Wednesday, December 30, 2009

நடிகைகளின் இரட்டை வேடங்கள்

நம் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கரில் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், என அத்தனை முன்னணி நடிகர்களும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் கதாநாயகிகளுக்கு இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்புக்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. மிகவும் சொற்ப அளவிலே கதாநாயகிகளுக்கு அத்தகைய வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.

பொதுவாக நடிகர்கள் அனைவரும் எதாவது ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து விடுவார்கள். அதை எல்லா நடிகர்களுமே விரும்புவார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் கூட, இயக்குநர்களிடம் வற்புறுத்தியாவது ஏதாவது ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவிடுவார்கள். ஆனால் நடிகைகள்? யோசித்து பார்த்தால் கேள்விக்குறிதான் மிஞ்சும். எந்த நடிகையும் இரட்டைவேட கதாபாத்திரத்தை வற்புறுத்துவது இல்லை. அவர்கள் வற்புறுத்துவதற்கான வியாபார சூழ்நிலையும் அவர்களுக்கு அமைவதில்லை. இந்த முட்டுக்கட்டை நிலைகளை தாண்டியும் சில நடிகைகள் இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். சில இயக்குநர்கள் அப்படிப்பட்ட கதைகளை அமைத்து இருக்கிறார்கள். இது கதாநாயகர்களுக்கான உலகம். அவர்களை சார்ந்துதான் வியாபாரம் என்று சுட்டிக்காட்டப்படும் தமிழ்சினிமாவில், அத்தகைய சில தடைகளை தாண்டி சில நாயகிகளுக்கு இரட்டைவேடத்தில் நடிக்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் அவ்வாறு இரட்டை வேடத்தில் நடித்த சில கதாநாயகிகளை பற்றி பார்க்கலாம்.

அந்தகால கட்டம் என்று எடுத்துக்கொண்டால் 1960 - 1970’களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் "பக்த குசேலா" என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகையான “டி.ஏ.மதுரம்” “பைத்தியக்காரன்” என்ற திரைப்படத்தில் இரட்டைவேடத்தில் நடித்திருக்கிறார்.

1970-1980 இந்தகாலகட்டத்தில் நடித்த சில நடிகைகளுக்கும் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றோர்களுக்காக இரட்டைவேட கதாபாத்திரங்கள் படைக்கும் வேளையிலும், நடிகைகளுக்காகவும் சில இரட்டைவேட கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன அவற்றில் குறிப்பாக கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சரோஜா தேவி “கலங்கரை விளக்கம்” திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நடிகர் திலகம் என்று சிவாஜியை குறிப்பிடுவதைப் போல், நடிகைகளில் நடிகையர் திலகம் என்று அழைக்கப்படுபவரான சாவித்திரி அவர்களும் “காத்திருந்த கண்கள்” படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார்.

நூற்றுக்கணக்கான திரைப்படத்தில் நடித்து, நடிப்பில் பல உச்சங்களை தொட்ட அற்புத நடிகையான புன்னகை அரசி கே.ஆர். விஜயாவுக்கும் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "இதயக் கமலம்" திரைப்படத்தில் இரண்டு விதமான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், தன்னுடைய திரைப்படங்களில் பெண்ணியம் சார்ந்த விஷயங்களை அதிகம் கையாளும் இயக்குனர் சிகரம் பாலசந்தரின் “காவியத்தலைவி” திரைப்படத்தில் நடிகை செளகார் ஜானகி இரண்டுவேடங்களில் நடித்து அமர்க்களப்படுத்தி இருப்பார்.

முன்னாள் தமிழக முதலமைச்சரும், திரைப்பட நடிகையுமான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களும் “யார் நீ, லட்சுமி, விஜயா, அடிமைப்பெண்” ஆகிய திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். வாணிஸ்ரீ அவர்கள் “வாணி ராணி”, “இருளும் ஒளியும்” போன்ற திரைப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

