Thursday, June 24, 2010

எங்கே போனார் மணிரத்னம்?

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு மிக ஆர்ப்பாட்டமாய் வெளியான திரைப்படம் "ராவணன்". இந்த திரைப்படத்தின் மீதான இவ்வளவு எதிர்பார்ப்புக்கும் காரணமான ஒரே மனிதர் "மணிரத்னம்".

ஆம்..... கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஐஸ்வர்யாராயின் கால்ஷீட்டிற்காக தங்களின் ஒவ்வொரு படத்திற்கும் ரஜினியும், ஷங்கரும் அலையாய் அலைந்து திரிந்தது ஊரரிந்த கதை. அப்பேர்பட்ட ஐஸ்வர்யாராய் மணிரத்னம் ஒரே ஒரு ஃபோன் செய்தால் போதும், அடித்து பிடித்து ஓடி வந்து நிற்கிறார். ஒரு நாள் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தாலும் வர மறுக்கும் அமிதாப் பச்சன், மணிரத்னம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு காம்பியராக வேலைபார்க்க வருகிறார். எதற்காக இவை எல்லாம்? எல்லாம் மணிரத்னம் என்ற ஒரே ஒரு மனிதருக்காகத்தான்.

திரைப்படங்கள் என்பவை பொழுது போக்குக்காக மட்டும் இல்லை.. அதன் மூலம் லட்சக்கணக்கான பேரை பைத்தியம் பிடிக்கவைக்க வைக்க முடியும் என்பதற்கு மணிரத்னத்தின் படங்கள் உதாரணம். உலக அளவில் இந்திய திரைப்படங்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தவர். அடுத்து இவர் என்ன மாதிரியான திரைப்படம் செய்யப்போகிறார் என்று இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவர் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கும் திரைப்படம்தான் "ராவணன்". இத்தனை பேரின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் ராவணனில் என்ன இல்லை? ஏன் இவ்வளவு பேர் இந்த திரைப்படத்தை இவ்வளவு விமர்சிக்கிறார்கள்?..... யெஸ்.. இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான ஒன்று இல்லை..

அதுதான் மணிரத்னம்

மணிரத்னம் படங்களில் இருக்கக்கூடிய மிக அழுத்தமான விஷயங்கள் இந்த திரைப்படத்தில் இல்லை. பிடிக்காத கணவன் தன்னை தொடவரும் போது "நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு" என்று மனைவி சொல்வார். ஆயிரம் பக்கம் வசனம் பேசி ஏற்படுத்த முடியாத அதிர்வை இந்த ஒற்றை வசனம் ஏற்படுத்தி போயிருந்ததது.
************************************************************************************
நாசர் :நான் செத்ததுக்கு அப்புறம்தான் நீ அந்தப்பொண்ணை கட்டிக்க முடியும்.
அரவிந்த் சாமி : நீங்க சாகிற வரைக்கும் என்னால காத்துகிட்டு இருக்க முடியாது.
இந்த வசனத்தை முதல் முறையாக கேட்கும் போது முதுகு தண்டு ஜில்லிட்டது
************************************************************************************
வைஷ்ணவி : எங்க அப்பாகிட்ட என்னை பிடிக்கலைன்னு சொல்லிடுங்க
அர்விந்த் சாமி : எனக்கு ரோஜாவை பிடிச்சிருக்கு.
************************************************************************************
மாதவன் : ஏய்... எங்கடீ உன் தாலியை காணோம்?
ஷாலினி : ராத்திரி குத்துதுன்னு நீதானே கழட்டி வெச்சே...

