Friday, October 8, 2010

மன்னிப்பாயா - ஒரு பரவசமான பாடல்

ரஹ்மானின் இசை எப்போதும் ஒரு பரவசத்தை கொடுக்கக்கூடியது. அதிலும் மென்சோக பாடல்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கண்ணீர் சுரப்பிகளில் ஊடுருவி சென்று கண்ணீரை வெளியே கொண்டுவராமல் விடாது. அத்தகைய மேஜிக் "பம்பாய்" திரைப்படத்தில் "உயிரே உயிரே" பாடலில் அமைந்தது. அதன் பின் "அலைபாயுதே " திரைப்படத்தில் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடலில் அமைந்தது (என்னுடைய டாப் மோஸ்ட் ஃபேவரைட் இந்தப்பாடல்தான்). அதற்கு அடுத்தபடியாக அந்த மேஜிக் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் அமைந்தது..


எஸ்.. அந்தப்பாடல்.. மன்னிப்பாயா....

எத்தனை முறை இந்தப்பாடலை கேட்டிருப்பேன். எத்தனை முறை கண்ணீரை துடைத்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஏதோ ஒரு இனம் புரியாதவலி இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டு, மனதிற்கு பிடித்த ஒரு முகத்தை நியாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.


கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே
..

எந்த இசைக்கோர்வையுமின்றி ஸ்ரேயா கோஷலின் குரலில் இந்த வரிகள் ஒலிக்கையிலே என் உலகின் அத்தனை இயக்கங்களும் நிறுத்தப்பட்டு, இந்த பாடலுக்குள் புதையத்தொடங்குவேன். மெல்லிய இசையின் கரம் பிடித்து....

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா

என்று தொடங்கும் வரிகளில் நிச்சயம் மெஸ்மரிசம் ஆகாமல் இருக்க முடியாது. திடீரென ஆரம்பிக்கும் ரஹ்மானின் குரல் இன்னும் நம்மை அடிமையாக்கிப்போகும்.

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

இந்த மாதிரி சூழ்நிலைகளில் ரஹ்மானின் குரல் அந்தப்பாடலின் வலியை எவ்வளவு அழகாக பிரதிபலிக்கிறது!. ஸ்ரேயா கோஷலின் குரலில் நான் அதிகம் பாதிக்கப்பட்டது "நினைத்து நினைத்து பார்த்தேன்" பாடலில் தான். அதன் பின் இதோ இந்தப்பாடல்.. என்ன ஒரு லாவகமான குரல்வளம், மெல்லிய வளைவுகள், அந்த மென்சோகத்தை த்ரிஷாவின் இதயத்திலிருந்து நம் இதயத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யும் அந்த அற்புதத்தை ஸ்ரேயாகோஷல் மிக எளிதாக நிகழ்த்தி இருப்பார்.

வாவ்... இந்தப்பாடலில் எல்லா வரிகளும் மிகப்பொருத்தமாக அமைந்திருந்தாலும் என்னை மிகவும் உலுக்கிய வரிகள் என்ன தெரியுமா??

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்


சத்தியமாய் சொல்கிறேன். காதலின் வலியை இவ்வளவு எளிமையாய், வலிமையாய் சொல்ல முடியாது. விழிகளின் ஓரம் திரண்டிருக்கும் கண்ணீர் இந்த வரிகள் ஒலிக்கையில், அந்த சோகத்தை தாங்க இயலாமல் விழிகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும். இந்த வரியை மட்டும் ஃபார்வேர்ட் செய்து கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும். ஆம்.. அனைவரும் தூங்கிவிட்டபின் யாருக்கும் தெரியாமல் வெளிவரும் கண்ணீருக்கு ஆறுதல் கொடுப்பது தலையணை மட்டும் தானே.. எனக்கு என் தலையணை பலமுறை ஆறுதல் அளித்திருக்கிறது. தாமரை உங்கள் பேனாவை ஒருமுறை கொடுங்கள், ஒரே ஒரு முறை முத்தமிட்டு திருப்பி தருகிறேன்.

