Tuesday, November 17, 2009

என் கேள்விக்கென்ன பொருள்?


“ஆழ்கடல்ல இருக்கிறதைக்கூட கண்டு பிடிச்சுடலாம். ஆனா ஒரு பெண்ணோட மனசுல இருக்கிறதை கண்டே பிடிக்க முடியாது”ன்னு சொல்லுவாங்க. அது ஓரளவுக்கு உண்மைதாங்க. அவங்க என்ன நினைக்குறாங்களோ, அதை சூசகமா வார்த்தைகள்'ல வெளிப்படுத்துவாங்க. ஆனா நம்மளாலதான் அதை புரிஞ்சுக்க முடியறது இல்லை. உதாரணத்துக்கு அவங்க சூசகமா சொல்லக்கூடியா வார்த்தைகளையும், அதுக்கு பின்னணியில இருக்கிற “உண்மையான” அர்த்தத்தையும் இப்போ நாம பார்க்கலாம்.

1. உங்களுக்கு என்ன பிடிக்கும்? = இந்தக் கேள்வையை அவங்க கேட்டாங்கன்னா உடனே நாம வரிஞ்சுகட்டிக்கிட்டு நமக்கு பிடிச்சதை எல்லாம் ஒப்பிப்போம். ஆனா இந்தக்கேள்விக்கு பின்னாடி இருக்கிற அர்த்தம் என்ன தெரியுமா? உனக்கு பிடிக்கிற விஷயத்தை எல்லாம் என்னால ஃபாலோ பண்ண முடியாது, அப்படிங்கிறதுதான் இந்த கேள்விக்கு விளக்கம்..


2 அந்த பொண்னு எவ்ளோ அழகா புடவை கட்டி இருக்கா இல்ல = அப்படின்னு எதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திட்டு சொன்னா, உடனே நாம் அந்த பொண்ணோட அழகைப்பத்திதான் யோசிப்போம். ஆனா, அவங்க நம்மகிட்ட சொல்லவர்றது என்னன்னா, அந்த கடைக்கு கூட்டிட்டு போய் அதே மாதிரி புடவையை எனக்கும் வாங்கிக்குடுடா அப்படிங்கிறதுதான் இதுக்கு அர்த்தம்


3. இன்னைக்கு என்ன சமையல் பண்ணட்டும்? = இந்தக்கேள்வியைக் கேட்டுட்டா அடடா நமம பொண்டாட்டி நம்மகிட்ட கேட்டுகிட்டுத்தான் சமையலே செய்யுறாளே அப்படின்னு நீங்க புளங்காகிதம் அடையக்கூடாது. டேய்! இன்னைக்கு உன்னைக்கேட்டுதான் சமைக்குறேன். மிச்சமாச்சுன்னா என்னால நாய்'க்கு எல்லாம் துக்கிப்போட முடியாது. எல்லாத்தையும் நீதான் சாப்பிட்டு தொலைக்கணும். இதுதான் இந்த கேள்விக்கு அர்த்தம்


4. உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? = இந்த கேள்விக்கு அர்த்தம் என்ன தெரியுமா? உங்க பிரண்ட்ஸுங்கன்னு சொல்லி ஒருத்தன் கூட வீட்டுக்கு வரக்கூடாது. உனக்கு வடிச்சு கொட்டுறதே தண்டம், இதுல அவனுங்களுக்கு வேற என்னால் வடிச்சு கொட்ட முடியாது. இதுதான் இந்த கேள்விக்கு அர்த்தம்.


5. என்னமோ பண்ணுங்க = பரவாயில்லை நம்ம சாய்ஸுக்கு விட்டுட்டாளே’ன்னு நீங்க யோசிச்சீங்கன்னா, உங்களை விட இளிச்சவாயன் இந்த உலகத்துலேயே இருக்க முடியாது நீயெல்லாம் திருந்தவே மாட்டே. எனக்கு இது பிடிக்கலை. இதுக்கு மீறி எதாவது செஞ்சேன்னா, மவனே தொலைச்சு கட்டிடுவேன். அப்படிங்கிறதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்.


6. எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துக்குறேன் = இந்த வார்த்தைய சொன்ன உடனே உங்களுக்கு உச்சி குளிர்ந்திடுமே. அப்படியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா யோசிக்கக்கூடாது. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? எப்பபார்த்தாலும் தண்டத்துக்கு ஊர் சுத்திகிட்டு இருக்குறதே உனக்கு பொழப்பா இருக்கு. இதுல குடும்பத்தை எங்கே கவனிச்சுக்க போறே? மொதல்ல சம்பளக்கவரை என் கையில கொடு. இதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்7. நம்ம பையன் ஸ்கூல்'ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்காம் = அக்கறையா நம்ம கூப்பிடுறாங்கன்னு நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது. இந்த வார்த்தக்கு என்ன அர்த்தம் தெரியுமா? உன் புள்ளையோட லட்சணத்தை நீயும் தெரிஞ்சுக்க வேணாம் ? ஸ்கூல்ல மிஸ்’கிட்ட நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா?. நீயும் ஒரு நாள் வந்து வாங்கிப்பாரு. அப்பத் தெரியும்.

8. இந்த ஃபோன்'ல சரியாவே சிக்னலே கிடைக்கமாட்டேங்குது = இந்த வார்த்தையை சொன்ன உடனே, ஏதாவது நெட் வொர்க் பிராப்ளமா இருக்கும்ன்னு நீங்க சொல்லுவீங்க. ஆனா அவங்க என்ன சொல்ல வர்றாங்க தெரியுமா? நட்டு கழண்டவனே! நீ மட்டும் ஸ்டைலா ஃபோன் வாங்கி வெச்சிருக்கே. எனக்கு மட்டும் செகண்ட் ஹாண்ட்'ல, அதுவும் இத்துப்போன மொபைல் வாங்கிக் கொடுத்திருக்கே. மொதல்ல இதை மாத்திட்டு நோக்கியா N 95 வாங்கிக்கொடு. அப்படிங்கிறதுதான் இதுக்கு அர்த்தம்.

9. இந்த நகைபோட்டா கழுத்துல ஒரே அரிப்பா இருக்கு = அப்படின்னா உடனே கழட்டி வெச்சிடுன்னு நீங்க சொல்லக்கூடாது கவரிங்'ல வாங்கிக்கொடுத்தா இப்படித்தான் இருக்கும். நகை வாங்கிக்கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு? மொதல்ல ஒரு நகைக்கடைக்கு கூட்டிட்டு போய், 916 ஹால்மார்க் நகையா வாங்கிக்கொடு. அப்படின்னுதான் அவங்க சொல்ல வர்றாங்க.

10. எவ்ளோ வேலைதாங்க நீங்க செய்யுவீங்க ? = உடனே நம்ம மேல எவ்ளோ பரிதாபப்படுறாங்க'ன்னு நீங்களா ஒரு செண்டிமெண்ட் உருவாக்கிக்காதீங்க. அட அறிவுகெட்டவனே.. உன் வேலையுண்டு, வீடு உண்டுன்னு வந்து சேர வேண்டியதுதானே. கண்டவன் பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிட்டு ஓவரா சீன் போடுறே? அப்படிங்கிறதைத்தான் அவங்க சொல்லாம சொல்றாங்க.

11. ஏங்க! இந்த சத்யம் தியேட்டர் எங்கே இருக்கு? = நீ மட்டும் உன் ஃபிரண்ட்ஸுங்களோட போய் கண்ட படத்தையும் பார்த்திட்டு வந்திடுறே. என்னை என்னைக்காவது அந்த தியேட்டருக்கு எல்லாம் கூட்டிட்டு போயிருக்கியா? - அப்படின்னு உங்களை கேட்கறதுக்கு பதிலாத்தான் இந்தக் கேள்வியை அவங்க கேட்குறாங்க.


நண்பர்களே... இந்த உண்டான அர்த்தத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்குக்குங்க. ஒருவேளை உங்க மனைவியோ, இல்லை காதலியோ இந்த மாதிரி கேள்வியை உங்ககிட்ட கேட்டாங்கன்னா, அதுக்கு என்ன அர்த்தம்'ன்னு தெரியாம நீங்க முழிக்க கூடாது இல்லை. அதுக்குத்தான் சொன்னேன்.

Tuesday, November 10, 2009

ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா


"கொடி இடையாள்" என அழைத்தால்
கோபப்படுவாயே! -இப்படி என் மீது
படர்கையில் என்னவென்று
நான் உன்னை அழைப்பது?


பொம்மையின் காதைத்திருகி
சாவி கொடுப்பது போல்... என் காதைத்திருகி
உன் விளையாட்டை ஆரம்பிக்கிறாய்..
ஆனால் கடைசியில்
"ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா"
என்ற பெயர் மட்டும் எனக்கு....