தமிழ்சினிமா கட்டிகாப்பாற்றிய கலாச்சாரத்தை ஒரே வார்த்தையில் போட்டு உடைத்தவர்.
************************************************************************************
மாதவன் : நீ எங்களுக்கு பொறந்தவ இல்ல.. நானும் இந்திராவும் உன்னை தத்தெடுத்து வளர்த்தோம்.
************************************************************************************
ப்ரீத்தி ஜிந்தா (ஷாருக்கானிடம்) : நீ வெர்ஜினா?
************************************************************************************
ஆண்ட்டி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை..
நான் என்ன நினைச்சேன்னு உனக்கு எப்படி தெரியும்?
நீங்க என்ன நினைச்சாலும் அது நடக்கலை.
************************************************************************************
இப்படி எல்லா திரைப்படங்களிலும் எதாவது ஒரு அதிர்ச்சியை, மேம்படுத்தப்பட்ட ரசிப்புத்தன்மையை, அதிகப்படியான புத்திசாலித்தனங்களை மணிரத்னத்தின் எல்லா படங்களிலும் பார்க்கலாம். அந்த பரவசங்களுக்காகத்தான் ஒவ்வொரு ரசிகனும் மணிரத்ன பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். ரோட்டில் போகிற ஆயிரம் பேரை நிறுத்தி உனக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் நிச்சயமாக 900 பேர் மணிரத்னம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு ரசிகனின் ரசிப்புத்தன்மைக்கு தீனி போடக்கூடிய ஒரு இயக்குனர் இவர். ஆனால் இப்படிப்பட்ட ஒரு இயக்குனர் தற்போது தந்திருக்கும் ஒரு படைப்பு அவரது தகுதிக்கு ஏற்றதா?

எங்கிட்ட இருந்து ஒருலட்ச ரூபாயை ஏமாத்தினால் கூட நான் தாங்கிக்குவேன். ஆனால் பாத்திரத்தோட மூடியை மாத்தினால் நான் தாங்கிக்கொள்ள மாட்டேன் என்று ஒரே ஒரு நொடி வரும் கதாபாத்திரம் கூட மணிரத்னம் படத்தில் தனித்துவத்துடன் இருக்கும். (அலைபாயுதேவில் ஷாலினியின் கழுத்தில் தாலி இல்லாததைப் பார்த்து கேட்கும் ஹவுஸ் ஓனர் பெண் கதாபாத்திரம்)

விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரித்வி, கார்த்திக், பிரியாமணி, என படத்தில் இருக்கும் அத்தனை கதா பாத்திரங்களும் ஒரு முழுமை அடையாமலே இருக்கிறார்களே. ஏன்? பார்த்த நொடியிலேயே அரவிந்த்சாமி மனீஷா மீது காதல் கொள்ளும் அந்த பரவசம்... விக்ரம் ஐஸ்வர்யாராய் மீது காதல் கொள்ளும் போது ஏற்படவில்லையே ஏன்? எல்லாருக்கும் ஃப்ரெஞ்ச் சொல்லிகொடுக்கிற. எனக்கு ஃப்ரெஞ்ச் கிஸ் கொடுக்கிறது எப்படின்னு சொல்லி கொடுக்க மாட்டியா? என்று கேட்பதும், ஜாக்கெட்டை பிடித்து இழுத்து செக்ஸியா இருக்கே என்று ஆய்த எழுத்தில் சூர்யா செய்யும் ரொமான்ஸ் எல்லாம் பரவசமானது, பாத்ரூமிற்குள் ஒரு பெண்ணை கட்டித்தழுவி சித்தார்த் செய்யும் சில்மிஷங்கள் மணிரத்னத்தை ரொமான்ஸில் மிஞ்ச முடியுமா என்று கேள்வி எழுப்பியது. ஆனால் ராவணனில்......?

