Friday, March 30, 2012

வெங்காயம் அசத்தலான சூப்பர் தமிழ் சினிமா


எப்படி இந்தப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்? இன்று மட்டும் பார்க்காமல் இருந்திருப்பேனே ஆனால் தமிழின் மிகச்சிறந்த ஒரு நல்ல திரைப்படத்தை தவறவிட்டிருப்பேன். ரீ ரிலீஸ் செய்த இயக்குனர் சேரனுக்கு நன்றி.

சரி வெங்காயம் என்ன கதை? எதற்காக இவ்வளவு பில்டப் என்று கேட்கிறீர்களா? இது நிச்சயம் பில்டப் இல்லை. திரைப்படம் பார்த்தபின் எழுந்த உணர்வுகள் தான் இவை. சரி திரைப்படத்திற்குள் நுழைவோம்.. வெங்காயம் என்ன கதை?

ஒரு கிராமத்தில் சில சாமியார்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கடத்தப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை போலீஸ் எஸ்.ஐ. தமிழ்மணி விசாரிக்க புறப்படுகிறார். எதற்காக அந்த சாமியார்கள் கடத்தப்பட்டார்கள், யார் இவர்களை கடத்தியது என்ற கேள்விக்கெல்லாம் முகத்தில் அடித்தாற் போல் பதில் சொல்லி இருக்கிறது க்ளைமேக்ஸ்

இது பகுத்தறிவை பற்றிப்பேசும் படம், மூடநம்பிக்கைக்களைப்பற்றி பேசும் படம் என்பதைத்தவிர்த்து பார்த்தால், இது அட்டகாசமான படம் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் பாதி பார்க்கும் வரை, என்னடா இவ்வளவு மொக்கையான படத்திற்கு வந்துவிட்டோமே என்று நினைக்க வைத்தது படம். ஆனால் இடைவேளைக்கு பின், இறுதிக்காட்சி முடிந்து இருக்கையை விட்டு எழும் போது தியேட்டரில் இருந்த அத்தனை பேரும் கைத்தட்டினார்கள். நான் வலிக்க வலிக்க கை தட்டினேன்.

எனக்கு கடவுள் பக்தி என்பது நிறையவே உண்டு. ஆனால் என்னைப் போன்ற ஆட்களுக்கே படம் அபரிமிதமாய் பிடித்திருந்தது. இயக்குனருக்கு நல்ல கேமராவோ, நல்ல எடிட்டிங்கோ, நல்ல கிராஃபிக்ஸோ, நல்ல அனுபவம் வாய்ந்த நடிகர் நடிகர்களோ, நல்ல அட்டகாசமான பாடல்களோ கிடைக்கவில்லை. ஆனாலும் படம் கடைசியில் கைத்தட்ட வைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் காட்டும் காதல் காட்சிகளும், க்ளோசப் காட்சிகளும் சில காட்சிகளை கன்சீவ் செய்திருந்த விதமும் என்னடா இது இன்னொரு “லத்திகா, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோவம்” வகையறாவோ என்று நினைத்திருந்தேன். ஆனால் இடைவேளைக்கு பிறகு டேக் ஆஃப் எடுக்க ஆரம்பித்த படம், கடைசி வரை தன்னுடைய வேகத்தை நிறுத்தவே இல்லை.

சில நார்மல் வார்த்தைகளைக்கூட சென்சார் அமைப்பு இந்தப்பட்த்தில் கட் செய்திருக்கிறது. ஆனால் தேவிடியாப்பையா என்ற ஒரு வார்த்தையை கட் செய்யாமல் அப்படியே விட்டு இருக்கிறது. அப்படி என்றால் அந்த வார்த்தையின் வீரியம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பதிமூன்று வயதுப்பெண் அந்த வார்த்தையை உச்சரிக்கும் போது தியேட்டரே கைதட்டி ஓய்ந்த்து.

கதாநாயகன் அலெக்ஸாண்டர், கதாநாயகி பவினா இருவரும் அப்படி ஒன்றும் பெரிய அளவில் சொல்வதற்கில்லை. மொக்கை திரைப்படத்திற்கான நடிகர்கள் போலவே இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை படத்துடன் ஒன்ற வைத்த்ருக்கிறார் இயக்குனர்கூத்தாடியாக வரும் எஸ். எம். மாணிக்கம் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய மகனுக்காக ரோட்டில் அவர் கெஞ்சுவதும் தன்னுடைய பிழைப்பை அங்கெயே அரங்கேற்றி காட்டுவதுமாக அசத்தி இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்படும் முடிவு பாவம்.... எத்தனையோ படங்கள் நடித்தவரைப்போல இவரது எக்ஸ்பிரஷன்ல அபாரம். இவர் இயக்குனரின் அப்பாவாமே.. அட...

நமக்கே அந்த சாமியார்களைப்பார்த்தால் கொல்ல வேண்டும் என்று ஆத்திரம் வருகிறது. அதுவும் அந்த சிறுவனை நரபலி கொடுக்கும் சாமியாரை தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் என்ற அளவிற்க்கு ஆத்திரம் வருகிறது. சத்யராஜ் ஒரே ஒரு பாடலுக்கு வருகிறார். அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் சில பகுத்தறிவு விதைகளை விதைத்து விட்டு போகிறார். பிறகு நடப்பது எல்லாம் விதைத்த விதைகளின் போராட்டங்கள்.


படத்தின் ஹைலைட்டே அந்த மூதாட்டிதான். தன் பேரன் இறந்துவிட்டான் என்றவுடன் பைத்தியம் பிடித்து அலையும் அந்த மூதாட்டிதான் படத்தின் ஹைலைட். இறுதிக்காட்சியில் அந்த பாட்டி சொல்லும் டயலாக்கிற்கு கைத்தட்டாதவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நானே என் செலவில் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். சரியான ஸ்க்ரீன் ப்ளே Knock’ற்கு அந்த இடம் ஒரு உதாரணம்.