ஏக்கம், சோகம், கண்ணீர், என பல கலவையாக, பல உணர்வுக்கோர்வையாக ஒருநாள் சிரித்தேன். ஒருநாள் வெறுத்தேன் என எழுதப்பட்டிருக்கும்.. ஆனால் இந்தப்பாடல் கேட்கையில் நானே ஒவ்வொருநாளும் நனைந்து கொண்டிருக்கிறேன், கண்ணீர் மழையில்..

வாய்விட்டு கதறி அழவைப்பதில்லை இந்தப்பாடல்.. ஆனால் இந்தப்பாடல் கேட்கையில் உங்கள் கன்னங்களோடு உங்கள் கண்ணீர் ஹாய் சொல்லும். பாடல் முடிவில் அந்த சந்திப்பை உங்கள் விரல்கள் தடுத்து நிறுத்தும். ரஹ்மான் நீங்கதான் என்னை கொல்லாமல் கொல்றீங்க... கெளதம் மேனன், ரஹ்மான், தாமரை என மூவரின் ரசனையும் ஒருங்கே சங்கமிக்கும் பாடல். இந்தப்பாடலை விஷுவலாய் பார்ப்பதைவிட, ஆடியோவாய் கேட்பதில்தான் அற்புதம் ஒளிந்திருக்கிறது.

இருள் சூழ்ந்திருக்கும் நேரம், ஒரு தனியறையில், விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு எந்த தொல்லைகளும் இல்லாமல் கண்களை மூடியபடி இந்தப்பாடலை கேட்கையில் ஏதோ ஒரு வலி உங்களைத்தாக்கும். உங்கள் மனதுக்கு பிடித்தவர் முகத்தை இதயத்தின் உள்ளே எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்திருந்தாலும், அதை வெளியே கொண்டுவரும் ஆற்றல் இந்தப்பாடலுக்கு உண்டு. அதுதான் இந்தப்பாடலின் வெற்றி.

33 comments:

Mohan said...

மிகவும் ரசிச்சு எழுதியிருக்கிறீர்கள். ரகுமானின் இந்தப் பாடல் அருமையான காதல் பாடல்தான்.ஆனால் பாடல் வரிகளையும்,படத்தில் இந்தப்பாடல் இடம் பெறும் இடத்தையும் பார்த்தால்,அவ்வளவாக ஒட்டாது.உங்கள் பதிவைப் படிச்சவுடனே இந்தப்பாடலை ஒரு முறை கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது!

bhuvi said...

HI mani sir... excellent...
good job keep rocking....

கோவை ஆவி said...

நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் அதுவும் ஒன்று!!மிகவும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்!! இந்த பதிவை படித்த பிறகு பாடலின் மேலிருந்த மதிப்பு ஒரு படி உயர்ந்திருப்பது உண்மை!!

Riyas said...

நல்ல ரசனை.. மிக அழகாகவே எழுதியிருக்கிறீர்கள்.. "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" என்னை மிகவும் கவர்ந்தது...

nadhiya said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

உங்க பதிவை பார்த்த பின் தான் அதன் மகிமையே தெரியுது,இதுவரை அந்தப்படத்தின் எனது ஃபேவரைட்

அந்த நேரம் அந்தி நேரம் பாட்டுதான்,தாங்கள் ஒரு கவிதைப்பிரியன் என்பதை மீண்டும் உணர்த்தி விட்டீர்

nadhiya said...

எனக்கு மிகமிகப் பிடித்த பாடல்.. ஒருநாளைக்கு குறைந்தது 5 முறையாவது கேட்டுவிடுவேன். இரவில் படுப்பதற்கு முன் இந்தப்பாடல் நிச்சயம் என் இயர்போனில் தானாய் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.

என்ன ஒரு அற்புதமான கம்போஸிஷன்..!! ஆளை அப்படியே உறைய வைக்கும் ஸ்ரேயா கோஷல்
, ரஹ்மானின் குரல்... என்ன காரணம் என்றே தெரியாது இந்தப்பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் என் கண்கள் தானாய் கண்ணீரை சிந்த ஆரம்பித்துவிடும். நிறைய முறை எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது..

//விழிகளின் ஓரம் திரண்டிருக்கும் கண்ணீர் இந்த வரிகள் ஒலிக்கையில், அந்த சோகத்தை தாங்க இயலாமல் விழிகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும்//

கண்ணிலிருந்து கண்ணீர் விழுவதை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா? எக்ஸலண்ட்...

