Monday, January 6, 2014

த்ரிஷ்யம் - அற்புதமான மலையாள திரைப்படம்
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... இதுவரை நீங்கள் பார்த்திருக்கும் அத்தனை த்ரில்லர் படங்களையும் ஓரங்கட்டி, உங்கள் மனதில் ஓர் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்ள இதோ ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது.. அதுதான் சமீபத்தில் வெளியான மலையாள படமான “த்ரிஷ்யம்

வருடம் முழுவதும் வெளியான மோகன்லாலில் படங்களான ரெட் ஒயின்”, ”லேடிஸ் அண்ட் ஜெண்டில் மென்”, “கீதாஞ்சலி லோக்பால்போன்றவை மோகன்லாலின் மார்க்கெட் மீது ஒரு டன் மணலை அள்ளி கொட்டி படுபாதாளத்தில் தள்ளி இருந்தன. ஆனால் இது அத்தனைக்கும் சேர்த்து பழிவாங்கும் விதமாக, வட்டிக்கு வட்டியாக வருடக்கடைசியில் வெளியான த்ரிஷ்யம் ஒட்டுமொத்த மலையாள சினிமாவே ஆச்சர்யப்பட்டு விழிகளை பிதுக்கும் அளவுக்கு, வசூலை வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு இந்தி என அத்தனை மொழிகளிலும் ரீமேக் உரிமை எனக்கு உனக்கு என போட்டா போட்டியில் பறந்து கொண்டிருக்கிறது. 

சரி அப்படி என்னதான் இந்த த்ரிஷ்யத்தில் இருக்கிறது?
 

இயற்கை எழில் சூழ ஒரு வீட்டில் மோகன்லால் தன் மனைவி மீனாவுடனும் தன் இரண்டு பெண்களுடனும் அமைதியாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டரான இவருக்கு எப்பொழுதும் திரைப்படங்கள் பார்ப்பதும் அதனுடனே வாழ்வதுமே பேரானந்தம். 12வது படிக்கும் அவரின் மகளான அஞ்சுவை அவளுடன் படிக்கும் மாணவனான அருண் அவள் உடை மாற்றும் போது தன் செல்ஃபோன் கேமராவில் வீடியோ எடுத்துவிடுகிறான். அதைவைத்து அஞ்சுவை மிரட்டி, தன் ஆசைக்கு இணங்க வைக்கும் போது ஏற்படும் கைகலப்பில் அஞ்சுவும் அவளது அம்மாவுமான மீனாவும் வருணை எதிர்பாராதவிதமாக தாக்க, அருண் இறந்து போகிறான். செய்வதறியாது திகைக்கும் அம்மாவும் மகளும் வருணை அவர்கள் வீட்டு தோட்ட்த்தில் ஒரு குழியில் புதைத்துவிடுகின்றனர். இதை அவர்களது இன்னொரு மகளான 10 வயதான அனு பார்த்துவிடுகிறாள். 

பின் நடந்ததை மோகன்லாலுக்கு அவர்கள் தெரிவிக்க, கொலை நடந்த எந்த தடயமும் போலீஸுக்கு சிக்க்க்கூடாது என்று மோகன்லால் அலிபிக்கள் எல்லாவற்றையும் அழிக்கிறார். ஆனாலும் வருணின் பெற்றோர்களான ஐஜி அம்மா, ஜட்ஜ் அப்பா போலீஸ் துறையை முடுக்கி விட, போலீஸ் கிடைத்திருக்கும் சாட்சியங்களை வைத்து மோகன்லால் குடும்பத்தை சுற்றி வளைக்கிறது. பின் என்ன நடந்தது, எப்படி அந்தக்குடும்பம் தப்பித்தது என்பது திகைக்க திகைக்க மிரள வைக்கும் திக் திக் கிளைமேக்ஸ்.

தன் மனைவியும் மகளும் செய்த ஒரு கொலையை மறைக்க மோகன்லால் செய்யும் அத்தனை தகிடு தத்தங்களும் புத்திசாலித்தனத்தின் உச்சங்கள். வெறும் நாலாவது மட்டுமே படித்த ஒருவன், எப்படி அத்தனை புத்திசாலி போலீஸ் கூட்டத்தையும் தன் கட்டுக்கதைகளால் நம்ப வைக்கிறான் என்பதுதான் கை வலிக்க வலிக்க கைதட்ட வைக்கும் திரைக்கதை. 

