Thursday, April 2, 2015

எவடே சுப்ரமண்யம் - தெலுங்கு சினிமா விமர்சனம்வாழ்க்கையில் நாமெல்லாம் எதைத்தேடி ஓடுகின்றோம்? எதற்காக இத்தனை பரபரப்பாய் இயங்கிக்கொண்டு இருக்கிறோம்? யாருக்காக ஓடி ஓடி உழைக்கிறோம்? என்ன வேணும் நமக்கு? மொத்தத்தில் நாம் யார்? என்ற தத்துவார்த்தமான கேள்விகளுக்கு, ஒரு பரவசமான அனுபவத்தின் வழியே கிடைக்கும் விடைதான், இந்த எவடே சுப்ரமண்யம்.

எனக்குள் பல ஆழ்ந்த சிந்தனைகளை எழுப்பிவிட்டிருக்கிறது இந்தப்படம். அட ஆமால்ல.. இப்படியும் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கலாம் இல்ல அப்படிங்கிற ஒரு மனநிலையிலத்தான் இந்தப் படத்தைப்பத்தி எழுதவே ஆரம்பிக்கிறேன். அப்படி என்ன இருக்கு இந்தப்படத்தில்? என்று நீங்கள் கேட்கலாம். அதான் இந்தப்படத்தோட ஸ்பெஷல்நிறையப்பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பெரிய பொஸிஷனில் பதவி வேண்டும், கார், வீடு என்ற ஆடம்பர வாழ்க்கை வாழ்வதே தனது குறிக்கோளாய் கொண்டு இயங்கும் நானிதான் இந்தக்கதையின் சுப்ரமண்யம். சுப்ரமண்யமுக்கு ரிஷி என்றொரு நண்பன், அவனுக்கோ வாழ்க்கையில் எதையும் புதிதாக, பரவசமாக ஆழ்ந்து ரசிக்க வேண்டும், மற்றபடி பணம் எல்லாம் வெற்றுக் காகிதம்தான் என்ற தீர்மானம் கொண்டவன். இந்த இரண்டு நண்பர்களின் வாழ்வில், காலம் என்ன வண்ணக்கோலம் வரைந்தது என்பதே நாம் கண்டு உணர வேண்டிய பாடம்.

ரிஷியின் சிறுவயது முதலே தூத்காசிக்கு செல்ல வேண்டும் என்பதே மிகப்பெரிய லட்சியம். அங்கு சென்றாலே தன்னுடைய வாழ்வு முழுமையடைந்து விடும் என்பது அவனுடைய எண்ணம். தன்னுடைய ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும், மூச்சிலும் அவனுக்கு நிறைந்து இருப்பது தூத்காசி.. தூத்காசி.. தூத்காசிதான்...

தன் நண்பன் சுப்ரமண்யத்தை அழைத்துக்கொண்டு தூத்காசி செல்ல வேண்டும் என்பதே ரிஷியின் லட்சியம். ஆனால் சுப்ரமண்யமோ, நாசரின் மிகப்பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறான். நாசர், சுப்ரமண்யத்தின் புத்திக்கூர்மையை வியந்து, இவன் வாழ்க்கையில் பெரிய அளவில் வருவான் என்று கணித்து, தன்னுடைய மகளையே அவனுக்கு நிச்சயம் செய்து இருக்கிறார். அதில் ஒரு கண்டிஷன் இருக்கிறது. அதை செய்து முடித்தால் சுப்ரமண்யமுக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரமும் பணமும் கிடைக்கும். ஆனால் அது நடக்க வேண்டும் என்றால் ஆனந்தியின் கையெழுத்து வேண்டும். அது யார் ஆனந்தி?

ஆனந்தியும் ரிஷியைப்போல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து, ரசித்து, தினமும் பாடித்திரியும் பறவையைப் போல் வாழ்பவள். ரிஷி, சுப்ரமண்யம், ஆனந்தி மூவரும் ஒர் நாள் சந்திக்கிறார்கள். ரிஷியின் எண்ண ஓட்டமும், ஆனந்தியின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இருப்பதால் இருவரும் நட்புக்குள் எளிதாக இணைகிறார்கள். ஆனால் சுப்ரமண்யமுக்கோ ஆனந்தியிடம் தேவையானது அவளது கையெழுத்து. அதனால் சுப்ரமண்யம் பட்டும் படாமல் பழகுகிறான். சொல்லப்போனால் வேண்டா வெறுப்பாக பழகுகிறான்.

