Thursday, May 14, 2009

பசங்க - எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து...


அட... நாம் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறோமா? கிள்ளிப்பார்த்துக் கொள்ளதான் வேண்டி இருக்கிறது

தமிழ் சினிமாவின் அத்தனை கிளிஷேக்களும் இந்த "பசங்களால்" மீறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம், ஒரு கடவுள், ஒரு காதலன், ஒரு குழந்தை, இன்னும் எத்தனையோ உருவங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஒவ்வொரு ரூபமாக வெளிப்படும். நீங்கள் இந்தப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இரண்டரை மணி நேரமும் உங்களுக்குள் இருக்கும் அந்த குழந்தை வெளியே எகிறி குதித்து துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கும்.


அது சரி படத்தின் கதை என்ன? ஆறாம் வகுப்பில் பள்ளிக்கே வில்லனாக இருக்கும் ஜீவா, அந்த பள்ளிக்கூடத்திற்கு புதிதாய் வரும் அன்புக்கரசுவிடம் ஆரம்பம் முதலே விரோதம் பாராட்டுகிறான். இந்த இருவருக்கும் நடக்கும் ஈகோ யுத்தங்கள், சண்டைகள், இருவரது குடும்பமும் நடுத்தெருவில் வந்து திட்டிக்கொள்ளும் அளவிற்கு அமைகின்றன. பின் குடும்பங்கள் எப்படி இணைந்தன?, பசங்க எப்படி இணைந்தார்கள்? என்பதை ஹைக்கூ திரைக்கதையால் வரைந்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.


அன்பரசு, ஜீவா, பக்காடா, குட்டிமணி, புவனேஷ்வரி, என அத்தனை குட்டிஸ்'களின் கேரக்டர்களும் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது. அதுதான் நம்மை சுவாரஸ்யத்தின் உச்சிக்கு அழைத்து செல்கின்றன. தோளில் கை போட்டால் குள்ளமாகி விடுவேன், பேசினால் மிக மிக, என்று போர்டில் எழுதுவது, காற்றில் பைக் ஓட்டியபடியே ஓடுவது, என சின்ன வயதில் நாம் அனுபவித்த அத்தனை விஷயங்களும் படத்தில் ஆங்காங்கே அள்ளி தெளிக்கப்பட்டிருக்கின்றன. அவைதான் நம்மை படத்தோடு கட்டிப்போட்டு வைக்கின்றன.


இந்த குட்டி பசங்களின் சுவாரஸ்யங்களுக்கு இடையில் ஒரு மெல்லிய காதலும் இருக்கிறது. ஜீவாவின் அக்காவுக்கும் , அன்பரசுவின் L.I.C சித்தப்பாவுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி காதல் விளையாட்டுக்கள் குறும்புத்தனத்தின் உச்சம். இதுதான் அதுதான் என்று என்று இல்லாமல் எல்லா காட்சிகளும் கைத்தட்டல் வாங்குகின்றன. பசங்க மீது போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுப்பதில் துவங்கும் சிரிப்பு வெடிகள், கடைசி காட்சி வரை நீள்வது நமக்கு ஒரு ஆனந்த அனுபவம்.

இரண்டு குடும்பங்களும் நடுரோட்டில் அடித்து கொள்ளும் அந்த காட்சியில் கூட, ஜீவாவின் இரண்டு வயது தம்பி ஓடி வந்து வாத்தியாரை அடித்து விட்டு எப்புடி? என்று கேட்கும் காட்சியில் தியேட்டர் சிரிப்பிலும் கைத்தட்டலிலும் அதிர்கிறது.

சினிமா கிரவுண்டில் ஒரு ரன் அடிப்பதற்கே, அஜீத்'களும், விஜய்'களும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், இந்த "பசங்க" சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி தள்ளுகிறார்கள். குழந்தைகளுக்கான திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று "நியூ" திரைப்படத்தில் ஆபாச அசிங்கங்களை நிறைவேற்றிய S.J.சூர்யாவை உட்கார வைத்து இந்தப் படத்தை போட்டுக்காட்ட வேண்டும். இந்தப்படம் சிறுவர்களுக்கு மட்டும் அல்ல. பெரியவர்களுக்கான ஒரு மிக நல்ல மெசேஜும் இந்தப் படத்தில் இருக்கிறது. பெற்றோர்கள் போடும் சண்டையால் பிள்ளைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெளிவாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு சிறுவர்கள் சுமக்கும் புத்தக பையைப்போல் அவர்களுடனே பயணித்திருக்கிறது. குறிப்பாய் அன்பரசு கைப்பிடிக்குள் சூரியனை காட்டும் காட்சி அற்புதம். அன்பரசு வண்டியை ஸ்டார்ட் செய்யும் காட்சிகளில் சவுண்ட் ரெக்கார்டிங்கும், ஒலித்தொகுப்பும் மாயஜாலம் செய்கின்றன. அஞ்சலி அஞ்சலி, மொட்டை மாடி, ராத்திரி நேரத்தில், என அஞ்சலி திரைப்படத்தை நினைத்தவுடன் அந்தப்படத்தின் பாடல்கள் நம் உதடுகளில் தானாகவே வந்து அமர்ந்து கொள்ளும். அது போல இந்தப்படத்தில் பாடல்களுக்காய் மெனக்கெடாதது நிச்சயம் ஒரு குறையே.