மனோரமா எத்தனையோ திரைப்படங்களில் இரட்டைவேடத்தில் நடித்திருந்தாலும் “பத்து மாத பந்தம்” திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகை சச்சு அவர்களும் "சொர்க்கம்" திரைப்படத்தில் ஐந்து விதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகை தேவிகா “வானம்பாடி, நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற திரைப்படங்களில் இரட்டைவேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை சுமித்ரா அவர்களுக்கும் “கடவுள் அமைத்த மேடை” திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1980 - 1990 காலகட்டத்தில் என்று பார்த்தால், நடிகை ஸ்ரீதேவியும் “வணக்கத்திற்குரிய காதலியே” திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை அம்பிகா “தங்கமடி தங்கம், பேய்வீடு” ஆகிய திரைப்படத்திலும், நடிகை ராதா “சின்னப்பதாஸ்” படத்திலும் இரட்டைவேட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ்சினிமாவையே தன்னுடைய கவர்ச்சியால் கலங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் இருந்தால்தான் திரைப்படத்தை வாங்குவோம் என்று விநியோகஸ்தர்கள் அடம்பிடித்த காலகட்டமும் உண்டு. அத்தகைய சில்க்ஸ்மிதா "சில்க், சில்க், சில்க்" என்ற திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அற்புதமான நடனமும், நடிப்பும் ஒருங்கே அமைந்த நடிகை பானுப்பிரியா. பானுப்பிரியாவுக்கும் “காவியத்தலைவன்” திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அவர்களுக்கான திரைப்பட ஆயுள் என்பது மிகக்குறைவாகவே இருக்கிறது. அதிலும் இரட்டைவேடத்தில் நடிப்பது என்பது மிகவும் அரிய வாய்ப்பாகவே இருக்கிறது. இந்த கால கட்டத்திலும் சில நடிகைகளுக்கு அத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தொண்ணூறுகளின் பிற்பகுதியிலும், இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்பங்களிலிருந்தும் நடிகைகளுக்கான இரட்டைவேட கதாபாத்திரங்கள் குறையத்தொடங்கின. முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் (ஐஸ்வர்யா பச்சன்) தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அத்தகைய வாய்ப்பை பெற்றார். இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய “இருவர்” திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயை இரட்டைவேடத்தில் நடிக்க வைத்தார். "நாடோடி மன்னன்" திரைப்படத்தில் இரட்டைவேடத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகை மீனாவுக்கும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து "மாயாபஜார் 1995" என்ற திரைப்படத்தில் நடிகை ஊர்வசியும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அட்டகாசப்படுத்தி இருப்பார். கவர்ச்சி பதுமையாக பயன்படுத்தப்பட்ட நடிகை மும்தாஜுக்கும் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாக்லேட் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மும்தாஜ் நடித்திருப்பார்.

கதாநாயகி இரட்டைவேடத்தில் நடிப்பதால் திரைக்கதையில் மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்தபடம் "பாண்டவர் பூமி". ஆம். இந்த திரைப்படத்தில் நடிகை ஷமீதாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்திருப்பார் இயக்குனர் சேரன். அதைத்தொடர்ந்து நடிகை ஸ்நேகாவுக்கும் அத்தகைய வாய்ப்பு இயக்குநர் கரு.பழனியப்பன் மூலமாக பார்த்திபன் கனவு திரைப்படத்தில் கிடைத்தது. நடிகை ஸ்நேகா மிக அழகாக இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். துறுதுறு நடிகை ஜோதிகாவும் இரட்டைவேட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "குஞ்சுகூனன்" திரைப்படத்தை தமிழில் தயாரித்தார்கள். அதுதான் பேரழகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் மாடர்ன் பெண்ணாகவும், கண் தெரியாத பெண்ணாகவும், இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தூள் கிளப்பி இருப்பார் நடிகை ஜோதிகா.

தற்போதைய கால கட்டத்தில் ஒரு கதாநாயகிக்கு இரட்டை வேடங்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிது. நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி பொம்மைகளாக மட்டுமே பார்க்கும் பார்வையிலிருந்து படைப்பாளிகள் சற்று விலகினால் மட்டுமே நடிகைகளுக்கு இரட்டை வேடங்கள் உருவாகும். கதாநாயகர்களுக்கு மட்டுமே கதை உருவாக்கும் சூழல்களிலிருந்து எப்பொழுதாவதுதான் நாம் வெளியே வருகிறோம். இந்த நிலை மாறி கதைகளுக்காக மட்டுமே நடிகர் நடிகைகள் என்ற சூழ்நிலை உருவாகும் பட்சத்தில், நடிகைகளுக்கான இரட்டை வேடங்கள் கொண்ட திரைப்படங்களும் அதிகம் வரும்.