ஒரு திரைப்படம் பார்த்தால் அது நம்மை சிரிக்க வைக்க வேண்டும். இல்லை, அழ வைக்க வேண்டும். இல்லை, ஆத்திரம் கொள்ள வைக்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல சினிமாவுக்கான உதாரணம். இந்தப்படம் பார்த்து முடித்து எழும்போது ஏதோ ஒரு வகையான ஃபீலீங்கை நமக்குள் விதைத்துப் போயிருப்பார்கள், அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றி.

சங்ககிரி ராச்குமார், இவர்தான் படத்தின் இயக்குனர். படம் பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது, எவ்வளவு மோசமான பட்ஜெட் நிலைமை என்பது. இருந்தாலும் அத்தனையும் மிறி ஒரு நல்ல பட்த்தை விடாப்பிடியாக கொடுக்க முயற்சித்ததற்கு நிச்சயம் பாராட்டுக்களை சொல்லியே ஆக வேண்டும். பட்ஜெட் குறை, டெக்னீஷியன் குறைபாடு, நடிகர் நடிகை சம்பளம் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போதே இப்படி ஒரு அருமையான படத்தை கொடுக்க முடியும் என்றால், இன்னும் இது எல்லாம் சரியாக அமைந்துவிட்டால்? தமிழ்சினிமாவின் ஒரு நம்பிக்கை இயக்குனர் வரிசையில் சங்ககிரி ராச்குமார் நிச்சயம் இடம்பிடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரே படத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு.

சாமியார்களை கடத்தும் அந்த சிறுவர் சிறுமியும், க்ளைமேக்ஸில் அவர்கள் பேசும் வசனமும்தான் படத்தை தாங்கிப்பிடித்து நிற்க வைக்கும் தூண்கள். இந்த பட்ஜெட்டிலேயே, ஒரு காரை ஆக்ஸிடெண்டில் மாட்டியபடி இருக்கும் காட்சியை கம்போஸ் செய்திருக்கும் விதம் ”அட” போட வைக்கும் திறமை. லைட்டா ”மைனா”வை நியாபகப்படுத்தினாலும், இது வேற விதம்

நல்ல பப்ளிசிட்டி இருந்திருந்தால் நிச்சயம் இந்தப்படம் பல்வேறு நிலைகளை கடந்திருக்கும். நல்ல வெற்றியும் பெற்றிருக்கும். ஆனால் ப்ப்ளிசிட்டிக்கு ஆகும் செலவில் இந்த இயக்குனர் இன்னும் இரண்டு படம் எடுத்திருப்பர். முரணான உண்மை. ஒருவரை ஒருவர் காலைவாரிவிடும் பச்சோந்திகள் நிறைய இருக்கும் திரைத்துறையில், திறமை வாய்ந்த ஒருவரை கைதூக்கி விடும் நோக்கில் எப்படியாவது இந்தப்படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் சேரன் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் தான்.

ஹாட்ஸ் ஆஃப் சேரன்.

ஹாட்ஸ் ஆஃப் சங்ககிரி ராச்குமார்


உங்களது அடுத்த திரைப்படத்தை வெகுவாக எதிர்பார்க்கிறேன்..


Tuesday, March 27, 2012

ட்ராஃபிக் - மலையாளத் திரைப்படம் விமர்சனம்


தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன் - புஷ்பாஞ்சலி. இவர்களின் மூத்த மகன் ஹிதேந்திரன். ஒரு நாள் சாலை விபத்தில் ஹிதேந்திரன் தலையில் அடிபட, அவனால் செயல்பட முடியாமல் மூளைச்சாவு ஏற்பட்டது. உடனே அவனது பெற்றோர்கள் பெரும் தியாக மனதுடன் அவனது உறுப்புக்களை தானமாக கொடுக்க முன் வந்தனர்.  அப்போது பெங்களூரைச் சேர்ந்த அபிராமி என்ற 9 வயது சிறுமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தை தானமாக கொடுக்க முடிவெடுத்தனர். ஹிதேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்ததோ தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை.

அபிராமியோ டாக்டர் செரியனின் முகப்பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். ஹிதேந்திரனின் இதயத்தை எடுத்த உடன் அரைமணி நேரத்தில் அது பொருத்தப்பட வேண்டும். ஆனால் அரைமணி நேர இடைவெளியில் எப்படி தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேர் வரை கொண்டு செல்வது. இடையே ஏகப்பட்ட டிராஃபிக் ஜாம் இருக்குமே? போக்குவரத்து தடை ஏற்படுமே? என்று பலவாறாக யோசித்த மருத்துவர்கள் போலீஸ் துறைய நாடினார்கள். போலீஸார் டிராஃபிக்கை வெகுவாக் கட்டுப்படுத்தி, பத்து நிமிடத்திற்குள் ஹிதேந்திரனின் இதயம் மருத்துவமனையை அடையும்படி செய்தார்கள் மக்களும் இதற்கு பெருமளவில் உதவினார்கள். போலீஸாரை எல்லா மக்களும் வெகுவாக புகழ்ந்தார்கள்.

இந்த ஒரு அசாதாரணமான, மனதை நெகிழ வைத்த நிகழ்வைத்தான் மலையாளப்படமான டிராஃபிக்கில் கதைக்களனாக்கி இருந்தார்கள்செப்டம்பர் 16ந் தேதி... அன்றைய நாளில், மலையாள சினிமாவின் மிகப்பெரிய நடிகரான ஷங்கர் (ரஹ்மான்), தன்னுடைய புதுப்படத்தின் ரிலீஸுக்காக கிளம்பிக்கொண்டு இருக்கிறார். டிராஃபிக் கான்ஸ்டேபிள் சுதேவன் (ஸ்ரீனிவாசன்), லஞ்சம் வாங்கிய குற்றத்தில் இருந்து மீண்டு பணிக்கு திரும்புகிறார். டாக்டர் ஏபேல் (குஞ்சாகோபன்) தன்னுடைய திருமண நாளை ஒட்டி சந்தோஷத்தில் இருக்கிறார். ரைஹன் (வினீத் ஸ்ரீனிவாசன்) தன்னுடைய முதல் தொலைக்காட்சி வேலையில் சேருவதற்காக சந்தோஷத்துடன் கிளம்பிக்கொண்டிருக்கிறான். அவன் இண்டர்வியூ எடுக்க வேண்டியதே நடிகரான ரஹ்மானைத்தான்.

