ, படம் முழுவதும் அவர் தமிழிலேயே பேசுகிறார், பாடுகிறார். நம்மை அப்படியே அந்த சிரிப்புக்குள் சிறைப்பிடித்து, காட்டன் புடவையில் முடிந்துகொண்டு போய்விடுகிறார்.

நிவின்பாலி ஒரு செம குத்து டான்ஸை பிராக்டிஸ் செய்ய மாஸ்டர் இல்லாமல் தடுமாறுகிறார், அப்போது மலர், நான் வேணும்ன்னா சொல்லித்தரட்டுமா?என்று கேட்கிறார். என்ன கர்னாட்டிக்கா?, பரதமா?”” என்று நிவின் நக்கல் விட, ஒரு குத்து டான்ஸ் ஆடுவார் பாருங்கள்.. அட.. அட.. அட.. நம்மூர் லாரன்ஸ், பிரபுதேவா எல்லாம் ஒரு பத்தடி தள்ளிதான் நிக்கணும்.. அந்த அளவுக்கு தர லோக்கல் குத்து குத்துவார். தியேட்டரே விசில் சத்தத்திலும், கைத்தட்டலிலும் கிழிந்தது. பிறகு விசாரித்தால்தான் தெரிந்தது அம்மணி உங்களில் யார் பிரபுதேவாநிகழ்ச்சியில் செம ஆட்டம் ஆடியவர் என்று. எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை.

ஆனால் அவரின் பழைய வீடியோக்களை பார்க்கும் போது இத்தனை பர்ஃபாமென்ஸ் ஓரியண்ட்டட் பெண்ணாக இருப்பார் என்று சத்தியமாக தோணாது. அதுவும் இத்தனை அழகாக திரையில் இவரை வடிக்க முடியும் என்று முடிவெடுத்த இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு ஆயிரம் பொக்கேக்களை பரிசாக்க்கொடுக்கலாம். இனி இந்தப்பெண்ணை கொத்திக்கொண்டு போக இயக்குனர்கள் வரிசைக்கட்டி நிற்கலாம். ஆனால் உங்களது கமர்ஷியல் கண்றாவிகளுக்கு இந்தப்பெண் சத்தியமாக செட் ஆக மாட்டார், ஏதாவது பப்பிலோ, டெஸ்டாரெண்டிலோ, வாயில் நுழையாத பேரில் அரைகுறை ஆடையில் இருக்கும் பெண் தான் உங்களுக்கு லாயக்கு.
 மாடர்ன் காஸ்டியூமில் இருப்பதை விட, புடவையில் கொள்ளை அழகாக இருந்து தொலைக்கிறார். முன்னவர் ஹைக்கூ என்றால் இவர் ஆயிரம் பக்க ரொமான்ஸ் கொஞ்சும் கவிதை புத்தகம். விஜய் யேசுதாஸ் பாடிய மலரே என்றொரு பாடல் இருக்கிறது. தயவுசெய்து பார்த்துவிடாதீர்கள்.. அப்புறம் இந்தப்பெண்ணின் மீது காதல் கொண்டு, என்னைப்போல் நீங்களும் பிராந்தனாக ஆனால் நான் பொறுப்பில்லை. அதிலும் கேரள புடவை கட்டிக்கொண்டு, நெற்றியில் கொஞ்சம் சந்தனம் வைத்துக்கொண்டு வரும் அழகைக்காண கண் கோடி வேண்டும். தேவதை.. தேவதை.. அவள் ஒரு தேவதை என்று தனுஷ் போல் தியேட்டரிலேயே ஆடி இருப்பேன். பக்கத்தில் ஆட்கள் இருந்ததால் கண்ட்ரோல் மோடில் இருந்துவிட்டேன். மனதிற்கு பிடித்த ஒரு ஐஸ்க்ரீமை ரசித்து ருசிக்கும் போது, உடலெங்கும் ஒரு பரவசம் பரவுமே அப்படி ஒரு பரவசத்தை மலர் உங்களுக்கு தருவார்.

படத்தில் எத்தனை யதார்த்தம் என்றால் ஒரு காட்சியில் மலர், ஹாஸ்டலில் துணி துவைச்சிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுவார். அப்போது அவர் அணிந்திருக்கும் உடையை கவனியுங்கள். எத்தனை யதார்த்தமாய் இருக்கும். ஆனால் 36 வயதினிலே ஜோதிகாவைப்பாருங்கள், வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, சமைக்கும் போதும் சரி ஒரே ஸ்டைலில் புடவை, அதுவும் 6 இஞ்ச் மேக்கப்புடன். இங்குதான் தமிழ்சினிமா தடுமாறுகிறது. கொஞ்சம் நிகழ் யதார்த்தத்தையும் கொண்டு வரலாமே மக்களே...

அல்போன்ஸ் புத்திரன், அஞ்சலி மேன்ன், அன்வர் ரஷீத், ரோஷன் ஆண்ட்ரூஸ் மாதிரி ரசனையான ஆட்களால் மல்லுவுட் எத்தனை உயரங்களை தொட்டிருக்கிறது. மிக முக்கியமாய் ரசனை என்ற ஒன்றை பல லெவல் முன்னோக்கி கைதூக்கிவிட்டிருக்கிறார்கள். இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. ஒரு வெகு யதார்த்தமான இரு பெண்களை எந்த அளவிற்கு விஷுவலைஸ் செய்ய முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். இயக்குனர் முதலில் அந்த ஸ்க்ரிப்டையும், அந்த கேரக்டர்களையும் ரசித்து ரசித்து காதலித்தால் மட்டுமே இப்படி ஒரு படைப்பு சாத்தியம். இப்படி ஒரு படைப்பை தமிழில் காண முடியுமா என்ற் ஏக்கத்திலும், பெரு மூச்சிலுமே இந்தப்பதிவை முடிக்கிறேன்.

படத்தின் கேமராமேன், டயலாக்ஸ், எடிட்டிங், மூன்றாவது ஹீரோயின், பாடல்கள் பற்றி எல்லாம் ஒன்றுமே சொல்லாமல் முடிக்கிறேனே என்று நினைக்கிறீர்களா??? மேரியும், மலரும் அத்தனை பேரையும் மறக்கடித்து மனதிற்குள் இன்னமும் குளிர்க்காற்றை வீசி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அது குறையும் போது பார்க்கலாம்....
 


2 comments:

New perumal stores said...

Supper.......Padamum,athai paatrina vimarsanamum.

prakash kumar said...

I want to see this film, ur review also gud.

இதையும் படியுங்கள்