Thursday, May 28, 2009

கால் கிலோ "காதல்" என்ன விலை?

பனிமலர் பொறியியல் கல்லுரியில்தான் நம் கதாநாயகி நதியா முன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள். மிக அழகானவள். (பின் நம் கதைகளில் வரும் எந்த கதாநாயகி அழகாய் இல்லாமல் இருக்கிறாள்?) பணக்காரப் பெண், Born with silver Spoon என்று சொல்வார்கள். இவளோ Born with Golden Spoon. பாட்டு, படிப்பு என அனைத்திலும் முதலிடத்தில் இருப்பதால் கல்லுரியின் செல்லம். பாதி மாணவர்கள் இவளின் இதய கல்லூரியில் காதல் படிப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள். அதனாலே என்னவோ இவள் ஆண்களை பார்க்கும் பார்வையில் அலட்சியத்தின் அளவு அதிகமாய் இருக்கும். பிரம்மனால் 55 கிலோவும் திமிரால் செய்யப்பட்டே படைக்கப்பட்டவள். நதியாவிற்கு பிடிக்காத விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் அது காதல்தான்.

ஆனாலும் நதியாவிற்கு பிடித்த ஒருவன் அந்த கல்லூரியில் இருக்கிறான் என்றால் அது விஷ்ணு மட்டும்தான். காரணம் நதியாவிடம் நட்புக் கோட்டை தாண்டி பழகியவனில்லை விஷ்ணு. அதனாலே விஷ்ணு என்றால் நதியாவிற்கு ரொம்ப பிடிக்கும். நம்மை போல் விஷ்ணுவிற்கும் காதல் பிடிக்காது என்ற எண்ணமே நதியாவிற்கு விஷ்ணுவின் மேல் மிகப்பெரிய மரியாதையை உண்டாக்கி வைத்திருந்தது. இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக கல்லூரியில் வலம் வந்தனர்.

விதி வலியதாயிற்றே. மெல்ல மெல்ல காதல் சாத்தான் விஷ்ணுவின் மனதிலும் குடி புகுந்தான். (நம் கதாநாயகன் கதாநாயகி அறிமுகம் போதும். கதைக்குள் போகலாமா?)

கல்லூரி கேன்டீன் : -

ராஜ் : மச்சி, நீ உண்மையாதான் சொல்றியாடா?

விஷ்ணு : டேய், இவ்ளோ நேரம் நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? நான் இன்னைக்கு என் லவ்வை நதியாகிட்ட சொல்லத்தான் போறேன்.

ராஜ் : டேய், கொஞ்சம் பொறுமையா இருடா.

விஷ்ணு : இல்லடா. இத்தனைநாள் பொறுமையா இருந்ததே பெரிய விஷயம். என்னால இந்த விஷயத்தை உள்ளுக்குள்ள மறைச்சி வெச்சிட்டு அவகூட இயல்பா பழக முடியலடா.


ராஜ் : மச்சான் ஒரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்க. யார் கிட்டயும் பழகாத நதியா, இவ்ளோ நாளா உன் கூட மட்டும் க்ளோஸா பழகறதுக்கு என்ன காரணம்? அவளை மாதிரியே உனக்கும் காதல் பிடிக்காது அப்படிங்கிற ஒரே விஷயத்துனாலதானே. இப்போ அவகிட்டயே போய் நீ காதலிக்கிறதை சொன்னா அவ உன்னைப்பத்தி என்னடா நினைப்பா?

விஷ்ணு : இல்ல மச்சான்.. என்ன நடந்தாலும் சரி.. இன்னைக்கு என் காதலை நதியாகிட்ட சொல்லத்தான் போறேன். அவ என்னை புரிஞ்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இவ்ளோ நாளா அவ கூட பழகி இருக்கேன். என் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு நிச்சயமா அவளுக்கு தெரியாம இருக்காது. என்னோட காதலை நிராகரிக்கறதுக்கு நிச்சயமா அவளால ஒரு காரணம் கூட சொல்ல முடியாது. நான் என் காதலை அவகிட்ட சொன்ன உடனே அவளோட சந்தோஷத்தை நான் கண்கூடா பார்க்கணும். எனக்கு என்னமோ இந்த காதலை நானா என் வாயால சொல்லனும்னுதான் அவ எதிர் பார்க்குறாளோ என்னவோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.

ராஜ் : மச்சி திரும்பவும் நான் சொல்றேன். ஒரு காதல்னால உங்களுக்குள்ள இருக்கிற நட்பு பாதிச்சிடக்கூடாது. சரி.. நீ இவ்ளோ உறுதியா இருக்கும்போது நான் என்ன சொல்றது? என்னால் சொல்ல முடிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான். "ஆல் தி பெஸ்ட்".

கிரீன் வியூ ரெஸ்ட்டாரெண்ட்..

"சொல்லு விஷ்ணு. என்ன அவ்ளோ அர்ஜென்ட்டா என் கூட பேசணும்?" என்றாள் நதியா.

மெதுவாய் தயங்கியபடியே "நதியா நீ காதலைப் பத்தி என்ன நினைக்குற?" என்றான் விஷ்ணு அவள் முகம் பார்க்காமலே.

புதிதாய் பூத்த வெள்ளை ரோஜாப்பூவாய் இருந்த நதியாவின் முகம், சிகப்பு ரோஜாவாய் மாறத்தொடங்கியது "இப்ப எதுக்கு அதைப்பத்தி பேசுற? நமக்குள்ள இதுவரைக்கும் காதல் பத்தின பேச்சே வந்தது இல்லையே."

"இப்ப பேச வேண்டிய அவசியம் இருக்கு."

"இல்லை.. நீ எதைப்பத்தி வேணும்னாலும் பேசு. ஆனா அதைப்பத்தி தான் பேசுவேன்னா நான் கிளம்பறேன்." என்றபடியே நதியா எழ,

நதி, ஒரு நிமிஷம் உட்கார், உனக்கு ஏன் இப்படி கோவம் வருது?"

சரி சொல்லு, இப்போ யாரோட காதலைப்பத்தி பேசப்போற? என்றபடியே ஒருவித கோபத்துடன் அமர்ந்தாள்.

"என்னோட காதலைப்பத்தி". என்று விஷ்ணு ஆரம்பிக்கும் முன்னே, ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை இதயத்தில் வாங்கியிருந்தாள்.

"வாட்? நீ காதலிக்கிறியா? யாரை?" என்று வார்த்தைகளை தந்தியாய் அடித்தாள்.