ரிஷி, தூத்காசி தூத்காசி என்று நச்சரித்துக்கொண்டே இருக்க, ஒரு நாள் சுப்ரமண்யம் நண்பனை மிக கோபமாக திட்டிவிடுகிறான். அன்று கலங்கியபடி செல்லும் ரிஷி, அன்றிரவே ஒர் விபத்தில் இறக்கிறான். சுப்ரமண்யமும் ஆனந்தியும் கலங்கிப்போகிறார்கள். தூத்காசி சென்றால்தான் அவன் வாழ்வு முழுமையடையும், அதனால் அவன் அஸ்தியையாவது அங்கு சென்று கரைக்கலாம் என்று ஆனந்தி முடிவெடுக்கிறாள். ஆனால் இது தேவையில்லாத வேலை என்று சுப்ரமண்யம் கூறுகிறான். “இந்த டீலுக்கு ஒத்துக்கொண்டால் நீ கேட்ட கையெழுத்தை போட்டுத்தருகிறேன் என்று ஆனந்தி கூற, சரி என்று சுப்ரமணியம் ஒப்புக்கொள்கிறான். இருவரும் தூத்காசியை நோக்கி பயணிக்கிறார்கள்..மனிதர்களால் அவ்வளவு எளிதில் போக முடியாத தூத்காசிக்கு இருவரும் எப்படி சென்றார்கள்? என்ன நடந்தது, தூத்காசி பயணம் அவர்கள் இருவரது வாழ்க்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தது என்பதுதான் மீதிக்கதை... இல்லை.. மீதி வாழ்க்கை...ஒரு டிராவல் மூவி என்று அத்தனை எளிதாக கடந்துவிட முடியாதபடி திரைக்கதையால் நம்மை கவர்ந்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். நமக்கெல்லாம் வாழ்வின் குறிக்கோள் என்னவாக இருக்கிறது? ஏன் இத்தனை அவசரம், ஒரு பறவையின் சிறு அசைவைக்கூட நம்மால் ரசிக்க முடியாமல் போவதற்கு என்ன காரணம், ஒரு மூங்கிலின் இசையை நின்று நிதானமாய் ரசிக்க முடியாமல் போகும் நேரமின்மைக்கு எது காரணம், புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாய் மாறும் கணம் எத்தகைய பரவசமானது என்ற கேள்விகளுக்கெல்லாம் பாடம் நடத்தாமல் வெகு அற்புதமாய், திரையோவியமாய் ஒரு படம் கொடுத்திருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், தெலுங்கு போன்ற அக்மார்க் கமர்ஷியல் மசாலாக்கள் நிறைந்த தேசத்திலிருந்து இப்படி ஒரு படமா? என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போகிறது மனசு. இயக்குனர் நாக் அஸ்வினுக்கு மிகப்பெரிய தளங்கள் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் பல விருதுகளுக்கு விசிட்டிங் கார்ட்டாக இந்தப்படத்தை வைத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

சுப்ரமணியமாக நானி, என்ன ஒரு அற்புதமான கலைஞன்! பேரும் புகழும் வேண்டும் என்ற திமிரில் அலைவதும், வேண்டா வெறுப்பாக தூத்காசிக்கு செல்ல ஆயத்தப்படுவதும், பின் மெல்ல மெல்ல வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ளும் சுப்ரமணியமாக ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

கூகுள்?
விக்கிபீடியா...

ஒரு சாதாரண டயலாக்தான். ஆனால் நானி இதை உச்சரிக்கும் போது, எழுந்த கைத்தட்டலில் மொத்த தியேட்டரும் அதிர்ந்தது. கண்ணாடி போட்டுக்கொள்வதற்கும் ஒரு காரணம் சொல்வாரே.... வாரே வாவ்... பெண்டாஸ்டிக் நானி. நானியைத்தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க்க முடியாது இந்த சுப்ரமண்யம் கேரக்டருக்கு.அடுத்து ஆனந்தியாக வரும் மாளவிகா நாயர். நாமெல்லாம் ஏற்கனவே குக்கூவில் ரசித்தவர்தான். இந்தப்படத்தில்தான் ஆந்திர தேசத்து ஆவக்காயாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.  படத்தின் மொத்த ஜீவனுக்குமே குத்தகைதார்ர் இவர்தான். இறந்த மீனுக்கு அழுவது தொடங்கி, எல்லாவற்றிலும் பரவசத்தை அனுபவிக்கும் ஒரு தான்தோன்றி கதாபாத்திரம் இவருக்கு. நானியை அலையவிடுவதில் தொடங்கி, ரிஷிக்காக தூத்காசி சென்றே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து, நம் நெஞ்சில் இடம் பிடித்துவிடுகிறார். அந்தக்குளிரில் வெட வெடத்து நடுங்கும் போது நம்மை அறியாமல் ஒரு ஸ்வெட்டர் கொடுக்கலாமா என்று தவிக்கிறது மனசு. அந்த எக்ஸ்பிரஸ்ஸிவ் கண்கள், நானி தொலைந்துவிட்டான் என்று தவிப்பதில் முதலில் நட்பையும், அடுத்த முறை மெல்லிய காதலையும் இனம் பிரித்து காட்டி இருக்கிறது. சூப்பர்ப்...

ஐ லவ்யூன்னா ஐலவ்யூதான்.. ஐ லைக் யூ இல்ல என்று மாளவிகா உச்சரிப்பது...செம டயலாக்.. செம லவ் ஃபீல்.. (பகிடா படத்தில் ஈ பூ வெயிலில் என்ற பாடலை பார்க்காதவர்கள் பாருங்கள்.. இவரை லவ் பண்ண தொடங்கிவிடுவீர்கள்...)

