Friday, October 12, 2012

Frozen (ஃப்ரோஸன்) – கடுங்குளிரில் ஒர் பேராபத்து


ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு நொடியும் திகிலுடன், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரிதவிப்புடன் ரசிக்க வைத்த திரைப்படம் இது. மிகச்சாதாரண ஒன் லைனக்கொண்டு அசாதாரணமாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்த இந்த திரைப்படத்தைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

டான், ஜோ என்ற இரண்டு ஆண் நண்பர்களும் பார்க்கர் என்ற பெண்ணும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் மேற்குப்பகுதியிலுள்ள பனி மலையில் பொழுதை கழிக்க விரைகிறார்கள். அந்த இடம் கடும் குளிரானது. அங்கு பனிக்கட்டிகளே எல்லா இடங்களையும் ஆக்ரமித்திருக்கிறது. அந்த இடத்தில் பனிச்சிகரங்களுக்கு இடையே செல்லக்கூடிய விஞ்ச் ஒன்று அமைத்திருக்கிறார்கள். அதுதான் அந்த இடத்தின் சிறந்த பொழுதுபோக்கு. ஒரு நாள் சாயந்திரவேளையில் அந்த ரோப் காரை இயக்குவதை நிறுத்தும் வேளையில், நண்பர்கள் மூவரும் அந்த ஆபரேட்டரிடம் லஞ்சம் கொடுத்து இன்னும் கொஞ்சம் நேரம் இயக்கும்படி சொல்லி அந்த விஞ்சில் ஏறிக்கொள்கிறார்கள். எல்லாரும் அந்த விஞ்சில் இருந்து இறங்கிவிட, இவர்கள் மூவர் மட்டும் அதில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

ஜாலியாக பனிகளை ரசித்துக்கொண்டே வரும் நேரத்தில், அந்தரத்தில் அவர்கள் செல்லும் விஞ்ச் நிற்கிறது. எல்லா விளக்குகளும் அணைக்கப்படுகின்றன. வேறொரு ஆபரேட்டர் ஷிப்ட் மாறும் வேளையில், தவறுதலாக அந்த விஞ்சை நிறுத்தி விடுகிறார். வேறு யாருமே இல்லாத அந்த மலையில், இரவில், கடும் குளிரில் அவர்கள் மூவர் மட்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டும் அல்லாமல் இன்னும் 4 நாட்கள் கழித்துத்தான் வேலைக்கு ஆட்கள் வருவார்கள். அதுவரை இந்த மலைப்பயணத்திற்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆபத்தான சூழ்நிலையில் நண்பர்கள் மூவரும் மாட்டிக்கொள்கிறார்கள்.


நேரம் ஆக, ஆக, கடும் குளிர் வீச ஆரம்பிக்கிறது. அந்த விஞ்ச்சிலேயே குளிரில் நடுங்க ஆரம்பிக்கிறார்கள். எதாவது செய்து தப்பிக்க வேண்டும் என்ற நினைப்பில் டான் கீழே குதித்து. நடந்து சென்று யாரையாவது உதவிக்கு கூட்டி வருகிறேன் என்று கூறுகிறான். டான் கீழே குதிக்கும் போதுதான் அந்த பயங்கரம் புரிகிறது. அதாவது காலுக்கு கீழே ஐஸ் குவியலாக இல்லாமல், உறைந்து ஐஸ்கட்டியாக இருக்கிறது என்று.

