Saturday, September 28, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – மிஷ்கின் என்ன சொல்லுறது உங்களை?


பாடாவதி காமெடிப்படங்கள்தான் டிரெண்ட் எனத் தெரிஞ்சும், ஏற்கனவே ஒரு சூப்பர் டூப்பர் பிளாப் கொடுத்தும், விநியோகஸ்தர்கள் வரமாட்டாங்க, தியேட்டர் கிடைக்காதுன்னு க்ளியரா தெரிஞ்சும் தன்னோட அடுத்தப்படத்துக்கு எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்காம இதுதான் என் படம்ன்னு தைரியமா துணிஞ்சு ராவா ஒரு படத்தை கொடுத்ததுக்கே தாராளமா சல்யூட் பண்ணலாம் மிஷ்கினுக்கு.

முதல் டாப் ஆங்கிள் ஷாட்டில் இருந்தே கவிதை சாரி கதை தொடங்கிவிடுகிறது. ராஜமெளலி எல்லாம் தன் படத்தில் முத்திரை போன்றொரு சிம்பல் குத்துவார். ஆனால் மிஷ்கின் மட்டும்தான் ஒவ்வொரு ஷாட்டிலும் இது மிஷ்கின் படம் என ரசிகனை சொல்ல சொல்லுவார். டிபிக்கல் மிஷ்கின் டச். மெல்ல நகரும் டிராலி, வைட் ஆங்கில் மூவிங், நீண்ட ஸ்லோ ஷாட்ஸ், பிக்ஸ்டு ப்ரேம்க்குள் கதை சொல்லுதல் என மிஷ்கின் கையாளும் கதை சொல்லி திறன்கள் எப்பவுமே சுவாரஸ்யமானவைதான்.


போலீஸாரால் சுடப்பட்ட மோசனான கொலைகாரனான உல்ஃப் என்ற மிஷ்கினை, ஒரு நாள் இரவில் மருத்துவம் பயிலும் ஸ்ரீ என்ற மாணவன் காப்பாற்றுகிறான். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் இருவர் வாழ்வையும் புரட்டிப்போடுகின்றன. என்ன என்ன நடக்கிறது என்ற கதைக்களத்தை விஷுவலாக பார்த்தால் மட்டும்தான் அந்த அனுபவத்தை உங்களால் ரசிக்க முடியும்.

வெறும் எபெக்ஸ்ட்ஸ் ஒரு கதையை நகர்த்தி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்தப் படத்தில் அதற்கு விடை இருக்கிறது. பின்னணி இசை எப்படி அமைய வேண்டும் என்று பாடம் பயில இந்தப்படம் வழிகோலி இருக்கிறது. இளையராஜா என்ற ஒரு மாபெரும் இசை ராட்சசனுக்கு இந்தப்படம்தான் ஓரவிற்கு தீனியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு தீமும் ஒவ்வொரு ரகம்.

ஓநாயின் மீது ஆட்டுக்குட்டி இரக்கப்படும் போது ஒரு தீம் மியூசிக், ஓநாயின் மீது ஆட்டுக்குட்டி கோவப்படும் போது இன்னொரு தீம், போலீஸின் பார்வையில் ஓநாயின் போக்கு திரிக்கப்படும் போது மற்றொரு தீம் மியூஸிக், கண் தெரியாதவர்களின் பார்வையில் ஓநாய் சித்தரிக்கப்படும் போது மாறும் தீம் மியூஸிக், இறுதியில் கடமையை கைமாற்றும் போது வெர்டிக்கலாக மாறும் தீம் மியூஸிக்  என இளையராஜா அசுர உழைப்பை கொட்டி இருக்கிறார்.