"நதியா, கொஞ்சம் பொறுமையா கேளு. நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போதிலிருந்தே என் காதலை உன்கிட்ட சொல்லணும்னு தவிச்சிருக்கேன். ஆனா நீ அதை எப்படி எடுத்துக்குவியோன்னு பயந்து பயந்து சொல்லாம தவிச்சிருக்கேன். எங்க நீ என்ன தப்பா புரிஞ்சுகிட்டு என்கூட பழகாம போயிடுவியோன்னு ஒரு பயத்துலதான் இத்தனை நாளா உன்கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன். ப்ளீஸ் நதியா என்ன புரிஞ்சுக்க."

"Stop it Vishunu. Enough. This is the limit. ஒரு பொண்ணு இயல்பா சிரிச்சு பேசிட்டா உடனே உங்களுக்கு காதல் வந்திடும். அப்போ இத்தனை நாளா மனசுக்குள்ள காதலை வெச்சிக்கிட்டுதான் என் கூட ஃப்ரெண்டா பழகிக்கிட்டு இருந்தியா? அதெப்படிடா உங்களுக்கு அழகான பொண்ணுங்களை பார்த்தா மட்டும் காதல் பொத்துகிட்டு வந்திடுது? ஏன் கொஞ்சம் கருப்பா, அழகுல கொஞ்சம் கம்மியா, இருக்கிற பொண்ணுங்க மேல உங்களுக்கு காதல் வர மாட்டேங்குது? இதே நம்ம க்ளாஸ்ல படிக்கிற சுனிதா மேல ஏன் சார் உங்களுக்கு காதல் வரலை? ஏன்னா அவளுக்கு கால் கொஞ்சம் ஊனம். அந்த அளவுக்கு கலரா இல்லை. நான் அழகா இருக்கேன். அதனால என் மேல உனக்கு காதல் வந்திருக்கு. அப்படித்தானே. சரியான சுயநலக்காரன்டா நீ."

"ஹலோ மிஸ் நதியா, முடிச்சிட்டீங்களா? உங்க ஃப்ரெண்ட் மேல நீங்க வெச்சிருக்கிற நம்பிக்கை இவ்வளவுதானா? நான் உங்களை என்னமோன்னு இல்ல நினைச்சேன்.நான் ஒண்ணும் உங்களை லவ் பண்ணலை. நான் லவ் பண்றது உங்க டியர் ஃப்ரெண்ட் சுனிதாவதான். அவ தான் ஊனமா இருக்கிறோம்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையிலேயே இருக்கா. அதனால்தான் யார் கூடவும் சரியா பேச மாட்டேங்குறா. சரி உங்க கூட மட்டும் க்ளோஸா இருக்காளே, என் காதலை உங்க மூலமா அவகிட்ட சொல்லலாம்னு பார்த்தேன். அது மட்டும் இல்லாம, என்னோட காதலை இவ்ளோ க்ளோஸ் ஃபிரண்டான உங்ககிட்ட இத்தனை நாளா சொல்லாம இருக்கோமே அப்படிங்கிற குற்ற உணர்ச்சிலதான் உங்ககிட்ட சொன்னேன். புரியுதா?

சத்தியமா சொல்றேன். பரிதாபப்பட்டு எல்லாம் நான் சுனிதாவை லவ் பண்ணலை. உண்மையிலேயே அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பொண்ணுன்னா அப்படித்தான் இருக்கணும். எப்படியாவது நான் சுனிதா மேல வெச்சிருக்கிற காதலை அவகிட்ட எடுத்து சொல்லி இந்த லெட்டரை குடுத்துடுங்க. இந்தாங்க" என்றபடியே தன் பாக்கெட்டில் இருந்து கடிதத்தை எடுத்து நதியாவிடம் கொடுத்தான் விஷ்ணு.

Wednesday, May 20, 2009

Love, the war begins = புத்தக விமர்சனம்.

புத்தகம் பற்றி ஒரு அறிமுகம் : "Mary Tate Engels" என்ற அமெரிக்க எழுத்தாளர் காதலையும், அது சார்ந்த நம்பிக்கையையும், காதல் துரோகத்தின் வலியையும் மையப்படுத்தி எழுதிய ஒரு , நாவல்தான் Love, the war begins . இவரது Love Is All That Matters புத்தகமும் ஒரு மிகக் சிறந்த படைப்பே. ஆனாலும் இந்த நாவலை குறிப்பிட வேண்டியதின் அவசியம் என்னவென்றால், இந்த புத்தகத்தின் உரையாடல்கள். ஆம், கெவின் அட்னர், லிசா கார்லட், ஜெனிஃபர் டெய்சி, கதாபாத்திரங்களின் வழியே ஒரு பரவச அனுபவத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர்.

சரி இனி விமர்சனத்திற்குள் செல்வோம்....

கெவினும் லிசாவும் காதலர்கள். எப்படி என்றால், சின்ன சின்ன விஷயங்களில் கூட அக்கறை எடுத்து காதலிக்காக, எதையும் செய்வான் கெவின். ஆனால் லிசாவுக்கோ அது டைம்டேபிள் போட்டு செய்யப்பட வேண்டிய வேலை. லிசாவின் பிறந்த நாளுக்காக அவள் கேட்ட, பரிசை வாங்குவதற்காக, விறைக்கும் குளிரில் அவன் படும் கஷ்டங்கள் நமக்கே பாவமாய் இருக்கிறது. ராத்திரி 12 மணிக்கு அவனிடம் இருந்து பரிசை வாங்கியதும் "தூக்கம் வருது டியர்" என்றபடியே லிசா செல்லும் போது நமக்கும் வலிக்கிறது. இங்கு கைதட்டல் பெறுகிறார் கதாசிரியர்.

அதே லிசா தன பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வாள் என அந்த நாள் முழுதும் காத்திருந்து ஏமாற்றமடையும் கெவின், அவளை நேரில் சந்தித்து இன்னைக்கு என் பிறந்த நாள் என்று சொல்லும் போது "ஓ! சாரி டியர், மறந்துட்டேன். என்று லிசா சாதாரணமாக சொல்லும் போது வெறுப்பின் உச்சத்திற்கே போகிறான் கெவின்".
எதையுமே ரசிக்க தெரியாத, சின்ன சின்ன அன்பை கூட பகிர்ந்துக்க முடியாத உன்னுடன் இனிமேல் எனக்கு காதல் தேவை இல்லை என்று கெவின் விலகிப்போக, காதல் என்ற பெயரில் என்னை தேவை இல்லாமல் டார்ச்சர் செய்யும் உன் தொல்லை எனக்கும் தேவை இல்லை என லிசாவும் கூற, இருவரும் விலகிப்போகிறார்கள். எதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டானே தவிர, கெவினால் லிசாவை மறக்க முடியவில்லை. அவள் வரும் வழியில் நிற்பது, அவள் கண்ணில் பட வேண்டும் என்பதற்காக தேவையில்லாத செயல்கள் செய்வது என உருகுகிறான் கெவின்.