புது போலீஸ் ஸ்டேஷன் கட்டுகிறார்கள் என்பது முதல் காட்சியில் இருந்தே எளிமையாக சொல்லிவிட்டு, மிக முக்கியமான டிவிஸ்டை அங்கே கொண்டுபோய் வைத்திருப்பதுதான் இந்தப்படத்தின் ஹைலைட். மோகன்லாலின் ஃபோன் மழை சமயத்தில் வேலை செய்யாத்து, மோகன்லால் தோண்டும் குழி, பஸ் டிக்கெட், ஹோட்டல் டிக்கெட்,  சர்ச்சில் தியானம் என அத்தனை சீக்வென்ஸுக்கும் டீட்டெய்லிங் கொடுத்திருப்பது பிரமிக்க வைத்திருக்கிறது.

மோகன்லால்.... என்ன மனுஷன்யா இவர்! அத்தனை பெரிய உடம்பு முழுக்க மூளை வைத்திருப்பாரோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு ப்ரில்லிண்ட் கேரக்டரைசேஷன். ஆரம்பத்தில் வெகு சாதாரணமாக 50க்கும் 100க்கும் கணக்கு பார்த்து செலவிடும் போதும், ஸ்டாமினா போய்டுச்சி என்று சொல்லிவிட்டு டக்கென்று சைக்கிள் மிதித்த்தால் என்று சொல்லி சிரிப்பாரே அட்டகாசமான நடிப்பு. மனுஷன் இந்த வயதிலும் ரொமான்ஸை கண்ணில் தேக்கி வைத்திருக்கிறார். குழந்தைகளை அரவணைத்து, போலீஸிடம் எப்படி பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை நுணுக்கமாக சொல்லித்தரும் ஆசானாக அன்பான தந்தையாக மோகன்லாலைத்தவிர இந்த ஜார்ஜ்குட்டி கேரக்டருக்கு வேற யாரையும் நினைத்தே பார்க்க முடியாது. அடித்து தூள் கிளப்பி இருக்கிறார் லாலேட்டன்.
  
ஐ.ஜியாக வரும் ஆஷா சரத், என்ன ஒரு பர்ஃபாமென்ஸ்! என்ன ஒரு கணகள்! என்ன ஒரு மிடுக்கு!. தன் மகன் காணாமல் போன தவிப்பு, மோகன்லால் சொல்லும் அத்தனை கதைகளையும் போலீஸ்துறை நம்பலாம் நான் நம்ப மாட்டேன். அவன் கண்ணில் ஏதோ பொய் தெரியுது என்ற படியே பரிதவிக்கும் காட்சிகள், தன் அதிகாரத்தை பயன்படுத்தி மோகன்லாலை கடைசி நிமிடம் வரை மிரட்டி நொறுக்குவது என வெளுத்துக்கட்டி இருக்கிறார்அடுத்து, கான்ஸ்டேபிள் சகாதேவனாக வரும் கலாபவன்.. சரியான லஞ்சப்பேய். பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு போன இடத்தில் மோகன்லாலை காருக்குள் பார்த்துவிட்டு, அந்த ஒரு சின்ன க்ளூவை வைத்தே மோகன்லாலை இண்டு இடுக்கு என விடாமல் சிதற அடித்துக்கொண்டே இருக்கிறார். பார்க்கும் நமக்கே ஓங்கி ஒரு அறை அறையலாமா என்று தோன்றுகிறது. வெல்டன் பர்ஃபாமென்ஸ்..

எனக்கே படம் பார்க்கும் போது அடுத்தது என்ன ஆகிவிடுமோ, மாட்டிக்கொள்வார்களே,  எப்போது எது நடக்குமோ என்ற பதை பதைப்பிலேயே ஹார்ட் பீட் நிமிடத்திற்கு 120 முறை துடிக்க ஆரம்பித்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

சமீப காலத்தில் இப்படி ஒரு த்ரில்லரை பார்த்த்து இல்லை. மலையாள சினிமா எங்கயேயோ போய்க்கொண்டு இருக்கிறது. திரைக்கதைக்காக எப்படி எல்லாம் உழைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கும் போது மலைப்பாக இருக்கிறது. சற்றே பொறாமையாகவும் இருக்கிறது. 

