Saturday, May 5, 2012

வழக்கு எண் 18/9
ஒரு திரைப்படம் முடிந்ததும் ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து கைத்தட்டிய அதிசயம் இந்தப்படத்திற்கு நடந்தது. அது ஒன்றும் அத்தனை எளிதான காரியம் இல்லை. மிகப்பிரமாதமான டீம் ஒர்க் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அது இந்தப்படத்திற்கு நடந்திருக்கிறது. 

சரி வழக்கு எண் 18/9 என்ன கதை.

ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண்ணை ஒருதலையாக காதலிக்கும் ஒரு பிளாட்பார கடையில் வேலை செய்யும் இளைஞன், அதே பணக்கார வீட்டின் பெண்ணை காமத்தால் நெருங்கும் ஒரு பணக்கார இளைஞன்... இந்த இரண்டு முரணான காதல்களை கொண்டு ரசிகர்களை உணர்ச்சிப்பிழம்பாக்கி இருக்கிறார் இயக்குனர். 

வேலு பிளாட்பார கடையில் வேலை செய்யும் இளைஞன். அவன் அந்த ஏரியாவில் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண்ணான  ஜோதியை காதலிக்கிறான். ஒரு நாள் அந்தப்பெண்ணின் முகத்தில் யாரோ ஒருவர் ஆசிட் ஊற்றிவிட, அதை செய்தது வேலுதான் என போலீஸ் அவனைப்பிடித்து செல்லுகிறார்கள். அப்போது ஜோதி வேலை செய்யும் வீட்டின் பெண்ணான ஆர்த்தி வந்து, ஆசிட் ஊற்றியது தன்னை காதலிப்பதாக ஏமாற்றிய தினேஷ்தான் என்று சொல்லுகிறாள். அப்பாவி வேலு என்ன ஆனான்? ஆர்த்தியை ஏமாற்றிய தினேஷ் எதற்கு ஜோதியின் மீது ஆசிட் ஊற்றினான்? ஆசிட் ஊற்றி வெந்துப்போன ஜோதி என்ன ஆனாள்? இவர்கள் வழக்கில் போலீஸ் எடுக்கும் முடிவு என்ன என்பதை தியேட்டரில் சென்று பாருங்கள்.

வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து பலவகைகளில் மேம்பட்டு ரசிகனின் ரசனையை உயர்த்த வந்திருக்கும் படம் இது. டீட்டெய்லிங் எனப்படும் கதாபாத்திர நுணுக்கங்களில் இயக்குனர் புகுந்து விளையாடி இருக்கிறார். அனாதையாய் வந்து சேரும் வேலுவிற்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கும் ரோஸி என்கிற விபச்சாரப்பெண், அவன் சாப்பிட துவங்கும் போது கை கழுவ சொல்லுவது,  ரோஸியைத்தேடி செல்லும் வேலுவை வரவேற்கும், பூட்டப்பட்டிருக்கும் ரோசியின் வீட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் ஜீஸஸ் சிலுவை டாலர், யார் கதவை தட்டினாலும் வியூ பைண்டர் வழியாக பார்த்துவிட்டுத்தான் கதவை திறக்க வேண்டும் என்று சொல்லும் பணக்கார பெண்மணி, முகமே காட்டாமல் சிபாரிசை காட்டும் அமைச்சர், என ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் உண்டான சின்ன சின்ன நுணுக்கங்கள் ஆச்சர்யப்படுத்துகிறது

அதே போல், முதல்பாதியில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிக்கும், இரண்டாவது பாதியில் கொடுக்கப்படும் லிங்க் எல்லாமே பர்ஃபெக்ட்  மேட்ச். திரைக்கதையை காதலித்து எழுதுபவரால் மட்டுமே இதுசாத்தியம்.

வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீ, பார்த்த உடனே பரிதாபத்தை அள்ளிக்கொள்ளும் முகம். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளாவின் முகம் அந்த கதாபாத்திரத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசங்களை ஒரு சினிமா டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம் என்றாலும், அவரது பர்ஃபாமென்ஸ், ஒரு புத்தகம் போடும் அளவிற்கு இருக்கிறது,

ஆர்த்தியாக வரும் மனிஷா, இன்னொரு அசத்தல் கண்டுபிடிப்பு. முதல் இன்ஃபாக்சுவேஷன் வரும் உணர்வுகளை மெல்ல மெல்ல தன் முகத்தில் கொண்டுவருவதில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தினேஷின் மேல் கொள்ளும் மெல்லிய காம்ம் கலந்த காதல், நல்ல மொபைல் வைத்திருக்கிறான் என்ற ஒரு ஹைஃபை விஷயத்துக்காகவே அவன் மேல் ஒரு கிரேஸ் ஏற்படுவது இந்தக்கால காதலின் யதார்த்தம். என்னைப்பொறுத்தவரை இந்த இரண்டு ஹீரோயின்களை விட, ஆர்த்தியின் தோழியாக வரும் ஷ்வேதா... செம அழகு....சில காட்சிகளே வந்தாலும் இந்தப்பெண் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறாள்.