ஒரு சிக்னல் டிராஃபிக்கில் ரைஹன் தன்னுடைய பைக்கை வேகமாக கிளப்பும் போது ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் ரைஹனின் மூளை இறந்து விடுகிறது. மற்றொரு இடத்தில் நடிகரான ரஹ்மானின் பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒரு இதயம் தேவை. அப்பொழுதுதான் அவள் பிழைப்பாள் என்ற நிலை?

இங்கு ரைஹனுக்குத்தான் மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதே அவன் இதயத்தை கொடுக்கலாமே என்று டாக்டர்கள் ரைஹனின் பெற்றோர்களிடம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். பின் நிறைய வற்புறுத்தலுக்கு பிறகு இதயத்தை தர சம்மதிக்கிறார்கள். ஆனால் இப்போது இங்கே இன்னொரு பிரச்சனை.

இதயத்தை இங்கிருந்து மாற்றி எப்படி இன்னொரு இடத்திற்கு கொண்டு போது என்று பிரச்சனை. ஏனெனில் வழியில் அந்த அளவிற்கு டிராஃபிக் இருக்குமே என்று கவலை. டாக்டர் இதைப்பற்றி போலீஸ் கமிஷ்னரிடம் பேச, அவர் முதலில் இதற்கு மறுக்கிறார். பின் டாக்டரின் சைக்காலாஜிக்கல் பேச்சுக்கு பிறகு ஒப்புக்கொள்கிறார். பின் கமிஷ்னர் தன் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். கிட்டத்தட்ட வண்டியின் ஸ்பீடு 100ல் போனால்தான் இதயத்தை கொண்டு போக முடியும் என்பது நிலை.  சரி..  இவ்வளவு வேகத்தில் ரிஸ்க் எடுத்து யார் வண்டி ஓட்டுவது என்ற கேள்வி நிற்க, ஸ்ரீனிவாசன் “தான் ஓட்டுவதாக”  சொல்லி முன் வருகிறார்.

இந்த வண்டியில் டாக்டர் ஏபெல்லும் பயணிக்கிறார். ஏனெனில் அவருக்கு இந்த ஆபரேஷனில் பெரும் பங்கு உண்டு..
ஆம்புலன்ஸ் கிளம்புகிறது... ஒவ்வொரு சிக்னலாக இவர்களுக்கு வழிவிட்டு சரியான வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸில் இருக்கும் ஸ்ரீனிவாசனிடம் கமிஷ்னர்  ஸ்பீக்கரில் தொடர்ந்து தொடர்பு கொண்டே இருக்கிறார். திடீரென ஆம்புலன்ஸில் செட் பண்ணி இருக்கும் வாக்கிடாக்கியில் சிக்னல் கட் ஆகிறது. ஸ்ரீனிவாசனின் செல்லை தொடர்புகொண்டால் அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் போகிற வழியில் இருக்கும் எந்த சிக்னலிலும் அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தி வருகிறது. இதற்கு மேல் இன்னொரு அதிர்ச்சியாக வண்டி கடத்தப்பட்டது என்ற செய்தியும் வருகிறது.

கொண்டு போன இதயம் என்ன ஆனது? ஆம்புலன்ஸை கடத்தியது யார்? எதற்காக இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வண்டியை கடத்த வேண்டும்? இப்படி ஒரு த்ரில்லிங்கான கேள்விகளால் நம்மை டென்ஷனின் உச்சத்திற்கே கொண்டு வந்துவிடுகிறார்கள். சரி.. அந்த இதயம் என்ன ஆனது என்று கேட்கிறீர்களா? படத்தில் பாருங்களேன்..

நம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை நாமே கூட மறந்துவிட்ட சூழ்நிலையில், மலையாள திரைத்துறையினர் அதை ஒரு சினிமாக மாற்றிகாட்டி இருக்கிறார்கள். (நமக்கு ஏன் இந்த ஐடியா வராம போச்சு?) இதன் இயக்குனர் ராஜேஷ்பிள்ளை சில நுணுக்கமான டெக்னிக்குகளை இந்தப்படத்தில் கையாண்டுள்ளார். சினிமாத்தனம் என்று பார்த்தால் ஒரு சிறிய குறுகலான வழி கொண்ட ஒரு ஏரியாவில் இந்த வண்டியால் இதே வேகத்தில் கிராஸ் செய்ய முடியாது என்றவுடன், சில டெக்னிக்குள் கையாள்வார்கள். அது பார்ப்பதற்கு துருத்திக்கொண்டு இருந்தாலும், உணர்வுகளின் படி அது சரியாகவே இருக்கும். நல்ல சினிமாட்டிக் திங்க்கிங்.

படத்தில் ரம்யா நபீசன் கணவனுக்கு துரோகம் செய்யும் கேரக்டரில் நடித்திருப்பார். சின்ன கேரக்டர்தான். ஆனாலும் நிறைவாக செய்திருப்பார்.  டாக்டர், கமிஷ்னரிடம் பேசும் சீன் க்ளாஸ். அவர் சொல்லும் ஒரு வார்த்தை கமிஷ்னரின் கல் மனதை ஒரு நிமிடம் அசைத்துப்பார்க்கிறது. அப்படி அந்த டாக்டர் என்ன சொன்னார்? அதாங்க படத்தின் நாதமே.. அதே வார்த்தையை கமிஷ்னர், முடியாது என்று சொல்லும் தன் சகாக்களிடம் சொல்லுவார். அவர்கள் அடுத்த நிமிடமே, இந்த வேலையை செய்யலாம் என்று சொல்லுவார்கள். அப்படி என்ன சொன்னார்கள்?

ஸ்ரீனிவாசன் ஏன் லஞ்சம் வாங்கினார்? என்பதற்கான காரணம் மிகச்சிறியது. ஆனாலும் அதற்காக அவர்படும் அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல.. இதை ஒரு பெரிய கதையாக காட்டாமல் ஜஸ்ட் லைக்தட் ஒரு பாட்டில் காட்டிவிட்டு போவது நல்ல திரைக்கதை. அவரை உதாசீனம் செய்யும் மகளே, கடைசியில் அவரை பெருமையாகப் பார்ப்பது க்ளாஸ்.