ஒரு கட்டத்தில் லிசா யாரோ வேறு ஒருவனுடன் சுற்ற தொடங்க, அதிர்ச்சியில் உறையும் கெவின் உலக காதல்தோல்வி விதிகளின்படி தேவதாஸாக சுற்றி, பரீட்சையில் ஃபெயில் ஆகிறான். அவன் எதிர் வீட்டில் இருக்கும் ஜெனிஃபர் டெய்சி அவனுக்கு பல வகையில் உதவுகிறாள்.

ஒரு கால கட்டத்தில் ஜெனிஃபர், தன் காதலை கெவினிடம் சொல்ல, "கருணைக்கு பரிசாய் காதலை கேட்காதே" என்று கெவின் அவளிடம் சொல்லுகிறான். இந்த இடத்தில் அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல் வெறும் 5 வரிகள் மட்டும்தான். ஆனால் இருவரது உணர்வுகளை ஆசிரியர் 17 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். அற்புதமான காட்சி இது.

பின் லிசா அந்தக்காதலும் பிடிக்காமல், தான் செய்தது தவறு என உணர்ந்து கெவினிடம் வருகிறாள், உன் சுயநலத்தின் உருவத்திற்கு தயவு செய்து காதல் சாயம் பூசாதே. எப்போது உன்னால் என்னை மறந்து இன்னொருவனுடன் சுற்ற முடிந்ததோ அப்போதே நீ காதலை கொன்று விட்டாய் என கெவின் அவளை புறக்கணிக்கிறான்.


கெவின் வீட்டில் நடக்கும் இந்த உரையாடல்களின் வழியே துரோகத்தின் வலியையும், காதலின் அழகையும் மிக புதுமையாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். இதன் தொடர்ச்சியில் கெவினின் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? கெவினின் வாழ்க்கை என்ன ஆயிற்று? போன்ற சுவாரஸ்யங்கள் இந்த புத்தகம் முழுதும் விரவிக்கிடக்கிறது.

நாம் எதிர்பாராத, பல "அட" போட வைக்கும் சம்பவங்களை இந்நாவலில் அரங்கேற்றியுள்ளார் ஆசிரியர். காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் கெவின் கதாபாத்திரத்தையும், காதல் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் லிசா கதாபாத்திரத்தையும், படைத்து விளையாடி இருக்கிறார் Mary Tate Engels.

எனக்கு என்னமோ, இந்த நாவலை நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் படித்திருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த நாவலில் இருக்கும் பல காட்சிகள், நம் தமிழ் சினிமாவை கண்முன் நிறுத்துகின்றன. இருந்தாலும் காதலின் அழகியலையும், துரோகத்தையும், ஒரே புத்தகத்தில் இரு வேறு கதாபாத்திரங்களின் தன்மைகள் வழியே படைத்திருந்த இந்நூலின் ஆசிரியர் பாராட்டுதலுக்கு உரியவர்.

Hats Off to "Mary Tate Engels".

மொத்தத்தில் "Love, the war begins" என்ற இந்த நாவலின் தலைப்பு நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரி..

Tuesday, May 19, 2009

செல்ஃபோன் கொஞ்சல்கள்பொதுவான விசாரிப்புகளோடு
மெதுவாய் துவங்கும்
நம் தொலைபேசி உரையாடல்கள்...

நத்தையின் வேகத்தைப் போல்,
வார்த்தைகள் நகர,
சிறுத்தையின் வேகத்தை போல்,
நிமிடங்கள் நகர,
அர்த்தங்களின்றி பேசிக்கொண்டு இருப்போம்.

உன் புன்னகையை ரசிக்க வேண்டும்
என்பதற்காக ஏதேதோ சொல்வேன் நான்.
புன்னகைப்பதே தெரியாமல் புன்னகைப்பாய்.
அது எப்படி உன்னால் மட்டும் முடிகிறது?
கல் நெஞ்சம்தான் உனக்கு....

எதையாவது சொல்லிவிடுவாய்..
என்னவென்று கேட்டால்
ஒன்றும் இல்லை என்பாய்.
திமிரின் மொத்தமும் நீதான்.

மொட்டை மாடியில் அமர்ந்து
உன்னுடன் பேசிக்கொண்டு இருக்கையில்
என்னுடன் வந்து அமர்ந்து கொள்கிறது நிலா.
நீ பேசுவதை ஒட்டுக்கேட்க...

உன் வார்த்தை கேட்கும் நேரங்களில்
மோட்சம் பெறுகின்றன என் செவிகள்.
என்ன பாவம் செய்தது என் இதழ்கள்?


தனிமையிலே இனிமை காண முடியுமா?
ஏன் முடியாது..
எனக்கு ஒரு செல்ஃபோன் கொடுத்து
செவ்வாய் கிரகத்தில் விட்டுவிட்டால் கூட
இனிமை காண்பேன்.

யார் SMS அனுப்பினாலும்
அது நீயாய் இருக்க கூடாதா
என்றே மனம் அடித்து கொள்கிறது.

நீ அழைக்கையில் மட்டும் ஒலிக்கும் பாடல்,
வந்திருப்பது கால் அல்ல,
காதல் என்று சொல்லிப் போகிறது

உனக்கான ரிங்டோன்,
உனக்கான SMS டோன்,
உன் அழைப்புக்கான புகைப்படம்
என ஒவ்வொன்றாக அலங்கரித்து வைத்திருப்பேன்.

ஆனால் உன்னிடமிருந்து
எதுவுமே வருவதில்லை.
கேட்டால் "காத்திருத்தல் சுகம்' என சொல்வாய்.
அதை "வலி" என்று எப்படி
உனக்கு புரிய வைப்பது?

பீட்ஸா'வுக்காக காத்திருப்பதில்
வேண்டுமானால் சுகம் இருக்கலாம்.
ஆனால் நான் உணவுக்காக காத்திருக்கிறேன்,
அதுவும் பலநாள் பட்டினியுடன்..

என்னுடன் பேசும் நேரங்களில்
இயர் ஃபோன் மாட்டி கொள்ளாதே.
உன் இதழ்களின் அருகாமையை
உணர முடியாமல்
தவிக்கிறது என் மனம்.

அதனால் தான் ஃ போனை
"அருகில் வைத்து பேசு,
அருகில் வைத்து பேசு" என்பேன்.
மற்றபடி ஒன்றுமே கேட்கவில்லை
என்று நான் சொல்வதெல்லாம் பொய்.
அது உனக்கும் தெரியும்..

ஒரு மணி நேரமாய் என்ன பேசினோம்?
அப்புறம்... என்ற வார்த்தையை மட்டும்
ஆயிரம் முறையாவது சொல்லி இருப்போம். ௦௦௦௦௦

நீயாக கொடுப்பாய் என நானும்,
நானாக கொடுப்பேன் என நீயும்,
"அப்புறம் அப்புறம்" என்று வார்த்தைகளை அப்புறப்படுத்தியபடியே பேசிக்கொண்டு இருப்போம்.