//இந்தப்பாடல் கேட்கையில் உங்கள் கன்னங்களோடு உங்கள் கண்ணீர் ஹாய் சொல்லும். பாடல் முடிவில் அந்த சந்திப்பை உங்கள் விரல்கள் தடுத்து நிறுத்தும். //

கண்ணீரை விரல்கள் துடைப்பதை எவ்வளவு கவிதையாய் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு இந்தப்பதிவு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு..

gautham said...

சார், உங்க நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. கண்ணீர் வந்திடுது. கண்ணீர் அவ்வளோ சீக்கிரம் வராத சில பேருக்கு , இந்த பாட்டை கேக்கறப்போ மனசு ரொம்ப வலிக்கும். என்ன வேலை செய்துட்டு இருந்தாலும், அப்டியோ போட்டுட்டு போய் பேசாம உக்காந்துகனும்னு தோணும். காதல் அனுபவம் இருக்கோ , இல்லியோ , தமிழ் தெரியுதோ இல்லியோ, இந்த பாட்டு, கேக்கறவங்க எல்லோருக்கும் ஒரு வலியை ஏற்படுத்தும். நானும் கேட்டுருக்கேன், வலியை உணர்ந்திருக்கேன். ஆனா, அதையே நீங்க சொல்லி கேக்கறப்போ மனசு உருகி போய்டுச்சு போங்க.

//உங்கள் மனதுக்கு பிடித்தவர் முகத்தை இதயத்தின் உள்ளே எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்திருந்தாலும், அதை வெளியே கொண்டுவரும் ஆற்றல் இந்தப்பாடலுக்கு உண்டு. //

ஆமா மணி சார், ஆமா. யாராலும் நீங்க சொல்றதை மறுக்கவே முடியாது. லவ் வராதவங்களை கூட பாட்டு படியே வர வச்சுடுவாய்ங்ய போல இருக்கு.

கவிதை காதலன் said...

//Mohan said... //
நன்றி மோகன்.. அதனால் தான் வீடீயோ பார்க்க வேண்டாம்.

ஆடியோவை மட்டும் கேளுங்கள் என்று சொன்னேன்..

//bhuvi said//
ஹாய் புவி... உங்க கமெண்டை எதிர்பார்க்கவே இல்லை..

//கோவை ஆவி said... //

மிக்க நன்றி சார்.. முதன் முறை வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

கவிதை காதலன் said...

//Riyas said... //

உங்களுக்கு பிடிச்ச எவனோ ஒருவன் தான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். விரைவில் அதைப்பற்றிய ஒரு பதிவும் வரும்.
நன்றி

//சி.பி.செந்தில்குமார் said... //
நன்றி செந்தில்குமார்... எனக்கு இந்தப்படத்தில் மிகவும் பிடித்தபாடல் இதுதான். தனிமையில் கேட்டுப்பாருங்கள், இந்த பாடலின் தாக்கம் புரியும்.

//nadhiya said... //
நன்றி நதியா.. உங்கள் கருத்துக்களை பார்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறது.. சென்னைக்கு எப்போது வருகிறீர்கள்?

//gautham said... //
சொன்ன மாதிரியே தமிழ்ல கமெண்ட் போட்டுட்டீங்க போல.. மிக்க நன்றி.. உங்கள் கருத்து அட்டகாசம்

தென்றல் said...

விடுங்க சார்.. மன்னிச்சிடுவாங்க.. இந்த பாட்டை தெலுங்குல கேட்டதுல இருந்துதான் உங்களுக்கு இந்த ஃபீலிங் ஆரம்பிச்சிருக்குமே???

Vishnu said...

சார் உங்கள எப்படி பாராட்ரதுனே தெரியல........................

சுருக்கமா சொல்லிரேனே

என்ன தான் திருவள்ளுவர் திருக்குறள் எழுதினாலும் அத நம்மளுக்கு டீச்சர் தானே புரிய வைக்குரங்க........

மச்சான் ரொன்ப ஓவரா இருக்கோ

Vishnu said...

மச்சி.. நீ தினமும் நைட் அழுவுரதுக்கு இதான் காரணமா ?
நா தான் தப்பா நெனச்சுட்டேன்..................... " மன்னிப்பாய " ?