உனரோ மிழியழகே என்று சின்மயி ஒரு பாடல் பாடி இருக்கிறார் கேட்டுப்பாருங்கள். சொக்கிப்போவீர்கள். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற திரைப்படம். விரைவில் இந்தப்படம் தமிழிலும் வரப்போகிறது. தமிழில் இந்த போலீஸ் கமிஷ்னர் கேரக்டரை சரத்குமார் செய்யப்போவதாக சொல்கிறார்கள். கமல்ஹாசனே நடிக்க ஆசைப்பட்ட படம் இது. அப்படி என்றால் படத்தின் குவாலிட்டியை யோசித்துக்கொள்ளுங்கள். மொத்தத்தில் நல்ல சினிமாவை விரும்புபவர்கள் தவற விடக்கூடாத சினிமா இது.

என்னுடைய ஒரு suggestion :

எனக்கு படம் பார்க்கும் போது ஒரு ஐடியா தோன்றியது. ஸ்ரீனிவாசனுக்கு வேலை போனதற்கு காரணம் ஒரு டிவி ரிப்போர்ட்டர். அவள்தான் இவர் லஞ்சம் வாங்கும் போது மீடியாவில் கிழிகிழி என்று கிழித்தவள். என்னுடைய ஐடியா என்னவென்றால், நடிகரான ரஹ்மானின் மகள் டீவியில் பார்ட்டைம் காம்பியராக வேலை செய்து, அவளால் இவருக்கு வேலை போனமாதிரி காட்டி இருந்தால் இன்னும் டெப்த்தாக இருந்திருக்கும். யாரால் தனக்கு வேலை போனதோ, அதே பெண்ணுக்காக இன்று உயிரை பணயம் வைத்து ஸ்ரீனிவாசன் வண்டி ஓட்டுகிறார் என்ற ஒன்லைன் இருந்திருந்தால் படம் இன்னும் உணர்வு பூர்வமாக இருந்திருக்கும்


Saturday, March 24, 2012

Donkey Punch ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்
***********************************
இந்தப்பதிவு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது.  பிடிக்காதவர்கள் இங்கேயே விலகிவிடலாம்.
***********************************
7 பேர் கொண்ட நண்பர்கள் குழு ஜாலியாக விடுமுறைய கழிக்கலாம் என்று கப்பலில் டூர் போகிறார்கள். ஆனால் போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு மரணம் நிகழந்துவிட ஒவ்வொருவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார்கள். ஒருவரை ஒருவர் அடித்து கொன்று இறந்து போகிறார்கள். இறுதியில் ஒரே ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார். அது யார்? ஏன் கொலை நடந்தது? எதற்காக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள் என்பது மீதி இண்ட்ரஸ்டிங் கதை.

லீசா, கிம், டம்மி என்று மூன்று பெண்களும் ப்ளூயி, ஜோஷ், ஸீன் ,மார்கஸ் என்ற நான்கு ஆண்களும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 7 பேரும் தங்கள் விடுமுறையை ஜாலியாக  கழிக்க, கடலில் ஒரு சிறிய கப்பலை எடுத்துக்கொண்டு டேட்டிங் போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஜாலியும், கிண்டலுமாக இவர்களின் பொழுது கப்பலில் கழிந்துகொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் பேச்சு செக்ஸ் நோக்கி திரும்புகிறது. ப்ளூயி “Donkey Punchஎனப்படும் பின்புற உறவு கொள்ளும் முறையைப்பற்றி ஜாலியாக விவரிக்கிறான். பின் அந்த டாபிக் மாறி, அனைவரும் தூங்க செல்லுகின்றன. 

மார்கஸ், கிம், லீசா, ப்ளூயி இவர்கள் நால்வரும் ஒரே அறையில் உறவு கொள்கின்றனர். தானும் லிசாவும் உறவு கொள்வதை கேமராவில் படம் பிடிக்கும்படி ப்ளூயி, ஜோஷிடம் கூறுகிறான். ஜோஷ் அதை படம் பிடித்துக்கொண்டிருக்கிறான். பின் ப்ளூயி, ஜோஷிடம் நீ சென்று லிசாவிடம் உறவு வைத்துக்கொள், நான் இப்போது கேமராவை ஹேண்டில் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறான். ஜோஷ், இப்போது Donkey Punch முறையை செயல்படுத்த துவங்குகிறான். ஒருகட்டத்தில் ஜோஷுக்கு வெறி அதிகமாகி, வேகமாக செயல்படும் போது அவள் கழுத்தைப்பிடித்து ஏடாகூடமாக திருப்ப,  லிசா அதிர்ச்சியில் இறந்துபோகிறாள்.
இப்போது அனைவருக்கும் அதிர்ச்சி. என்ன செய்வதென்றே புரியாமல் தவிக்கும் போது, அவள் பிணத்தை கடலில் தூக்கி போட்டுவிடலாம் என்று ஆண்கள் சொல்ல, பெண்கள் அதற்கு மறுக்கிறார்கள்.  லிசாவின் பிணம் கடலில் துக்கி எறியப்படுகிறது. கிம்மும் டம்மியும் இவர்களது செயல் பிடிக்காமல் வெறுப்படைய துவங்குகிறார்கள். ஜோஷ் உறவு கொள்ளும் போது லிசா இறந்து போனதற்கு சாட்சியான டேப் ப்ளூயிடம் இருக்கிறது. அதை தூக்கியெறிய சொல்லுகிறார்கள். ப்ளூயி தூக்கியெறிவது போல் பாசாங்கு செய்கிறான். ஆனால் தூக்கியெறியவில்லை. பின் இவர்களுக்குள் ஏற்படும் வாக்குவாத்த்தில், இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கிம் மார்கஸை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறாள். ஜோஷ், தன்னுடைய டேப் ப்ளூயிடம் இருப்பதை தெரிந்து கொண்டு அவனை துன்புறுத்துகிறான். அவன் தன்னுடைய பெட்டின் அடியில் டேப்பை மறைத்து வைத்திருப்பதாக கூற, ஜோஷ் அங்கு விரைகிறான். ஆனால் அதற்குள் கிம் அந்த டேப்பை எடுத்து விடுகிறாள்.