மேலும், சில நடிகைகளும் நல்ல கதையம்சம் கொண்ட கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும், படம் முழுவதும் கவர்ச்சியின்றி நடிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை சில நடிகைகள் ஏற்பதில்லை. சில பரிசாட்சயத்துவமான முயற்சிகளுக்கு நடிகைகளது ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. எதற்காக வீண் சிரமம் எடுக்க வேண்டும்? கொடுக்கும் பணத்திற்கு இரண்டு வேடத்தில் நடித்து கஷ்டபடவேண்டுமா? என்று கதாநாயகிகள் யோசிக்கிறார்களா? இல்லை ஒரு கதாபாத்திரத்திற்கே நடிகையிடம் நடிப்பை வாங்குவது பெரும்பாடாக இருக்கிறது, இதில் இரண்டு கதாபாத்திரங்கள் கொடுத்து எப்படி சமாளிப்பது? என்று படைப்பாளிகள் யோசிக்கிறார்களா என்பது புரியாத புதிர்தான்.


இதனாலயே இயக்குநர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரட்டைவேட கதாபாத்திரங்கள் அமைக்க தயங்குகின்றனர். எந்தவிதமான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் மனப்பக்குவம் நடிகைகளுக்கு வரும் பட்சத்தில், நடிகைகளுக்கு உண்டான இரட்டைவேட திரைப்படங்களும் இனி வரும் காலத்திலும் சாத்தியமே.

Wednesday, December 16, 2009

தமிழ் சினிமா தவறவிட்ட சில முத்துக்கள்

தமிழ்சினிமா அவ்வப்போது சிலரை தூக்கி சிகரத்தில் வைக்கும். சிகரத்தில் இருக்கும் சிலரை படுபாதாளத்தில் தள்ளிவிடும். சிலர் வெற்றிபெருவதை பார்க்கையில் நமக்கே கூட வேடிக்கையாய் இருக்கும். எதனால் இவர் வெற்றிபெற்றார் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. இந்த ரகத்தினராவது பரவாயில்லை. இன்னொரு ரகத்தினரும் இருக்கின்றனர். அதாவது சர்வ நிச்சயமாய் நமக்கு தெரியும் இவர் மிகப்பெரிய திறமைசாலி என்று. ஆனால் அப்படிப்பட்ட திறமைசாலிகளை ஏன் தமிழ்சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று யோசித்தால் நமக்கே கேள்விக்குறிதான் மிஞ்சும். அப்படி தமிழ் சினிமாவால் சரியாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில திறமைசாலிகளை இங்கே பார்க்கலாம்.

வி.குமார் : நாணல், நீர்க்குமிழி, ஏழைக்கும் காலம் வரும். அரங்கேற்றம், கட்டிலா தொட்டிலா, மேஜர் சந்திரகாந்த் போன்ற பல வெற்றிபடங்களுக்கு இசையமைத்தவர்."காதோடுதான் நான் பாடுவேன்", "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" போன்ற காலத்தால் அழியா அற்புத பாடல்களை உருவாக்கியவர். பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார். மிகச்சிறந்த திறமைசாலி. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. இவரை தமிழ்சினிமா தன்னுடைய அரவணைப்பிற்குள் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ்சினிமா மட்டும் இவரை சரியாக பயன்படுத்திக்கொண்டு இருக்குமேயானால், நிச்சயம் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இணையான ஒரு இசையமைப்பாளரை இழந்திருக்க மாட்டோம்.

மகேந்திரன் : தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த படங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் இவரால் இயக்கப்பட்ட “உதிரிப்பூக்கள்” திரைப்படமும் நிச்சயம் இடம்பெறும். தமிழ் சினிமாவின் ரசிப்புத்தன்மையை வேறோரு கட்டத்துக்கு அழைத்துசென்ற இயக்குனர். முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்ற பல அற்புத படங்களை உருவாக்கியவர். தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்டவர். விமர்சகர்களாலும் வெகுவாக புகழ்ப்பட்டவர். ஆனால் இத்தனை திறமைவாய்ந்த ஒரு இயக்குனரை தமிழ்சினிமா ஏன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது இன்றளவும் புரியாத கேள்வி.