கொடுக்காத முத்தத்திற்காக நீயும்,
பெறாத முத்தத்திற்காக நானும்,
தயக்கமுலாம் பூசியபடியே
பேசிக்கொண்டு இருப்போம்.

கடைசிவரை இருவரது
இதழ் சிறைகளில் இருந்தும்
முத்தப்பறவை விடுதலை ஆவதே இல்லை.

ம்ம்ம்ம்ம்.... பார்க்கலாம்...
நமக்குள் நடக்கும் இந்த நாடகம்
எப்போது முடிவுக்கு வருகிறது என்று?

வேண்டாம்.. வேண்டாம்..
அது தொடரட்டுமே
இதுவும்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

Friday, May 15, 2009

Jaane Tu ya jaane na - விமர்சனம்

ஆமீர்கான் தயாரிப்பில், Abbas Tyrewala இயக்கத்தில் 2008- ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம். நட்பு என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு அலையும் காதல் பறவையை, இரு நண்பர்கள் மிக தாமதமாக உணர்ந்து கொள்ளும் இனிப்பான காதல் கதை.

ஜெனிலியாவும், இம்ரானும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது நெருக்கத்தை உணர்ந்த ஜெனிலியாவின் பெற்றோர் இம்ரானையே திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். அப்போது இருவரும் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் என்று திட்டவட்டமாக மறுத்து விடுகின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் தாங்கள் இருவரும் வேறு யாரையாவது காதலிக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

இம்ரான் ஒரு பெண்ணையும், ஜெனிலியா ஒரு பையனையும், காதலிக்க தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் இம்ரான் யாரையோ காதலிப்பதை ஜெனிலியாவாலும், ஜெனிலியாவை யாரோ ஒருவருக்கு விட்டு கொடுக்க முடியாமல் இம்ரானும் தவிக்கின்றனர். பின் தங்கள் தவறை உணர்ந்து எப்படி இருவரும் இணைகிறார்கள் என்பது சுவாரஸ்யமான திரைக்கதை.

இறந்து போன பூனைக்காக அழுவதில் தொடங்குகிறது ஜெனிலியாவின் சாம்ராஜ்யம். ஜெனிலியாவின் துள்ளலும், அடிக்கடி மாறும் அவரது கண்களின் எக்ஸ்பிரஷன்களும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். இம்ரான் அவர் காதலியுடன் இருக்கும் சமயங்களில் "இத்தனை நாள் தன்னுடன் மட்டுமே நெருக்கமாக இருந்த ஃப்ரெண்ட் இப்போது வேறு யாருடனோ இருக்கிறானே" என்ற இயலாமையில் தவிக்கும் காட்சிகள் வெகு அருமை
.

சமீபத்தில் (என் தோழியின் உபயத்தால்) ஜேம்ஸ் ஹில்டன் எழுதிய Morning Journey' யின் தொடர்ச்சியான "My dear friend you are in love, but Iam alone" புத்தகம் படிக்க நேர்ந்தது. அதில் ஹில்டன் மிக அழகாக ஒரு வரி எழுதி இருப்பார்.

எல்லா சராசரி நட்பின் ஆயுட்காலமும், ஒரு பெண் குறுக்கிடும் வரையில்தான். ஒரு நண்பன் நம்மை புறக்கணிக்கிறான் என்ற எண்ணம் எப்போது தோன்றுகிறதோ, அப்போதே அங்கு நட்பு தற்கொலை செய்து கொள்கிறது என்று மிக அழகாக எழுதி இருப்பார். அதே போல ஒரு புறக்கணிப்பு ஜெனிலியாவிற்கு இம்ரானால் வருகிறது.

உனக்கு புது கேர்ள்ஃப்ரெண்ட் கிடைச்சிட்டதுனால, இந்த ஃப்ரெண்ட் உனக்கு தேவையில்லாத ஒருத்தியா ஆகிட்டேனா என்று ஜெனிலியா கேட்கும் காட்சிகள் உணர்ச்சிபூர்வமானவை. இம்ரான் மேல் கோபம் கொண்டு, ஒரு வேகத்தில் ஜெனிலியாவும் ஒருவனை காதலிக்க தொடங்க, இங்கு தன் போர்வையை விலக்க தொடங்குகிறது இம்ரானின் நட்பு.
" கஹி து ஹோகி" பாடலில் ஜெனிலியாவை அவள் காதலன் முத்தமிட, ஆத்திரமும், இயலாமையும் கொண்ட தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் இம்ரான். அதே கோபத்தில் தன் காதலியை திட்டி தீர்க்கும் இடமும் அருமையான காட்சிகள். ஏர்போர்ட்டில் அதிகாரிகளிடம் சிக்கி, இம்ரான் பாடல் பாடுகையில் நமக்கும் பற்றிக்கொள்கிறது காதல் "தீ". இம்ரானை பிடித்த அதிகாரி, அதே பாடலை பாடிக்காட்டுகையில் வெடிச்சிரிப்பு.

ஒரு இளமை துள்ளலான திரைப்படத்தில் இம்ரானின் அம்மா, போலிஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளும், அந்தக்கனவும், படத்திற்கு வேகத்தடை. அது மட்டும் அல்லாமல் ஃபோட்டோ ஃப்ரேமுக்குள் இருந்து ஒரு கதாபாத்திரம் பேசுவது போன்ற காட்சிகள் நாம் பாலச்சந்தரின் திரைப்படங்களில் பார்த்ததே.

இவ்வளவு இளமையான ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க நம் A.R.ரஹ்மானை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

"கபி கபி" பாடலிலும், "பப்பு காண்ட் டான்ஸ்" பாடலிலும் இளசுகளை கிறுக்கு பிடித்து ஆட வைத்திருக்கிறார் A.R.ரஹ்மான். நிச்சயமாய் சொல்லலாம் இந்தப்படம் ஒரு மியூஸிகல் கொண்டாட்டம் என்று...

மனோஜ் லோபோ'வின் ஒளிப்பதிவு இமை கொட்டாமல் பார்க்க வைக்கிறது. இந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரியாத வரம் வேண்டும் திரைப்படத்தின் பாதிப்பு வருவதை தடுக்க முடியவில்லை. நட்பின் ஊடாக ஒரு காதல் பயணத்திற்கு நம்மை அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர். A.R.ரஹ்மானின் பின்னணி இசை, நம்மை அந்த கதாபாத்திரங்களுடனே பயணிக்க வைக்கிறது.

