Friday, May 15, 2009

Jaane Tu ya jaane na - விமர்சனம்

ஆமீர்கான் தயாரிப்பில், Abbas Tyrewala இயக்கத்தில் 2008- ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம். நட்பு என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு அலையும் காதல் பறவையை, இரு நண்பர்கள் மிக தாமதமாக உணர்ந்து கொள்ளும் இனிப்பான காதல் கதை.

ஜெனிலியாவும், இம்ரானும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது நெருக்கத்தை உணர்ந்த ஜெனிலியாவின் பெற்றோர் இம்ரானையே திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். அப்போது இருவரும் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் என்று திட்டவட்டமாக மறுத்து விடுகின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் தாங்கள் இருவரும் வேறு யாரையாவது காதலிக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

இம்ரான் ஒரு பெண்ணையும், ஜெனிலியா ஒரு பையனையும், காதலிக்க தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் இம்ரான் யாரையோ காதலிப்பதை ஜெனிலியாவாலும், ஜெனிலியாவை யாரோ ஒருவருக்கு விட்டு கொடுக்க முடியாமல் இம்ரானும் தவிக்கின்றனர். பின் தங்கள் தவறை உணர்ந்து எப்படி இருவரும் இணைகிறார்கள் என்பது சுவாரஸ்யமான திரைக்கதை.

இறந்து போன பூனைக்காக அழுவதில் தொடங்குகிறது ஜெனிலியாவின் சாம்ராஜ்யம். ஜெனிலியாவின் துள்ளலும், அடிக்கடி மாறும் அவரது கண்களின் எக்ஸ்பிரஷன்களும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். இம்ரான் அவர் காதலியுடன் இருக்கும் சமயங்களில் "இத்தனை நாள் தன்னுடன் மட்டுமே நெருக்கமாக இருந்த ஃப்ரெண்ட் இப்போது வேறு யாருடனோ இருக்கிறானே" என்ற இயலாமையில் தவிக்கும் காட்சிகள் வெகு அருமை
.

சமீபத்தில் (என் தோழியின் உபயத்தால்) ஜேம்ஸ் ஹில்டன் எழுதிய Morning Journey' யின் தொடர்ச்சியான "My dear friend you are in love, but Iam alone" புத்தகம் படிக்க நேர்ந்தது. அதில் ஹில்டன் மிக அழகாக ஒரு வரி எழுதி இருப்பார்.

எல்லா சராசரி நட்பின் ஆயுட்காலமும், ஒரு பெண் குறுக்கிடும் வரையில்தான். ஒரு நண்பன் நம்மை புறக்கணிக்கிறான் என்ற எண்ணம் எப்போது தோன்றுகிறதோ, அப்போதே அங்கு நட்பு தற்கொலை செய்து கொள்கிறது என்று மிக அழகாக எழுதி இருப்பார். அதே போல ஒரு புறக்கணிப்பு ஜெனிலியாவிற்கு இம்ரானால் வருகிறது.

உனக்கு புது கேர்ள்ஃப்ரெண்ட் கிடைச்சிட்டதுனால, இந்த ஃப்ரெண்ட் உனக்கு தேவையில்லாத ஒருத்தியா ஆகிட்டேனா என்று ஜெனிலியா கேட்கும் காட்சிகள் உணர்ச்சிபூர்வமானவை. இம்ரான் மேல் கோபம் கொண்டு, ஒரு வேகத்தில் ஜெனிலியாவும் ஒருவனை காதலிக்க தொடங்க, இங்கு தன் போர்வையை விலக்க தொடங்குகிறது இம்ரானின் நட்பு.
" கஹி து ஹோகி" பாடலில் ஜெனிலியாவை அவள் காதலன் முத்தமிட, ஆத்திரமும், இயலாமையும் கொண்ட தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் இம்ரான். அதே கோபத்தில் தன் காதலியை திட்டி தீர்க்கும் இடமும் அருமையான காட்சிகள். ஏர்போர்ட்டில் அதிகாரிகளிடம் சிக்கி, இம்ரான் பாடல் பாடுகையில் நமக்கும் பற்றிக்கொள்கிறது காதல் "தீ". இம்ரானை பிடித்த அதிகாரி, அதே பாடலை பாடிக்காட்டுகையில் வெடிச்சிரிப்பு.

ஒரு இளமை துள்ளலான திரைப்படத்தில் இம்ரானின் அம்மா, போலிஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளும், அந்தக்கனவும், படத்திற்கு வேகத்தடை. அது மட்டும் அல்லாமல் ஃபோட்டோ ஃப்ரேமுக்குள் இருந்து ஒரு கதாபாத்திரம் பேசுவது போன்ற காட்சிகள் நாம் பாலச்சந்தரின் திரைப்படங்களில் பார்த்ததே.