நீ புன்னகைக்காததால்
என் புகைப்படக்கருவிக்கூட
பணி செய்ய மறுக்கிறது..

இருள் சூழ்ந்துவிட்டது என
நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
சற்று உற்றுப்பார்....
சூரியன் தன் ஓரக்கண்ணால்
நம்மை ரசித்துக்கொண்டிருப்பதை.....


Monday, November 9, 2009

தமிழ்சினிமாவில் கிராஃபிக்ஸ்இன்றைய கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்று கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ். டைட்டில் கார்ட் போடுவதில் தொடங்கி வணக்கம் போடும் வரை கிராஃபிக்ஸின் தேவை மிக அவசியமான ஒன்று. எண்பதுகளின் துவக்கத்தில் மாயாஜால படங்களிலும், தந்திர படங்களிலும் மட்டுமே சிற்சில டெக்னாலஜி உத்திகள் பயன்படுத்தப்பட்டன. அந்த டெக்னாலஜி உத்தியின் பின்னணியில் எடிட்டரின் பங்கும், கேமரா மேனின் பங்கும்தான் இருக்கும். விட்டாலாச்சார்யாவின் படங்களில் பெரும்பாலும் இதுபோன்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் மிக அதிக அளவில் இருக்கும். கதையைவிட, இது போன்ற மாயாஜாலகாட்சிகளின் ஆட்சியே இவரது படங்களில் அதிகமாக இருக்கும். விட்டாலாச்சார்யாவை தொடர்ந்து இது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை தன் படத்தில் அதிகமாக உபயோகப்படுத்தியவர் இராம.நாராயணன். ஆனால் இதுபோன்ற தந்திர காட்சிகளுக்கு இவர்கள் பெரும்பாலும் நம்பி இருந்தது எடிட்டரையும், கேமராமேனின் துணையையும்தான். ஏனெனில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழிநுட்பம் அந்த அளவிற்கு நம்மிடையே வளர்ச்சி பெறாத காலகட்டம் அது.

கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் மெல்ல வளர்ச்சியடைய தொடங்கிய கால கட்டம் என்றால் அது தொண்ணூறுகளின் ஆரம்பம்தான். ஜெண்டில்மேன் திரைப்படத்தில் “சிக்கு புக்கு ரயிலே” பாடலில் பிரபுதேவாவின் காதுகளில் இருந்து புகைவருவது, கண்ணீர் விடுவது போன்ற சிற்சில காட்சிகளை இயக்குனர் ஷங்கர் அறிமுகப்படுத்தி இருந்தார். “ராஜா சின்ன ரோஜா” திரைப்டத்தில் ஒரு பாடலில் யானை, குரங்கு போன்ற காட்சிகளை அனிமேஷன் முறையில் அறிமுகப்படுத்தி இருந்தாலும் இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனிமேஷன்கள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தன.

ஜெண்டில்மேனை தொடர்ந்து காதலன் திரைப்படத்தில் “முக்காபலா” பாடலில் ஒரு BGM முழுவதும், பிரபுதேவாவின் உடல் உறுப்புகளை மறைத்தவாறு அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளும் கைத்தட்டலை பெற்றன. இநத வெற்றிகள் கிராபிக்ஸ் தொழிநுட்பத்தின் அவசியத்தை தமிழ்சினிமாவிற்கு எடுத்துக்காட்டின. ஷங்கரைத்தொடர்ந்து எல்லா இயக்குனர்களும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை தங்கள் படங்களில் பயன்படுத்தத் தொடங்கினர். மெல்ல மெல்ல கிராஃபிக்ஸ் தொழிநுட்பத்தின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் தமிழ் சினிமா மாட்டிக்கொண்டு இருந்த கால கட்டத்தில் ஷங்கர் புதுமையான ஒரு உத்தியை கையாளத்தொடங்கினார்.

