Monday, August 30, 2010

உன் காதலால் பிழைக்கும் என் தனிமை
உங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

Monday, August 23, 2010

இனிது இனிது - சில நினைவுகள்

இனிது இனிது - தெலுங்கில் "ஹேப்பி டேஸ்" என்ற பெயரில் வெளிவந்து மிக அற்புதமான வெற்றியையும் பாராட்டுக்களையும் குவித்த படம். மிக சிம்பிளான பட்ஜெட்டில் தயாரான ஹேப்பிடேஸ் திரைப்படம் ஐம்பது நாட்களில் சுமார் 18 கோடிகள் வரை வசூல் செய்தது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணி பாடகர், என பல விருதுகளை வாங்கிக்குவித்த திரைப்படம். தெலுங்கில் இந்தப்படத்தை குறைந்தது 50 முறையாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு அழகியலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்தப்படத்தைப் பார்க்கும் கலையார்வம் மிக்க ஒவ்வொரு சினிமா ஆட்களுக்கும், எப்படியாவது இதுபோல் ஒரு திரைப்படத்தை எடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் ஏற்படும். ஏனெனில் இந்த தெலுங்கு திரைப்படம் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அத்தகைய தாக்கம்தான் பிரகாஷ்ராஜ்'ற்கு ஏற்பட்டது. அவரது முயற்சியால் இந்தப்படம் தமிழில் "இனிது இனிது" என்ற பெயரில் சில சில மாற்றங்களுடன் ஒளிப்பதிவாளர் குகனில் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. சரி இந்தப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது?

ஒரு அதிதடிகள் நிறைந்த திரைப்படத்தையோ, ஒரு காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தையோ ரீமேக் செய்வதென்பது எளிது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகனை மெய்மறக்க செய்த ஒரு ஃபீல் குட் மூவியை ரீமேக் செய்வதென்பது எத்தனை கடினம் என்பது இனிது இனிது திரைப்படத்தை பார்க்கும் போது உணர்ந்து கொள்ளலாம். நாம் எப்படி படம் எடுத்தாலும் கண்டிப்பாக மக்கள் இந்தப்படத்தை "ஹேப்பிடேஸ்" படத்துடன் ஒப்பிட்டுத்தான் பார்ப்பார்கள் என்று நிச்சயமாய் இந்த குழுவினருக்கு தெரியும். அப்படி ஒரு ஒப்பீடு இருக்கையில் எந்த அளவிற்கு உழைத்திருக்க வேண்டும்? கேமரா, இயக்கம், காலேஜ், உடைகள் என அனைத்திலும் இவர்கள் காட்டி இருக்கும் உழைப்பு நிச்சயமாய் பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால் தமிழில் இவர்கள் பெரிதாய் கோட்டைவிட்டிருக்கும் இடங்கள் இரண்டு. முதலாவது ஆர்டிஸ்ட் செலக்ஷன். இரண்டாவது ஃபீல்.

ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும் போது அந்தெந்த கதாபாத்திரங்களுக்கு தகுந்த நடிகர்களை தேர்வு செய்வதிலேயே பாதி வெற்றி அடங்கிவிடும். "இனிது இனிது"வில் மிகப்பெரிய மைனஸ் ஆர்டிஸ்ட் செலக்ஷன். எனக்குத்தெரிட்ந்து இந்தப்படத்தில் சரியான கதாபாத்திர தேர்வு என்றால் சித்துவாக வரும் கதாநாயகனும், மதுவை துரத்தும் சீனியர் கேரக்டரும்தான். இந்த இருவர்கள் மட்டும்தான் எனக்குத்தெரிந்தவரை தெலுங்கை விட ஒரு படி மேல் தெரிந்தார்கள்.

சீனியராக வரும் ஷ்ராவ்ஸ் கேரக்டருக்கு சோனியாவைத்தவிர வேறு யாரையும் நீங்கள் சத்தியமாக நினைத்துப்பார்க்க முடியாது. அதனால்தான் ஷ்ராவ்ஸ் கேரக்டருக்கு அவரையே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.


ஷ்ராவ்ஸை காதலிக்கும் டைசன் கேரக்டருக்கும் யாரை உபயோகப்படுத்தி இருப்பார்கள் என்று நான் மிக ஆர்வமாய் இருந்தேன். ஆனால் அதுவும் சறுக்கல்தான். எனக்கு டைசன் கேரக்டரில் தெலுங்கில் நடித்த அந்த நடிகரைத்தவிர வேறு யாரையும் நினைத்தே பார்க்க முடியவில்லை. அதேபோல் தெலுங்கில் ஷ்ரேயா மேடமாக கமலினி முகர்ஜி ரசிகர்களை சூடேற்றி இருப்பார். ஆனால் தமிழில் வரும் அஞ்சலா சவேரியால் ரசிகர்களின் மனதில் தீக்குச்சி கூட பற்ற வைக்க முடியவில்லை.