இந்தப்படம் பார்த்தவர்களின் செல்ஃபோன், ஐபாட்' இல் நிச்சயம் "கபி, கபி" பாடல் Favourite List' இல் இடம் பெற்றிருக்கும். சிறிதாய் விதைத்து, பெரிதாய் அறுவடை செய்திருக்கிறார் ஆமீர்கான்.

"ஜானே தூ.... யா ஜானே னா" இளமை கொண்டாட்டம்

Thursday, May 14, 2009

பசங்க - எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து...


அட... நாம் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறோமா? கிள்ளிப்பார்த்துக் கொள்ளதான் வேண்டி இருக்கிறது

தமிழ் சினிமாவின் அத்தனை கிளிஷேக்களும் இந்த "பசங்களால்" மீறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம், ஒரு கடவுள், ஒரு காதலன், ஒரு குழந்தை, இன்னும் எத்தனையோ உருவங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஒவ்வொரு ரூபமாக வெளிப்படும். நீங்கள் இந்தப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இரண்டரை மணி நேரமும் உங்களுக்குள் இருக்கும் அந்த குழந்தை வெளியே எகிறி குதித்து துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கும்.


அது சரி படத்தின் கதை என்ன? ஆறாம் வகுப்பில் பள்ளிக்கே வில்லனாக இருக்கும் ஜீவா, அந்த பள்ளிக்கூடத்திற்கு புதிதாய் வரும் அன்புக்கரசுவிடம் ஆரம்பம் முதலே விரோதம் பாராட்டுகிறான். இந்த இருவருக்கும் நடக்கும் ஈகோ யுத்தங்கள், சண்டைகள், இருவரது குடும்பமும் நடுத்தெருவில் வந்து திட்டிக்கொள்ளும் அளவிற்கு அமைகின்றன. பின் குடும்பங்கள் எப்படி இணைந்தன?, பசங்க எப்படி இணைந்தார்கள்? என்பதை ஹைக்கூ திரைக்கதையால் வரைந்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.


அன்பரசு, ஜீவா, பக்காடா, குட்டிமணி, புவனேஷ்வரி, என அத்தனை குட்டிஸ்'களின் கேரக்டர்களும் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது. அதுதான் நம்மை சுவாரஸ்யத்தின் உச்சிக்கு அழைத்து செல்கின்றன. தோளில் கை போட்டால் குள்ளமாகி விடுவேன், பேசினால் மிக மிக, என்று போர்டில் எழுதுவது, காற்றில் பைக் ஓட்டியபடியே ஓடுவது, என சின்ன வயதில் நாம் அனுபவித்த அத்தனை விஷயங்களும் படத்தில் ஆங்காங்கே அள்ளி தெளிக்கப்பட்டிருக்கின்றன. அவைதான் நம்மை படத்தோடு கட்டிப்போட்டு வைக்கின்றன.


இந்த குட்டி பசங்களின் சுவாரஸ்யங்களுக்கு இடையில் ஒரு மெல்லிய காதலும் இருக்கிறது. ஜீவாவின் அக்காவுக்கும் , அன்பரசுவின் L.I.C சித்தப்பாவுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி காதல் விளையாட்டுக்கள் குறும்புத்தனத்தின் உச்சம். இதுதான் அதுதான் என்று என்று இல்லாமல் எல்லா காட்சிகளும் கைத்தட்டல் வாங்குகின்றன. பசங்க மீது போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுப்பதில் துவங்கும் சிரிப்பு வெடிகள், கடைசி காட்சி வரை நீள்வது நமக்கு ஒரு ஆனந்த அனுபவம்.

இரண்டு குடும்பங்களும் நடுரோட்டில் அடித்து கொள்ளும் அந்த காட்சியில் கூட, ஜீவாவின் இரண்டு வயது தம்பி ஓடி வந்து வாத்தியாரை அடித்து விட்டு எப்புடி? என்று கேட்கும் காட்சியில் தியேட்டர் சிரிப்பிலும் கைத்தட்டலிலும் அதிர்கிறது.

சினிமா கிரவுண்டில் ஒரு ரன் அடிப்பதற்கே, அஜீத்'களும், விஜய்'களும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், இந்த "பசங்க" சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி தள்ளுகிறார்கள். குழந்தைகளுக்கான திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று "நியூ" திரைப்படத்தில் ஆபாச அசிங்கங்களை நிறைவேற்றிய S.J.சூர்யாவை உட்கார வைத்து இந்தப் படத்தை போட்டுக்காட்ட வேண்டும். இந்தப்படம் சிறுவர்களுக்கு மட்டும் அல்ல. பெரியவர்களுக்கான ஒரு மிக நல்ல மெசேஜும் இந்தப் படத்தில் இருக்கிறது. பெற்றோர்கள் போடும் சண்டையால் பிள்ளைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெளிவாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு சிறுவர்கள் சுமக்கும் புத்தக பையைப்போல் அவர்களுடனே பயணித்திருக்கிறது. குறிப்பாய் அன்பரசு கைப்பிடிக்குள் சூரியனை காட்டும் காட்சி அற்புதம். அன்பரசு வண்டியை ஸ்டார்ட் செய்யும் காட்சிகளில் சவுண்ட் ரெக்கார்டிங்கும், ஒலித்தொகுப்பும் மாயஜாலம் செய்கின்றன. அஞ்சலி அஞ்சலி, மொட்டை மாடி, ராத்திரி நேரத்தில், என அஞ்சலி திரைப்படத்தை நினைத்தவுடன் அந்தப்படத்தின் பாடல்கள் நம் உதடுகளில் தானாகவே வந்து அமர்ந்து கொள்ளும். அது போல இந்தப்படத்தில் பாடல்களுக்காய் மெனக்கெடாதது நிச்சயம் ஒரு குறையே.


"அன்பாலே அழகாகும் வீடு" பாடல் இன்னமும் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன், நீங்களும் ஜோஷ்வா ஸ்ரீதர் போல் One Film Wonder 'ஆக இருந்துவிடக்கூடாது. ஆல் தி பெஸ்ட் நெக்ஸ்ட் டைம். கைகள் வலிக்கும் அளவிற்கு இயக்குநர் பாண்டிராஜை பாராட்டலாம். எந்த பெரிய ஹீரோக்களின் பின்னாலும் ஜால்ரா சாமரம் வீசிக்கொண்டு அலையாமல், மிக நேர்மையாய் ஒரு திரைப்படத்தை அழகியலுடன் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.