"அன்பாலே அழகாகும் வீடு" பாடல் இன்னமும் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன், நீங்களும் ஜோஷ்வா ஸ்ரீதர் போல் One Film Wonder 'ஆக இருந்துவிடக்கூடாது. ஆல் தி பெஸ்ட் நெக்ஸ்ட் டைம். கைகள் வலிக்கும் அளவிற்கு இயக்குநர் பாண்டிராஜை பாராட்டலாம். எந்த பெரிய ஹீரோக்களின் பின்னாலும் ஜால்ரா சாமரம் வீசிக்கொண்டு அலையாமல், மிக நேர்மையாய் ஒரு திரைப்படத்தை அழகியலுடன் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.


இவ்வளவு பேரையும் பாராட்டிவிட்டு மிக முக்கியமான ஒருவரை பாராட்டவில்லை என்றால் அது மிகப்பெரிய துரோகம். அவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் "இயக்குநர் சசிக்குமார்". கமர்ஷியல் கன்றாவியில் சிக்கித்தவிக்கும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எடுக்க மிகத்தைரியம் வேண்டும். சசிக்குமார் மட்டும் இல்லை என்றால் நாம் நிச்சயம் ஒரு நல்ல திரைப்படத்தை இழந்திருப்போம். சசிக்குமாருக்கு ஒரு வேண்டுகோள், நான்கு ஃபைட், ஐந்து குத்துப்பாடல்கள், ஹீரோயிச பில்டப் டயலாக்குகளுடன் உங்கள் அலுவலகத்திற்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு தயவு செய்து உங்கள் வாசலில் ஒரு No Entry போர்டு வைத்து விடுங்கள்.


உங்கள் பள்ளி நாட்களையும், உங்கள் நண்பர்களுடன் நீங்கள் அடித்த லூட்டிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டுமானால் இந்தப்படத்தை சென்று பாருங்கள். உங்களையே கண்ணாடியில் பார்த்த ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.


மொத்தத்தில் பசங்க....... பரவசப்படுத்தறாங்க....

14 comments:

Anonymous said...

ஓகே நல்ல பதிவு , நல்ல படம்.

கவிதை காதலன் said...

// ஓகே நல்ல பதிவு , நல்ல படம்//

மிக்க நன்றி... உங்க பேரை சொல்லி இருக்கலாம்

nadhiya said...

நானும் பார்த்தேன்.. ரொம்ப நல்லா இருந்துச்சு. இந்த மாதிரி மனசு விட்டு சிரிச்சு எவ்ளோ நாளாச்சு? ரொம்ப நல்ல படம். உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் பார்க்க சொல்லுங்க...

archana said...

ஹாய்.. உங்க விமர்சனம் Excellent'ஆ இருக்கு. உங்க ஃப்ரொஃபைல் பார்த்தேன். உங்க டேஸ்ட் கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சின்ன சின்ன விஷயத்தை கூட ரொம்ப அழகா கவனிச்சு எழுதி இருக்கீங்க. Keep it up.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு நல்ல படத்தை மக்கள் ஆதரிப்பதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்

Anonymous said...

It's so nice wen yu appreciate about a movie which yu watch:).. i haven't watched yet.. let me go n watch it now itself..

புதுகைத் தென்றல் said...

எங்க ஊரு பசங்க சாதிச்சிட்டாங்கன்னு கேக்கும்போது
சந்தோஷமா இருக்கு. அருமையான பதிவுக்கும், விமர்சனத்துக்கும் நன்றி

கவிதை காதலன் said...

உண்மையிலையே உங்க..... சாரி நம்ம பசங்க சாதிச்சிட்டாங்க தென்றல்.....

கவிதை காதலன் said...

//It's so nice wen yu appreciate about a movie which yu watch:).. i haven't watched yet.. let me go n watch it now itself..//


கண்டிப்பா பாருங்க சல்மா.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கவிதை காதலன் said...

// சின்ன சின்ன விஷயத்தை கூட ரொம்ப அழகா கவனிச்சு எழுதி இருக்கீங்க. Keep it up.//


தேங்க்ஸ் அர்ச்சனா... நமக்கு ஒரு விஷயம் பிடிச்சு போச்சுன்னா நிச்சயம் சின்ன சின்ன விஷயத்தை கூட ரசிக்க ஆரம்பிச்சுடுவோம்.. ரொம்ப நல்ல படம் மிஸ் பண்ணாம பாருங்க...

கவிதை காதலன் said...

மிஸ் நதியா... உங்களுக்கு படத்துல எந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு?

bharathi said...

பசங்க படம் விமர்சனம் படித்தேன். படம் பார்த்ததைவிட உன் விமர்சனம் சூப்பர்

மின்சார கண்ணன் said...

உங்க விமர்சனநடை புது ஸ்டைல்ல இருக்கு. சவுண்ட் ரெக்கார்டிங்கும், ஒலித்தொகுப்பும் பத்தி எழுதி இருந்தது வித்தியாசம். யாருமே அதையெல்லாம் கவனிச்சு எழுத மாட்டாங்க. இருந்தாலும் எஸ். ஜே. சூர்யா மேட்டரை விட்டுருக்கலாம்.

உங்கள் நண்பன் said...

good review...just now i posted my view abt that movie http://msams.blogspot.com/2009/05/blog-post_28.html

இதையும் படியுங்கள்