கஜோல் : இந்தி சினிமாவின் ராஜகுமாரி. வசீகர புன்னகையாலும், மெஸ்மெரிச கண்களாலும் ரசிகனை மெய்மறக்க செய்யும் ஒரு அற்புத நடிகை. ஃபனா என்றொரு திரைப்படத்திற்காக இந்தி சினிமாவின் மிகப்பெரும் நடிகர் ஆமீர்கானே கஜோலுக்காக மூன்று மாதங்கள் காத்திருந்தார் என்ற ஒருவரி செய்தி போதும் கஜோலின் முக்கியத்துவத்தை உணர்த்த.. அப்படிப்பட்ட மிகத்திறமைவாய்ந்த ஒரு நடிகை, தமிழ்சினிமாவில் “மின்சாரக்கனவு” என்ற என்ற ஒரு திரைப்படத்தில் நடித்தார். மின்சாரக்கனவு திரைப்படத்தை கஜோல், ரஹ்மான் இருவரும் தங்கள் தோளில் தூக்கி சுமந்திருப்பார்கள். கடவுளையே நினைத்துக்கொண்டிருப்பது, பின் மெல்லிதாக காதல் வயப்படுவது. காதல் வந்த பிறகு அதை வெளிப்படுத்த தயக்கம், காதலா, கடவுளா என்று தடுமாறுவது என அத்தனை விஷயங்களையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார். இவர் பேசவே இல்லை என்றால் கூட போதும். அத்தனை விஷயங்களையும் இவரது கண்ணே சொல்லிவிடும். அற்புதமான நடிகை. ஆனால் நம் தமிழ்சினிமா இப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகையை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது.

நந்திதாதாஸ் : இயக்குனர், கதாசிரியர், எழுத்தாளர், நடிகை என பன்முகத்திறமை வாய்ந்த ஒரு பெண். ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம்,பெங்காலி, மராட்டி, இந்தி, ஒரியா, என பல்வேறு ,மொழிகளில் பல்வேறு விருதுகளை வாங்கிக்குவித்தவர். இவர் தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி, விஷ்வதுளசி, போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார்.. ஆனால் இத்தனை திறமைவாய்ந்த ஒரு நடிகையை சரிவர பயன்படுத்திக்கொள்ளாமல், அரைகுறை நாயகிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். பின் எப்படி நம்மில் இருந்து உலகபடைப்புக்கள் வரும்?

ஸ்வர்ணலதா : எஸ்.ஜானகி, பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்றோருக்கு கிடைத்த அங்கீகாரமும், வாய்ப்புக்களும் இவருக்கு கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இவர் தேசிய விருது, மாநில விருது உட்பட பல விருதுகளை பெற்றவர்தான். மென்சோக பாடல்களை இவர் பாடுகையில் ஏனோ ஒரு வித சோகம் நம்முள்ளும் தானே வந்து அமர்ந்து கொள்ளும். “எவனோ ஒருவன் வாசிக்கிறான்”, “போறாளே பொன்னுத்தாயி”, ‘மாலையில் யாரோ”, போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசாகர் உட்பட பலமுன்னணி இசையமைப்பாளர்களிடம் இவர் பாடல் பாடியிருக்கிறார். ஆனாலும் சமீப காலமாக இவரை ஏன் எந்த இசையமைப்பாளர்களும் கண்டுகொள்வதில்லை? எதனால் இவர் புறக்கணிக்கப்படுகிறார் என்ற கேள்வி புரியாத மர்மமாகவே இருக்கிறது.

அறிவுமதி: அரைவேக்காட்டுத்தனமாக பாட்டெழுத மாட்டேன் என்ற பிடிவாதத்தில் தமிழ் சினிமாவில் இருந்தே விலகியவர். பாடல் எழுதுவதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக கருதாமல் அதிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்று கருதுபவர். "மாலை என் வேதனை" "பொய் சொல்லக்கூடாது" “எங்கே செல்லும் இந்த பாதை”, “கவிதையே தெரியுமா?” என்று பல வெற்றிப்பாடல்களை எழுதியவர். இவர் எழுதிய சில வேகப்பாடல்களிலும் வார்த்தைகளில் கண்ணியம் ஒளிந்துகொண்டிருக்கும். பல புதிய பாடலாசிரியர்கள் உருவாக இவரே மிக முக்கிய காரணம். ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்தனுப்பிய மெட்டையே தனக்கு இதில் விருப்பமில்லை என திருப்பி அனுப்பியவர். இத்தகைய திறமை வாய்ந்த ஒரு பாடலாசிரியர் திரைத்துறையில் சமீபகாலமாக பாடல் எழுதுவது ஒதுக்கி வைத்திருக்கிறார் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். தமிழ் சினிமா தவற விட்ட முத்துக்களில் மிக முக்கியமானவர்

சந்தியா : மே மாதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இயல்பான அழகும், வெகுளியான சிரிப்பும், மிக முக்கியமாய் நன்றாகவும் நடிக்கத்தெரிந்த நடிகை. அந்த திரைப்படத்தில் "சந்தியா" என்ற கதாபாத்திரத்தில் விளையாடி இருப்பார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஒரு பெரிய பலம் என்றால், இவரது நடிப்பும் மற்றொரு மிகப்பெரிய பலம். இவரது துறுதுறுப்பான நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. காமெடி, நடனம், நடிப்பு, என எந்த துறையிலும் குறையும் சொல்ல முடியாத ஒரு நடிகை. மிகப்பெரிய அளவில் வருவார் என கணிக்கப்பட்ட நடிகை. தமிழ்சினிமாவில் இவரால் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த ஒரு படத்தைத் தவிர வேறு எந்த திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. எதனால் தமிழ்சினிமா இப்படி ஒரு நடிகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மற்றொரு புதிர்.