ஓட்டம், ஒளிதல், ஒதுங்குதல், பதுங்குல், பாய்தல், மிரட்சி, ஆசை, வெறி, கோபம், சாந்தம், பொறுமை என இந்தப்படத்தில் வெளிப்படும் அத்தனை மனித குணாதிசயங்களுக்கும் இசையால் உருவ மூட்டமுடியும் என்பது இளையராஜாவால் மட்டுமே செய்ய முடிந்த இசை அதியசம்.. ஒவ்வொரு ஷாட்டிலும் மாறும் குணாதிசயங்களுக்கு ஏற்ப இளையராஜாவின் வயலின் வளைந்து நெளிந்து ஓடுகிறது. அவரது மியூசிக் நோட்ஸ்ஸை ஒரு முறை கண்ணால் பார்க்க முடிந்தால் என் ஜென்மம் சாபல்யமடையும்

 
யுத்தம் செய் திரைப்படத்தில் செய்த அதே தப்பைத்தான் மிஷ்கின் இந்தப்படத்திலும் செய்திருக்கிறார். அதாவது முக்கால்வாசி படம் நிறைவடையும் வரை ஏன் இப்படி பண்றாங்க? யார் இவங்க? அப்படிங்கிற தெளிவற்ற உணர்வு ஆடியன்ஸுக்கு இருந்துக்கிட்டே இருக்கு. யார் இந்த கண் தெரியாதவங்க? இவங்களை ஏன் தூக்கிட்டு ஓடணும்? அப்படிங்கிற ஒரு கேள்வி மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கிறதால முழுசா படத்தோட ஒன்ற முடியாம போய்டுது.

மருத்துவம் படிக்கிற ஸ்ரீக்கு குண்டடிபட்ட ஒருத்தனை அரசாங்க ஆஸ்பத்திரியில சேர்க்கணும் அப்படிங்கிறது கூடவா தெரியாம இருப்பாரு? அத்தனை அவசரமா ஏன் தன்னோட வீட்டுல கொண்டு வந்து சேர்க்கணும்? என்னதான் மனிதாபிமானம்ன்னாலும் வீட்டுலையே ஆபரேஷன் பண்ற அளவுக்கு டூமச் கேரக்டரைசேஷன் என்று நினைக்கத்தோன்றுகிறது. அதே மாதிரி அந்த இடுகாட்டு காட்சியும், அதுக்கான லீட் சீன்ஸ்லையும் கொஞ்சம் கத்தரி போட்டு இருந்தால் அந்த இடம் இன்னும் க்ரிஸ்பாக வந்திருக்கும். போரடிக்குதுன்னு சொல்லக்கூடிய இடம் அது ஒண்ணுதான்.

ஒண்ணுன்னு சொல்லி ஸ்ரீ, மிஷ்கினை நோக்கி துப்பாக்கியை நீட்ட, ரெண்டுன்னு சொல்லி மிஷ்கின் துப்பாக்கியை நீட்டுற சீன் வெகு அமர்க்களம். காமெடியே இல்லாத படத்தில் போலீஸ்காரங்க சுடப்படும் போது கொடுக்கிற எக்ஸ்பிரஷன்ஸ் டயலாக் எல்லாம் மத்தாப்பூக்கள்.

ஏதோ ஒரு பிளாஷ்பேக் சொல்லப்போறாங்கன்னு நினைக்கும் போது அதை மிஷ்கின் ஒரே ஒரு நீண்ட ஷாட்ல சொல்லி இருக்கும் விதம் இன்னமும் மனசுலையே இருக்கு. க்ளோசப் ஷாட்ல நடிக்கத்தெரிந்த ஒரு நபர் என்ற அளவில் மிஷ்கின் இன்னமும் ஆச்சர்யப்படுத்துகிறார். பலபடங்கள் நடித்த அனுபவம் வாய்ந்தவர்களுக்கே வராத கலை அது. அதுவும் மெல்ல இயல்பாக ஆரம்பிக்கும் கதையை, மெது மெதுவாய் உணர்ச்சி மேலிட கண்கள் கலங்கி முகம் இருள சொல்லத்தொடங்க... அட்டகாசம் மிஷ்கின். அதுவும் அந்த பிரேமில் இரண்டு மெழுகுவர்த்திகள் ஒளிவீச... வாவ்.. வாவ்...இருள் சூழ்ந்த ஒருவனுக்கு முன்னால் வெளிச்சக்கதிர்கள்... என்னா ஒரு கம்போசிஷன்!!!