Vishnu said...

ஹலோ ............ தென்றல் கல்யாண வாழ்த்துக்கள்///////////////////////////////////

புருசன கண்கலங்கம பாதுக்கம்மா.....................

ரமணிசுபி said...

மணி சார்,
post போட்ட ஒரு சில மணி நேரத்துக்குள என்ன இவ்ளோ பேர் comment பண்ணிருக்காங்க. அப்போ நான்தான் lateஆ?
தென்றல், விஷ்ணு, செந்தில், மோகன், புவி, ஆவி( நல்ல பேர்), ரியாஸ், அப்புறம் நதியா எல்லாரும் மணியோட வெறித்தனமான ரசிகர்கள் போல இருக்கு. சார், உங்களுக்கு ஒரு வளமான எதிர் காலம் இருக்கு.

தஞ்சை.வாசன் said...
This comment has been removed by the author.
தஞ்சை.வாசன் said...

பாடல் மென்மையை அதன் உணர்வை உள்ளத்தின் வைத்து அழகாக எண்ணத்தினை இங்கே வரிகளில் வடித்த உங்களுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

இத்தனை மெல்லிய வரிகளில் நம் இதயத்தை வருடி வீழ்த்துகின்ற அளவுக்கு உணர்ச்சிகளை வெளிக்காட்டிய கவிஞர். தாமரை அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்...

//நூலில் ஆடும் மழையாகிப் போனேன்//

மழையே அழகு... அது ஒருபுறமிருக்க
அதன் ஒரு துளி நூலின் நுனியிலிருந்து வீசும் காற்றில் எங்கு விழம், எப்பொழுது விழும் என்று தெரியாமல் சலனம் கொள்வதை போன்ற மனம்...

//மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?//
காதலி உடன் இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவளை நினைத்து / பார்க்க வேண்டி அலைபோதும் நெஞ்சம் அதை
எளிமையாய் எழிலோடு எவ்வாறோ செதுக்கியுள்ளார் ...

இன்னும் இத்தனையோ... சொல்லிக்கொண்டே போகலாம்...

மிக்க நன்றி... வாழ்த்துகள்...

ஆதிரா said...
This comment has been removed by the author.
ஆதிரா said...

இந்தத் தளத்தின் லின்கை எடுத்துக் கொடுத்து இப்பதைவைப் படிக்க வைத்த தஞ்சை வாசனுக்கு என் நன்றி முதலில்.

பதிவைப் பற்றி நான் சொல்ல ஒன்றும் பெரிதாக இல்லை.

First impression is the best impression என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முதல் பதிவிலே (நான் முதல் முறை வந்துள்ளேன்) மூர்ச்சை அடைய வைத்து விட்டீர்கள்.

என் உள்ளம் உணர்ந்ததை தாங்கள் எப்படி அறிந்தீர்கள் என்று வியந்தேன். என்னைப்போல உணர்ந்த, அதே சமயம் அதைச் சொல்லும் திறனோ ஆர்வமோ இல்லாத அனைவரும் மகிழ்வர்.

சொல்லாத சொல் என்றும் சொர்க்கத்தில் சேராதே..உங்கள் சொற்களில் அந்தச் சொற்களும் இசை அமைப்பும், காட்சி அமைப்பும், குரலும் சொர்க்கத்தை கண்டிருக்கும்..நாங்களும்...

பலரின் மனம் பேசுவது உங்கள் எழுத்தில் என்பது மட்டும் உண்மை.

டோரா said...

மிக அழகான பாடல்.. அதை விட மிக அழகான விமர்சனம்..

டோரா said...

//இருள் சூழ்ந்திருக்கும் நேரம், ஒரு தனியறையில், விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு எந்த தொல்லைகளும் இல்லாமல் கண்களை மூடியபடி இந்தப்பாடலை கேட்கையில் ஏதோ ஒரு வலி உங்களைத்தாக்கும்//

உண்மை.. நானும் பலமுறை இதை உணர்ந்திருக்கிறேன். அருமையான பதிவு

Chitra said...

Beautiful lyrics...


I liked the way, you have written the post. It is very nice. :-)

கவிதை காதலன் said...