ஹீரோவிற்கு ஹீரோயின் மீது காதல் முதன் முதலில் எட்டிப்பார்க்கும் தருணம் அவள் புடவைக்கட்டிக்கொண்டு வரும் தருணம்தான். ஹீரோவிற்கு ஹீரோயினைப்பார்க்கும் போது தோன்றும் காதல் உணர்வு நம்மனதிலும் தோன்ற வேண்டும். ஆனால் இங்கே அந்த உணர்வை கோட்டை விட்டிருக்கிறார்கள். அந்த புடவை கண்றாவி. (ஒரு புடவையில் கதாநாயகியை எப்படி காட்ட வேண்டும் என்ற விதத்தில் சமீபத்தில் ஜெயித்தவர் கெளதம் மேனன்)

என்ன இவன் விமர்சனம் செய்யாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறானே என்று நீங்கள் நினைக்கலாம். இந்தப்படத்தில் விமர்சிக்கும் அளவிற்கு பெரிதாய் கதை ஒன்றும் கிடையாது. முதன் முதலாய் கல்லூரியில் சேரும் நான்கு மாணவ மாணவிகள் நண்பர்களாகிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும், நட்பு, காதல், மோதல், ஈகோ, பிரிவு, சோகம், குறும்பு, ஏக்கம், கவலைகள், துரோகம், என அத்தனை உணர்வுகளும் காட்சிகளால் நிறைந்திருக்கின்றன. அவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விஷயங்களும் நமக்குள்ளும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் காதலித்தால் நாமும் காதலிப்போம், அவர்கள் சிரித்தால் நாமும் சிரிப்போம், அவர்கள் அழுதால் நாமும் அழுவோம். இதுதான் தெலுங்கு ஹேப்பி டேஸ்'ன் வெற்றி. ஆனால் இத்தகைய மேஜிக்குகள் இனிது இனிதுவில் நடக்கவில்லை.

ஆனாலும் தமிழில் ஒளிப்பதிவைப்பற்றி கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஃபோர்கிரவுண்டில் கேமரா இருக்க அந்த நீலக்கலர் பூக்கள் விழுவதும், ஒரு பெண்மணி தரையை பெருக்குவதும் அழகான கவிதை. அவர்கள் டூர் சென்ற இடங்களில் கேமரா அற்புதம். அத்தனை இடங்களும் பச்சைப்பசேலென மனதை கொள்ளை கொள்கிறது. பாடல்கள் தானாக உதடுகளில் வந்து அமரவில்லை. ஆனால் கேட்கையில் ஏதோ ஒரு பரவசம் நிச்சயமாய் இருக்கிறது. ஆனால் இதே ட்யூன் தான் தெலுங்கிலும். ஆனால் அர்த்தம் புரியாவிடினும் அந்த பாடல்களை இன்னனும் முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறேன். கிரிக்கெட் விளையாடி முடித்தபின் வரும் அந்த ராப் வகை பாடல் எரிச்சல். இது போன்ற அசட்டுத்தனங்கள் தான் இந்தப்படத்தின் மீது கோபத்தை ஏற்படுத்துகின்றன.

ஹீரோயின் சில காட்சிகளில் அங்காடித்தெரு அஞ்சலியை நியாபகப்படுத்துகிறார். ஆனாலும் அழகாகவே இருந்து தொலைக்கிறார். (ஹி.. ஹி...) ஆனாலும் ஷ்ராவ்ஸாக வரும் சோனியாவின் முன் யாராலும் நிற்க முடியாது. "நீ ஜுனியர் நான் சீனியர்" என்று கண்களாலேயே முறைப்பதாகட்டும், சிரிப்பதே தெரியாமல் சிரிக்கும் வித்தையாகட்டும், அந்த சுருள் முடியும், வாவ்.. வெகு நாட்களுக்கு பின் எல்லாக்கோணங்களிலும் ரசிக்கவைக்கும் பெண். நிச்சயம் இந்தப்பெண்ணுக்காகவாவது நீங்கள் இந்தப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். (இந்தப்பெண்ணை பையாவில் உபயோகிக்கத்தெரியாத லிங்குசாமி ஒழிக...)

பால்பாண்டி என்ற கேரக்டரை குகன் உபயோகப்படுத்தி இருக்கும் விதம் யதார்த்தமானது. தெலுங்கை விட தமிழில் இந்த கேரக்டர் யதார்த்தம். இந்த அக்கறையை மற்ற எல்லா கதாபாத்திர தேர்வுகளிலும் காட்டி இருந்தால் "இனிது இனிது" இன்னும் இனித்திருக்கும்.

மதுவை துரத்தும் அந்த சீனியரும் ஒரு ஹீரோ போலவே தெரிந்தார். நல்ல அறிமுகம். ஹீரோ பைக்கில் கூட்டிப்போகும் அந்த ஜூனியர் பொண்ணையும் இன்னும் கொஞ்சம் அழகாக காட்டி இருந்தால்தான் மதுவிற்கு அவள் மீது பொறாமை ஏற்படுவது இயல்பாக இருந்திருக்கும். மதுவிற்கும், அப்புவிற்கும் ஈகோ ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் செயற்கையாகவே இருக்கின்றன. ஆனால் தெலுங்கில் இந்த காட்சிகள் மிகப்பிரமாதமாய் ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.

ஒரு இயக்குனருக்கு எந்த திறமை இருக்கிறதோ இலையோ நிச்சயம் கதாபத்திரத்திற்கேற்ப நடிகர் நடிகைகளை தேர்வு செய்ய வேண்டிய திறமை கட்ட்டாயம் இருக்க வேண்டும். இயக்குனர் குகன் அந்த திறமையை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். குகன் ஒளிப்பதிவாளராய் ஜெயித்திருக்கிறார். ஆனால் இயக்குனாராய் பாதி கிணறுதான் தாண்டி இருக்கிறார்.

ஹாப்பிடேஸை பார்க்காதவர்களுக்கு நிச்சயமாய் இந்தப்படம் பிடிக்கும். தமிழில் இப்படி ஒரு ஃபீல் குட் மூவி கொடுக்க முயற்சி செய்திருக்கும் இவர்களின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். ஆனாலும் என்னுடைய ஒரு ஸ்ட்ராங் ரெக்கமெண்டேஷன்.. Please Watch Happy Days..

ஹேப்பி டேஸ் : வாழ்ந்திருந்தார்கள்
இனிது இனிது : வசித்திருக்கிறார்கள்


இதையும் படியுங்கள்