இவ்வளவு பேரையும் பாராட்டிவிட்டு மிக முக்கியமான ஒருவரை பாராட்டவில்லை என்றால் அது மிகப்பெரிய துரோகம். அவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் "இயக்குநர் சசிக்குமார்". கமர்ஷியல் கன்றாவியில் சிக்கித்தவிக்கும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எடுக்க மிகத்தைரியம் வேண்டும். சசிக்குமார் மட்டும் இல்லை என்றால் நாம் நிச்சயம் ஒரு நல்ல திரைப்படத்தை இழந்திருப்போம். சசிக்குமாருக்கு ஒரு வேண்டுகோள், நான்கு ஃபைட், ஐந்து குத்துப்பாடல்கள், ஹீரோயிச பில்டப் டயலாக்குகளுடன் உங்கள் அலுவலகத்திற்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு தயவு செய்து உங்கள் வாசலில் ஒரு No Entry போர்டு வைத்து விடுங்கள்.


உங்கள் பள்ளி நாட்களையும், உங்கள் நண்பர்களுடன் நீங்கள் அடித்த லூட்டிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டுமானால் இந்தப்படத்தை சென்று பாருங்கள். உங்களையே கண்ணாடியில் பார்த்த ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.


மொத்தத்தில் பசங்க....... பரவசப்படுத்தறாங்க....

Monday, May 11, 2009

இலங்கை - எம் தமிழர்களின் சபிக்கப்பட்ட பூமியா?
இலங்கை............ இது தண்ணீரால் சூழப்பட்ட தேசம் என்று பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் தற்போதுதான் உணர்ந்து கொள்கிறேன் இது கண்ணீரால் சூழப்பட்ட தேசம் என்பதை. ஆனால் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் சத்தியமாய் உணர்த்துகின்றன. இது கண்ணீரால் சூழப்பட்ட தேசம் அல்ல, இரத்தத்தால் சூழப்பட்ட தேசம் என்பதை...


ஒரு நாயை துன்புறுத்தினால் கூட அதை கேட்பதற்கென்று ஒரு சட்டம், அமைப்பு, மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கே மனிதக் கூட்டமே கொத்து கொத்தாய் மடிந்து கொண்டிருக்கிறார்களே, இதை கேட்பதற்கு ஏன் யாரும் இல்லை? அதை எதிர்த்து, சக ஜீவனை காப்பாற்ற குரல் கொடுத்தால் அவர்களுக்கு பரிசு தேசிய தடுப்பு சட்டத்தில் சிறைத்தண்டனை. இந்த நாட்டில் மனிதாபிமானம் என்ன மியூஸியத்தில் மட்டும் இருக்க வேண்டிய பொருளா?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே பாரதி, அங்கு எம் சகோதர சகோதரிகள், உடைகளின்றி, உணவின்றி, அட இவ்வளவு ஏன் குடிக்க தண்ணீர் கூட இன்றி ஈவு இரக்கமின்றி கொடுமைப் படுத்தப்படுகிறார்களே, இதற்கு நாங்கள் எந்த தேசத்தை அழிப்பது? சொல் பாரதி....

உன் தாயின் நிர்வாணத்தை உன்னால் ரசிக்க முடியுமா? உன் சகோதரியின் நிர்வாண கோலத்தைக்கண்டு உன்னால் கைகட்டி நிற்க முடியுமா? அங்கு எத்தனை சகோதரிகள், எத்தனை தாய்கள், நிர்வாணமாய் நிற்கிறார்கள் தெரியுமா? அவர்களது நிர்வாணத்தை மறைப்பது அவர்களது உடம்பிலிருந்து வழியும் ரத்தம்தான்.


சுதந்திரப் போராட்டத்தைக் கூட நாம் வெள்ளையனுக்கு எதிராகத்தானே நடத்தினோம். ஆனால் எம் சகோதர சகோதரிகளை காப்பாற்ற நம் தேசத்திற்கு எதிராகவே போராட வேண்டிய ஒரு கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உலகிற்கே அஹிம்சை போதித்த நாடு நமது. ஆனால் இன்று.......? இத்தனை உயிர்களை பலி கொடுத்து யார் என்ன சாதிக்க போகிறார்கள்?


இந்த இலங்கைப் பிரச்சனை எம் அரசியல் தலைவர்களை பொறுத்தவரை தேர்தல் சுவற்றிற்கு வெள்ளையடிக்க பயன்படும் சுண்ணாம்புதான்.. வெள்ளையடித்த பின் சுண்ணாம்பு தூக்கி ஓரம் வைக்கப்படும். இலங்கை அரசுக்கு ஒரு யோசனை.. இத்தனை உயிர்களை தவணை முறையில் கொல்வதற்கு பதிலாக, ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசியது போக மிச்சமிருக்கும் அணுகுண்டுகளை அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளிடம் கடன் வாங்கி ஒட்டு மொத்தமாய் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட வேண்டியதுதானே? அதை ஏன் நீங்கள் செய்யவில்லை?


ஓ! எந்த வித அவஸ்தையும் இன்றி எம் தமிழர் செத்துவிடக் கூடாது. ரணவேதனைப்பட்டு, சுக்கு நூறாய் உடல்கள் கிழிந்து, சாக வேண்டும் அப்படித்தானே? கண் முன்னே நம் உறவுகள் மரணமடைந்து நாம் பார்த்திருப்போம். ஆனால் மரணமடைந்த உறவுகளின் கை எது? கால் எது? இடுப்புக்கு கீழே மிச்சம் எங்கே இருக்கிறது என்று யாராவது தேடியிருக்கிறீர்களா?


இலங்கை அரசுக்கு எம் தமிழர்களின் மரண ஓலம், சங்கீதமாய் ஒலிக்கிறது போலும். வெடிகுண்டின் கந்தக வாசனைதான் அங்கு ஆக்சிஜன். இலங்கை ராணுவ வீரர்கள் கழித்த சிறுநீர் கலந்த நீர்தான் எம் மக்களுக்கு தாகம் தீர்க்க பயன்படும் தண்ணீர். அவர்கள் காலடியின் கீழ் நசுக்கப்படுவது எம் மக்கள் மட்டும் அல்ல. நம் இந்திய தேசத்தின் மானமும்தான்.நிர்வாணமாய் கதறலுடன் ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான் வியட்நாம் போரையே நிறுத்திற்று. இந்தப் போரை நிறுத்த வேண்டுமானால் எத்தனை சிறுமிகளின் கதறலை பதிவு செய்து அனுப்ப வேண்டும் சொல்லுங்கள். அனுப்புகிறோம். அப்போது கூட உங்கள் கண்கள் அவர்களின் நிர்வாணத்தை தானே ரசிக்கும்? கருணை, அன்பு, பாசம், மனிதாபிமானம், இரக்கம், தயவுசெய்து இந்த வார்த்தைகளை இந்திய மொழிகளில் இருந்தே அழித்து விடுங்கள். நமக்கு இதை எல்லாம் உச்சரிக்க துளியும் தகுதி இல்லை.


