Friday, August 21, 2009

Choooo. Chweeeeet காதல் கவிதைகள்

"கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை"
என்ற பாடலை கேட்கையில் சிரித்து கொள்வேன்.
அது எப்படி கற்கள் காலுக்கு மெத்தையாகும் என்று?..
உன்னுடன் ரயில்வே தண்டவாளத்தில்
நடந்து செல்கையில்தான் அந்த பாடல்
எந்த அளவிற்கு உண்மை என்று உணர்கிறேன்....தயவு செய்து இவ்வளவு அருகில்
என்னிடம் வராதே. அப்புறம்
"ச்சீ.. போடா... நீ ரொம்ப கெட்ட பையன்" என்று
நீ என்னை திட்டினால்
அதற்கு நான் பொறுப்பல்ல....நான் உனக்கு
என்ன பரிசு கொடுத்தாலும்
அது அத்தனையிலும்
என் காதல் மட்டுமே நிரம்பி இருக்கும்


எப்போதோ வெட்டி எடுக்கப்பட்ட
மரத்துண்டிலிருந்தும் பூக்கள் பூக்கிறது,
நீ அதை கட்டிப் பிடித்து நிற்கையில்....


நீ எனக்கு கொடுக்கும் பறக்கும் முத்தத்தில்
கலந்திருக்கும் காற்றை மட்டுமல்ல
காதலையும் என்னால் மட்டுமே
உணர முடியும்.


என்னை கட்டிப்பிடித்து நடக்கும் போது
ஏன் தள்ளாடுகிறாய்? என்று கேட்கிறாய்.
நீ என்றைக்காவாது மது அருந்தி, நடந்து பார்...
பிறகு தெரியும்.


யார் உன்னை காயப்படுத்தினாலும்
உன் கண்ணில் இருந்து கண்ணீர்தான் வழியும்.
ஆனால் நான் உன்னை
சிறிதாக காயப்படுத்தினாலும்
உன் இதயத்திலிருந்து ரத்தமே வழிகிறதே..
அட... அந்த அளவிற்கா என்னை காதலிக்கிறாய்?

Tuesday, August 11, 2009

தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்


அடுத்தவரின் தூக்கத்தில் புகுந்து அவரது கனவை திருடி, நமது கனவு என்று நம்மால் சொந்தம் கொண்டாட முடியுமா? கனவு என்பது நாமாக காணப்படவேண்டிய ஒன்று. அதே போல் தான் ஒரு திரைப்படமும்.. ஒரு இயக்குனரின் கற்பனையில் உதித்த ஒரு கதையை, மற்றோர் இயக்குனர் சாமார்த்தியமாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய படைப்பு என்று சொந்தம் கொண்டாடுவது நாகரீகமான செயல் அன்று.

நம் திரைப்படங்களில் இது போல ஒரே கதையை தழுவி எடுக்கப்பட்ட சில திரைப்படங்களை காணலாம். கொத்த மங்களம் சுப்பு அவர்களால் எழுதப்பெற்று பெரும் வரவேற்பை பெற்ற தொடர்கதை "தில்லானா மோகனாம்பாள்". நாதஸ்வர கலையை தன் உயிராய் நினைக்கும் ஒரு நாதஸ்வர வித்வானுக்கும், பரதக்கலையை தன் உயிராய் நினைக்கும் ஒரு நடன மங்கைக்கும் இடையே நடக்கும் தொழில் ரீதியிலான போட்டிகளையும், பின் அவர்களுக்குள் நிகழும் காதலையும் மிக அழகாக அந்த நாவலில் விவரித்திருப்பார்கள். பின் இந்தக்கதை நடிகர்திலகம் திரு சிவாஜிகணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி நடிப்பில் "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படம் வெளிவந்தது பல வருடங்கள் கழித்து, ராமராஜன், கனகா நடிப்பில் உருவான திரைப்படம் ""கரகாட்டகாரன்". வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை குவித்த திரைப்படம் இது. ஆனால் இதன் மூலக்கதையும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் சாராம்சத்தை தழுவியே எடுக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் A.R. ரஹ்மான் இசையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆர்ப்பாட்டமாக வெளிவந்த "சங்கமம்" திரைப்படமும் இதே கதையமைப்பை கொண்டதே..

இவைகளாவது பரவாயில்லை, வெவ்வேறு கால இடைவெளியில் வெளிவந்தவை.. ஆனால் ஒரே சமயத்தில் ஒரே கதையை கொண்ட மூன்று திரைப்படங்கள் வெளிவந்து இயக்குனர்களின் கற்பனை வறட்சியை வெளிச்சம் போட்டு காட்டியது. அவை மாதவன் நடிப்பில் சரணின் இயக்கத்தில் உருவான ஜே ஜே. ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான உன்னைப் பார்த்த நாள்முதல், தருண், த்ரிஷா நடிப்பில் உருவான எனக்கு 20 உனக்கு 18. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே சந்தித்த ஹீரோ, ஹீரோயின் கடைசிவரை ஒருவரை ஒருவர் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற ஒரே கதைக்கருவை கொண்ட திரைப்படங்கள் தான் இவை. இன்னும் சொல்லப்போனால் இந்த மூன்று திரைப்படங்களுமே "செரண்டிபிட்டி" என்ற ஆங்கில திரைப்படத்தில் இருந்து தழுவப்பட்டவையாகும்.

