Friday, June 13, 2014

Bangalore Days - பெங்களூர் டேஸ் விமர்சனம்


சென்ற வாரத்தில் பார்க்க நேர்ந்த இன்னொரு மலையாள சினிமா. ஆஹா ஓஹா என்று கொண்டாடித்தீர்க்க முடிகிற படம் அல்ல இது. ஆனால் பத்தோடு பதினொன்று என்று ஒதுக்கிவிடவும் முடியாத சினிமா இது. உஸ்தாத் ஹோட்டல் படம் வெளியான போது அத்தனை ரசனையான வசனங்களை எழுதி இருந்தார் அஞ்சலி மேனன். சிறந்த வசனத்திற்கான தேசிய விருதும் இவருக்குத்தான் கிடைத்தது. மாநில விருதுகள், ஃபிலிம் பேர் விருதுகள், மாநில மொழி விருதுகள் என அது இது என்று நிறைய விருதுகளை வாரிக்குவித்து, மலையாள சினிமாவிற்கு பெருமை சேர்த்த ஒரு பெண்.

உஸ்தாத் ஹோட்டல் திரைப்படத்திற்கு பிறகு ஒரு கதையை எழுதுகிறார். அதில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் மிக முக்கிய கதாபாத்திரங்களாய் இருக்கிறார்கள். யாரை தேர்ந்தெடுப்பது? என்று குழம்புகிறார். இதன் கதை ஒவ்வொரு மலையாள டாப் மோஸ்ட் கதாநாயகர்களிடம் போகிறது. அத்தனை பேரும் சொல்லி வைத்த மாதிரி ஓகே சொல்லுகிறார்கள்.
 

நேரம் ஹீரோ நிவின் பாலி, வாயை மூடி பேசவும் ஹீரோ துல்கர் சல்மான், மலையாள சினிமாவின் மோஸ்ட் வாண்டர் ஹீரோ பகத் பாசில் என்று அத்தனை பெரிய தலைகளும் ஓகே சொல்லுகிறாகள். ஹீரோயின் என்று பார்த்தால், நஸ்ரியா, பார்வதி மேன்ன், இஷா தல்வார், நித்யா மேனன் என வகைக்கு ஒன்றாய் தி பெஸ்ட் ஹீரோயின்கள் படத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார்கள்.

இது எப்படி இருக்கும் என்றால், நம்மூர் விஜய், அஜித், சூர்யா, சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்? கூடவே நயன்தாரா, நஸ்ரியா, பார்வதிமேனன், லக்‌ஷிமேனன் என்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு மோஸ்ட் எக்ஸைட்டிங் காம்பினேஷன் சேர்ந்ததால் படத்தின் மார்க்கெட்டிங் எகிறியது. விளம்பரமும், வியாபாரமும் கொடிகட்டி பறந்த்து.
ஆனால் படம் கொடுத்த ரிசல்ட்?
 

நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட் லிஸ்டில்தான் இணைந்திருக்கிறது. ஆனால் ஆஹா ஓஹோவென கொண்டாடித்தீர்க்கிற ஹிட் இல்லை. இளம் தலைமுறையினர் அள்ளி அரவணைத்து கொண்டாடும் மாடர்ன் மூவி ஹிட் லிஸ்ட்தான் இந்தப்படமும்.
துல்கர் சல்மான், நஸ்ரியா, நிவின் மூவரும் இணைபிரியா நண்பர்கள். நஸ்ரியாவுக்கு பகத் பாசிலுடன் திருமணம் முடிந்து பெங்களூர் செல்கிறார். நிவினும் ஐடி துறை வேலைக்காக பெங்களூர் செல்கிறார். துல்கரும் தன்னுடைய பைக் ரேஸ் காதலுக்காக பெங்களூர் செல்கிறார். இந்த மூவரின் வாழ்க்கையில் பெங்களூரும், பெண்களூரும் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை மெல்லிய இசைப்பயணத்துடன் சொல்லி இருக்கும் படமே இந்த பெங்களூர் டேஸ்

முதலில் துல்கர் சல்மான், ஆறடி ஹாண்ட்சம் ஹீரோ, மலையாள  உலகின் லேட்டஸ்ட் மன்மதன். இவரின் குரல்மொழியே ஒரு தனி ஈர்ப்புதான். பைக் ரேஸராக வந்து படத்தில் பட்டாசு கிளப்புவர் இவர்தான்.