அட..... அங்கே அழிந்து கொண்டிருக்கும் எம் மக்களை உடனே ஓடி சென்று காப்பாற்றுவோம் என்று நான் சொல்லவில்லை. அவர்களின் வேதனைகளை, ரணங்களை பதிவு செய்ய கூட நாம் தயங்குகிறோமே, இது நம் நாகரீகத்தின், வளர்ச்சியின், மீது நாமே காறி உமிழ்ந்து கொள்வது போல் அல்லவா இருக்கிறது? அடுத்தவன் வீடு தீப்பற்றி எறிந்தால் நமக்கென்ன? நம் வீடு தீப்பற்றாமல் இருக்க நம்மிடம் இருக்கும் தண்ணீரை வைத்து, நம் வீட்டை மட்டும் ஈரமாய் வைத்துக் கொள்வோம். அதுதானே நாம்...


ஆண்களே இதைப்பற்றி பேசுவதற்கு அஞ்சி நடுங்கும் இந்த நேரத்தில், ஒரு பெண்ணாய் இருந்து, எதற்கும் பயப்படாமல் அத்தனை ஊடகங்களுக்கு மத்தியில் தன கருத்தை பதிவு செய்த கவிஞர் தாமரைக்கு தலை வணங்குகிறோம். புலி, சிங்கம், யானை, குதிரை, கரடி, சிறுத்தை, என புகழ்ச்சிக்காக பட்டப்பெயர் போட்டுக்கொள்ளும் தன்மானசிங்கங்களே இந்த பெண்ணை பாருங்கள். உங்கள் அலங்கார ஆடைகளை அறுத்து எறியுங்கள். அங்கிருக்கும் ஒட்டு மொத்த தமிழர்களும் இலங்கை இராணுவத்தால் மொத்தமாய் அழிந்து தொலைக்கட்டும், அதுவரை நாம் திரிஷாக்களின் அரைகுறை நடனங்களையும், புரட்சி நாயகர்களின் அலம்பல் பேட்டிகளையும், டோனிக்களின் சிக்சர்களையும் கண்டு உள்ளம் மகிழ்ந்து களித்திருப்போம்.


(இலங்கை தமிழர்களின் ரணங்களை பதிவு செய்ய என்னை தூண்டிய என் சகோதரி திருமதி விஜி அவர்களுக்கு என் நன்றிகள்)

Saturday, May 9, 2009

மலைப்பாம்பு கங்காருவை விழுங்கும் அபூர்வ புகைப்படங்கள்

உள்ள போக மாட்டேங்குதே?ஆங்... அப்படித்தான்.. அமைதியா இருக்கணும்
கொஞ்சம் பொறுத்துக்க ராசா
அவ்ளோதான்.... முடியப்போகுது பாரு
எப்பிடி நம்ம டேலண்ட்? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.....

ஜீரணம் ஆகறதுக்கு யாராவது

ஜெலுசில் வாங்கி கொடுங்கப்பா


தொடர்வண்டி சில்மிஷங்கள்


பயணிகளின் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 1028, சென்னையிலிருந்து மும்பை வரை செல்லும் மும்பை மெயில் 10வது பிளாட்ஃபாரத்திலிருந்து பத்து மணி ஐம்பத்து நிமிடங்களுக்கு புறப்பட உள்ளது. யாத்ரீகன்ட் க்ருப்யா.... என்று கணிப்பொறி குரல் தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் கிளிப்பிள்ளையாய் ஒப்பித்துக் கொண்டு இருந்தது. வழக்கத்தைவிட சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அன்று பரபரப்பாய் காணப்பட்டது. தொடர் வண்டிகள், பயணிகளை துப்பிவிட்டு களைப்பாறிக் கொண்டிருந்தன.


ஜீவனின் கண்கள் யாரையோ தேடிக்கொண்டு இருந்தன. இன்னும் சில நிமிடங்களில் நாம் ஜீவனின் கண்கள் வழியாகத்தான் இந்தக் கதையில் பயணிக்க போகிறோம். ஒவ்வொரு கோச்சாக ஜீவன் யாரையோ தேடிக்கொண்டு இருக்க, நாமும் கூட சேர்ந்து பார்க்கலாம்.

S 1 கோச் : (ஒரு அம்மா தன் மகனிடம்) ரகு, பாம்பே போய் இறங்குன உடனே ஃபோன் பண்ணு, மொதல்ல நல்லபடியா வேலையில ஜாயின் பண்ணு. தங்கச்சி கல்யாணத்தை பத்தியே கவலைப் பட்டு நீ உன் உடம்பை கெடுத்துக்காத. நல்லா சாப்பிடு. சரியா? கடவுள் இருக்காரு. எல்லாம் நல்லபடியா நடக்கும்.

S2 கோச் : ஏங்க! இன்னும் ரெண்டு நாள்'ல எனக்கு பிரசவம். பிரசவ சமயத்துல கூட பொண்டாட்டி கூட இருக்காம உங்களுக்கு அப்படி என்னங்க ஆஃபீஸ் வேலை முக்கியம்? செல்லம் இல்ல.. புரிஞ்சுக்கடா குட்டி.. நாலு நாள்தான். பல்லை கடிச்சுகிட்டு பொறுத்துக்கோ. பொறக்கப்போற என் சிங்ககுட்டிக்கு நான் நான் என்ன வாங்கிட்டு வர்றேன் பார்.


ஜீவனின் அடுத்த தேடல்
S3 கோச் : (ஒரு காதலி காதலனிடம்) ராஜ், நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. எப்படியாவது பாம்பே'ல இருந்து திரும்பி வரும்போது ஒரு நல்ல முடிவோட வாங்க. எங்க வீட்ல இதுக்கு மேல என்னால மறைக்க முடியாது. 4 மாசம். வயிறு இப்பவே வெளியில தெரியுற மாதிரி இருக்கு. சீக்கிரமா நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும்....


S4 கோச் : (ஒரு அப்பா தன் மகனிடம்) நந்து, அம்மாவை பத்திரமா பாத்துக்க, இந்த பேக்ல அம்மாவோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்' எல்லாமே இருக்கு. டாக்டர் கிட்ட காட்டு, ஆபரேஷனுக்கு டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நான் உடனே கிளம்பி வர்றேன். சரியா?


தான் தேடும் ஆள் கிடைக்கவில்லை என்ற சலிப்பு ஜீவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.


S5 கோச்: (ஒரு தோழி) ஹரிணி, எத்தனை நாள்டி உனக்கு பிரசண்டேஷன்? ரெண்டி நாள். ஐயோ பாவம்டி நீ? ஏன் அப்படி சொல்ற? பின்ன.. போக ரெண்டு நாள், வர ரெண்டு நாள், அங்க தங்கறது ரெண்டு நாள், ஒரு வாரம் எப்படிடி அரவிந்தை பார்க்காம இருக்க போற? ஏய், லூசு வாய மூடு. பக்கத்துல மேம் இருக்காங்க...