இவ்வளவு இளமையான ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க நம் A.R.ரஹ்மானை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

"கபி கபி" பாடலிலும், "பப்பு காண்ட் டான்ஸ்" பாடலிலும் இளசுகளை கிறுக்கு பிடித்து ஆட வைத்திருக்கிறார் A.R.ரஹ்மான். நிச்சயமாய் சொல்லலாம் இந்தப்படம் ஒரு மியூஸிகல் கொண்டாட்டம் என்று...

மனோஜ் லோபோ'வின் ஒளிப்பதிவு இமை கொட்டாமல் பார்க்க வைக்கிறது. இந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரியாத வரம் வேண்டும் திரைப்படத்தின் பாதிப்பு வருவதை தடுக்க முடியவில்லை. நட்பின் ஊடாக ஒரு காதல் பயணத்திற்கு நம்மை அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர். A.R.ரஹ்மானின் பின்னணி இசை, நம்மை அந்த கதாபாத்திரங்களுடனே பயணிக்க வைக்கிறது.

இந்தப்படம் பார்த்தவர்களின் செல்ஃபோன், ஐபாட்' இல் நிச்சயம் "கபி, கபி" பாடல் Favourite List' இல் இடம் பெற்றிருக்கும். சிறிதாய் விதைத்து, பெரிதாய் அறுவடை செய்திருக்கிறார் ஆமீர்கான்.

"ஜானே தூ.... யா ஜானே னா" இளமை கொண்டாட்டம்

14 comments:

rahul said...

வாவ்.. சூப்பர் விமர்சனம்.... ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க. நான் இன்னும் பார்க்கலை... பார்த்திட்டு சொல்றேன்.. உங்க விமர்சனம், படம் பார்க்கனுங்கிற ஆர்வத்தை தூண்டுது..

Anonymous said...

coool tats my favourite movie too :)u have advertised it in a very cool maw manner.. it makes me to watch it again... keep it up Mr. Mani well done good job:)

nadhiya said...

சூப்பர்... எனக்கு ரொம்ப பிடிச்ச ஹிந்தி படங்கள்ல இதுவும் ஒண்ணு.. Such a Lovely Movie.... என்னோட ஐபாட்'ல கபி கபி சாங் இருக்கு...
// இங்கு தன் போர்வையை விலக்க தொடங்குகிறது இம்ரானின் நட்பு. //

இந்த லைன் ரொம்ப அழகா இருக்கு... நம்ம ஃப்ரெண்ட் நம்மளை விட்டுட்டு, வேற யாரோ ஒருத்தர் கூட ரொம்ப க்ளோஸா இருக்கறது ரொம்ப pain' ஆன விஷயம். ஜெனிலியா அதை ரொம்ப அழகா வெளிப்படுத்தி இருப்பாங்க.

கவிதை காதலன் said...

கண்டிப்பா பாருங்க ராகுல்.. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

கவிதை காதலன் said...

Thanks Salma...

கவிதை காதலன் said...

எஸ்.. ரொம்ப நல்ல படம் நதியா

kulandhaivelnandhini said...

உங்களது பார்வைகள் மிக துல்லியமானதாக தெளிவாக இருக்கிறது அனைத்து கருத்துகளும் அசரவக்கிறது உங்கள் கலை மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி .

archana said...

Hi... எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. இந்த பட விமர்சனத்தை தமிழ்ல படிக்கறது ஒரு புது அனுபவமா இருக்கு.....

sumi said...

hi this is one of ma fav movie.. and u expressed it in a very good manner..good taste..
good luck..

saran said...

hi....even i lik dis movie....ur review s really gud Mr.Mani....best wishes...

கவிதை காதலன் said...

thank you sumi

கவிதை காதலன் said...

thaks saran.. keep in touch

மின்சார கண்ணன் said...

ஜெனிலியா எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க ரிவியூ படிச்ச உடனே இந்த படத்தை பார்க்கணும் போல இருக்கு

சுள்ளான் said...

//"My dear friend you are in love, but Iam alone" புத்தகம் படிக்க நேர்ந்தது. அதில் ஹில்டன் மிக அழகாக ஒரு வரி எழுதி இருப்பார்.

எல்லா சராசரி நட்பின் ஆயுட்காலமும், ஒரு பெண் குறுக்கிடும் வரையில்தான். ஒரு நண்பன் நம்மை புறக்கணிக்கிறான் என்ற எண்ணம் எப்போது தோன்றுகிறதோ, அப்போதே அங்கு நட்பு தற்கொலை செய்து கொள்கிறது என்று மிக அழகாக எழுதி இருப்பார்.//

Excellent lines.... இந்த புக் எங்க கிடைக்கும்?

இதையும் படியுங்கள்