கீழே குதித்த டான் நேரே அந்த ஐஸ்கட்டியின் மீது காலை வைக்க, கால் ஒரு விறைப்பான பாறையின் மீது மோதியதைப்போல் உடைகிறது. கால் எலும்புகள் சதையை கிழித்துக்கொண்டு வெளியே தொங்குகின்றன. மேலே இருக்கும் இரண்டு நண்பர்களும் அதிர்ந்து போகிறார்கள். இதைவிட பேராபத்தாக கீழே குதித்த டானை சுற்றி பனி ஓநாய்கள் சூழ்கின்றன. டானை ஒவ்வொரு ஒநாயாக கொன்று, குத்தி கிழிக்கின்றன. இத்தனைக்கும் இவன்தான் மேலே அமர்ந்திருக்கும் பார்க்கரின் காதலன். காதலியின் கண் முன்னே காதலனை ஓநாய்கள் கொன்று தின்கின்றன. பெரும் குரலெடுத்து கதறி அழுவதைத்தவிர அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
உதவிக்கு யாருமே இல்லாமல், கடும்குளிரில், கீழே ஓநாய்கள் சுற்றி திரிய அந்த நண்பர்களின் கதி என்ன என்பதை நமக்கு வெட வெடத்துப்போகும்படி சொல்லி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதுபோன்ற டூ ஆர் டை கதைக்களன்கள் நிறைய வந்திருந்தாலும் இந்த திரைப்படம் நமக்குள் ஒரு ஆர்வத்தையும், டென்ஷனையும் விதைத்துக்கொண்டே போகிறது. எப்படிடா இவர்கள் தப்பிக்க போகிறார்கள் என்ற டென்ஷனை நமக்குள்ளும் ஏற்றிவிட்டு ஜாலியாக போக்குகாட்டுகிறது திரைக்கதை.

அதுவும் பார்க்கர் என்ற அந்தப்பெண் இரவில் தன் கையை இரும்புக்கம்பியின் மீது பிடித்துக்கொண்டு தூங்கிவிடுவார். காலையில் விடிந்ததும் அந்தக்கை இரும்புடன் சேர்த்து குளிரில் இறுகி இருக்கும். அதை பிய்த்து எடுப்பதற்குள் அவர்படும் பாடு அப்ப்ப்ப்பா.... நமக்கே வியர்க்கிறது.

பக்கதில் இருப்பவனுக்கு தெரியாமல் பேண்டுடன் சேர்த்து யூரின் போகும் காட்சியில் பார்க்கர் ஒருவித அசிங்கமான குற்ற உணர்ச்சியுடன் ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாருங்கள். க்ளாஸ்...
ஆடம் க்ரீன்தான் எழுதி இயக்கி இருக்கிறார். பார்க்கும் ரசிகனுக்கு இவர்கள் அனுபவிக்கும் அந்த கஷ்டத்தை டிரான்ஸ்பர் செய்த விதத்தில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். கேமராமேனின் பங்கு எத்தகையது என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். கடும்குளிரின் அதே உணர்வை நமக்கும் கொடுப்பதில் கேமராவின் டோனும் மூட் ஆஃப் லைட்டிங்கும் பெரும்பங்கு வகித்திருக்கிறது.

இப்படி ஒரு குளிரில், அந்தரத்தில், கீழே ஓநாய்கள் சுற்றித்திரிய இத்தனை பேராபத்துக்களுடன் நாம் மாட்டிக்கொண்டால்??? ஐயோ நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த எண்ணத்தை விதைத்த விதத்தில் இந்தப்படம் ஜெயித்திருக்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய சினிமா...

Friday, October 5, 2012

சிவாங்கி விமர்சனம்மனிதனின் ஆழ் மனதின் வக்கிரங்களும் அதி உட்சபட்ச கோபமும் வெளிப்படும் வழியே சூன்யம் அல்லது செய்வினை. இப்படி சூன்யம் வைக்கப்பட்ட ஒரு நடிகையின் கதையே இந்த சிவாங்கி திரைப்படம். ஏற்கனவே தெலுங்கில் மங்களா என்ற பெயரில் ரிலீசாகி கல்லா கட்டிய இந்த திரைப்படத்தைத்தான் இப்போது தமிழில் சிவாங்கி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். எப்போதோ ஒரு முறை எழுதிய இந்தப்படத்தின் விமர்சனம் இதோ மீண்டும் ஒருமுறை உங்களுக்காக...

சார்மி ஒரு நடிகை. அவளுக்கு ஒரு தீவிர ரசிகன் இருக்கிறான். அந்த ரசிகன் சார்மிக்காக ஒரு காரையே பரிசளிக்கக்கூடிய அளவுக்கு வெறியன். ஒருமுறை ரசிகர்களுக்கு சார்மி ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கையில் ஒரு சில்மிஷ ரசிகன் சார்மியின் உடம்பில் அத்துமீறல் செய்ய, அதை செய்தது தனக்கு கார் கொடுத்த ரசிகன்தான் என்று தவறாக நினைத்து அவனை அறைந்துவிடுகிறாள். உடனே சார்மியின் நண்பனும் பாடிகார்டுமான சுப்பு என்பவன் அந்த ரசிகனை நையப்புடைக்கிறான். அவமானத்தாலும், அசிங்கத்தாலும் காயப்பட்ட அந்த ரசிகன் பூச்சிமருந்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறான். இங்குதான் சார்மிக்கு விதி விளையாட்டு காட்டுகிறது..