குட்டி "ஸ்வேதா" : 11 வயதுப்பெண்ணாக நடிக்க அறிமுகம் ஆகி, தன் வயதை விட அதிக விருதுகளை பெற்றவர். குட்டி என்ற தமிழ்திரைப்படத்தில் நம் எல்லோர் மனதிலும் ஈரம் கசிய வைத்த பெண். மல்லி, டெரரிஸ்ட், நவரசா போன்ற சர்வதேச திரைப்படங்களில் தன் முத்திரைய அழுத்தமாக பதித்தவர். அளவுக்கு மீறி நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கு மத்தியில் அலட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாய் நடித்து விமர்சகர்களின் பாராட்டை பெற்றவர். புத்தகப் பையை விட அதிக திறமைகளை சுமந்தவர். மணிரத்னம் மட்டும் சமீபத்தில் இவரை தன்னுடைய ஆய்த எழுத்து திரைப்படத்தில் உபயோகப்படுத்தி இருப்பார். எதனால் தமிழ் சினிமாவின் கவனம் இந்த பெண்ணின் மீது விழாமல் போனது என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

இந்த வரிசையில் சில பேரை மட்டுமே இங்கு பட்டியலிட்டுக்காட்டி இருக்கிறோம். இதுபோல் எத்தனையோ திறமைசாலிகளை தமிழ்சினிமா கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. தமிழ் சினிமா என்பது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் என அத்தனை ஜாம்பவான்களும் சேர்ந்ததுதான். இவர்கள் அனைவரும் மனதார நினைக்கும் பட்சத்தில் இதுபோன்ற திறமைசாலிகள் நிச்சயம் அடையாளம் காட்டப்படுவார்கள். எத்தனையோ மிகச்சிறந்த எழுத்தாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் என பல திறமைசாலிகள் இன்னமும் சரியான அங்கீகாரமின்றி அடையாளமற்று கிடக்கின்றனர். ஒரு சிறிய திறமை உடையவனாக இருந்தாலும் அவனை ஊக்குவிக்கும்போதுதான் அவன் சாதனைகள் வெளியே தெரியும். ஒரு தனிமனிதன் படைக்கும் சாதனை என்பது அவனுக்கான அங்கீகாரம் மட்டும் அன்று; அவன் சார்ந்த தொழிலுக்குமானதுதான். தமிழ் சினிமா இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும். இன்னும் பல சிகரங்களை எட்ட வேண்டும். அதற்கு இதுபோல் திறமை வாய்ந்த நபர்களை ஊக்குவிக்கவேண்டும்.

எளிதாக சொன்னால் "ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்" என்ற வாலியின் வரியின் படி, இது போன்ற திறமைசாலிகளை அடையாளம் கண்டுகொண்டால் தமிழ் சினிமா இன்னும் பல சரித்திரங்கள் படைக்கும்.

Thursday, December 3, 2009

பிரதாப்பின் பிறந்தநாள்

சமீபத்தில் (23.11.2009 - திங்கட்கிழமை) எங்கள் பிரியமான நண்பன் பிரதாப்பின் பிறந்தநாள்.


(22.11.2009 - ஞாயிற்றுக்கிழமை) என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். திங்கட்கிழமை பிறந்தநாள் என்பதால் பிரதாப்புக்கு மட்டும்தான் விடுமுறை. எனக்கும் விஷ்ணுவுக்கும் வேலை இருந்தது. சரி லீவ் போட்டுவிடலாம் என்று முடிவு எடுத்தாயிற்று. ஆனால் விஷ்ணு? கமாண்டோ வீரனாச்சே. எப்படி லீவ் கிடைக்கும்?அவனால் எப்படி வர முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. "டேய்! அது என் பிரச்சனைடா. வரேன்னு சொன்னா கண்டிப்பா வருவேன்" என்று ரஜினி ஸ்டைலில் சொல்லி முடித்தான் விஷ்ணு. சரி நாளை பார்க்கலாம் என்று முடிவானது. மகாபலிபுரம் போவதாக முடிவு எடுத்தாயிற்று.


