Friday, February 25, 2011

நியூட்டனின் 3ம் விதி


“அர்விந்த் இதுல ராஜ்தானி ட்ரெய்னுக்கு ரெண்டு டிக்கெட் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் ட்ரெயின் கிளம்புறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி ஸ்டேஷனுக்கு போனா போதும். இந்தா இதுல 20,000 பணம் இருக்கு. வெச்சிக்கோ.. வழியில எதாவது தேவைப்பட்டா வாங்கிக்க. நிஷாவை ஜாக்கிரதையா பார்த்துக்கோ மச்சி.. நீங்க டெல்லி போன உடனே எனக்கு போன் பண்ணுங்க. நான் உங்க ரெண்டு பேருக்கும் அங்கேயே எதாவது ஒரு வேலை ரெடி பண்றேன். ஒகே.. ஜாக்கிரதை மச்சான்... டேய்.. நிஷா அப்பாவை நான் கவனிச்சுக்குறேன். நீங்க கிளம்புங்க.”

நிஷாவும் அர்விந்தும் டெல்லிக்கு ஓடிப்போவதற்கு எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டு மனத்திருப்தியுடன் பைக்கை கிளப்பினான் ராம்.

பைக் சீறியது... 5 நிமிடத்தில் ஒரு தொலைபேசி பூத்தை அடைந்தான். உள்ளே நுழைந்து தொலைபேசியின் எண்களை மெதுவாய் டயல் செய்யத்தொடங்கினான்.

கர்சீஃப்பின் உதவியால் குரலை மாற்றியபடியே,

“ஹலோ.. மிஸ்டர் ராமசுப்பு... நான் யாருங்கிறது எல்லாம் உங்களுக்கு வேணாம். நான் சொல்ற விஷயத்தை மட்டும்கேளுங்க. உங்க பையனுக்கு நிச்சயம் பண்ண ஜட்ஜ், கிருஷ்ணமூர்த்தியோட ஒரே பொண்ணு நிஷா, இன்னைக்கு ராத்திரி ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ல அவ லவ்வரோட ஓடிப்போகப்போறா.. முடிஞ்சா உங்க குடும்ப மானத்தை காப்பாத்திக்குங்க..”

"டொக்" வேறெதுவும் சொல்லாமல் ரிஸீவரை துண்டித்தான்.

அடுத்தது.. இன்னும் இரண்டு மூன்று பேருக்கு கால் செய்தான். சந்தோஷத்துடன் வெளியே வந்து பைக்கை கிளப்பி, ஒரு தனியிடத்தில் நிறுத்தி, ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்கத் தொடங்கினான்..

இரண்டு மூன்று நீளமான சிகரெட் இழுப்புகளுக்கு பிறகு, மெல்ல தன் மனதுடன் பேச தொடங்கினான்.

நிஷா..4 வருஷமா உன் பின்னாடி சுத்தி வர்றேன். நான் உன் கண்ணுக்கு தெரியலை. ஆனா நேத்து வந்த அர்விந்த் உன் காதலனா ஆகிட்டானா? உன்னைவிட அந்தஸ்துல 5 மடங்கு பணக்காரன் நான். ஆனா நீ? என்னைவிட்டுட்டு அந்த அன்னக்காவடி அர்விந்த் பின்னால சுத்துற இல்ல.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு நான் உன்னை வாழ்த்தி பாட்டு பாட எல்லாம் மாட்டேன். என்ன அழ வெச்ச பாவத்துக்கு நீ மட்டும் அழுதா போதாதுடி.. உன் குடும்பமே அழணும்டி.. உங்க அப்பா அம்மா எல்லாரும் உன்னால தலை குனிஞ்சு நிக்கணும்..அதுதான் எனக்கு வேணும்...

ஒரு குரூரமான புன்னகையுடன் சிகரெட்டை தூக்கிப்போட்டு காலில் மிதித்து நசுக்கினான். அந்த சிக்ரெட் நிஷாவாய் தோன்றியது அவனுக்கு..

ஒரு மனத்திருப்தியுடன் பைக்கை ஸ்டார்ட் செய்த போது அவன் மொபைல் சிணுங்கியது..

“ஹலோ “

“டேய் ராம்.. அம்மா பேசறேண்டா”’ அம்மா அழத்தொடங்கினாள்

சொல்லும்மா? ஏன் அழுவுறே?

“டேய் உன் தங்கச்சி அந்த அன்னக்காவடி பையன் சுந்தரோட ஓடிப்போயிட்டாளாம்டா.. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வ்நது ஹாஸ்பிட்டலல் சேர்த்திருக்கோம்டா....”


*******************************

Saturday, February 19, 2011

அதை மட்டும் திருப்பிக்கொடு


ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்…

காதலை எந்த
வடிவில் கண்டாலும்
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.
கால் கொண்டு எட்டி உதைத்தாய்
அட, எட்டி உதைத்தாலும்
உன்னிலே ஒட்டிக்கொள்ளும்
ஒட்டுண்ணியாய்
வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்
இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..

உணவைக்கூட
இதழிலிருந்து இதழிற்கு
தடம் மாற்றினாய்.
ஏன் உணர்வை மட்டும்
மறுத்து விட்டாய்?


எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.


அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு


இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?


நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...

ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு


என் சிரிப்பை..

இதையும் படியுங்கள்