டேப் கிடைக்காத ஆத்திரத்தில் ஜோஷ் ப்ளூயிவின் நெஞ்சியில் கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொல்கிறான். டம்மியிடம் டேப் இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தில் ஜோஷ் அவளை துன்புறுத்த தொடங்குகிறான். அதற்குள் ஸீன் அங்கு வந்து இருவரையும் விலக்கி சமாதனப்படுத்துகிறான். ஆனால் தூரத்தில் இருந்து பார்த்து  இதை தவறாக புரிந்துகொண்ட கிம், ஒரு மோட்டார் இயந்திரத்தை (டைட்டிலில் நீங்கள் பார்க்கும் இயந்திரம்) கையில் வைத்துக்கொண்டு ஓடிவந்து ஸீன்ஐ சுக்குநூறாக கொலை செய்கிறாள். அப்போது டம்மி, ஐயோ, இவன் நமக்கு உதவி செய்ய வந்தவன். இவனைப்போய் கொன்று விட்டாயேஎன்று கூற, குற்ற உணர்ச்சியில் கிம், கப்பலில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். 
இப்போது டம்மியும், ஜோஷும் இருவர் மட்டுமே. அந்த டேப் டம்மியிடம் இருக்கிறது. ஜோஷ் அந்த டேப்பை கைப்பற்றினானா? டம்மி அவனிடமிருந்து தப்பித்தாளா? அவர்கள் கப்பலிலிருந்து வெளியேறி என்ன செய்தார்கள் என்பதை மீதிப்படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

படம் துவங்கிய 45 நிமிடங்கள் நீங்கள் பொறுமையாக பார்த்துவிட்டால் நீங்கள் பொறுமைசலிதான். நம் பொறுமையை சோதிக்கும் வகையில் என்ன என்னவோ பேசியும் செய்தும் தொலைக்கிறார்கள். ஆனால் அந்த உறவு கொள்ளும் காட்சிக்கு பிறகு படம் சூடு பிடிக்கிறது. அது கடைசிவரை குறையாமல் நீடிக்கிறது.

ப்ளூயி படத்தின் ஆரம்பத்தில், இல்லாத ஒரு பொருளை வரவழைப்பது போல் ஒருமேஜிக் செய்கிறன் என்பது போல் ஒரு சீன் காட்டுவார்கள். அது எதற்கு என்று நினைத்தால் அதில் ஒரு சரியான டிவிஸ்ட் இருக்கிறது. டேப்பை தூக்கி போட சொல்லும் போது ப்ளூயி தூக்கி போடுவதாக மேஜிக் செய்துதான் டேப்பை ஒளித்து வைப்பான். சரியான ஸ்க்ரீன் ப்ளே..
அதே போல், லீசா முதல் காட்சியில் ஷேவ் செய்யும் போது, பிளேட் பட்டு ரத்தம் வருவது போன்று காட்டுவார்கள், ஏனெனில் அவள் இறக்க போகிறாள் என்பதற்கான குறியீடே..

ஒவ்வொருவரின் கதாபாத்திர குணாதிசயம், அவர்கள் எப்படி எல்லாம் கொலை செய்யப்படுவார்கள் என்பதற்கான சின்ன சின்ன குறியீடுகள் அவர்கள் வெகு சாதாரணமாக பேசிக்கொள்ளும் போதே வெளிப்பட்டுவிடும். இதுவும் நல்ல இயக்கத்துக்கான சான்றே.

Oliver Blackburn இயக்கத்தில் வெளிவந்த ஒரு டைம்பாஸ் த்ரில்லர். பொழுதுபோக்கு விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்..


Thursday, March 22, 2012

ராகினி MMS ஹிந்தி சினிமா விமர்சனம்

இன்று இண்டர்நெட்டிலும், மொபைல் சாஃப்ட்வேர் செண்டர்களிலும் ஏராளமாக பரவிக்கிடக்கும் ஒரு விஷயம், தம்பதிகளின் அந்நியோன்யமான செக்ஸ் வீடியோக்கள். நடிகர் நடிகைகளின் வீடியோக்கள் தேவை என்ற ஆர்வம் மாறி, சாதாரணமான தம்பதிகளின் செக்ஸ் வீடியோக்கள் தேவை என்ற வீபரீதமான ஆர்வத்தால் இன்று பல தம்பதிகளின் பர்ஸ்னல் வீடியோக்கள் நெட்டில் தினம் தினம் உலா வந்த வண்ணம் உள்ளன. அதிலும் கணவனே மனைவியின் விருப்பத்தோடும், விருப்பம் இல்லாமலும் எடுக்கும் வீடியோக்களுக்கு அதிக கிராக்கி உண்டு. இதன் பின்னணியில் இருக்கும் பிஸினஸ் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியது.

அப்படி ஒரு செக்ஸ் வீடியோ எடுக்க முயற்சிக்கும் ஒரு காதலனுக்கும், அதை தெரிந்து கொண்ட காதலிக்கும் என்ன நடக்கிறது என்பதே கதை.

உதய் சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற ஆசை கொண்டவன். அவனை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்றால், அவன் தன்னுடைய காதலியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் வீடியோவை கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் அவனை நடிகனாக்குவதாக பணக்கார புரோக்கர் ஒருவன் உதய்க்கு ஆசை காட்டுகிறான். உதய்யும் தன்னுடைய முகம் தெரியாதவாறு அந்த வீடியோவை எடுப்பதாக கூறி திட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறான். உதய் தன்னுடைய காதலியான ராகினியை அழைத்துக்கொண்டு தன்னந்தனியான ஒரு பங்களாவிற்கு டேட்டிங் போகிறான்.

அங்கே பல இடங்களில் வீடியோ கேமரா செட் செய்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாடியின் மேல் இருக்கும் ரூமில். உதய் தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு அந்த ரூமிற்கு வந்து ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கும் போது, ராகினியின் தோழி, அவளது காதலனை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். இது என்னடா சிவபூஜையில் கரடி? என்று உதய் டென்ஷன் ஆகிவிடுகிறான். ஒருவழியாக அவர்களை வெளியேற்றி விட்டு, பெட்ரூமுக்கு வருகிறார்கள்.

