Monday, June 9, 2014

உன் சமையலறையில்

ஃபீல் குட் என்ற பெயருக்கு ஏற்ற வகையில் வந்திருக்கும் படமே  உன் சமையலறையில்”.

முதலில் இந்தப்படத்தை மலையாளத்தில்தான் பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒரு முறை இருமுறை அல்ல, ஐந்தாறு முறை. அதில் என்ன காமெடி என்றால் ஐந்தாறு முறைப்பார்த்தும் ஒரு முறைக்கூட முழுதாக அந்தப்படத்தை பார்க்கவே முடியவில்லை. ஏனோ மனம் அந்த சால்ட் அண்ட் பெப்பரில் ஒட்டவே இல்லை. அதுவும் லாலின் விநோத முகபாவங்களும் ஸ்வேதா மேன்னின் அண்டர் ப்ளே நடிப்பும் அந்தப்படத்தை பார்க்கவே விட வில்லை. ஒவ்வொருமுறையும் அந்த டிவிடியை கையில் எடுத்து பார்த்துவிட்டு வேறுபடங்களுக்கு தாவிவிடுவோம்.

பிரகாஷ்ராஜ் இந்தப்படத்தை ரீமேக்கப்போகிறார் என்று தெரிந்த்தும், இது என்னடா சோதனையா போச்சு, நம்மை ஈர்க்காதது எது பிரகாஷ்ராஜை இந்தப்படத்தில் ஈர்த்தது? இந்தப்படத்துல அப்படி என்னத்தான் இருக்கு? என்று யோசனையுடனே சால்ட் அண்ட் பெப்பரை மறுபடியும் பார்க்க முயன்றேன். ஆனால் விதி வலியது. விக்ரமாதித்தியன் வேதாளம் மாதிரி பார்க்க முடியாமல் மறுபடியும் அந்த டிவிடியை தூக்கி ஷெல்ப் மேலேயே போட்டுவிட்டேன்.

ஆனால் தமிழில் அப்படிப்பட்ட வலிகள் எதுவும் இருக்கவில்லை. பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் நிறையவே ஹைக்கூ ஷாட்கள் இருந்தன. மலையாள ஒரிஜினல் படத்தைவிட இந்தப்படம் நிறைவாகவே இருந்திருக்கிறது (என்னளவில்). ஆனாலும் மலையாளத்தில் முதல் பாடல் மிக மிக கலக்கலாக இருக்கும். அவர்களது உணவு முறைகளும் அதை எக்ஸ்போஸ் செய்திருக்கும் ஷாட்ஸும் அத்தனை ரம்மியமாய் இருக்கும். நமக்கே அள்ளி எடுத்து உண்ணலாமா என்று இருக்கும். மேலும் அந்த பாட்டில் தோசையை திருப்பும் போது, டீ ஆற்றும் போது என அந்த ஷாட்களின் இடைவெளியிலேயே டைட்டில் டிசைன் செய்திருப்பார்கள். அமர்க்களமான ஐடியா அது. ஆனால் அத்தகைய பரவசத்தை மட்டும் இங்கே மிஸ் செய்திருக்கிறார்கள், அதற்கு முக்கிய காரணம் தமிழில் பாடப்பட்ட அந்தக்குரல். மலையாளத்தில் அந்தக்குரல் அப்படியே நம்மை கைப்பிடித்து உணவகத்திற்கு அழைத்து சென்று ஊட்டிவிடும் அனுபவத்தை கொடுக்கும். ஆனால் இங்கே அது மிஸ்ஸிங். இதோ அந்த ஒரிஜினல் வெர்ஷன் சாங்படத்தின் கதை என்று பெரிதாக சொல்வதற்கு ஏதும் இல்லை. 40ஐ கடந்த ஒரு ஆணும், 30 ஐ கடந்த ஒரு பெண்ணும் தங்களது உணவு என்ற ஒரு ரசனையில் குரல்வழி சந்திக்கிறார்கள். உணவு, உணர்வு என்ற இடத்தை நோக்கி நகரும் போது விதி வசத்தால் பிரிகிறார்கள். பின் ஆள்மாறாட்ட காதல், அது இது என்று இறுதியில் சுபம்.

ரீமேக் என்ற விஷயத்தை கையில் எடுக்கும் போது ஏன் ஈயடிச்சான் காப்பியாக அப்படியே எடுத்து வைக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. அந்த காட்டுவாசிகள் எபிசோட் எல்லாம் தேவையே இல்லாத்து. இந்த தேவையற்ற விஷயங்கள்தான் சால்ட் அண்ட் பெப்பரை ரசிக்க தடையாய் இருந்தது. இங்கேயும் அதை வெட்டி எறிந்துவிட்டு உணவு சம்மந்தமான இன்னும் சில ருசிகர சீன்களை சேர்த்திருக்கலாம் என்பதே என் எண்ணம். ஏனென்றால் டைட்டில் முதற்கொண்டு உணவு சார்ந்த படம் என்று விளம்பரப்படுத்திவிட்டு, பின் காதல் கண்ணா மூச்சி என்று ஜல்லியடித்திருக்கிறார்கள்.

