Tuesday, June 2, 2009

தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம்


ஒரு திரைப்படத்தில் வசனம் என்பது வெறும் பக்கங்களை நிரப்பி செல்வது அல்ல. நம் மனதை நிரப்பி செல்லுமாய் இருக்க வேண்டும். ஆயிரம் பக்கங்களில் சொல்லி புரிய வைப்பதைவிட ஒரு வரி வசனத்தால் மிக எளிதாய் புரிய வைக்கலாம்.

"அவன் பிச்சை எடுக்க கூடாது'ன்னு நீ நினைக்குற.
அவன் திருடனா ஆயிட கூடாது'ன்னு நான் நினைக்குறேன்."

சமீபகால திரைப்படங்களில் இந்த வசனம் பாதித்ததைப் போல் வேறெந்த வசனமும் நம்மை பாதிக்கவில்லை. ஒரு நிமிடம் பிச்சை எடுப்பவர்கள் மீதான நம் அணுகுமுறையை புரட்டிப்போட்ட வசனம். பசங்க திரைப்படத்தில் வரும் இந்த வசனம் "Oration" அணுகுமுறையிலிருந்து விலகி நம்மில் வெகு இயல்பாக விதைக்கப்படுகிறது.

"எளிதில் சம்பாதிக்க முடிந்தது எதிரிகளை மட்டும்தான். "

"நம்மோட வியாபாரத்துக்காக யாரோ முன்ன பின்ன தெரியாத ஒரு ஆளுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுவோம். ஆனா நம்மோட உறவுகள்கிட்ட நம்ம ஈகோக்களை மனசுல வெச்சிகிட்டு சரியா முகம் கொடுத்து கூட பேச மாட்டோம்" .

என்ன அற்புதமான வசனங்கள். ஒரு திரைப்படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். வசனங்களை எழுதக்கூடாது. நம் வாழ்க்கையிலிருந்து எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட வசனங்கள்தான் எப்போதும் நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

வசனங்களுக்காக மெனக்கெடும் ஒரு இயக்குனரால் மட்டும்தான் ஒரு நல்ல படைப்பை கொடுக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் மணிரத்னம் ஒரு அற்புத படைப்பாளி. இவரது திரைப்படங்களில் மட்டும் எப்போதும் வசனங்கள் தன் சாம்ராஜ்யத்தை விரித்து வைத்திருக்கும்.

உதாரணமாக மெளன ராகம் திரைப்படத்தில் ஒரு காட்சி. தனக்கு பிடிக்காத கணவன் தன்னை தொட வரும்போது ரேவதி ஒரு டயலாக் சொல்வார்.
"நீங்க தொட்டா கம்பளிபூச்சி ஊர்ற மாதிரி இருக்கு". என்பார். பக்கம் பக்கமாக வசனம் எழுதி கொடுக்க முடியாத உணர்ச்சியை இந்த ஒரு வரி வசனம் ஏற்படுத்தியது.. இன்றளவும் மறக்க முடியாத வசனம் இது.

அதே படத்தில் மோகன் "உனக்கு என்ன பரிசு வேண்டும்?" எனக் கேட்க, "எனக்கு விவாகரத்து வேண்டும்" என்று சொல்லும் வசனமும் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அதே போல் பம்பாய் திரைப்படத்தில் நாசர் அரவிந்த்சாமியிடம், 'நான் செத்துப் போனதுக்கு அப்புறம்தான் நீ அந்த பொண்ண கட்டிக்க முடியும்" என்று சொல்வார். உடனே அரவிந்த்சாமி அதற்கு சற்றும் யோசிக்காமல் "நீங்க சாகறவரைக்கும் என்னால காத்திருக்க முடியாது" என்பார். வசனங்களில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது இது.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் "இலங்கையில் அமைதி திரும்பும் நாளில் உன்னுடன் வருவேன்" என நந்திதா தாஸ் கூற, "எப்போம்மா இங்க அமைதி வரும்?" என கீர்த்தனா கேட்க, "தெரியலை" என நந்திதாதாஸ் சொல்லும் ஒற்றை வசனத்தில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருக்கும்.

முதல்வன் திரைப்படத்தில் ஒரு ஊனமுற்ற கதாபாத்திரம் அர்ஜுனிடம் "ஐயா, என்ன மாதிரியே இந்த நாடும் ஊனமா கிடக்குது. எந்திரிச்சு நடக்க வையுங்க." என்று சொல்லும் காட்சியும் "கடைசியில என்னையும் ஒரு அரசியல்வாதியா ஆக்கிட்டாங்களே " என்று அர்ஜுன் புலம்பும் காட்சியும் படத்தை எங்கேயோ தூக்கி சென்றன.