கார்த்திக் அனுமார் என்பதற்காக மரம் விட்டு மரம் தாவுவதும், கண்டேன் ராகினியை என்பதும், குரங்கு மாதிரி பல்தேய்ப்பதும், வேண்டுமானால் அடையாளத்தை காட்டடுமா என்பதும் நிச்சயம் மணிரத்ன கேரக்டரைசேஷன் கிடையாது. எப்படி என்று சொல்கிறேன்... பம்பாய் திரைப்படத்தில் அர்விந்த்சாமியிடம் இருந்து மனிஷாவிற்கு ஒரு கடிதம் வந்திருக்கும். அந்த கடிதத்தை பிரித்தவுடன் அதிலிருந்து இரண்டு டிக்கெட்டுகள் கீழே விழும். அவ்வளவுதான். அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்றேல்லாம் பார்வையாளனுக்கு சொல்லாமல், மிக அழகாக புரிய வைத்திருப்பார்.

இன்னொன்று.. அலைபாயுதேவில் மாதவனுடன் சண்டை போட்டால் ஷாலினி காலண்டரில் தேதியை வட்டம் போட்டு வைப்பார். பின் ஒரு காட்சியில் காலண்டரில் நிறைய வட்டங்கள் போடப்பட்டிருக்கும். அவர்கள் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மிக மிக அறிவுபூர்வமாக உணர்த்திய காட்சி அது.. அப்படி குறியீடுகளின் மூலமாகவே கதாபாத்திரங்களின் குணாதிசயத்தை உணர்த்தும் மணிரத்னம் எப்படி, கார்த்திக்கை இப்படி மட்டரகமாக பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தி இருக்க முடியும்? ப்ரியா மணியை சூர்ப்பனையாக காட்டுவதற்கு மூக்கை அறுக்கட்டுமா என்று கேட்பதெல்லாம் குழந்தைத்தனம். இது மணிரத்ன ரேஞ்ச் இல்லை...

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் மாதவனை சூழ்ந்து கொள்ளும் விடுதலைப்புலிகள் தங்களுடைய இனப்பாடலை பாட, மாதவனும் தொடர்ந்து அந்தப்பாட்டை பாடுவார் ஏனெனில் அவர் மிகச்சிறந்த எழுத்தாளர் என அறிமுகப்படுத்தப்பட்டிருப்பார். ஆனால் அதே உத்தியை இங்கு கையாண்டு ஐஸ்வர்யாராய் பாரதியார் பாடலை பாடுகையில், விக்ரமும் சேர்ந்து பாடுவது அபத்தத்தின் உச்சம்.

முதல்முறையாக ஒரு மணிரத்னத்தின் திரைப்படத்தில் மணிரத்னத்தை மீறி இன்னும் சொல்லப்போனால் மணிரத்னத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அதிகம் பேசப்படும் நபர் ஒளிப்பதிவாளர்கள். ஒரு திரைப்படத்தை எப்படி பிரசண்ட் செய்ய வேண்டும் என்ற வித்தையை இந்தப் படத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். மேக்கிங் என்பதற்கு அற்புதமான உதாரணம் ராவணன் தான். விஷுவல் ட்ரீட் என்று சொல்வார்களே.. அது இந்தப்படம்தான் (அதைப்பற்றி இன்னொரு பதிவில் பேசலாம். இப்போது மணிரத்னம் பற்றி
மட்டுமே)

ரஹ்மான் - மணிரத்னத்தின் காம்பினேஷனில் வெளிவரும் பாடல்களின் வீடியோவிற்காக தவம் கிடப்போம். அந்த ஆர்வத்தின் மீது பெட்ரோலை ஊற்றியிருக்கிறார் மணிரத்னம். "உசுரே போகுதே" பாடல் கேட்டதிலிருந்து பைத்தியம் பிடிக்காத குறையாக அலைந்து கொண்டிருந்தேன். படத்தில் அந்த பாடலை பார்த்தவுடன் யாரோ என் ரசனையின் வேரை அடியோடு பிடுங்கியது போல் உணர்ந்தேன். ஐஸ்வர்யாராயைப் பார்த்து விக்ரம், உருகி, கிறங்கி, மயங்கி, ஏங்கி எங்கி தவிக்கும் சூழ்நிலையில் வரவேண்டிய பாடலை மணிரத்னம் பொருத்தி இருக்கும் இடத்தைப்பார்த்து பேரரசு கூட கைக்கொட்டி சிரித்திருப்பார்..