டிராட்ஸ்கி மருது மற்றும் சில இந்திய அளவில் புகழ் பெற்ற சில கிராபிக்ஸ் கலைஞர்களை கொண்டு தன் திரைப்படத்தில் காட்சிகளை அமைத்துக்கொண்டு இருந்த ஷங்கர், தனது ஜீன்ஸ் திரைப்படத்தில் ஒரு புதுமையை செய்தார். ஹாலிவுட் கிராஃபிக்ஸ் கலைஞர்களின் உதவியோடு மோஷன் கேப்ச்சர் என்ற புது கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். இரட்டைவேட காட்சிகள் கொண்ட திரைப்படத்தை எத்தனையோ நாம் பார்த்திருந்தாலும் ஜீன்ஸ் திரைப்படம் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு உச்சம். இன்றுவரை இரட்டைவேடகாட்சிகள் கொண்ட திரைப்படத்தை ஜீன்ஸுக்கு நிகராக நாம் சொல்ல முடியாது. அத்தனை நேர்த்தியாக கிராஃபிக்ஸ் உத்திகள் கையாளப்பட்ட திரைப்படம் அது.


அதிலும் குறிப்பாக கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் ஒரு ஐஸ்வர்யாராயின் பக்கத்தில் பிரசாந்த் செல்ல, லக்ஷ்மி வந்து அவரை இழுத்துவிடுவார். உடனே இன்னொரு பிரசாந்த், மற்றொரு ஐஸ்வர்யாராயின் பக்கம் சுற்றி வருவார். லக்ஷ்மி மறுபடியும் அவஸ்தையோடு அந்த பிரசாந்தையும் இழுத்துவிடுவார். இரண்டு ஐஸ்வர்யா ராய், இரண்டு பிரசாந்த், அவற்றில் ஒரு ஐஸ்வர்யாராயும் ஒரு பிரசாந்தும் கிராஃபிக்ஸ், ஆனால் லக்ஷ்மி இருவரையும் தள்ளி தள்ளி விடுவார். கட் செய்யப்படாத காட்சி. இன்றுவரை அதன் சூட்சுமமே பார்வையாளனுக்கு புரியாது. இந்த ஒரு காட்சிமட்டும் 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்கப்பட்டது. மிக உயர்ந்த கிராபிக்ஸ் கலைஞர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட காட்சி அது.

இவ்வாறு கிராபிக்ஸ் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் பிடிக்க இயக்குனர் ஷங்கர் ஒரு முக்கிய காரணாம். இதற்கு மேல் கிராபிக்ஸில் வேறு என்ன புதிதாக செய்ய முடியும் என்ற அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், மற்றொரு புதுமையான உத்தியும் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆம். அதுதான் “பாய்ஸ்” திரைப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட "டைம் ப்ரீஸ் ஸ்லைஸ்" டெக்னிக். அதாவது ஒரு குறிப்பிட காட்சியை 36 ஸ்டில் கேமராக்களிலும் இரண்டு மூவி கேமராக்களிலும் படம் பிடித்து ஒரே காட்சியாக தருவதுதான் அது.

“அலே அலே” பாடலில் சித்தார்த் ஓடிவரும் காட்சியை முதல் கேமரா படம் பிடிக்க, சித்தார்த் ஜெனிலியாவிற்கு முத்தம் கொடுக்கும் அந்த மிக முக்கியமான நொடியை 36 ஸ்டில் கேமராக்களும் ஸ்டில் எடுக்க, முத்தமிட்ட பின் நிகழும் விளைவை மற்றொரு கேமரா படம் பிடிக்க, இந்த மூன்று நிகழ்வுகளும் ஒரே காட்சியாக விரியும். கிராபிக்ஸின் தொழிநுட்பத்தோடு மிக அற்புதமாக இணைக்கப்பட்ட காட்சி அது.

இன்று கிராஃபிக்ஸின் வளர்ச்சி என்பது நினைத்துபார்க்கவே முடியாத எல்லைகளை கொண்டது. ஆனால் நம் தமிழ் சினிமாவில் அதனை மிகச்சரியாக பயன்படுத்தாமல் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுத்தப்படும்போது, கிராபிக்ஸ் என்பது கேலிப்பொருளாகி விடுகிறது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய குரு திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய் ஆடிப்பாடுவது போல் வரும் “நன்னாரே நன்னாரே” பாடலில் மழையை கிராஃபிக்ஸில் உருவாக்கி இருப்பார். எது உண்மையான மழை, எது கிராபிக்ஸ் மழை என்று பந்தயம் வைத்தால் கூட நம்மால் கண்டு பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மிக நுணுக்கமாக கிராபிக்ஸை பயன்படுத்தி இருப்பார்.