அடுத்து நிவின், நிவினின் ஓப்பனிங் சீனில் நாமே ஷாக்காகி விடுவோம். என்னடா இப்படி ஒரு கேனத்தனமான கெட்டப்பில் இவரை காட்டுகிறார்களே என்று. ஆனால் போகப்போக அந்த கோமாளித்தனமான கெட்டப்பும், அவரது இன்னொசென்ஸ் நடவடிக்கைகளும் நம்மை இன்னும் விரும்ப வைத்துவிடுகின்றன.

பகத்பாசில், சொல்லவே வேண்டியதில்லை.. ராட்சஸன். கிட்டத்தட்ட மெளனராகம் மோகன் கேரக்டர் போலத்தான். ஆனாலும் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். அந்த சைலண்ட் லுக்கும், மெளன மொழிகள் பேசும் கண்களுமாய் மனுஷன் வர வர நம்மையே ரசிகர் மன்றம் வைக்க ஆரம்பிக்க வைத்துவிடுவார் போல. தன்னால் மரணம் அடைந்த காதலியின் அப்பாவான பிரதாப் போத்தனை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதும், அந்தக்காதலால் கட்டிய செல்லக்கட்டி நஸ்ரியாவை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அழகு தேவதை நித்யாவை மறக்க முடியாமலும் மூன்று விதமான டைமென்ஷன்களில் நடித்து நம் அப்ளாஸை அள்ளிக்கொள்ளும் அனுதாபி இவரே.
 


நஸ்ரியாவைப்பற்றி சொல்லவிட்டால் நம் ஜென்மம் சாபல்யம் அடையாது. முழுக்க முழுக்க படத்தின் எண்டர்டெயிண்ட்மெண்டுக்கு இவர் ஒருத்தர் மட்டுமே குத்தகை எடுத்திருக்கிறார். அந்த முணுக் முணுக் பேச்சும், வெடிச்சிரிப்பும், துள்ளல் நடிப்பும், ஆர்ப்பட்டமான கோவமும், அமைதியான ரொமான்ஸும், அட அட அட.. நஸ்ரியா வீ மிஸ் யூ... பகத் பாசில் குடுத்து வெச்சவர்.. அவ்ளோதான் சொல்ல முடியும்.
 


பார்வதி மேன்னுக்கு ஏன் இப்படி ஒரு கெட்டப் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி, அந்த டாம்பாய் லுக் அவருக்கு வேறு ஒரு கலரிங் கொடுத்தாலும், என்னமோ ஒன்று மிஸ் ஆகிறது. ஆனால் அந்த எக்ஸ்பிரஸ்ஸிவ் கண்கள் எல்லாவற்றையும் மீறி நம்மை வசீகரித்து, அவரின் வீல்சேரின் பின்னால் அலைய வைக்கிறது.
 


இஷா தல்வாரின் ரோலை என்னவென்று சொல்வது? பாவம் நிவின் பாலி. தட்டத்தின் மறையது படத்தில் இந்த ஜோடியை கேரளாவே கொண்டாடியது. அப்படி ஒரு ஜோடியை இப்படி செய்திருப்பதுசரியல்ல.. அஞ்சலிக்கு இங்கு மட்டும்தான் எனது கொட்டு..
நித்யா மேன்னின் ரோல் குட்டியூண்டுதான் என்றாலும் நிறைவாகவே செய்திருக்கிறார். அம்மணி உடம்பைக்கொஞ்சம் குறைங்க...