ஜீவன் அடுத்த பெட்டியில் யாரையோ தேடிக்கொண்டு இருந்தான்.


S6 கோச் : பெட்டியை எடுத்து மேலே வைக்கும் தன் மனைவியை யாரும் பார்க்காத அந்த ஒரு நொடியில் இழுத்து... தன் இதழ்களின் வலிமையை அவள் இதழ்களுக்கு புரிய வைத்தான் விஷ்வா. ஏங்க விடுங்க.. வெளிய அத்தை, மாமா எல்லாம் இருக்காங்க. இருக்கட்டுமே.. புதுப் பொண்டாட்டிய பத்து நாள் பிரிஞ்சு போற கஷ்டம் எனக்கு தாண்டி தெரியும்.. ஆமா இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை.

S7 கோச் : தாத்தா டாட்டா பாட்டி டாட்டா...புஜ்ஜி அப்பா அம்மா பேச்சை கேட்டு சமர்த்தா நடந்துக்கணும். சரியா? தாத்தாக்கு அடுத்த வாட்டி வரும்போது என்னம்மா வாங்கிட்டு வருவ? இந்த பாட்டிக்கு பதிலா வேற நல்ல பாட்டி வாங்கி உனக்கு தர்றேன்.ஆஹா சீக்கிரம் வாங்கிட்டு வாம்மா


S8 கோச்: என்னடா மச்சி நாளைக்கு தான் கிளம்பறேன்னு சொன்னே... இன்னைக்கே கிளம்பிட்ட? இல்லடா மாப்பிள்ளை, வெள்ளிக்கிழமைக்குள்ள நான் பணத்தை வாங்கிட்டு வந்தாதான் மத்தவங்களுக்கு பணத்தை செட்டில் பண்ண முடியும்.இல்லாட்டி என் வீடு ஏலத்துக்கு வந்திடும். பொண்டாட்டி புள்ளையோட போய் நான் எங்கடா நிக்கறது? அதான் இன்னைக்கே கிளம்பிட்டேன்.

வண்டி மெதுவாய் மரவட்டையை போல் நகரத்தொடங்கியது.. இன்னும் ஜீவன் தேடிய ஆள் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்திலேயே சோகமாய் நிற்கும் ஜீவனின் முகத்தில் பிரகாசம்.. அங்கிருந்த பிளாட்ஃபாரத்தின் ஓரத்தில் சென்று பார்க்க, அங்கு பாதிதின்று வீசப்பட்ட ஒரு தோசை கிடக்க, மிக சந்தோஷத்துடன் அதை மோர்ந்து பார்த்துவிட்டு தின்ன தொடங்கியது அந்த ஜீவன்.


பக்கத்தில் ஒரு குரல்... ஹலோ.. நான்தான்.. முணு கோச்'ல ஃபிக்ஸ் பண்ணிட்டேன். பெரம்பூர்ல இன்னும் கொஞ்சம் பேர் ஏறுவாங்க.. பெரம்பூர்ல இருந்து கிளம்பி போன ஒரு அரைமணி நேரத்துல ட்ரெயின் சுக்கு நூறா சிதறிடும். ஒருத்தன் உடம்பை கூட முழுசா கண்டுபிடிக்க முடியாது.


ஜீவன்: ஐயய்யோ... எனக்கு இவன் பேசறது நல்லா கேக்குது... நான் இதை யார்கிட்ட சொல்றது?????

நீங்கள் இதை படித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், இந்த பாம்பே மெயில் பெரம்பூரை கடந்து 25 நிமிடங்கள் ஆஆஆகி................................

Friday, May 8, 2009

காதலிப்பது எப்படி?


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...படிச்சிட்டீங்க.... பிடிச்சிருந்தா உங்க ஓட்டை போடுங்க.. பிடிக்கலன்னாலும் ஓட்டு போடுங்க.. நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்... என்ன கமெண்ட்'ன்னாலும் அனுப்புங்க....

Wednesday, May 6, 2009

உன்னை பிரிந்திருக்கிறேன்விழியிலிருந்து கூட
வியர்வை வழிகிறது.
அவைகள் உன்னை தேடி தேடியே
களைத்துப் போய்விட்டன.
ஆம் நான் உன்னைப் பிரிந்திருக்கிறேன்.

உன்னை நியாபகப்படுத்தும்
அத்தனையும் என்னிடம் இருக்கின்றன,
உன்னைத்தவிர...

ஆயிரம் ரூபாய் கொடுத்தால்
ஆட்களை கொல்லக் கூட
இங்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
ஆனால் என்னை தினம் தினம் கொல்லும்
உன் நினைவுகளை கொல்ல யார் இருக்கிறார்கள்?
இருந்தால் சொல்
லட்ச ரூபாய் தருகிறேன்.

சிறு இரும்பை திருடினால் கூட
இங்கு தண்டனை உண்டு
அது எப்படி என் இதயத்தையே திருடியும்
நீ தண்டனையிலிருந்து தப்பித்தாய்?

இரு இரு என் இ.பி.கோ.வில்
நிச்சயம் உனக்கு தண்டனை உண்டு.
ஆம்.
என் (இ)தயம் (பி)டிக்கும் (கோ)ர்ட்டில்
சட்ட எண் 143' ன் கீழ் என்ன
தண்டனை தெரியுமா?

உன் காதுகளை கொடு சொல்கிறேன்.
..............................
என்ன புரிந்ததா?

உன்னை பிரிந்திருக்கும் வேளையில்
நீ எனக்கு எழுதிய கடிதத்தில்
உன் விரல்கள் பிரசவித்த வார்த்தைகளை
வாசித்து வாசித்தே கழிக்கிறது என் பொழுது.

தினம் தினம் என் இதழ் செடிக்கு
முத்த "நீ"ரூற்றுவாய்.
இப்போது பார் என் இதழ் செடி
காய்ந்து கிடப்பதை.
உன்னை பிரிந்திருப்பதை
என் இதழ்களும் விரும்பவில்லை.

எனக்காக கூட நீ வர வேண்டாம்..
தயவு செய்து என் இதழ்களுக்காகவாவது
ஒரு முறை என்னை சந்திக்க வா..
இப்படிக்கு நீயானவன்

Saturday, May 2, 2009

உன் பாஸ்பரஸ் புன்னகையாலேஇருபத்தி இரண்டு வருடங்கள்
வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......

படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.

உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.

எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.

அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?

தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?

நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..

குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?

அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?

நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?

உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.

புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?

உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.

எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?

உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.

கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.

நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?

நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.

இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.

நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.

உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.

எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.

பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.

இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?

உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.

ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.

இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.

அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட...

இதையும் படியுங்கள்