தசாவதாரம் போன்ற ஒரு கதையை எடுக்க வேண்டும் என்ற கமலின் யோசனையின் பின்னணியில் அணிவகுத்து நிற்பவர்கள் கிராபிக்ஸ் தொழில்நுட்பக்கலைஞர்கள்தான். பத்துவிதமான காதாபாத்திரங்களையும் ஒரே பிரேமிற்குள் கொண்டு வந்து நம்ம வியக்க வைத்தது கிராபிக்ஸ் தொழிநுட்பங்கள்தான். தசாவதாரம் திரைப்படத்தில் சுனாமி வருவது போல் அமைக்கப்பட்ட காட்சியின் பின்ன்ணியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது.

ஒரு படைப்பாளியின் சிந்தனைக்கு எல்லையே கிடையாது எனறு சொல்வார்கள். ஆனால் பட்ஜெட் என்று வருகிறபோது, அந்த கற்பனையின் தரத்தை படைப்பாளிகள் குறைத்துக்கொள்ளத்தான் வேண்டி இருக்கும். ஆனால் இன்று, “உங்களின் எல்லா வித கற்பனைக்கும் நாங்கள் உயிர் கொடுக்கிறோம்” என்று படைப்பாளியின் சிந்தனைக்கு உயிர்கொடுப்பவர்கள்தான் கிராபிக்ஸ் கலைஞர்கள்.

ஒரு ப்ளூமேட் பின்னணியில் நாம் எடுத்து கொடுக்கும் ஒரு சின்ன விஷயத்தை, அந்த காட்சி உலகத்தின் எந்த மூலையில் நடைபெறுபோலவும் மாற்றிவிடலாம். அதற்கு ஒரு மிகச்சரியான உதாரணம்தான் "அன்பே ஆருயிரே" திரைப்படத்தில் வரும் "மயிலிறகே மயிலிறகே" பாடல் காட்சி.

பாடல் காட்சியிலும், ஒரு சில சீன்களிலும் மட்டுமே கிராபிக்ஸ் பயன்படுத்திய நமது தமிழ்சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சி பிரமிப்பானது. ஒரு முழு நீள அனிமேஷன் திரைப்படம் நம்மில் இருந்து உருவாகிக்கொண்டு இருக்கிறது என்பது நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். "சுல்தான் தி வாரியர்" என்ற அனிமேஷன் திரைப்படம் முழுக்க முழுக்க இந்தியக் கலைஞர்களைக்கொண்டே உலகத்தரத்தில் உருவாகிக்கொண்டு இருக்கிறது.

கிராபிக்ஸில் பல மைல்கற்களை தொட்ட இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எந்திரன் திரைப்படத்தில் கிராபிக்ஸின் பல பரிணாமங்களை நமக்கு படைக்க விருக்கிறார். ஏனெனில் இது முழுக்க முழுக்க விஞ்ஞானக்கதை. சாதாரணக்கதையிலேயே கிராபிக்ஸில் ஷங்கர் புகுந்து விளையாடுவார். இதில் கேட்க வேண்டுமா என்ன? அதுவும் கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சயிண்டிஸ்ட் என்பதும், இந்தப்படத்தின் பட்ஜெட் 160 கோடி ரூபாய் என்பதும், இதன் மார்க்கெட்டிங் பார்ட்னர் AXN தொலைக்காட்சி என்பதும் நிச்சயமாய் நமக்கு உணர்த்துகின்றன, இது ஒரு கிராஃபிக்ஸ் விஷுவல் விருந்து என்பதை.

கிராபிக்ஸ் தொழிநுட்பத்தை வெறும் ஊறுகாயாக பயன்படுத்தப்படுத்திக்கொண்டிருந்த நமது தமிழ் சினிமா, இன்றைய காலகட்டத்தில் அதை உணவாகவே பயன்படுத்திக கொள்ள தொடங்கி இருக்கிறது. இந்த மாற்றமும், வளர்ச்சியும் வரவேற்கத்தக்கதே. “தொழிநுட்பத்தை பயன்படுத்தாமல் கிடைக்கும் வெற்றி முழுமையான வெற்றி அல்ல” என்று ஸ்டீவன் ஸ்பீஸ்பெர்க் சொன்னதை நாம் இப்போது நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம்.

“நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை” என்று ரஜினி படையப்பா படத்தில் பாடல் பாடி இருப்பார். அதே ரஜினியின் நிறத்தை முற்றிலுமாக மாற்றி, “நான் இப்போ வெள்ளைத்தமிழன்” என்று பாடவைத்தததுதான் கிராஃபிக்ஸின் வெற்றி.

இதையும் படியுங்கள்