Tuesday, June 30, 2009

நாடோடிகள் - விமர்சனம்

ஆங்கிலத்தில் "Black Horse" raising என்ற அர்த்தம் பொதிந்த சொல் உண்டு. அதாவது ஒரு வகுப்பறையில் யாராலும் கவனிக்கப்படாத ஒரு மாணவன் திடீரென்று முதல் மதிப்பெண் எடுப்பதை இவ்வாறு குறிப்பிடுவார்கள். அது போல்தான் இயக்குனர் சமுத்திரக்கனி யாருமே எதிர்பாராத வண்ணம் "Black Horse" raising ஆகியிருக்கிறார். சில தோல்விகளின் வலி சமுத்திரக்கனிக்கு "வெறியாய்" மாறி இருக்கிறது. அந்த வெறி வெற்றியாய் மாறி இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நாடோடிகள் யார்? ஏன் நாடோடிகள்?

சசிக்குமார். விஜய், பரணி மூன்று இணைபிரியா நண்பர்கள். நாடோடித்தனமான வாழ்க்கையில் நம்பிக்கையையை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்க்கையை வாழ்பவர்கள். இதில் சசிக்குமாரின் பால்ய நண்பன் ஒருவனது காதலுக்கு உதவுவதற்காக மூவரும் நாமக்கல் பயணமாகிறார்கள். காதலை சேர்த்துவைக்கும் முயற்சியின் விளைவாக சசிக்குமார் தன்னுடைய காதலையும், பாட்டியையும் இழக்கிறார். விஜய் தன்னுடைய காலை இழக்கிறார். பரணி தன்னுடைய கேட்கும் திறனை இழக்கிறார். மிகப்பெரும் போராட்டத்திற்கு பிறகு காதலர்கள் சேர்த்து வைக்கப்படுகிறார்கள்.

ஒன்று சேர்ந்த காதலர்களுக்கு, ஒரு கட்டத்தில் "அனுபவித்து" முடிந்த பிறகு, காதல் கசந்து இருவரும் பிரிகிறார்கள். காதலுக்காக இத்தனை வலிகளை அனுபவித்த நண்பர்களுக்கு, இவர்களது முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பின் நண்பர்கள் எடுக்கும் முடிவு என்ன என்பதை வலியும் வேதனையும், நகைச்சுவையும் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். சசிக்குமார் பெயர் ஒரு திரைப்படத்தில் தென்படுகிறது என்றால், நிச்சயம் அது நல்ல படமாய் இருக்கும் என்ற நம்பிக்கையை இந்தப்படமும் விதைக்கிறது. (உ.தா : சுப்ரமணியபுரம், பசங்க) அதிகப்படியான எந்த போலித்தனமும் இல்லாத ஒரு கதாநாயகனாக தோன்றி, அமர்க்களப்படுத்தி இருக்கிறார் சசிக்குமார்.

கதாநாயகன் அழுகிறபடி ஒரு காட்சி வந்தால் "போதுண்டா மொக்கை போடாதே" என்று தியேட்டரில் ஒரே கூச்சல் கேட்கும். ஏனெனில் கதாநாயகன் அழுவதை காண சகிக்காது (உ.தா: சேரன்). ரசிக்கும்படி அழுவதற்கும் ஒரு திறமை வேண்டும். இந்தப்படத்தில் தன் நண்பனை மருத்துவமனையில் பார்த்து சசிக்குமார் அழும் காட்சியில் நம்முள்ளும் அந்த வலி நிகழ்கிறது. "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு" என்ற ஒரே வசனத்தை சந்தோஷத்திலும், தன் காதலியை பிரிய நேர்கையிலும் சசிக்குமார் சொல்லும்போது கைத்தட்டலை அள்ளிக்கொள்கிறார்.
தன் மகனின் காதலுக்கு அதரப்பழசான கலர்ஃபுல் ஐடியா தரும் ஒரு அப்பா, உள்ளுக்குள் பாசத்தை சுமந்துகொண்டு சித்தியின் முன்னால் தன் மகனை திட்டி தீர்க்கும் ஒரு அப்பா, மானத்தை வாங்கி விட்டாள் என்று மானமே போகும்படி ரோட்டில் கத்தும் ஒரு அப்பா, "தம்பி செளத் சைடா" என்றபடியே பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை சுமந்திருக்கும் ஒரு அப்பா. என அத்தனை அப்பாக்களின் கதாபாத்திரங்களும் தமிழ்சினிமாவிற்கு புதிது.