மருந்து குடித்த அந்த ரசிகனின் அப்பா ஒரு மிகக்கொடுரமாக சூன்யம் வைப்பவர். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சார்மியிடம் வந்து தன் மகன் தவறு செய்யவில்லை என்றும், அவனை ஒரு முறை நேரில் வந்து பார்த்தால் அவன் பிழைத்து விடுவான் என்றும் கூறுகிறார். சார்மியும் வர சம்மதிக்கும் போது, டைரக்டர் அவள் செல்லக்கூடாது இங்கு வேலை இருக்கிறது என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார். சார்மி தன்னால் வர முடியாத சூழ்நிலை என்று விளக்க, அந்த அப்பாவோ சார்மியின் மீது கோபம் கொண்டு அவள் தலைமுடியை பிடித்து இழுக்கிறார். உடனே அங்கிருக்கும் ஆட்களால் அவர் அடித்து விரட்டப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் அவரது மகனும் இறந்து போகின்றான். உச்சபட்ச கோவத்திற்கு ஆளான அவர், சார்மிக்கு சூன்யத்தை வைத்துவிடுகிறார்.

அன்றிலிருந்து சார்மியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது. இரவுகளில் திடீர் திடீர் என்று எதேதோ செய்ய ஆரம்பிக்கிறாள். அவளின் நண்பனான சுப்பு, ஒரு சாமியாரிடம் அழைத்து சென்று இவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்ல, சார்மி அவர்களை கிண்டல் செய்கிறாள். ஆனால் அவரோ இவளுக்கு நிச்சயம் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லுகிறார். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் சார்மி மிகக்கொடுரமாக நடந்து கொள்ள, அப்போதுதான் அனைவரும் அதை உணர ஆரம்பிக்கின்றனர்.

மீண்டும் சாமியாரிடம் வந்து இப்போது என்ன செய்வது என்று கேட்க, அவர் சார்மியை பரிசோதித்து, இவளுக்கு வைக்கப்பட்டிருக்கும் சூன்யம் செகுச்சி வகையை சார்ந்த்து என்றும், இதை வைத்தவனால் மட்டுமே எடுக்க முடியும் என்று சொல்லுகிறார். உடனே சார்மியும் சுப்புவும் அந்த மந்திரவாதியை தேடிச்செல்ல அவர் இறந்து கிடக்கிறார். அப்போதுதான் அவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் சூன்யத்தின் தீவிரம் புரிகிறது. ஏனென்றால் வைத்தவன் மட்டும்தான் எடுக்க முடியும் என்பதால், தன்னால் எந்த சூழ்நிலையிலும் அதை எடுத்துவிடக்கூடாது என்று தானே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த மந்திரவாதி.. அந்த செகுச்சி சூன்யம் இப்போது மிக வலிமையுடன் இருக்கிறது.

அந்த செகுச்சி சூன்யத்தை எடுக்க முயலும் சாமியாரும் அந்த சூன்யத்தின் பயங்கரமான சக்தியால் இறந்து போகிறார். இப்போது என்ன செய்வதென்றே தெரியாத சூழ்நிலையில் மற்றொரு பெண் சாமியாரை தேடி போகிறார்கள், அந்த சாமியார் 600 கிலோமீட்டர் காடுகளில் பயணித்தால் மிக சக்தி வாய்ந்த சிவதூதர்களும் அவர்களின் குருவும் அங்கே இருக்கிறார்கள், அவர்கள் இதற்கு ஒரு வழி சொல்வார்கள் என்று அவர்களை தேடி பயணப்படுகிறார்கள் ஆனால் அங்கிருக்கும் அத்தனை சிவதூதர்களையும் அந்த குருவையும் விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது அந்த செகுச்சி.. பின் எப்படி அந்த சிவதூதர்கள் சார்மியிடம் இருந்து அந்த செகுச்சியை விரட்டினார்கள் என்பது மீதிக்கதை..