(23.11.2009 - திங்கட்கிழமை) பிரதாப்பிற்கு, நானும் விஷ்ணுவும் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டோம். நானும் பிரதாப்பும் விஷ்ணுவுக்காக விஷ்ணு வீட்டில் காத்துக்கொண்டிருந்தோம். மணி 9ஐ கடந்து, 10ஐ நெருங்கியது. கமாண்டோ வீரன் விஷ்ணு இன்னும் வரவில்லை. பிளான் போட்டது பாழாகிவிடுமோ என்ற பயத்தில் இருந்தோம். அதற்குள் பிரதாப்பின் அண்ணி பிரதாப்பிற்கு ஒரு வாட்ச் வாங்க வேண்டும் என்று சொன்னதால், பல இடங்கள் சுற்றி அண்ணாநகரில் உள்ள கனெக்ஷன்ஸ்'ல் ஒரு விலையுயர்ந்த வாட்ச் வாங்கி பரிசளித்தார். மறுபடியும் விஷ்ணு வீட்டில் விஷ்ணுவிற்காக காத்திருந்தோம். விஷ்ணு வந்தபாடில்லை. அதற்குள் பிரதாப் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று நண்பர்களை சந்தித்துவிட்டு வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டான். மணி 10.30. இப்போது சரியாக விஷ்ணு ஆஜர். எப்படிடா வர முடிஞ்சுது? என்று கேட்டதுக்கு, அதுதான் விஷ்ணு என்று தன்னுடைய ட்ரேட் புன்னகையை உதிர்த்தான்

இப்போது பிரதாப்பிற்காக மறுபடியும் காத்திருந்தோம். அதற்குள் விஷ்ணுவீட்டில் மொசைக்கல் வாங்கிவர வேண்டி இருந்ததால் நானும், விஷ்ணுவும் பைக்கில் கடைக்கு சென்றுவிட்டோம். அந்தக்கடையில் ஒரு அரைமணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதற்குள் பிரதாப் விஷ்ணுவீட்டிற்கு வந்துவிட்டான். ஒருவழியாக மொசைக்கல் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரும்போது மணி 11.45ஐ தாண்டி இருந்தது. இதற்கு மேல் மகாபலிபுரம் செல்வது சரியாக இருக்காது என்பதால் பறக்கும் ட்ரெயினில் கேக் வெட்டி கொண்டாடலாம் என்று முடிவெடுத்தோம்.


காலையில் இருந்து சாப்பிடாததால் சரியான பசி. எங்கேயாவது சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடரலாம் என்று முடிவெடுத்தோம். இருவரது பைக்கும் விர்ரென்று புறப்பட்டது. நேரே Kabaabish ரெஸ்ட்டாரண்டில் நுழைந்தோம். நானும், விஷ்ணுவும் சேர்ந்து பிரதாப்பிற்கு ட்ரீட் கொடுப்பதாக முடிவானது. மூவருக்கும் சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன், சிக்கன் லாலிபாப், மறுபடியும் சிக்கன்கோம்போ, கூல்டிரிங்க்ஸ் என இஷ்டத்திற்கு ஆர்டர் செய்தாயிற்று. சாப்பிட, சாப்பிட வந்து ஐயிட்டங்கள் கொண்டே இருந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. பிரதாப்பின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. (சந்தோஷத்தில் அல்ல.. சாப்பிடமுடியாமல்).. ஒருவழியாக அத்தனை கோழிகளிடமும் சண்டையை முடித்துவிட்டு, பில்லை செட்டில் செய்துவிட்டு வெளியே வந்தோம். எங்கேயாவது படுத்தால் போதும் என்று தோன்றியது. எங்கள் வீட்டிற்கு போகலாம் என்றால் அவ்வளவு தூரம் வண்டி ஓட்ட முடியாததால் வள்ளுவர்கோட்டத்திற்கு மெதுவாக வண்டியை உருட்டிக்கொண்டே சென்றோம்.
உள்ளே சென்று தரையிலேயே படுத்துவிட்டோம். எவ்வளவு நேரம் படுத்துகிடந்திருப்போம் என்று தெரியவில்லை. மெதுவாக பல கதைகளை பேசிவிட்டு, போனால் போகிறதென்று வள்ளுவரையும் தரிசித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். மிக அழகான தருணங்கள்.
பிரதாப் Wish you many more Happy returns of the Day da ........


இதையும் படியுங்கள்