கல்லூரியில் அறிமுகமான பரணி இந்தப்படத்தில் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். பரணி இரும்புக்கம்பியால் தாக்கப்படும் அந்தக்காட்சியில் நம் தலையிலும் யாரோ ஓங்கி அடித்ததைப் போல ஒரு உணர்வு. தியேட்டர் ஒரு நொடி நிசப்தத்தில் ஆழ்கிறது. அத்தனை தொழிநுட்பக் கலைஞர்களும் ஒருங்கே கை கோர்த்த காட்சி அது. பரணியை போலிஸ் ஸ்டேஷனில் விசாரிக்கும் அந்தக்காட்சி நகைச்சுவை தோரணம். கஞ்சா கருப்பு சீரியஸ் ஆன இடங்களிலும் சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவு சமுத்திரக்கனியின் கனவுகளுக்கு மிகக் சரியாய் வர்ணம் பூசி இருக்கிறது. எடிட்டர் A.L.ரமேஷ் பூச்சரம் தொடுப்பது போல், காட்சிகளை தொடுத்திருக்கிறார். அதுவும் குறிப்பாய், நண்பர்கள் உளவு பார்க்கும் காட்சியில் எடிட்டிங் ஜாலம் புரிந்திருக்கிறது. "சம்போசிவ" பாடலில் உடுக்கை ஒலியின் வேகம் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறது. அந்தக் காட்சியின் வேகத்தை, சுந்தர் C. பாபுவின் பின்னணி இசை, புல்லட் ட்ரெயினாய் மாறி இழுத்துக்கொண்டு ஓடி இருக்கிறது.

80 வருட தமிழ் சினிமாவில் எத்தனையோ காதலின் பக்கங்களை பார்த்திருக்கிறோம். ஆனா இயக்குனர் சமுத்திரக்கனி திறந்து காட்டி இருக்கும் இந்தப்பக்கங்கள் ஆச்சர்யம். எங்கே சார் போயிருந்தீங்க இத்தனை நாளா? நட்பின் மேன்மையையும், போலிக்காதலின் முகமூடியையும் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார் இயக்குனர். பெற்றோர்கள் காதலை வெறுக்க நியாயமான காரணத்தையும் தராசில் வைத்திருக்கிறார். நிச்சயமாய் பெற்றோர்களே காசு கொடுத்து பிள்ளைகளை இந்தப் படத்தை பார்க்க சொல்லுவார்கள். முதற்பாதியில் எடிட்டர் தன் கத்தரிக்கு கொஞ்சம் வேலை வைத்திருக்கலாம். அதே போல ஆரம்ப பாடலும், அந்த "யக்கா யக்கா" பாடலையும் தவிர்த்து இருந்தால் திரைப்படம் இன்னும் மெருகேறி இருக்கும்.

வசனங்கள் நட்புக்கோட்டைக்கு மிகப் பலமாய் கொடி பிடித்திருக்கிறது. சமீபகாலமாய் தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரக்கூடிய மிக நல்ல படைப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் "நாடோடிகள்" ஒரு அமர்க்களமான படைப்பு. இந்தப் படம் பார்த்துமுடித்து வெளியே வந்தவுடன் யாராவது நம்மிடம் வந்து "சார் என் காதலுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" என்று கேட்டால், போடா வெண்ணை என்று ஓங்கி அறையத்தான் நமக்கு தோன்றும். அதுதான் இயக்குனர் சமுத்திரக்கனியின் வெற்றி.

13 comments:

குளிர்தேசம் said...

ரொம்ப நல்ல படம்.. விமர்சனத்துல கலக்கி எடுத்து இருக்கீங்க. உங்க விமர்சன நடை அழகா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

ஆளவந்தான் said...

போங்க சார்.. உங்க மேல எனக்கு சரியான கோபம். அந்த ரெண்டு சூப்பர் ஹீரோயின்சை பத்தி நீங்க ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அதுவும் அந்த குண்டு கண்ணு அழகியைப் பத்தி நீங்க ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

nadhiya said...

ஒரு இயக்குனரோட வளர்ச்சியை "Black Horse" உவமைக்கு சரியா பொருத்தி இருந்தது Brilliant. நான் சமுத்திரக்கனிகிட்ட இருந்து இப்படி ஒரு படத்தை நிச்சயமா எதிர்பார்க்கலை. பரணி அடி வாங்குற சீன்ல உண்மையிலையே நான் அடிவாங்குற மாதிரி ஒரு எஃபக்ட் இருந்தது. Excellent சீன். கஜினி'யில அசின் அடி வாங்கும் போது அப்படி ஒரு Feel இருந்துச்சு. எனக்கு கண்டிப்பா தெரியும் நீங்க அந்த சீனை குறிப்பிடுவீங்கன்னு.. இயக்குனர் போலியான காதலை மட்டும் குறிப்பிடலை. போலியான நட்புக்கும்தான் சவுக்கடி கொடுத்திருக்காரு.
"காதலும் நட்பும் என்னைக்கும் புனிதமானது. ஆனா சில காதலர்களும் "போலியான" நண்பர்களும்தான் இந்த அற்புதமான உறவை கெடுத்திடுறாங்க" அப்படின்னு இயக்குனர் சமுத்திரக்கனி சொன்னது 100% கரெக்ட்.

nadhiya said...