இருகோடுகள் திரைப்படத்தில் ஜெமினிக்கும், செளகார் ஜானகிக்கும் உள்ள உறவை "அச்சா" என்ற ஒற்றை வார்த்தையில் ஜெயந்தி சொல்லும்போது கைத்தட்டலால் தியேட்டர் அதிர்ந்தது.

இப்படி திரைப்படம் பார்த்து முடித்தபின் அந்த படம் ஏதாவது ஒருவகையில் நம்மை ஏதாவது செய்ய வேண்டும். ஒன்று நம்மை சிரிக்க வைக்க வேண்டும். ஒன்று நம்மை அழ வைக்க வேண்டும். நம் சமுதாயத்தின் மீது கோபத்தை உருவாக வேண்டும். அல்லது நம்மை காதலிக்க வைக்க வேண்டும். இப்படி நமக்குள் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாத படைப்பு படைப்பே அல்ல. அந்த வகையில் பசங்க இயக்குனர் 'பாண்டிராஜ்" நமக்கு நிறைய நம்பிக்கை தருகிறார்.

மிஷ்கினின் திரைப்படங்களிலும் இதை காண முடிகிறது. அஞ்சாதே திரைப்படத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட அந்த சிறுமி "அண்ணா, ஒன் பாத்ரூம் போகணும்" என்று சொல்லுமிடம் செல்லுலாய்ட் செதுக்கல். இதைவிட நுணுக்கமாக ஒரு இயக்குனரால் தன் படைப்பை செதுக்க முடியாது.

எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு படைப்பை நாம் மறக்காமல் இருப்பதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள்தான். அதனால்தான் வசனங்களுக்காக மெனக்கெடுதல் மிக மிக அவசியமாகிறது. நம் சினிமாவில் மட்டும்தான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், என்று அனைத்து பொறுப்புக்களையும் ஒருவரே போட்டுக்கொள்வது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அந்த ஈகோவை துறந்து மிகச்சிறந்த வசனகர்த்தாவிடம், பொறுப்பை ஒப்படைக்கும் போது மிக நல்ல படைப்புகள் வரும்.

ஏனெனில் ஒரு இயக்குனர் கதைக்குள் இருந்து யோசிப்பார். வசனகர்த்தா கதையை தாண்டியும் யோசிப்பார். இங்குதான் அடங்கி இருக்கிறது வெற்றியின் சூட்சுமம். மணிரத்னம், ஷங்கர், போன்றோர் தங்கள் படைப்புகளை தங்கள் பார்வையிலிருந்து மட்டும் அல்லாமல், சுஜாதாவின் பார்வையிலிருந்தும் யோசித்தால்தான் மிக நல்ல படைப்புகளை கொடுக்க முடிந்தது.

இப்படி மிக நுணுக்கமான விஷயங்களை தங்கள் படைப்புகளில் கொண்டுவரும் படைப்பாளி காலத்தால் கொண்டாப்படுவான். வசனங்கள் வெறும் வார்த்தைகள் மட்டுமே அல்ல. அது சினிமாவுக்கு ஆடை போனது. அதை பட்டாடையாக மாற்றுவதும், கிழித்து போடுவதும் இயக்குனர்களின் கையில்தான் உள்ளது.

20 comments:

கும்மாச்சி said...

நித்திலமான உண்மை. வசனகளால் ஓடிய படங்களுக்கு தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.

முரளிகண்ணன் said...

nice post

அனுமாலிகா said...

பம்பாய் படத்தோட அந்த டயலாக் மாஸ்டர் பீஸ்.. நல்ல பதிவு.

சுள்ளான் said...

சூர்யா என் நண்பன் அப்படின்னு மம்மூட்டி சொல்ற தளபதி டயலாக் எனக்கு ரொம்ப பிச்டிச்சது..வித்தியாசமான அலசல்.. good.

எவனோ ஒருவன் said...

குஷி படத்துல வர்ற இடுப்பு மேட்டர் பத்தி எழுதுவீங்கன்னு நினைச்சேன்.. அந்தப்படமும் வசனத்துக்காகவே ஓடியது... நைஸ்

ஸ்ரீ.... said...

அருமையான பதிவு. நிறைய எழுதுங்கள்.

ஸ்ரீ....

நிலாப்பெண் said...

மணிரத்னம் சார் கிட்ட மட்டும் என்ன மேஜிக் இருக்குன்னே புரியலை. He is Great.. ரொம்ப அருமையா இருக்கு.. Keep it up.

பிரியங்கா said...