இவை தவிர ஒரே கதை அமைப்பை கொண்ட இன்னும் மூன்று திரைப்படங்கள் உள்ளன. அவை வசந்த் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் உருவான பூவெல்லாம் கேட்டுபார், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், ரம்பா நடிப்பில் உருவான மின்சார கண்ணா, பிரவீன்காந்த் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் உருவான "ஜோடி".. ஆம் இம் மூன்று திரைப்படங்களும் ஒரே கதைக்கருவை மையமாகக் கொண்டவை. காதலன் காதலி வீட்டுக்கும், காதலி காதலன் வீட்டுக்கும், சென்று பெற்றோர்களை தங்கள் நல்ல குணத்தால் மாற்றி, தங்கள் காதலுக்கு சம்மதம் வாங்கும் கதை. இது மட்டும் இன்றி ஒரு திரைப்படத்தில் இருந்து ஒரு சிறிய டிராக்கை உருவி ஒரு முழு திரைப்படமாக செய்த அதிசங்களும் திரைப்பட உலகில் உண்டு.

எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நடிகர் செந்திலுக்கு ஒரு காமடி டிராக் உண்டு. அதாவது பத்தாயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்தால் தன மகளை கட்டித்தருவேன் என்று எஸ்.எஸ். சந்திரன் சபதம் போடுவார். அந்த பணத்தை செலவு செய்வதற்காக செந்தில் செய்யும் எல்லா காரியங்களிலும் பணம் வந்து கொண்டே இருக்கும். இப்படி காமடி நடிகருக்காக செய்யப்பட ஒரு கதையை எடுத்துக்கொண்டு சுந்தர்.சி அவர்கள் சூப்பர் ஸ்டார்
திரு. ரஜினிகாந்துக்காக உருவாகிய திரைப்படமே அருணாச்சலம்.

யோசித்து பார்க்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா.. இதை விட இன்னொரு வியப்பான விஷயமும் இருக்கிறது. பிரபுதேவா, நக்மா நடிப்பில்,
P. வாசு இயக்கத்தில் பிரமிட்' நடராஜன் அவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படம் "லவ் பேர்ட்ஸ்". A.R. ரஹ்மான் இசையமைப்பில் மிகச்சிறந்த பாடல்களிருந்தும் இது தோல்விப் படமாகவே அமைந்தது. ஆனால் இதே கதையை சிற்சில காட்சிகளை மட்டும் மாற்றம் செய்து தயாரிப்பாளரின் அனுமதி இன்றி இந்தியில் வேறொரு கதாநாயகனை வைத்து தயாரித்தார்கள். அந்த திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது. ஏகப்பட்ட விருதுகளை அள்ளியது. அந்த ஹீரோ ஒரே நாளில் மிகப் பிரபலமடைந்தார். அந்த திரைப்படத்தின் பெயர் "கஹோனா ப்யார் ஹை". அந்த ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன். என்ன ஒரு வியப்பான விஷயம் அல்லவா?

எதற்காக இவற்றை எல்லாம் குறிப்பிட வேண்டி இருக்கிறது என்றால் தான் பெற்ற குழந்தைக்கு இன்னொரு பெண் உரிமை கொண்டாடினால் ஒரு தாய்க்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் தன்னுடைய படைப்பை தன் அனுமதி இன்றி இன்னொருவர் பயன்படுத்தும்போது ஒரு படைப்பாளிக்கும் இருக்கும்.

தன்னுடைய சொந்த கற்பனைகளை மக்களிடத்தில் சரியான முறையில் கொண்டு செல்லும் கலைஞன் நிச்சயம் காலத்தால் கொண்டாடப்படுவான். அவனது படைப்புகள் கங்கை நீர் போல. அடுத்தவரின் படைப்புகளில் இருந்து தழுவி தன்னுடைய படைப்புகளை உருவாக்கும் ஒரு கலைஞன் பெரும் வெற்றி என்பது நிச்சயம் கானல் நீர் போன்றதுதான். அந்த கானல் நீரால் உண்மையான ரசிகனின் கலை "தாகத்தை" தீர்க்க முடியாது. படைப்பாளிகள் இதை உணர்ந்தால் நம்மில் இருந்தும் பல உலக படைப்புகள் வரும்.

Wednesday, August 5, 2009

இந்த மாத கோகுலம் கதிரில் எனது பதிவு

சமீபத்தில் நான் எழுதிய
  1. தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம்
  2. ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டு பிடிப்பது எப்படி?
ஆகிய இரண்டு பதிவுகளும் இந்த மாத கோகுலம் கதிர் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
என்னுடைய படைப்பு வெளிவர உதவிய தினத்தந்தி குழுமத்திற்கும், இந்தப் படைப்பிற்கு அதிக ஓட்டுக்கள் அளித்த தமிழிழ், தமிழ்மணம், திரட்டி, தமிழ்10, தமிழர்ஸ் டாட் காம். போன்ற வலையுலக நண்பர்களுக்கும் மிக்க நன்றி.மிக முக்கியமாய் என்னுடைய படைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கும், பின்னூட்டமிட்டு தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தும் என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...

இதையும் படியுங்கள்