மிஷ்கினுக்கு இரவுகள் மேல அப்படி என்ன காதலோ தெரியவில்லை. முழு படமும் இருளிலேயே வர்றதால இருளை அத்தனை அழகா படம் பிடிச்சிருக்காங்க. அந்த மஞ்சள் டோனும், க்ரே க்ரேடிங்கும் ஒவ்வொரு ப்ரேமையும் அழகோவியமா மாத்தி இருக்கு.

மிஷ்கின் மேல் நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும், மக்களுக்கு அதை எப்படி பிரசண்ட் செய்ய வேண்டும் என்ற வித்தையை ஒரு கலாபூர்வமான அனுபவத்தை பயிற்றுவிக்கும் ஆசானாகதான் மிஷ்கினை அணுகவேண்டி இருக்கிறது. சமீப காலத்தில் திரை மொழியை இத்தனை நுணுக்கமாக கையாளும் இயக்குனர் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று தேடித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஒரு குத்துப்பாட்டு இல்லை, அநாவசியமான டயலாக் இல்லை, காமெடி என்கிற பெயரில் கண்றாவிகள் ஏதும் இல்லை,  நேர விரயம் செய்யும் சீன்கள் இல்லை, இப்படி அத்தனை குப்பைகளையும் ஒதுக்கி விட்டு மிஷ்கின் தான் நினைத்ததை மட்டும் விடாப்பிடியாக திரையில் வடித்திருக்கிறார்.

ஒன் மேன் ஆர்மி என்பது மிஷ்கின் திரைப்பள்ளிக்கு மட்டும்தான் பொருந்தும் போல. ஒரு ஆர்மி மேனின் கட்டுப்பாடு போல வெகு சிரத்தையாக தான் எழுதியதை எந்த சமசர கோட்பாடுக்குள்ளும் சிக்காமல் அச்சில் வார்த்த்து போல் படைத்திருக்கிறார். 

இந்த திரைமொழியை, ஷாட் பை ஷாட் கதை சொல்லும் திறனை எல்லாம் எத்தனை பேர் புரிந்துகொள்ள போகிறார்கள் எனத்தெரியவில்லை. எல்லா மக்களுக்கும் பாரதியாரின் கவிதைகளும், திருக்குறளும் அப்படியே சொன்னால் புரிந்துவிடவா போகிறது? 

படம் மொக்கை, இது தேறாது, என்று விமர்சிப்பவர்களுக்காகவே ராஜா ராணி வெளியாகி இருக்கிறது. நீங்கள் அங்கே போய் விசிலடித்துக்கொள்ளலாம். இது சினிமாவை நேசிப்பவர்களுக்கான சினிமா. இது உங்கள் ரசனையை ஒருபடி உயர்த்திக்கொள்வதற்கான சினிமா. இங்கே வந்து காமெடியை தேடாதீர்கள். பொண்டாட்டியிடம் சண்டையிட்டு வந்து ரிலாக்ஸ் செய்யவோ, மேலதிகாரியின் திட்டை மறக்க தியேட்டருக்கு வருவதாக இருந்தாலோ, இல்லை வேறு எந்த காரணத்துக்காகவும் தியேட்டருக்கு வருபவராக  இருந்தால் தயவு செய்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஓடும் தியேட்டருக்கு போகாதீர்கள். இது முழுக்க முழுக்க சினிமாவை ரசித்து ருசித்து கற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கான சினிமா. தேசிங்குராஜா, வ.வா சங்கம் என்று சில இயக்குனர்கள் ரசிகர்களின் ரசனையை மட்டம் தட்டி கல்லா கட்டிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகனின் ரசனையை மேம்படுத்த வந்திருக்கும் படம் இது.

கர்வம் கலைஞனின் சொத்து என்று சொல்லுவார்கள். உண்மையாகவே மிஷ்கின் கர்வமாக நடந்துக்கொள்ளட்டும். அதில் ஒன்றும் தப்பில்லை.
 


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான விமர்சனம் .. பாராட்டுக்கள்..!

இந்திரா said...

கதை சொல்லும் காட்சியில், காட்சி முழுவதும் கண் இமைக்காமலேயே சொல்லுவார். செம சீன் அது.

mathi sutha said...

திரைத்துறை பயிலும் ஒவ்வொருத்தனுக்கும் அது ஒரு காவியம்

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM

இதையும் படியுங்கள்