படத்தின் ஆரம்பத்திலேயே அந்த கெட்ட சூனியக்காரனால் சூன்யம் வைக்கப்பட்ட ஒருவனை இந்த சிவதூதர்களிடம் அழைத்து வருவார்கள், ஆனால் அவரால் அதை எடுக்க முடியாது. ஏனென்றால் காலம் கடந்துவிட்டது என்று சொல்லுவார். உடனே அந்த நபரின் உடல் காற்றில் சுழற்றி அடிக்கப்பட்டு, வெறும் இதயம் மட்டும் தான் கிழே விழும்.. படமே இப்படி ஒரு டெரரான காட்சியில் தான் தொடங்குகிறது நடு நடுவே சில காட்சிகள் ஸ்லோவாக சென்று படத்தின் டெம்போவை குறைத்தாலும் சார்மியின் மீது செகுச்சி வரும் போதெல்லாம் அந்த டெம்போ எகிறி அடிக்கிறது. சார்மியை சுற்றி கலாட்டா செய்யும் ரோமியோக்களை சார்மி செகுச்சியாய் மாறி சுழற்றி அடிக்கும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

செகுச்சியை வரவழைக்கும் சாமியே இறந்துகிடப்பது. தன்னை இன்சல்ட் செய்யும் டைரக்டரை பயம் காட்டி அலற வைப்பது. வீட்டில் இருந்து மறைந்து நடுரோட்டில் கிடப்பது. செகுச்சியாய் மாறி சிவதூதர்களையே அடித்து நொறுக்குவது என சார்மி பின்னி பெடலெடுத்திருக்கிறார். வொண்டர்ஃபுல் பர்ஃபாமென்ஸ். அதிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓடிப்போன காதலனை நினைத்து அழுது நடிக்க வேண்டும் என்ற காட்சியில் சார்மி நம்மை விலா நோக சிரிக்க வைத்திருக்கிறார். தமிழ்சினிமா இயக்குனர்களை இந்தப்படத்தில் அநியாயத்துக்கு கிண்டலடித்திருக்கிறார்கள். அது ஒன்றுதான் சற்று வேதனை. (ஆனாலும் நம்மிடம் இப்படியும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

அந்த காட்டைத்தேடி காரில் செல்லும் காட்சிகளில் எல்லாம் எடிட்டர் இன்னும் கொஞ்சம் தன் கத்தரிக்கு வேலை கொடுத்திருந்தால் அந்த கிரிஸ்ப் பினிஷிங் கிடைத்திருக்கும். படத்திலிருந்து சற்றே விலகி இருக்கும் மனநிலை இந்த இடங்களில்தான் ஏற்படுகிறது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் ஒரு திகில் படத்திற்கு என்ன வேண்டுமோ அதை சரியாய் செய்திருக்கின்றன. 

சார்மி சினிமா நடிகை என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படுவது போலே இரண்டு பாடல் காட்சிகளை நுழைத்திருக்கிறார்கள். சிவகுரு பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் கடைசிப்பாடலில் இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபீட்டை ஏற்றி இருந்தால் அந்த பேய் விரட்டும் எஃபெக்ட் இன்னும் கொஞ்சம் அதிகமாய் கிடைத்திருக்கும். (இந்த விஷயம் காஞ்சனாவின் கடைசிப்பாடலில் மிகச்சரியாய் அமைக்கப்பட்டிருக்கும் ) சிவகுருவுக்கும் செகுச்சிக்கும் இடையேயான அந்த கான்வர்சேஷன், பாடலின் இடையிலேயே அமைக்கப்பட்டிருப்பதால் செகுச்சியின் அதி தீவிரம் காணாமல் போய்விடுகிறது. ஆனாலும் நம்மை சில இடங்களில் பயப்படுத்தி, சில இடங்களில் என்ன நடக்குமோ என்ற படபடப்பை படம் ஏற்படுத்தி விடுவது என்னமோ உண்மைதான்.

திகில் பட ரசிகர்களும், அமானுஷ்ய விரும்பிகளும் பார்க்கலாம்...

                                 

இதையும் படியுங்கள்