கையில் மொபைல் வைத்திருப்பவர்தான் ஷ்வேதா
சின்னசாமியாக வரும் அந்த கூத்துக்கலைஞன் சிறுவன்.. இன்னொருமொரு பிரமாதமான கண்டுப்பிடிப்பு. பெண்ணாக வேஷமிட்டு ஆடிக்காட்டுவதும், வேலுவின் கூடவே பஞ்ச் அடித்தபடியே திரிவதும் என கிடைத்த இடங்களில் எல்லாம் சிக்ஸராக வெளுத்துக்கட்டுகிறான். அவனது கிராமத்து ஸ்லாங் ப்ளஸ் பாயிண்ட்..

தினேஷாக வரும் மிதுன், ஒரு பெண்ணை எப்படி மடக்கி பிராக்கெட் போட வேண்டும் என்ற இலக்கணத்தை மிக அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார். அவனைப்பார்த்தவுடன் ரசிக்கவும். அதே சமயத்தில் நமக்கு கோவத்தையும் ஒரு சேர ஏற்படுத்தும் படியான முகவெட்டு அந்தப்பையனுக்கு... முதல்காட்டியில் அவன் ஆர்த்தியிடம் கேட்கும் ஆசிட் சம்மந்தமான டவுட்தான் படத்தின் பின்பாதியில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது யாருமே எதிர்பாராத ஒன்று. பணகார பையன்கள் நண்பர்கள் வட்டாரத்தில் தங்களை பெருமைப்படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை செவிட்டில் அறையுமாறு சொல்லி இருக்கிறார்கள். தன்னுடைய மொபைலில் ஆர்த்தியின் நம்பரை ஐட்டம் என்று ஸ்டோர் செய்திருப்பது செம..

குமரவேலாக வரும் இன்ஸ்பெக்டர், ஆரம்பத்தில் நல்லவர் போலவே தோன்றினாலும் போகப்போக வில்லத்தனம் கலந்த்தாக மாறிவிடுகிறது இது ஒன்றும் சினிமாத்தனம் இல்ல, எல்லா போலீஸார்களும் இப்படித்தான் கேஸை க்ளோஸ் செய்கிறார்கள் என்பது உண்மைதான். (சமீபத்தில் பணத்திற்காக இப்படிப்பட்ட ஒரு மோசமான போலீஸாரை சந்தித்த அனுபவம் எனக்கும் உண்டு). ஆர்த்தி அவரிடம் சில உண்மைகளை சொல்லும் போது, அவர் வாய்ஸ் ரெக்கார்டிங் பட்டனை ஆன் செய்வது, தினேஷை தண்ணி குடிக்க வைத்து அவன் கைரேகையை எடுப்பது, மஃப்டியில் போய் வேலுவை அரெஸ்ட் செய்ய சொல்வது, வேலுவை காதலை சொல்லி பிரெய்ன் வாஷ் செய்வது, ஜெயலக்‌ஷ்மியை அவாய்ட் செய்ய ஸ்டேஷனில் நுழைந்த உடன் ஏகப்பட்ட கெடுபிடி செய்வது, இறுதியில் ஜெயலக்‌ஷ்மியிடன் வேறு சில காரியத்துக்காக பிட் போடுவது என மனிதர் கலக்கி இருக்கிறார். இவருக்கு ஏற்படும் முடிவில் ஒருசேர ஒட்டுமொத்த தியேட்டரும் கைத்தட்டியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தேவைதாண்டா உனக்கு....

ஷார்ப்பான வசனங்கள், டீட்டெய்லிங் திரைக்கதை, ஒவ்வொரு காட்சியையும் இணைத்திருக்கும் லிங்க், கதாபாத்திரத்திற்கான பின்புல மெனக்கெடல் என பிரமாதப்படுத்தி இருக்கிறார் பாலாஜி சக்திவேல். இரண்டு வருடம் கழித்து படம் கொடுத்தாலும், இன்னும் இருபது வருடம் கழித்தும் பேசும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். 

கேனான் 7 டி கேமராவில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். இது ஒரு பிரமாதமான முயற்சி. இனிவரும் காலத்தில் நிறையப்பேர் இதுபோல் பல முயற்சிகளை செய்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.. முதல்பாதி முக்கால்வாசி ஸ்க்ரீனும், இரண்டாம் பாதியில் அதைவிட இன்னும் கொஞ்சம் அதிக அளவில் வைட் செயதிருக்கிறார்கள். இது போல டெக்னிக்கலாக இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். ஆனாலும் எந்தக்குறையும் யோசிக்கவிடாமல் படம் நம்மை தனக்குள் இழுத்துக்கொள்கிறது.

வாத்தியக்கருவிகளே இல்லாமல், வெறும் குரல்களை வைத்தே பாடல்களை கம்போஸ் செய்திருப்பது பாராட்டுக்குரிய முயற்சி, (பட்ஜெட் குறைப்பு?)

தமிழ்சினிமா தன்னுடைய வழக்கமான க்ளிஷே ஆடையை தூக்கியெறிந்து வருகிறது என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். தியேட்டரில் சென்று பாருங்கள் ஒரு வித்தியாசமான அனுபவம் உங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது...


இதையும் படியுங்கள்