படத்தின் கேமரா ஒர்க் அட்டகாசம். அது எப்படி மலையாளத்திரையுலகில் மட்டும் கேமரா ஒர்க் இந்த அளவு பிரமாதப்படுத்துகிறார்கள் என்றுதான் புரியவில்லை. கத்துக்கோங்கப்பா... படத்தில் கிடைத்த இடத்தில் எல்லாம் சிக்ஸர் அடிக்கும் இன்னொரு நபர் கல்பனா. கணவர் ஓடிப்போய்விட்டார் என்பது தெரிந்தும் மகனிடத்தில் வேற மாதிரி பேசி, வெளியில் அப்பாவியாய் பேசி அப்ளாஸ் வாங்கும் கேரக்டர். கல்பனாஜி கங்கிராட்ஸ். அதுவும் பெங்களூருக்கு வந்தபின் சுடிதார் போட்டுக்கொள்வது, லேடிஸ் கிளப், பீட்ஸா, லாஃபிங் தெரபி என அம்மணி கிடைத்த கேப்பில் எல்லாம் கிடா வெட்டியிருக்கிறார். 

அஞ்சலியின் ஸ்க்ரிப்டில் எனக்கு மிகவும் பிடித்த்து அந்த நட்பும் அவர்களது கபடமில்லாத வாழ்க்கையும்தான். இப்படி ஒரு நட்பும் வாழ்க்கையும் அமைந்தால் அதுதான் வரம். அந்த வரத்தை வேண்டித்தான் இந்த கதை நம்மை வழிநடத்திப்போகிறது. ஒரு காதல், அது கொடுக்கும் வலிகளும் இன்பங்களும், அதனூடே இழுத்துக்கொண்டு, தன்னளவில் தானாய் செதுக்கிக்கொண்டு ,பயணப்படும் நட்புதான் இந்தப்படத்தின் பலம். நட்பை கொண்டாடி, காதலை கைகோர்த்துக்கொண்டு செல்கிறது இந்த பெங்களூர் டேஸ். ஆப்பாட்டம் இல்லாமல் டென்ஷன் இல்லாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போனால் நிச்சயம் ரசித்துவிட்டு வரலாம்.
 
4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

chennai la entha theatre?

மணிகண்டவேல் said...

//chennai la entha theatre?//

pvrல தல//

Baby ஆனந்தன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். படம் எனக்கு ஒரு ப்ரேம் கூட விடாமல் மிகவும் பிடித்திருந்தது. பார்வதி மேனனின் ஒரிஜினல் கெட்டப்பே இதுதான்! நீங்கள் பார்க்கும் பொழுது சப்-டைட்டில் இருந்ததா?

மணிகண்டவேல் said...

// Baby ஆனந்தன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். படம் எனக்கு ஒரு ப்ரேம் கூட விடாமல் மிகவும் பிடித்திருந்தது. பார்வதி மேனனின் ஒரிஜினல் கெட்டப்பே இதுதான்! நீங்கள் பார்க்கும் பொழுது சப்-டைட்டில் இருந்ததா? //

நன்றி ஆனந்தன் ஜி.... படம் எனக்கும் மிகப்பிடித்து இருந்தது.. பார்வதியை பூ, மரியானில் வேறு மாதிரி ரசித்து “ஜொள்”ளி இருந்ததால்... இதில் அந்த டோன் கொஞ்சம் கம்மியாய் இருந்தது. அவ்வளவுதான்.. ஆனாலும் கலக்கி இருந்தார்.. மலையாளப்படங்களை நான் சப் டைட்டிலுடன் பார்ப்பதில்லை நண்பரே,, எனக்கு சப் டைட்டில் இல்லாமலே நன்றாக புரியும்... ஹிந்தி படங்களுக்கு மட்டும்தான் சப்டைட்டில்

இதையும் படியுங்கள்