Thursday, April 22, 2010

அங்காடித் தெரு - இது விமர்சனமல்ல

இது படம் பற்றிய விமர்சனமல்ல.. இந்தப்படம் எனக்குள் ஏற்படுத்திய சில உணர்வுகளைப்பற்றி மட்டுமே நான் பேசப்போகிறேன். இந்தப் படத்தைப்பற்றி எனக்குத் தெரிந்தவரை எல்லாரும் அவரவர்கள் வலைத்தளத்தில் எழுதி முடித்துவிட்டார்கள். அதனால் இந்தப்படத்தைப்பற்றி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. ஒவ்வொரு முறை இந்தப்படத்தை பார்க்கும் போதும் ஏதோ ஒரு புது அனுபவம் மனதிற்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இதுவரை 10 முறை படத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் இந்தப்படம் மீதான என் காதல் குறையவில்லை. இன்னும் குறைந்தது 20 முறையாவது பார்ப்பேன். நானும் இதே துறையில் இருந்துக்கொண்டு இந்தப்படத்தைப்பற்றி எழுதவில்லை என்றால் என் மனசாட்சி என்னை சும்மா விடாது.

சமீபகாலத்தில் இந்த அளவிற்கு ஒரு படம் என்னை ஈர்த்ததில்லை. இந்தப்படத்தை பற்றி எதை சொல்வது எதைவிடுவது என்றே புரியவில்லை. "அங்காடித்தெரு" என்று துணிகள் மாட்டும் ஹேங்கரை எழுத்துக்களாக வடிவமைத்திருக்கும் ஸ்டைலில் இருந்தே டைரக்டரின் ராஜ்ஜியம் தொடங்கிவிடுகிறது. இரவு நேரத்தில் ஒரு அழகான ரொமாண்டிக் பாடலை ரசித்தபடியே மெதுவாய் அமர்ந்திருக்கும் பார்வையாளனை, ஒரு விபத்தின் வழியே அதிர்ச்சிக்குள்ளாக்கி, பின்னோக்கி கதையின் வழியே பயணிக்க வைத்திருப்பது வசந்தபாலன் டச். கதை கதைன்னு டீவிடி பார்த்து அலையும் இயக்குனர்களுக்கு "கதையை தேடி எங்கேயும் அலையாதீங்கடா, அது நம்ம கண்ணுக்கு எட்டுற தூரத்துலேயே இருக்கு"ன்னு வசந்த பாலன் செமத்தியான பாடம் நடத்தி இருக்கார். எத்தனையோ தடவை நாம் கடந்து போயிருக்கிற அந்த தெருவோட இன்னொரு முகத்தை பாருங்கடான்னு வசந்தபாலன் திறந்து காட்டி இருக்கும் பக்கங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

கோடி கோடியாய் புழங்கும் வணிக நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் தெருக்கோடி மனிதர்களின் வாழ்க்கையை இதற்கு முன் யாரும் இந்த அளவிற்கு துணிச்சலுடன் சொல்லியதில்லை. வசந்தபாலன் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். சாப்பாட்டு தட்டுக்கு கூட அடுத்தவன் சாப்பிடும் வரை காத்திருந்து தட்டு பெறும் அவல நிலை, ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் ஒவ்வொரு ரூபாய் அபராதம், வேலை பார்க்கும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் என வசந்த பாலன் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் இதயத்திற்குள் இடியாய் இறங்குகின்றன.