புதுவிதமாக ரொமான்ஸ் செய்யலாம் என்று முடிவெடுத்து, ராகினியை பெட்டில் படுக்க வைத்து அவள் கைகளை ஒரு சங்கிலியால் கட்டிலில் கட்டி வைக்கிறான். (ஏனெனில் இதுபோன்ற வீடியோக்களுக்கு மார்க்கெட்டில் ஏக கிராக்கி என்பதால்). பின் எல்லாவற்றையும் ரெடி செய்துவிட்டு ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கும் போது உதய்க்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது...

ஆம், அந்த வீட்டில் பேய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. அது உதய்யை ராகினியுடன் நெருங்கவிடாமல் தடுக்கிறது. அதிர்ந்துபோன உதய், என்னவென்று பயத்தில் தேடும்போது செட் செய்து வைத்திருக்கும் கேமரா ராகினியின் கண்களில் தென்பட்டு விடுகிறது. எதற்காக இப்படி எல்லாம் செய்தாய்?” என்று ராகினி உதய்யை திட்டுகிறாள். அவளால் கட்டிலைவிட்டுக்கூட நகரமுடியவில்லை ஏனென்றால் அவள் கைகள்தான் கட்டிலில் கட்டப்பட்டிருக்கிறதே. தன் கைகளை அவிழ்த்துவிடும்படி அவள் கெஞ்ச, உதய் சாவியை காணாமல் திகைக்கிறான். அந்த ரூமில் பேய் இருப்பது தெளிவாக தெரிந்துவிட, இருவரும் செய்வதறியாமல் திகைக்கிறார்கள். பின் என்ன ஆனது, உதய்யை பேய் என்ன செய்தது? ராகினி கைகளை எப்படி அவிழ்த்தாள்? பேயிடமிருந்து தப்பித்தாளா இல்லையா என்பதெல்லாம் படத்தின் டென்ஷனுக்கு நிச்சயம் உத்தரவாதம்..

படததின் தொடக்கம் முதலே, உதய் ஒரு ஹேண்டி கேமராவை வைத்துக்கொண்டு ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் ஷூட் செய்வது போல காட்டுவது உதய் என்ன செய்யப்போகிறான் என்பதை அப்பட்டமாக காட்டிவிடுகிறது. உதய்யாக நடித்திருக்கும் ராஜ்குமார் யாதவ் பின்னிபெடலெடுத்திருக்கிறார். ராகினியை செட் செய்து ரூமுக்கு கூட்டி வரும் காட்சிகளில் அநியாயத்திற்கு காமம் கண்களில் கொப்பளிக்கிறது. ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில் ராகினியின் தோழியும் அவள் காதலனும் அங்கு வந்துவிட, உதய் செம டென்ஷன் ஆவது நமக்கெல்லாம் சிரிப்பு.. எல்லாவற்றையும் வீராவேசமாக செய்துவிட்டு பேய்க்கு பயந்து நடுங்கும் காட்சியில் உதய் கலக்கி இருக்கிறார்.

ராகினியாக நடிக்கும் கைனஸ் மோட்டிவாலா சரியான அழகுப்பெண். உதய்யுடன் ரொமான்ஸ், இப்படி ஒரு செக்ஸ்வீடியோ எடுக்கத்தான் தன் காதலன் தன்னை கூட்டி வந்திருக்கிறான் என்பதை தெரிந்த உடன் ஏற்படும் கோவம், கைகளை அவிழ்க்கமுடியாமல் திணறுவது என நடிப்பில் கலக்கி இருக்கிறார்.

அதைவிட செம காமெடி, ராகினியின் தோழியும் அவள் காதலுனும் மூட் ஏற்பட்டு அதே கேமரா இருக்கும் ரூமுக்கு சென்று ரொமான்ஸை ஆரம்பிப்பார்கள். இவர்கள் வந்ததில் செம டென்ஷனில் இருக்கும் உதய், அவர்கள் மேலே எதற்காக போனார்கள் என்பதை தெரிந்து கொண்ட உடன் செம சந்தோஷமாகிறான். ஏனெனில் கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? என்ற கணக்கில் இன்னொரு வீடியோவும் சிக்கப்போகிறதே என்ற ஆர்வம்.

ஆனால் மேலே போனவர்கள் நிலை? ஹா... ஹா.. வேண்டாம் நீங்களே படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் சார்பில் ஏக்தாகபூர் தயாரிப்பில் வெளிவந்தபடம். வெறும் இரண்டு கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்டி பத்துக்கோடிக்கும் மேல் வசூலை அள்ளியபடம். எழுதி இயக்கி இருப்பவர் பவன் கிருபாள்னி. ரொமான்டிக்கையும் ஹாரர்ஐயும் இணைத்து ஒரு செம த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ம்ம்ம்.. தமிழில் இப்படி எல்லாம் ஒரு படம்... நிச்சயம் வாய்ப்பு இல்லை... எங்க ஊர் சென்ஸார்ன்னா சும்மாவா?

ஃபேஷன் - இந்திப்படம் விமர்சனம்

ஃபேஷன் உலகில் வெற்றி பெற ஒரு பெண் எதையெல்லாம் இழக்க வேண்டி இருக்கிறது, பேஷன் என்கிற உலகம் எத்தனை கொடுமையானது என்பதை தெள்ளத்தெளிவாக செவிட்டில் அறைவது போல் சொன்ன படம் இது.

சண்டிகரின் ஒரு சிறிய பகுதியிலிருந்து மாடலிங்துறையில் பெரிய மாடலாக வர வேண்டும் என்ற ஆசையில் அப்பா, அம்மாவின் பேச்சை பொருட்படுத்தாமல் பாம்பே வருகிறாள் பிரியங்கா சோப்ரா (மேக்னா மாத்தூர்). அங்கே அவள் தனது சொந்தக்கார பெண்மணி வீட்டில் தங்குகிறாள். அவளுக்கு அங்கே இருக்கும் ஆடம்பரங்கள் புதிதாய் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் ஆடிஷனிலும் தோல்வியே பெறுகிறாள். அவளுக்கு அங்கே உதவி செய்ய ரோஹித் எங்கிற ஒரு கே டிசைனர் இருக்கிறான். இந்த ரோஹித்தான் வினய் கோஷ்லா என்கிற மிகப்பெரிய டிசைனரின் அஸிஸ்டெண்ட். ஒரு ஆடிஷன் செலக்‌ஷன் போகும் போது போது பிரியங்கா சோப்ராவிடம் அறிமுகம் ஆகிறான் அர்ஜன் (மானவ்). இவனும் மாடலிங் உலகில் ஜெயிக்க போராடிக்கொண்டு இருப்பவன்.