ரிஷிதான் இந்தக்கதையை பிள்ளையார் சுழி போட்டு துவக்கும் நபர். தூத்காசி, தூத்காசி என்று அவர் புலம்பும் போதெல்லாம் சிரித்து சிரித்து மாளவில்லை. ஆனால் அடுத்து இறந்து நம்மை அப்படியே அழத்தூண்டும் மனநிலைக்கு கொண்டு செல்லும் கேரக்டர். நந்தியின் காதில் சொன்னால் சீக்கிரம் பலிக்கும் என்று ஒரு டயலாக் சொல்லுவார் பாருங்கள்.. செம க்ளாப்ஸ்...

இசை ரதன் என்பவர்தான்.. ஆனால் விஷயம் அதுவல்ல... தொலைந்த நானி திரும்பி வரும் போது, மாளவிகா ஓடி வந்து கட்டிப்பிடிப்பார்.. அப்பொது ஒரு இசை ஒலிக்கும் பாருங்கள்... வாவ்.. வாவ்... இளையராஜா ராக்ஸ்.. தென்றல் வந்து தீண்டும் போதுஎன்ற அவதாரம் திரைப்படப்பாடலை தெலுங்கில் ஒலிக்க விடுவார் பாருங்கள்.. அப்படியே நம் மனசை கேஸ் பலூனில் கட்டி அந்தரத்தில் பறக்க விட்டது போல் நாமும் பறப்போம். அந்த மேஜிக்தான் இசையராஜா”.. நாக் அஸ்வின் ரசிகன்யா. நீ பெரிய ரசிகன்யா... ஆந்திராவின் பால்கி நீதான்யா.. எத்தனை இசை ஒலிக்க விட்டாலும் இளையராஜாவின் இந்த இடத்தை இட்டு நிரப்ப ஒருத்தருமே கிடையாது என்று சத்தியம் செய்ய வைக்கும் இடம் இது. செம ஃபீல்...

இமயமலை, உத்திராகாண்ட் என்று மலைகளின் பேரழகை கேமிரா அப்படியே உள்வாங்கி, நமக்கு 120 ரூபாய் டிக்கெட்டில் சுற்றிக்காட்டி இருக்கிறது. படம் பார்த்த எனக்கும் என் நண்பர்களுக்கும் இந்தப்படம் அந்த அளவிற்கு பிடித்திருந்தது. ஏனென்றால் இதுபோன்ற ஒரு வாழ்க்கையைத்தான் நாங்கள் வாழ விரும்புவது. அதற்காக வருடத்தில் சில நாட்களை ஒதுக்கி வைத்துள்ளோம். சென்றமுறை, கேரளா, ஆலப்புழா, மதுரா, ஆலிவா, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, தென்காசி, குற்றாலம், என பலப்பல இடங்களை ரசிக்க ரசிக்க சுற்றிப்பார்த்து, அனுபவித்துவிட்டு திரும்பி இருக்கிறோம். செண்பகாதேவி அருவி, தேனருவி என பல அருவிகளுக்கு ஆபத்தான இடங்களுக்கு சென்றிருக்கிறோம். தேனருவி எல்லாம் சாதாரண மனிதர்களால் சென்றுவிட முடியாத ஒரு இடம். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இடம். அதற்கு செல்லும் வழி மிகவும் அபாயகரமானது. அங்கு சென்ற பரவசமான அனுபவமே இந்த வாழ்விற்கான பெரும் ஆனந்தம்.   

அதைத்தவிர அத்திரிமலை என்றொரு இடமுண்டு. தென்காசிதாண்டி, அம்பாசமுத்திரம் தாண்டி, ஆழ்வார்குறிச்சியும் தாண்டி, கடனா நதியின் இடப்பக்கம் செல்லும் காடுகளின் வழியே செல்லும் ஆபத்தான பகுதியின் வழியே பயணித்தால் அத்திரி மலை வரும். ஆபத்தான விலங்குகளை கடந்து, நதியில் குளித்து, அத்திரி மகரிஷி தங்கிய இடங்களை தரிசித்து, அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு வந்த நேரங்கள் எல்லாம் வாழ்வின் வரம். அங்கு சென்று வருவதெல்லாம் வாழ்வின் பாக்கியம். உன் வாழ்க்கையில் நீ ரசித்து, வாழ்ந்த நிமிடங்கள் எது என்ற கேள்விக்கு என்னால் எளிதாக பதில் சொல்ல முடிந்த நொடிகள் அவை.

வெறும் சம்பாதித்தால் மட்டும் போதாது, நல்ல நண்பர்கள் புடை சூழ இப்படி இயற்கையை அதன் போக்கில் ரசிப்பதும்தான் வாழ்வை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. இனிமேலும் பணத்தின் பின்னால் சில நாட்கள் ஓடி, பின் இயற்கையின் பின்னால் தேசாந்திரியாக பலநாட்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற ஆவலை, இன்னும் கொஞ்சம் சுடர்விட்டு எரிய வைத்திருக்கிறது இந்தப்படம்.

வாழ்க்கையை வாழ விரும்புவர்களுக்கான ஒரு கையேடு இந்தப்படம்..

No comments:

இதையும் படியுங்கள்