இந்தப்படத்தின் திரைக்கதை இன்னும் 20 வருடங்கள் கடந்த பின்னரும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அத்தனை க்ரிஸ்பாய், நுணுக்கமாய் ஒரு ஸ்க்ரிப்படை எழுதுவது என்பது அசாத்தியமே. இந்தப்படம் கொடுத்த ஆர்வத்தில் இயக்குனரின் முந்தையப்படங்களான மெமரிஸ், மம்மி அண்ட் மீ, டிடெக்டிவ்ஸ், மை பாஸ் போன்ற படங்களை தேடிப்பிடித்து பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 

இந்தப்படத்தின் இயக்குனர் ஜீது ஜோஸஃப். என்ன ஒரு ஆளுமைத்தன்மை கொண்ட படைப்பு! கை வலிக்க, வலிக்க, கை கொடுத்து பாராட்டு தெரிவிக்கலாம் இந்தப்படைப்பாளிக்கு. போலீஸ் விசாரணையில் மீனா ஒரு வார்த்தையை உளறிவிட நமக்கே பட படப்பாய் போய் விட்டது. அடடா என்ன இப்படி உளறிக்கொட்டிட்டாங்களே என்று. ஆனால் அடுத்த நொடியே மோகன்லால் சமாளிக்கும் இடம் வாவ்.. கிளாஸ்.. அட்ரா கிளாப்ஸ் என்று நொடிக்கு நொடி என் கை என் கண்ட்ரோலில் இல்லவே இல்லை. 


கமர்ஷியல் வெற்றி மட்டுமல்ல, விருதுகளையும் இந்தப்படம் வாரி குவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தேசிய விருதுக்கான பட்டியலில் சிறந்த திரைக்கதைக்கு நிச்சயம் இந்தப்படம் தகுதிபெறும்

இதுவரை மலையாள சினிமாவில் வந்த வெற்றிகளை எல்லாம் அசால்டாக ஓரங்கட்டிவிட்டு மாபெரும் வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது இந்த த்ரிஷ்யம். சினிமா ஆர்வலர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு ரசிகனும் மறக்காமல் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.

த்ரிஷ்யம் – த்ரிஷ்டி சுத்தி போட்டுக்குங்க மக்கா....7 comments:

இந்திரா said...

“ரெட் வொய்ன்“ நா இன்னும் பாக்கல. (மத்த படங்களும் பாக்கல)
நல்லாயிருக்குறதா சொன்னாங்களே.. இல்லயா? மிச்சத்தையும் படிச்சுட்டு வந்துடுறேன்.

இந்திரா said...

கொஞ்சம் பெரிய்ய்ய்ய மாத்திரை..
வழக்கம்போல இந்த விமர்சனமும் உங்க பாணியில் படம் பார்க்க தூண்டுது.
வழக்கம்போல நானும் சொல்லிக்கிறேன்.
படம் பாக்கணும். :)

உலக சினிமா ரசிகன் said...

நான் மலையாளப்படங்களை டிவிடியில் மட்டுமே பார்த்து வருகிறேன்.இப்படத்தின் ஒரிஜினல் டிவிடிக்காக காத்திருக்கிறேன்.

மணிகண்டவேல் said...

@ இந்திரா....
நன்றி இந்திரா வெகு நாட்களுக்கு பிறகு எழுதி இருக்கிறேன்.. முதலில் கமெண்டிட்டதற்கு நன்றி... வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்..

மணிகண்டவேல் said...

@ உலக சினிமா ரசிகன் said...

நான் மலையாளப்படங்களை டிவிடியில் மட்டுமே பார்த்து வருகிறேன்.இப்படத்தின் ஒரிஜினல் டிவிடிக்காக காத்திருக்கிறேன்.//

அடடா...நல்ல டிவிடிக்கு இன்னும் நீங்கள் எப்படியும் ஒரு மாதமாவது காத்திருக்க வேண்டுமே..

Raman Kutty said...

சே.. இவ்ளோ கஷ்டப்பட்டு மாட்டிப்பாங்களோன்னு கவலைப்பட்டு பாதியிலேயா வந்தரலாம்னு நெனைச்சேன். ஏன்னா, மலயாளப் படங்கள் சோகத்தில் முடிய வாய்ய்பு அதிகம் என்பதால். ஆனால், அட்ரீனலை அதிகப்படுத்தி விட்டது இந்தப்படம் அதுவும் கடைசி சீன் வரை. நிச்சயம் பார்க்க வேண்டிய படம்..

Baby ஆனந்தன் said...

கன்னடத்தில் இந்த வாரம் படம் வெளியாகிவிட்டது. இன்னமும் ரிசல்ட் தெரியவில்லை. தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த இரண்டு மொழிகளிலும் த்ரிஷ்யம் திரைக்கதை வெற்றிபெரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழில் கமல் நடிக்கிறார். அதுதான் கொஞ்சம் இடிக்கிறது. கமலுக்கு மோகன்லாலிடம் இருக்கும் காமன் மேன் இமேஜ் இல்லை :(

இதையும் படியுங்கள்