மகேஷுக்கு அஞ்சலி மீது காதல் துளிர்க்கும் அந்தக்கணம் இதுவரை தமிழ்சினிமா பார்க்காதது. சுப்பர்வைசர் செய்த அத்துமீறலை அழுதவாறு சொல்லியபடியே கஸ்டமர்களை கவனிக்கும் அஞ்சலியின் நடிப்புக்கு கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மனதை உறைய வைத்த காட்சி இது. இதுவே மற்ற இயக்குனர்களாக இருந்தால் அஞ்சலி சொல்லும் அந்த விஷயத்தை "விளக்கமாக" காட்டி படத்தின் வியாபாரத்திற்கு அதை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் வசந்தபாலன் அதை வெறும் வசனத்திலே காண்பித்து பார்வையாளனை அதிர செய்கிறார். காதல் வயப்படும் முன் சூப்பர்வைஸரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொள்ளும் அஞ்சலி, மகேஷின் மீது காதல் வயப்பட்டபின் அதே சூப்பர்வைஸரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறுகையில் காதலின் முழு வலிமையை இங்கு சூசகமாக வசந்தபாலன் உணர்த்துவதை அதிசயிக்க முடிந்தது.

அஞ்சலி.... என்னவென்று சொல்வது இவரைப்பற்றி? மகேஷை மிரட்டுவதாகட்டும், மகேஷிடம் காதல் வயப்படுவதாகட்டும், அவனிடம் கோபம் கொண்டு திரிவதாகட்டும், சினேகா என்னை விட அழகா? என்று பெண்களுக்கே உரிய பொறாமையில் கேட்பதாகட்டும், கால்களை மிதித்துவிளையாடும் அழகாகட்டும், இவன் ஒருத்தன்கிட்டேயாவது மான ரோஷத்தோடு இருக்கேனேன்னு தன் இயலாமையை சொல்வதாகட்டும், பாத்ரூமுக்குள் மகேஷை ஒளித்துவைத்து தவிப்பதாகட்டும் என எல்லா காட்சிகளிலும் அஞ்சலி பிரமிப்பு ஏற்படுத்துகிறார். சொந்தக்குரலில் பேசியிருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. அஞ்சலி நீங்க மனசுக்குள்ள உட்கார்ந்து வெளிய போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. விஜய், அஜீத், போன்ற ஹீரோக்களே தயவு செஞ்சு இந்தப்பொண்ணை உங்களுக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டுவிடாதீர்கள். இந்தப்பெண்ணையாவது "நடிக்க" விட்டு வையுங்கள்.

மகேஷ்…… கடந்த பத்து வருடங்களில் இது போன்ற ஒரு அட்டகாசமான அறிமுகம் யாருக்கும் கிடைத்திருக்காது. ஒரு சின்ன வெள்ளந்தி சிரிப்பு, கோபம், இயலாமை, வறுமை, அவமானம், வேலைக்காக பயந்து கதறுவது என ஒரு புதுமுகத்தால் சுமக்க முடியாத அளவிற்கு சுமந்திருக்கிறார். “மாப்பிள்ளைக்கு ஒரு லட்சம் கொடுக்குற அளவுக்கு உங்க அப்பனுக்கும் வசதி கிடையாது” என்று பாத்ரூமில் அஞ்சலியிடம் வெடித்து பேசுகையில் அப்ளாஸ் அள்ளுகிறார். மகேஷுக்கும் அஞச்லிக்கும் இடையில் இருக்கும் காதல் உணர்வு அவ்வளவு அழகு.. கெமிஸ்டரி கெமிஸ்டரி என்று சொல்வார்களே.. அது அநியாயத்திற்கு வேலை செய்திருக்கிறது இருவருக்கும் இடையில்.


பின்னால் இருந்து மெதுவாய் அழுதபடியே மகேஷை அஞ்சலி கட்டிப்பிடித்துக்கொள்ளும் அந்தக்காட்சி சூப்பர்ப்..மிக மிக உணர்வுபூர்வமானது. எத்தனையோ படத்துல எத்தனையோ பேர் கட்டி பிடிச்சு இருக்காங்க. ஆனா இவங்க ரெண்டு பேர் கட்டிப்பிடிக்கும் போது ஏற்படுற வெப்பத்தை நம்மாலும் உணர முடிகிறது. தமிழின் மிக முக்கிய காதல் காட்சிகளை வரிசைப்படுத்தினால் இந்த காட்சிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