பிரியங்காவின் புகைப்படங்கள் படு லோக்கலாக இருக்கிறது என்று கூறி அவளை மிகப்பெரிய ஃபோட்டோகிராஃபரான கார்த்திக்கிடம் அறிமுகம் செய்து வைக்கிறாள் பிரியங்காவின் மாடலிங் தோழி கிறிஸ்டின். கார்த்திக், பிரியங்காவை வைத்து எடுக்கும் உள்ளாடைகளுக்கான விளம்பர புகைப்படங்கள் இந்தியாவில் வெளியாகாது என்று கூறித்தான் அனுமதி வாங்குகிறான். ஆனால் அந்த புகைப்படங்கள் ஒரு பத்திரிக்கையில் வெளியாக, பிரியங்கா தங்கி இருக்கும் வீட்டின் சொந்தக்காரப்பெண்மணி டென்ஷனாகிறார். அதனால் பிரியங்காவிற்கு வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை. தான் சந்தித்த மானவ்வின் அபார்ட்மெண்டையே இருவரும் பங்கிட்டுக்கொண்டு வாழ்கிறார்கள். பின், ராகுல் அரோரா என்கிற பெரிய டிசைனர் ஒருவரின் அறிமுகத்தால் பேஷன் உலகில் பத்தோடு பதினொன்றாக களம் இறங்குகிறாள் பிரியங்கா.

அங்கே ஷோ ஸ்டாப்பராக சிங்கமென உறுமிக்கொண்டு நிற்கிறான் கங்கனா ரெனாவத் (சோனாலி). ஷோ ஸ்டாப்பர் என்றால் அவள்தான் அந்த நிகழ்ச்சியின் ஹீரோயின். அவள் வைப்பதுதான் சட்டம். அந்த அளவிற்கு மற்றவர்களை மதிக்காத ஆட்டிட்டியூட் கொண்ட பெண்ணாக இருக்கிறாள் கங்கனா ரெனாவத். பேஷன் உலகில் நுழையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஷோ ஸ்டாப்பர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்கும். பனாஷ் என்கிற மிகப்பெரிய பத்திரிக்கையின் மாடல்கள்தான் பேஷன் உலகில் வெற்றிக்கொடி கட்டுபவர்கள் கங்கனா, பனாஷ் பத்திரிக்கையின் பிராண்ட் மாடல் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பனாஷ் பத்திரிக்கைய நடத்துபவர் செரின்.

பிரியங்காவின் மாடலிங்க் ஷோவை பார்க்கும் செரினுக்கு, அவள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. கங்கனா ஒரு கட்டத்தில் திமிரின் உச்சக்கட்டத்தில் நடந்துகொள்ள பனாஷ் நிறுவனத்திலிருந்து விரட்டி அடிக்கப்படுகிறாள். அவளுக்கு பதிலாக அங்கே செரினால் பிரியங்கா தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.

ஒரே நைட்டில் மிகப்பெரிய பேரும், புகழும் பிரியங்காவை வந்தடைகிறது. பத்தோடு பதினொன்றாக நின்ற பிரியங்கா இன்று ஷோ ஸ்டாப்பர். பேஷன் உலகில் ஷோ ஸ்டாப்பராக இருந்த கங்கனா பத்தோடு பதினொன்றாக ஆகிப்போகிறாள். அந்த வெறுப்பில் போதை மருந்து பழக்கத்திற்கும அடிமை ஆகிறாள். பார்ட்டி அது இது என்று பிரியங்கா நேரம் கழித்து வருவதால் மானவுக்கும் பிரியங்காவிற்கும் சண்டை வருகிறது. பிரியங்கா வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பிரியங்காவிற்கு ஒரு ஆடம்பர ஃப்ளாட்டையே தருகிறார் செரின். செரினின் அன்பால் அவரிடம் தன்னை இழக்கிறாள் பிரியங்கா. அதனால் கற்பமும் ஆகிறாள். செரின், குழந்தையை கலைத்துவிட சொல்கிறார். ஏனெனில் மாடலிங் பெண்கள் கர்ப்பமாக கூடாது என்பது காண்டிராக்ட். பணமும் புகழும் சேர, பிரியங்கா திமிரால் அகம்பாவம் பிடித்து நடக்கிறாள். புகழின் போதையால், ஒரு பார்ட்டியில் செரினின் மனைவியிடம், பிரியங்கா அவள் கணவனின் நடத்தையைப்பற்றி சொல்ல, செரின் கோபமடைகிறார். அதனால் பனாஷின் காண்டிராக்டில் இருந்து பிரியங்கா துரத்தப்படுகிறாள். அவளது மார்கெட் குறைகிறது. தண்ணியும், சிகரெட்டுமாக அவள் மாறுகிறாள்

ஒரு நாள் பேஷன் ஷோவில் கங்கனா நடந்து வருகையில் அவளது மார்புக்கச்சை அவிழந்து விழுகிறது. அரைநிர்வாணமான அவளை பத்திரிக்கைக்களும் டிவிக்களும் புகைப்படம் எடுத்துவிடுகின்றன. அதிர்ச்சியின் உச்சத்திற்கே போகும் கங்கணா செய்வதறியாமல் அவமானத்தால் டிரக்ஸ் ஊசி பழக்கத்திற்கும் அடிமை ஆகிறாள்.