ஆளவந்தான் சொன்னது ஒரு விதத்துல கரெக்ட். ஏன் நீங்க கதாநாயகிகளை பத்தி ஒண்ணுமே குறிப்பிடலை? அதுவும்,... நான் மறந்திடுறேன்'ப்பான்னு சுவத்துல சாஞ்சி அழுகுற சீன்ல நிச்சயமா அந்தப் பொண்ணை நீங்க ஒருவாட்டியாவது பாராட்டி இருக்கணும். ஏன்னா கிட்டத்தட்ட ஒரு நிமிஷம் அந்த பொண்ணு க்ளோசப்'ல அழுதுகிட்டே இருக்கும். ஒரு புதுமுக நடிகையால அவ்ளோ சீக்கிரம் பண்ண முடியாத சீன் அது. அத்தனை ஆண்களை பாராட்ட தெரிஞ்ச உங்களுக்கு ஏன் சார் ஒரு பொண்ணை பாராட்ட மனசு வரலை?

archana said...

// இந்தப் படம் பார்த்துமுடித்து வெளியே வந்தவுடன் யாராவது நம்மிடம் வந்து "சார் என் காதலுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" என்று கேட்டால், போடா வெண்ணை என்று ஓங்கி அறையத்தான் நமக்கு தோன்றும். அதுதான் இயக்குனர் சமுத்திரக்கனியின் வெற்றி. //


This is Mani's Punch.....
Superb....

kenin said...

// இயக்குனர் போலியான காதலை மட்டும் குறிப்பிடலை. போலியான நட்புக்கும்தான் சவுக்கடி கொடுத்திருக்காரு. //


மன்னிக்கணும் மிஸ் நதியா. இந்தப் படத்துல போலியான காதலைப்பத்தி சொல்லி இருக்காங்கன்னு சொல்லுங்க ஒத்துக்குறேன். ஆனா போலியான நட்புன்னு சொல்லாதீங்க.. ஏன்னா சசி, விஜய், பரணியோட நட்பு ஒன்னும் போல்யானது இல்லை. காலை இழந்தாலும் தன நண்பன் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக தன தங்கையையே கட்டிக்கொடுத்தவன் அந்த ஹீரோ. நட்புக்கு மரியாதை கொடுத்துதான் அவங்க முனு பெரும் தங்களோட வாழ்க்கையையே இழந்தாங்க. So, டைரக்டர் சொல்ல வந்த் கருத்தை தப்பா புரிஞ்சுக்காதீங்க. கவிதைக்காதலன் சொன்ன மாதிரி நட்போட மேன்மையைதான் இயக்குனர் சொல்லி இருக்காரு. பெண் புத்தி பின் புத்தின்னு சொல்றது கரெக்டாதான் இருக்கு.

தென்றல் said...

இப்போ நதியாவுக்கு கோவம் வரும் பாரு.... கேனினுக்கு கமென்ட் அனுப்புவா பாரு... உன்னால முடியும் நதியா.. ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்.....

nadhiya said...

Mr.Kenin... நீங்க எல்லாம் எதுக்கு படம் பார்க்கறீங்கன்னே எனக்கு புரியலை. நான் சசி. பரணி, விஜய்'யோட நட்பை பத்தி சொல்லலை. EX M.P. யோட மகனா ஒரு பையன் வர்றான் இல்லை. நான் அவனைத்தான் சொன்னேன். அவன் உண்மையான நட்போடவா அவங்க கூட பழகினான்? அவனாலதானே அவங்க மூணு பேரும் அந்த நிலைமைக்கு வந்தாங்க. ஆனா அவனுக்கு அதைப்பத்தின அந்தக்கவலையே இல்லையே. இந்த கேரக்டரைதான் நான் "போலியான" நட்புக்கு அடையாளமா சொன்னேன். இந்த கேரக்டர் இல்லன்னா இந்தப் படமே கிடையாதே. மொதல்ல அதை புரிஞ்சுக்குங்க... நான் இப்பவும் சொல்றேன், "காதலும், நட்பும் என்னைக்குமே புனிதமானது. ஆனா சில "போலியான" காதலர்களாலும், நண்பர்களாலும்தான் இந்த இரண்டு உறவுகளுமே தங்களோட கற்பை இழந்திடுகின்றன"... நீங்க சொன்ன மாதிரி கவிதை காதலன் நட்போட மேன்மையைப் பத்திதான் எழுதுவாரு... ஏன்னா நட்பா? காதலான்னு ஒரு சுழ்நிலை வந்தாக் கூட, மிஸ்டர் கவிதைகாதலன் நட்புதான்னு வாதாடுவாரு.

Vishnu said...

kennin உங்க நேர்மை எனக்கு ரொன்ப புடிச்சிருக்கு ............

Vishnu said...

தென்றல் பயங்கரமா எண்ணெய் ஊத்துறீங்க...ம்ம்ம்ம்ம்ம் .... ம்ம்ம்ம்ம்ம்ம்... உங்க நேர்மையும் எனக்கு பிடிச்சிருக்கு..

Suresh said...

Super machan nalla vimarsanam namma vimarsanathayum padinga

தமிழ் காதலன் said...

மணி நானும் படம் பார்த்தேன் மிகவும் அருமையான படம் . தொடரட்டும் உங்கள் படைப்பு .

ஊர்சுற்றி said...

நல்ல தெளிவான விமர்சனத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

இதையும் படியுங்கள்