//சார் உங்கள எப்படி பாராட்ரதுனே தெரியல......சுருக்கமா சொல்லிரேனேஎன்ன தான் திருவள்ளுவர் திருக்குறள் எழுதினாலும் அத நம்மளுக்கு டீச்சர் தானே புரிய வைக்குரங்க........
மச்சான் ரொன்ப ஓவரா இருக்கோ//


விஷ்ணு சார் மிக்க நன்றி...

//மச்சி.. நீ தினமும் நைட் அழுவுரதுக்கு இதான் காரணமா ?
நா தான் தப்பா நெனச்சுட்டேன். மன்னிப்பாய?//

மச்சான் இப்படி கோர்த்து விட்டுட்டியே.. ராத்திரி எல்லாம் ஃபோனு..நானு.. நானு.. ஃபோனு.. முடியலை.. நண்பர்களே யாரும் தப்பா நினைச்சிக்காதீங்க, நான் எதையும் நினைச்சி ஃபீல் பண்ணி அழல.. இந்தப்பாடலை கேட்கும் போது ஆட்டோமேட்டிக்கா சில சமயம் கண்ணீர் வந்திடுச்சி.. மத்தபடி விஷ்ணு சொன்னதை யாரும் தப்பா புரிஞ்சுக்காதீங்க

கவிதை காதலன் said...

தென்றல்.. தெலுங்குல கேட்டதுல இருந்து எனக்கு இந்த பாட்டை இன்னும் பிடிச்சு போச்சு.. ஆனா ஆரம்பத்துல இருந்தே இந்த பாட்டை பத்தி எழுதணும்னு நினைச்சேன் ஆனா டைம் கிடைக்கல. அதுக்குள்ளதான் அந்த தெலுங்கு பாட்டு நம்ம லைன்'ல கிராஸ் ஆயிடுச்சி. ஆனா தெலுங்கு ரசிகர்கள் பாவம். இந்தப்பாட்டை ரஹ்மான் குரல்ல கேட்க அவங்க கொடுத்து வைக்கலை

கவிதை காதலன் said...

//ரமணிசுபி said... //

பரவாயில்லையே கமெண்ட் போட்டுட்டீங்களே.. நான் உங்க கமெண்டை ரொம்ப எதிர்பார்த்தேன். மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

//தஞ்சை.வாசன் said... //
சார்.. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் நண்பருக்கு லிங்க் எல்லாம் அனுப்பி இதைப்படிக்க வைத்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தங்கள் பின்னூட்டம் மிக அருமை

கவிதை காதலன் said...

//ஆதிரா said... //
நண்பரே மிக்க நன்றி. முதல் முறையிலேயே இவ்வளவு அழகான கமெண்ட் கொடுத்திருக்கிறீர்கள். தொடர்ந்து படியுங்கள் நண்பரே

கவிதை காதலன் said...

//டோரா said... //
மிக்க நன்றி டோரா.. ரொம்ப நாளா உங்க கமெண்டையே காணோம்?

//Chitra said... //
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா..

கமலேஷ் said...

மிக நல்லா ரசனை நண்பரே...
ரசிச்சி எழுதிருக்கீங்க,,

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துகள் , தெளிவான வார்த்தைகள் ... எனக்குள் இருந்த கவிஞரை மீண்டும் நீங்கள் வெளியே கொண்டு வந்து விட்டீர்கள்.
வாழ்த்துகள். / தொடர்ந்து என் தளத்திற்கும் வருகைதாருங்கள்...

Anonymous said...

அழகான பாடலுக்கு ஆழமான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்

Anonymous said...

எனக்கும் ரொம்ப புடிச்ச பாட்டு...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்... உண்மையில் அசந்து போய்ட்டேன் உங்க பதிவை பார்த்து...
ஒரு பாடலை.. இவ்வளவு அழகாக...அணு அணுவாக ரசித்த விதம்...
ரொம்ப சந்தோசமா இருக்குங்க...

எனக்கும் ரொம்ப பிடித்த இடம்.... இது தான்...
//அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்////

மனதை, மயிலறகால் வருடுவது போல ஒரு இனிமை, வலி, சுகம், ஏக்கம்...
எல்லாம் கலந்த ஒரு பாடல்...

உங்கள் பகிர்வுக்கு நன்றிங்க.. :)

இதையும் படியுங்கள்