மற்றொரு புறம் பனாஷ் பத்திரிக்கையிலிருந்து விரட்டப்பட்டு, செரினால் புறக்கணிக்கப்பட்டு பிரியங்கா வேதனை அடைகிறாள். அவள் அளவுக்கு அதிகமாக மது குடிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு பார்ட்டியில் தன் நிலை மறந்து நீக்ரோ ஒருவனை கட்டிப்பிடித்து கிஸ் அடிக்கிறாள். அவனும் இதுதான் சாக்கு என்று பிரியங்காவை வன்புணர்ச்சி செய்துவிடுகிறான். மறுநாள் காலை எழுந்திருக்கும் போதுதான் பிரியங்காவிற்கு சுய நினைவே வருகிறது. அப்போதுதான் தான் ஒருவனால் கற்பழிக்கப்பட்டிருப்பதே அறிகிறாள். அதிர்ச்சியும் அவமானமும் தாக்க, பேஷன் உலகின் கொடூரம் தாங்காமல் தந்தையிடமே ஓடிப்போகிறாள். அவளை நார்மல் நிலைக்கு திருப்ப தந்தை எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகவே, அவளது மாடலிங் லட்சியத்தையே மறுபடியும் செய்யுமாறு தந்தை சொல்கிறார். மீண்டும் பாம்பே வருகிறாள் பிரியங்கா.. இப்போது அவளது திமிர், அகங்காரம் எல்லாம் சுத்தமாக காணாமல் போயிருக்கிறது.

திரும்பவும் அவளுக்கு எப்படி பேஷன் உலகில் வாய்ப்பு கிடைத்த்து, அரை நிர்வாணமாக படம்பிடிக்கப்பட்ட கங்கனாவின் நிலை என்ன? கங்கனாவை பிரியங்கா எப்படி அரவணைத்தாள் போன்ற கேள்விகளுக்கு அதிர்ச்சியான இந்தப்படம் விடையளிக்கிறது..

மாடலிங் பெண்களின் மனநிலை, புகழுக்காக அவர்கள் தங்கள் கற்பை இழப்பது, வெறுப்பின் உச்சத்தில் சிகரெட், தண்ணி, போதை மருந்துக்கு அடிமை ஆவது என எல்லா ஏரியாவிலும் இயக்குனர் மிக நுணுக்கமாக திரைக்கதை அமைத்திருக்கிறார். பார்க்கும் போதே அதிர்ச்சியில் உறைய வேண்டி இருக்கிறது.

அதுவும் கங்கனாவின் மார்புக்கச்சை அவிழ்ந்து விழும் காட்சியும், பிரியங்கா நீக்ரோ ஒருவனால் கற்பிழந்து கிடக்கும் காட்சியும் அதிர்ச்சியின் உட்சபட்சம். கேக்களை நாம் கோவா திரைப்படத்தில் கண்டதற்கே சலித்துக்கொள்கிறோம். ஆனால் இந்தப்படத்தில் இரண்டு கே கேரக்டர்களை மிக இலகுவாக இயக்குனர் உலவ விட்டுள்ளார். பாம்பேவில் இது போன்ற நபர்கள் மிக சாதாரணம். அதை அசால்ட்டாக எந்தவித உறுத்தலும் இல்லாமல் நுழைத்துள்ளார் இயக்குனர்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றிப்படமே.. ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த இந்த்திரைப்படம் பிரியாங்கா சோப்ராவுக்கும், கங்கனா ரெனாவத்திற்கும் தேசிய விருதை வாங்கித்தந்தது. கங்கனாவின் திமிர்பிடித்த ஆட்டிட்டியூடை இந்தப்படத்தில் வெகுவாக ரசிக்கலாம்.. என்னா ஸ்டைல்டா? இந்தப்பொண்ணை போயா தாம்தூம் பட்த்தில் அவ்வளவு மொக்கையாக உபயோகப்படுத்தினார்கள்?

செரினின் அலுவலகத்தில் ஹெட்டாக வரும் அனிஷா அசத்தல் ரகம். செரினின் ஒவ்வொரு கண் அசைவிற்கு ஏற்ப செயல்படும் இவரது கேரக்டரை நிச்சயம் எல்லாரும் எல்லா கார்ப்ரேட் அலுவலகத்திலும் கடந்து வந்திருப்பார்கள். கங்கனாவை வேண்டாம் என்று சொல்வதற்கும், பிரியங்காவை வேண்டாம் என்று சொல்வதற்கும் இவர் சொல்லும் காரணங்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் நிழலுருவத்தை நிஜமாக நடமாடவிடுவது போல் இருக்கும்.. செமத்தியான கேரக்டரைசேஷன்.

குடித்துவிட்டு ஒரு மாடலிங் பெண் போலீஸில் மாட்டியது, ராம்ப்வாக்கில் ஆடை அவிழ்ந்து விழுந்த பெண், என நிஜவாழ்வில் நடந்த பல சம்பவங்களை தைரியமாக படத்தில் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

பத்தோடு பதினொன்றாக இருக்கும் போது, பிரியங்காவின் ஆடையை கேலி செய்து, ஷோவைவிட்டு வெளியேற சொன்ன வினய் கோஷ்லாவை, பிரியங்கா பின்னாளில் பெரிய மாடலாக ஆனவுடன் பழிவாங்கும் விதம்.. செம சீன்.

வெளியிலிருந்து பார்த்தால் ஆடம்பரமாய் அழகாய் ஜொலிக்கும் மாடலிங் துறையின் அசிங்கங்களை, அவமானங்களை, துன்பங்களை, பார்ட்டி இரவுகளை அட்சரசுத்தமாய் அலசி இருக்கிறது இந்தப்படம். இதன் இயக்குனர் மதுர்பண்டார்கரை எவ்வளவு கைலுக்கி வேண்டுமானலும் பாராட்டலாம். தமிழில் இது போன்ற முயற்சிகள் சாத்தியமா? நினைக்கவே மலைப்பாக இருக்கிறது... என்னைப்பொறுத்தவரை தமிழில் இந்தப்படத்தை ரீமேக் செய்தால் பிரியங்கா கேரக்டருக்கு அனுஷ்காவும், கங்கனா கேரக்டருக்கு அமலா பாலும் சரியான சாய்ஸ்.

ஒரு நல்ல ஹிந்திப்பட்த்தை பார்க்க வேண்டும் என்பவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத படம் இது, ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக்குவித்த இந்தப்படத்தை நிச்சயம் ஒருமுறை பாருங்கள்.

இதையும் படியுங்கள்