Wednesday, December 29, 2010

காதல் கடிதம் - தொடர் பதிவு

என்னை தொடர் பதிவுக்கு அழைத்த தோழி இந்திராவுக்கு நன்றி. இந்திரா அவர்கள் எனக்கு கொடுத்த தலைப்பு ப்ரியமானவருக்கு காதல் கடிதம் எழுதவேண்டும் என்பது... ம்ம்ம்ம்.. சாக்லேட் சாப்பிட கூலியா... இதோ என் காதலுக்கு ஒரு கடிதம்



ஹாய் செல்லக்குட்டி


வித்தியாசமாக உன்னை எப்படி அழைத்தாலும் அதன் முடிவில்
அச்சு வெல்லமாய் ஒட்டிக்கொண்டிருப்பது இந்தகுட்டிதானே.
மூச்சுவிடும் நேரத்தைவிட அதிகமாய் செலவிட்டது, உன்னை இந்தபெயர் சொல்லி கொஞ்சத்தானே (அப்பாடா.. செல்லப்பேர் சொல்லி மாட்டிக்கலை)



**********************************************************
உனக்கு ஒரு கடிதம் எழுதிட அமரும் வேளையில் நான் வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடவில்லை. வார்த்தைகள் போதாமல்தான் திண்டாடிப்போனேன். இப்போது நீ என்னருகில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எப்போதும் உன் நினைவுகள் என்னருகில் இல்லாமல் இருக்கவே முடியாது. சின்ன சின்ன சில்மிஷங்கள் இன்னமும் நியாபகம் இருக்கிறது. இதைப்படிக்கும் வேளையில் நீ சிரித்துக்கொண்டிருப்பாய் என எனக்கு தெரியும். ஆனாலும் உன்னிடம் சொல்வதற்கு எனக்கு சில கோரிக்கைகள் இருக்கின்றன. நீயில்லாமல் நான் கூட இருந்துவிடுவேன். ஆனால் நீயின்றி தவிக்கும் சில ஜீவன்களை உனக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


நம்மைசுற்றி யார் யாரோ இருக்கோ, யாருமே அறியாவண்ணம் உன்னை தீண்டிக்கொண்டிருந்த என்விரல்கள் உன்னை கேட்கையில் நான் என்ன பதில் சொல்வேன்?

பைக் பயணத்தின் இடையே இயர்போனின் வழியே நம் இருவருக்கு மட்டுமே ஒலிக்கும் காதல் பாடல்கள் மீண்டும் எப்போது கிடைக்கும் என தவித்திருக்கும் என் செவிகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

ஆயிரம் சுவைகள் சுவைத்தாலும் உன் இதழ் கொடுத்த சுவையை மறக்க முடியாமல் தவிக்கும் என் இதழ்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

முத்தம் என்பதின் அர்த்தம் என்ன என்பதை என் கன்னங்களுக்கு சொல்லிகொடுத்துவிட்டு போய்விட்டாய். மறுமுறையும் அந்த அர்த்தத்தை கேட்டு என்னை தொல்லைப்படுத்தும் கன்னங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

உன்னை மட்டுமே உண்டு பசியாறிய என் விழிகள் பட்டினியால் கிடக்கின்றதே, அந்த விழிகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

உன் பின்னங்கழுத்தின் ஓரம் மணக்கும் அந்த வாசனையின்றி, சுவாசிக்கவே மறுக்கும் என் நாசிக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

விளையாட்டான கோபங்களிடையே உன் கரங்கள் செல்லமாய் என் முடியை பற்றி இழுக்குமே.. உன்விரல்களின் தீண்டலின்றி வறண்டுகிடக்கும் என் தலைமுடிகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?



உன் காதலின் நீட்சியான கட்டியணைப்பின் வெப்பமின்றி குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும் என் தேகத்திற்கு நான் என்ன பதில் சொல்வேன்?


உன்னுடன் தண்டவாளங்களின் இடையே நடைபழகிய என் கால்கள் நீயில்லா பயணத்தை நேசிக்கவே மறுக்கின்றனவே அவைகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

இரட்டை உறக்கம் சுமந்தே பழகிய என் தலையணை இன்று என்னை மட்டுமே சுமந்து தன்னை நொந்து கொள்கிறதே. அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?

மெல்லிய மோகத்தினிடையே நீ சொல்லும் ஐலவ்யூவின்றி என் ஐம்புலன்களும் வாடிக்கிடக்கிறதே அவைகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

உன் ஸ்பரிசங்களினால் உயிர்பெறும் என் காதல் இன்று மரணித்தே கிடக்கிறதே. நீ உயிர்ப்பிக்க வருவாயா என்று தவமிருக்கிறதே. அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?


நீ கொடுக்கலாமா வேண்டாமா என்று தயங்குவதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை. என் செல்போன் தான் உன் முத்த ரீஜார்ஜ் இன்றி செயலிழந்து போகிறது. அதற்காகவாவது ஒரு முறை ரீசார்ஜ் செய்துவிடு.


நீ எனக்கு எதுவும் சொல்லவேண்டாம். நீ இல்லாமல் நான் இருந்துவிடுவேன். இவைகளுக்கு மட்டும் பதில் சொல்.போதும். இப்போது நீ எதை யோசித்துக்கொண்டிருந்தாலும் நான் உன்னை மட்டுமே யாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் மறந்துவிடாதே. உன் விழியிருந்து விழலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் அந்த கண்ணீரை கொஞ்சம் அடக்கிவை. அவைகள் இந்தக்கடிதத்தை உன் கண்ணிலிருந்து மறைத்துவிடும்.


இப்படிக்கு

உன் நினைவுகளால் தினமும் இறந்து போனாலும்
உன் இதயத்தை சுமக்கவேண்டும் என்ற கடமையால்
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "மணி"தன்


உன்குறிப்பு : “N”aan “H”appyaga “I”LLai என்பதை உன் பெயரில் உள்ள எழுத்துக்களே உனக்கு உணர்த்தி விடும்



இதையும் படியுங்கள்