ஜெயமோகன் சார்... இதுவரைக்கும் தமிழ்சினிமா உங்களை சரியா பயன்படுத்திக்காததுக்கு வெட்கப்படணும் சார். உடல் வளர்ச்சியில்லாத அந்த மனிதரது மனைவி பேசும் டயலாக், "விக்கத்தெரிஞ்சவன்தான் இங்க ஜெயிப்பான்", "யானை வாழற காட்டுலதாண்டா எறும்பும் வாழுது," வாவ்.. என்ன மாதிரியான பவர்புல் டயலாக்ஸ்... ஒரு எழுத்தாளனோட ஆளுமை என்னங்கிறதை ஆணி அடிச்சமாதிரி புரியவெச்சிருக்கீங்க சார்.

சுப்பர்வைஸராக வரும் இயக்குனர் வெங்கடேஷ்... என்ன ஒரு லாவகமான நடிப்பு? சோடா புட்டி கண்ணாடியை மீறி கண்களில் தெரியும் கோபமும், வார்த்தைகளில் தெறிக்கும் உக்கிரமும் நெஞ்சில் பதைபதைப்பை ஏற்படுத்துகிறார். ஒரு கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்ட இவருக்குள் இப்படி ஒரு கலைஞனா? அசத்திட்டீங்க சார்.


“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை”,. “உன் பேரை சொலும் போதே” என இரண்டு பாடல்களும் மிக அருமை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “கதைகளைப்பேசும் விழி அருகே” பாடல்தான். சூப்பர் ரொமாண்டிக் சாங். இரவு நேர சென்னை இவ்வளவு அழகா என்று இந்தப்பாடலில் வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மகேஷும், அஞலியும் செய்யும் சின்னச்சின்ன குறும்புகளும், அவர்களுக்கு இடையில் இருக்கும் அந்நியோன்யமும் என்னை மிகவும் ரசிக்க வைத்தது. இதுவரை இந்தப்பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.

எப்பவோ ரிலீசுக்கு தயார் ஆகியும் இவ்ளோ தாமதமாகத்தான் இந்த படத்தை வெளியிட முடிந்திருக்கிறது. ஒரு நல்ல படைப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதில்லை. அதை சினிமாவில் இருப்பவர்களே ஆதரிப்பதில்லை என்பதுதான் உண்மை. இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் எப்போதே இந்தப்படத்தை வாங்கி இருப்பார்களே? ரசிகர்கள் இந்தப்படத்திற்கு கொடுத்திருக்கும் ஆதரவைப்பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. ரசிகர்கள் கொடுக்கும் இது போன்ற அங்கீகாரம்தான் ஒரு இயக்குனரை மீண்டும் மீண்டும் இது போன்ற அற்புத படைப்புகளை நோக்கி பயணிக்க வைக்கும். ஒரு நல்ல கலைஞன், நல்ல படைப்பு என்றுமே தோற்காது என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.


இந்தப்படத்தில் குறைகளே இல்லையா என்றால்... இருக்கிறது... அது எல்லாம் எங்கேயோ மூலையில் இருக்கிறது. குறைகளை சுட்டிக்காட்டி இந்த படத்தின் தரத்தை சிதைப்பதில் எனக்கு விருப்பமில்லை. இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும். நம்மால் இந்த படைப்பாளிகளுக்கு கொடுக்க முடிந்தது கைத்தட்டல்தான். அந்த கைத்தட்டல்தான் இது போன்று நல்ல படம் எடுக்கும் படைப்பாளிகளுக்கான உற்சாக மருந்து.

அதை குறைகளை சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் போட்டுக்கிழிக்க நான் விரும்பவில்லை.


Tuesday, April 6, 2010

Sunshine Award


Sunshine Award இந்த விருதை எனக்கு கொடுத்து பாராட்டிய திவ்யா ஹரி, மற்றும் சைவ கொத்துபரோட்டா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இதையும் படியுங்கள்