Monday, June 16, 2014

முண்டாசுப்பட்டி விமர்சனம்


முதலில் படத்தின் டிரைலர் பார்க்கும் போதே எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இது, பார்க்கும் அளவிற்கு ஒர்த்தாக இருக்காது என்றுதான் நினைத்தேன் சி.வி. குமாருக்கு இன்னொரு வில்லா போன்றுதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வெளியீடு என்று தெரிந்தவுடன், சரி பெரிய தலையே வாங்கி இருக்கு.. போய்தான் பார்க்கலாமே! என்றுதான் சென்றேன்.  படம் ஆரம்பித்து இடைவேளை வரை நெளிந்துக்கொண்டேதான் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னடா இது சிரிப்பே வராமால் ஏதேதோ செய்துகொண்டு இருக்கிறார்கள் என்ற கடுப்புடனே இருந்தேன்.

இடைவேளை வரை திராபையாக சென்று கொண்டிருந்த கதை இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் களை கட்டத்தொடங்கியது. க்ளைமேக்ஸ் எல்லாம் மனம் விட்டு சிரிக்கும் அளவிற்கு இருந்தன. அந்த வகையில் கொடுத்த காசுக்கு ஏமாற்றாமல் எண்டர்டெயிண்மெண்ட் செய்துதான் அனுப்பினார்கள். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் எல்லாம் யூகிக்காதவர்களை எடிசனின் ஆன்மாவே மன்னிக்காது.

பெரிய கதை எல்லாம் ஒன்றும் இல்லை. ஃபோட்டோவே பிடிக்காத ஊருக்கு செல்லும் ஃபோட்டோகிராபர் என்ற குறும்பட ஒன்லைனை டெவலப் செய்து திரையில் ப்ரிண்ட் இட்டு இருக்கிறார்கள்.

விஷ்ணு நந்திதா எல்லாம் எந்த வகையிலும் ஸ்கோர் செய்யவில்லை. பார்த்த உடனே காதல், அந்த காதலிக்காக அவள் ஊருக்கு செல்வது, காதலிக்காக அவள் ஊரில் வேலை செய்வது என சம்திங் சம்திங் தனமாகவே விஷ்ணு திரிகிறார். அதுவும் அந்த கெட்டப்பும் விக்கும் சத்தியமா முடியலை...

நந்திதாவுக்கு விநோத வியாதி எதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. எந் நேரமும் பாராசிட்டமால் விழுங்கியவர் மாதிரியே அப்சஷன் லுக்குடனே திரிகிறார்.படத்தின் எண்டர்டெயினர் வேல்யூ என்று பார்த்தால் விஷ்ணுவின் நண்பராக வரும் காளியும், முனீஸ் ஆக வரும் ராமதாஸும்தான். இவர்கள் இருவரும் இல்லையென்றால் ஆளவிடுங்கடா சாமி என்று ஓடி வந்திருக்க வேண்டியதுதான்.

அதுவும் இடைவேளைக்கு பிறகு முனீஸ் வரும் காட்சிகள் எல்லாம் வெடிச்சிரிப்புக்கு உத்திரவாதம். என்னைய தின்ன வெச்சே கெடுத்தது நீதாண்டா என்று அவர் புலம்புமிடம் சரியான காமெடி. தமிழ்சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அடுத்த சூப்பர் காமெடியன் இவர்தான். சரியாக இவரை உபயோகப்படுத்தினால் பிரமாதமாக வருவார். இவரின் டயலாக் டெலிவரியும், பாடி லேங்குவேஜும் வெகு அசத்தல்.

படத்தில் நம்மை அதிகம் ரசிக்க வைக்கும் இன்னொரு நபர் சாமியாராக வரும் நபர்.  மனிதரின் பார்வையும், அந்த முரட்டுத்தனத்தில் தெரியும் கேனத்தனமும் வெகு கச்சிதம். தீர்க்காயுசா இரு என்று அவர் வாழ்த்தும் போதுதான் மொத்த தியேட்டரும் சிரிப்பில் அதிர்கிறது.