//"நீங்க தொட்டா கம்பளிபூச்சி ஊர்ற மாதிரி இருக்கு". என்பார். பக்கம் பக்கமாக வசனம் எழுதி கொடுக்க முடியாத உணர்ச்சியை இந்த ஒரு வரி வசனம் ஏற்படுத்தியது.. இன்றளவும் மறக்க முடியாத வசனம் இது.//

எனக்கும் ரொம்ப பிடிச்ச டயலாக் இது...வாழ்த்துக்கள்

nadhiya said...

மணி சார்.. இந்த போஸ்ட் தமிழிழ்ல பாப்புலர் போஸ்ட்ல செலக்ட் ஆகிடுச்சு போல இருக்கு. வாழ்த்துக்கள்.. பசங்க படத்துல நீங்க கோட் பண்ணி இருந்த அந்த டயலாக் எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது. நான் அந்த டயலாக்கை ரொம்ப என்ஜாய் பண்ணேன். எவ்ளோ அர்த்தம் உள்ள வார்த்தை தெரியுமா அது? Excellent .

nadhiya said...

மனசை மயிலிறகால் வருடுற படங்கள்ல மெளன ராகம் படத்துக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. உணர்வுகளால மணிரத்னம் விளையாடி இருப்பாரு. என்னைப் பொறுத்த வரைக்கும் மோகனோட The Best Movie' ன்னா அது இந்தப்படம்தான்.

SP.VR.Subbiah said...

நல்ல பதிவு.பாராட்டுக்கள்

கவிதை காதலன் said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்

சுரேஷ் கண்ணன் said...

நன்றாக இருந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசிக் கொண்டிருந்த சினிமாவில் மணிரத்னத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. தளபதியில் 'சூர்யா' என்று ஒரே ஒரு வார்த்தையின் மூலம் ஒருவர் செய்தி சொல்லி விட்டுப் போவார். அதே போல் செந்தமிழான வசனத்தை சமூகரீதியான வசனங்களால் மாற்றியமைத்தவர் இயக்குநர் sridar.

நிறைய எழுதுங்கள்.

malar said...

///நம்மோட வியாபாரத்துக்காக யாரோ முன்ன பின்ன தெரியாத ஒரு ஆளுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுவோம். ஆனா நம்மோட உறவுகள்கிட்ட நம்ம ஈகோக்களை மனசுல வெச்சிகிட்டு சரியா முகம் கொடுத்து கூட பேச மாட்டோம்" .///


அருமையான வரிகள் 100 க்கு 100 உண்மை !!!!!!!!!!

தமிழ் காதலன் said...

//"இலங்கையில் அமைதி திரும்பும் நாளில் உன்னுடன் வருவேன்" என நந்திதா தாஸ் கூற, "எப்போம்மா இங்க அமைதி வரும்?" என கீர்த்தனா கேட்க, "தெரியலை" என நந்திதாதாஸ் சொல்லும் ஒற்றை வசனத்தில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருக்கும் //

கண்களில் நீர் வருகிறது இப்போது .

shabi said...

னாயகன் வசனம் இன்றும் பேசப்படுகிறது

சென்ஷி said...

//"அவன் பிச்சை எடுக்க கூடாது'ன்னு நீ நினைக்குற.
அவன் திருடனா ஆயிட கூடாது'ன்னு நான் நினைக்குறேன்."
//

அருமையான வசனம். இது எந்த படத்துல வருது?

நல்ல பதிவு நண்பா! தொடருங்கள்..

Anonymous said...

அருமையான பதிவு நண்பரே,

"எந்த ஜாதிய இருந்தாலும் வீட்டுல பொம்பளைங்க மட்டும் கீழ் ஜாதிதான்"
பசங்க படத்தில் இந்த வசனமும் அட போடா வைத்தது..
மேலும் தமிழ் வின் "நெஜமா தான் சொல்றியா"
பூ கிளைமாக்ஸில் பார்வதியிடம் மன்னிப்பு கேட்கும் பேனாக்காரர் சொல்லும் ஒற்றை வரி முழு படத்தையும் சொல்லிவிடும்.
"எனக்கு ஒரு கனவு இருந்திச்சு, உனக்கும் ஒரு கனவு இருந்திச்சு, ஆனா பெரிய படிபெல்லாம் படிச்ச அந்த பொண்ணுக்கும் ஒரு கனவு இருந்தது தெரியாம போச்சுமா"

T.V.Radhakrishnan said...

அருமையான பதிவு.

gangram said...

romba palya padhivukku ipppo thaan padichen.. miga arumai... :).

இதையும் படியுங்கள்