முதல் பாதியில் உணவுகளை அத்தனை நுணுக்கமாக காட்டிவிட்டு பின் அதை அப்படியே காற்றில் விடுவது நல்ல திரைக்கதைக்கு அடித்தளம் இல்லை. ஃபுட் என்ற ஜானரை மையமாக கொண்டு தமிழில் நல்ல திரைப்படங்கள் துரதிஷ்டவசமாக இங்கே வந்ததே இல்லை. அடித்து ஆடி இருக்க வேண்டிய களம். மூலக்கதையால் நகரவே முடியாமல் நின்று விட்டது. அது என்ன மூலக்கதை என்றால் பைபிளா? குரானா? அதை எடிட்டே செய்யக்கூடாதா? ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றும் போது தேவையற்ற விஷயங்களை நீக்கிவிட்டு, ரீமேக்கப்படும் நேட்டிவிட்டிக்கு ஏற்றவாறு கதையை மாற்றி எடுப்பதில்தான் வெற்றி இருக்கிறது.  இதற்கு சரியான உதாரணம் கப்பார்சிங் தெலுங்குப்படம்தான். தபாங் திரைப்படத்தின் மூலக்கதையை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற ஏரியாக்களில் தாறுமாறாக தெலுங்கு ஸ்டைலில் தெலுங்கு நேட்டிவிட்டிக்கு ஏற்றவாறு புரட்டி எடுத்திருப்பார்கள். அதுதான் பவன் கல்யாணின் இமாலய வெற்றிக்கு அந்தப்படம் இன்றளவும் சான்றாய் நிற்கிறது. ஆனால் நாமளோ ஒஸ்தி என்ற பெயரில் ஜெராக்ஸ் காப்பியடித்து பல்லிளித்து நின்றோம்.

அதிலும் இந்தப்பட்த்தில் இந்தக் காதல் சோகம் என்பதெல்லாம் போரடிக்க ஆரம்பிக்கிறது. இடையில் இளம் ஜோடி இருவரின் காதல் டிராக் எல்லாம் வந்து பொறுமையை சோதிக்கிறது.
படத்தில் இரண்டாம் உலகப்போரின் போது காதலன் ஒருவனுக்காக காதலி ஒரு கேக் பிரிபேர் செய்வதாக ஒரு சீக்வென்ஸ் வருகிறது. உண்மையில் சர்க்கரைகட்டி அது. அந்த ஷாட் டிவைடேஷனும், கேமரா ஒர்க்கும், எடிட்டிங் மாயாஜாலமும், மிக முக்கியமாய் இளையராஜாவின் பின்னணி இசையும், வாவ்.. வாவ்.. வாவ்.. நமக்கு ஒரு பீஸ் ஊட்டிவிட மாட்டார்களா என்ற பரிதவிப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

அங்காங்கே விஜியின் சின்ன சின்ன க்யூட் வசனங்கள் ரசிக்க வைத்தாலும் விஜியை அடித்து ஆடவிடவில்லை என்றே தோன்றுகிறது. அதற்கும் மூலக்கதைதான் இடைஞ்சலாய் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் இன்னொரு அபியும் நானும், மொழி போன்ற டைனமைட் சிரிப்பு வெடிகள் கிடைத்திருக்கும்.

கொடுத்த காசிற்கு, அற்புதமான விஷுவல்ஸ், கலர்புல் டோன், இளையராஜாவின் மனதை வருடும் பின்னணி இசை, பிரகாஷ்ராஜ் சினேகாவின் இயல்பான பர்ஃபாமென்ஸ் என திருப்தியாகவே அனுப்புகிறார்கள். என்ன! ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லாமல், விருந்து இலையை உற்று நோக்கி, வாசனை பிடித்து, காக்காய் சோறு உண்ட அனுபவத்தோடுதான் வெளியே வர வேண்டி இருக்கிறது.

குறிப்பு : என்னைப்பொறுத்த வரை பிரகாஷ்ராஜ் ரீமேக்க விரும்பினால் என்னுடைய ஸ்டிராங் ரெக்கமெண்டேஷன் ஷட்டர் திரைப்படம்தான். பிரகாஷ்ராஜ் அடித்து தூள் கிளப்ப அந்த ஒரு படமே போதும்.

No comments:

இதையும் படியுங்கள்