அந்த தொங்குபாலம் சண்டைக்காட்சி பிரமிப்பின் உச்சம். விழிகள் இமைக்க மறுக்கின்றன. (இங்கு கூட சண்டைபயிற்சியாளர்தான் தெரிகிறார்)மணிரத்னத்தின் பின்னணியில் இருக்கும் சுஜாதாவின் உழைப்பின் தீவிரம் இப்போது புரிகிறது. சுஜாதா இல்லாமல் மணிரத்னத்தின் படங்களை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த வகையில் ஷங்கர் தப்பித்தார் (ரோபோவிற்கு சுஜாதா எல்லா வேலைகளையும் முடித்துகொடுத்துவிட்டார்).

இந்தப்படத்திற்கு ஏன் சுஹாசினி? ஏன் தமிழில் நல்ல வசனகர்த்தாக்களெ இல்லையா? விக்ரமைப்பற்றி மக்களிடம் பிருத்வி விசாரிக்கும் இடங்கள், ஐஸ்வர்யா கடவுளின் முன் நின்று வேண்டிக்கொள்ளும் காட்சிம் விக்ரம் ஐஸ்வர்யாராய் மீது மோகத்துடன் பேசும் காட்சிகள் என சிக்ஸர் அடிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் நொண்டி அடிக்கிறது சுஹாசினியின் வசனம். (சுஜாதா சார் உங்களை நிஜமா மிஸ் பண்றோம்).

ஒன்று மட்டும் புரிகிறது... சுஜாதாவின் இழப்பு அவர் மனைவியை விட மணிரத்னத்தை அதிகம் செயலிழக்க வைத்திருக்கிறது.

இப்போ தாஜ்மஹால் இடிஞ்சிடுச்சின்னா நீங்க எல்லாம் காதலிக்கிறதை விட்டுடுவீங்களா? (மதன்)
விக்கத்தெரிஞ்சவன்தான் இங்க ஜெயிப்பான் (ஜெயமோகன்)..

எவ்வளவு அருமையான எழுத்தாளர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களை உபயோகப்படுத்தி இருக்கலாமே மணி சார்.... எனக்கு என்ன சந்தேகம் என்றால் மணிரத்னம் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போது சுஹாசினி இந்தப்படத்தை இயக்கி இருப்பாரோ என்றுதான்......

கேரக்டருக்காக உயிரையே கொடுக்கக்கூடிய விக்ரம், அழகாக பட்டும் படாமல் நடித்து விட்டு போகாமல் காடு மேடு மலை என தன் அழகை வருத்திக்கொண்டு உழைத்த ஐஸ்வர்யா, மூன்று படங்களை ஒதுக்கிவிட்டு இந்த படத்திலேயே பழியாய் கிடந்த அபிஷேக், என அத்தனை பேரின் உழைப்பையும் மணிரத்னம் இந்தப்படத்தின் கதையைப்போல ஜஸ்ட் லைக் தட் ஒதுக்கி தள்ளியிருக்கிறார்.

மணி சார்..... யானைக்கும் அடி சறுக்கும் அது இயல்புதான். ஆனால் அதற்காக யானை படுத்தே கிடந்து விடக்கூடாது. உங்களின் படங்கள் வணிக ரீதியான வெற்றியை பெறாதபோது கூட நான் வருத்தப்பட்டதே இல்ல. இந்த படத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு மக்களின் ரசனை இல்லை என்று நான் உங்களை நினைத்து கர்வப்பட்டிருக்கிறேன். மீண்டும் அப்படிப்பட்ட மணிரத்னத்தை பார்க்கவே ஆசைப்படுகிறோம்.

இதையும் படியுங்கள்