“சாமி உங்களுக்கு நாங்க என்ன சாமி செய்யலை?
 என்னடா செஞ்சீங்க? – ஒரு சாம்பிள் ஜோக் (செம)

என்னைப்பொறுத்த வரை இந்தக்கேரக்டருக்கு எம்.எஸ். பாஸ்கரை போட்டிருந்தால் படம் இன்னும் களை கட்டி இருக்கும். ஆனால் அவர் கூட்டிக்கொண்டு ஓடும் பெண்ணின் கேரக்டரை இத்தனை மோசமாக சித்தரித்திருக்க வேண்டியதில்லை. என்னதான் காமெடிக்காக என்றாலும் காமநெடியாக போய்விட்டது. பெண்ணிய அமைப்புகள் சும்மாவா விட்டாங்க.. ம்ம்ம் ஆரம்பியுங்கப்பா... உங்களுக்கு அடுத்த அசைண்மெண்ட் கிடைச்சிடுச்சி.
   இயக்குனர் ராம்குமார் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நிறைய குறும்படங்களை இயக்கியவர். யாரிடமும்  உதவி இயக்குனராக இல்லாமல் முதல் படம் இயக்கியுள்ளார். திரையில் சாதிக்கத்துடித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் சி.வி குமாரின் இந்த அட்டெம்ப்ட் நிறைய தன்னம்பிக்கையை தரும். ராம்குமாரின் ஷார்ட் ஃபிலிமில் இருக்கும் குட்டி குட்டி ஐடியாக்கள் அழகான புன்னகையை தரும். அது படத்தில் நிச்சயம் இருக்கிறது. என்ன ஒரு வித்தியாசம் இதுவும் அங்காங்கே மட்டும்தான்.


ஆனந்தராஜ் ஒரு கேரக்டர் செய்திருக்கிறார். மனிதரை வெகுநாள் கழித்து திரையில் பார்ப்பது வெகு ஆனந்தம். ஏன் இவரைப்போன்ற சீனியர் நடிகர்களை இன்றைய சினிமா கண்டுகொள்வதில்லை என்ற ஆதங்கம் நிறையவே எனக்கு உண்டு. சும்மா சொல்லக்கூடாது, துப்பாக்கியை இவர் நீட்டிக்கொண்டு இருக்கும் போது அவரது அடியாள் துப்பாக்கியை தூக்கி, சூப்பை வைத்துவிட்டு போகும் போது ஒரு லுக் கொடுப்பாரே மனுஷன், வாரே வாய்யா.. அதான்யா எக்ஸ்பீரியன்ஸ் ஆர்டிஸ்ட்.

இது போன்ற பீரியாடிகல் திரைப்படங்கள் எடுப்பதில் நிறைய நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் அதை ரசிகர்களுக்கு ஏற்புடைய விதத்தில் ப்ரசண்ட் செய்ய வேண்டும். அடுத்து, விநியோக வியாபார காந்தங்களுக்கு இதன் தன்மை புரிய வேண்டும். மக்களின் தற்போதைய ட்ரெண்டுக்கு இது அந்நியமாய் போய் விடாது என்று நம்ப வைக்க வேண்டும். இது போன்ற சிக்கல்களால்தான் இந்த படம் 2013 அக்டோபரில் முடிந்தும் வியாபாரம் ஆகாமல் இருந்திருக்கிறது. ஃபாக்ஸ் ஸ்டார் புண்ணியவானின் புண்ணியத்தில் புதிதாய் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. வில்லாவினால் விலா எலும்பு நொறுங்கி போய் இருந்த சி.வி.குமாருக்கு நல்லாகலெக்‌ஷன் கட்ட இந்தப்படம் உதவிடும்.காளி, சாமியார், முனீஸ் இந்த மூன்று பேரை இன்னும் கொஞ்சம் முன்னிலைப்படுத்தி இருந்தால் தாறுமாறான காமெடி திரைப்படம் நமக்கு கிடைத்திருக்கும்.

2 comments:

mathi sutha said...

குறும்படத்தையே வெறித்தனமாக பார்த்தவன் இதை தவற விடமாட்டேன் நன்றி சகோ

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM

மணிகண்டவேல் said...

நன்றி நண்பா...பாருங்கள்.. பார்த்துவிட்டு சொல்லுங்கள் உங்கள் கருத்தை..

இதையும் படியுங்கள்